மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-6

நந்தகுமார்
பிரீமியம் ஸ்டோரி
News
நந்தகுமார்

‘‘அதிகாரப் பரவலே மக்களுக்கு சக்தி கொடுக்கும்!’’ - நந்தகுமார்

`` `தண்ணீர் தண்ணீர்' படத்துல பாலசந்தர் ஒரு சீன் வச்சிருப்பார். ஊர்ல தண்ணி வரலேன்னு ஊரே திரண்டு போய் அமைச்சரைப் பார்த்து மனுக்கொடுக்கும். அந்த மனுவை அமைச்சர் தன் பி.ஏ கிட்ட கொடுப்பார். பி.ஏ அதை கலெக்டர் கையில தருவார். கலெக்டர் தாசில்தாருக்கு மாத்துவார். தாசில்தார் பியூன்கிட்ட கொடுப்பார். பியூன் பாக்கெட்ல போட்டுக்குவார். நம் நிர்வாகத்தோட எதார்த்தம் இதுதான். வலுவான பஞ்சாயத்து ராஜ் சட்டங்கள் வந்தபிறகும் தலைமைச் செயலகத்துக்குள்ளயும், கலெக்டர் அலுவலகத்துக்குள்ளயும் அதிகாரங்களைக் குவிச்சு வச்சிருக்கிறது நியாயமேயில்லை. கிராம சபைகளை உரிய அதிகாரங்களோட இயங்க விடணும்...’’

தெளிவும் உறுதியும் தொனிக்கின்றன நந்தகுமாரின் வார்த்தைகளில். மென்பொருள் பொறியாளராகப் பார்த்த வேலையை விட்டுவிட்டு 15 ஆண்டுகளுக்கும் மேலாக கிராம சபைகளின் அதிகாரங்கள் குறித்து மிக விரிவாகப் பிரசாரம் செய்கிறார் இவர். பல இளைஞர்களை உள்ளாட்சி நிர்வாகங்களுக்குள் கொண்டு வந்திருக்கிறார். ஊராட்சித் தலைவர்களுக்குப் பயிற்சியளிக்கிறார். அரசு அலுவலகங்களில் குவிந்து கிடக்கும் அதிகாரங்களை கிராமத்துப் பஞ்சாயத்து அலுவலகங்களுக்குக் கொண்டு செல்வதற்கான நெடும் பயணம் நந்தகுமாருடையது.

நந்தகுமார்
நந்தகுமார்

நந்தகுமார், திருச்சியைச் சேர்ந்தவர். உதயமூர்த்தியின் மக்கள் சக்தி இயக்கத்தில் ஈர்க்கப்பட்டு தீவிரமாக இயங்கியவர். தன்னாட்சி என்ற அமைப்பின்வழி இந்தியாவெங்கும் உள்ளாட்சிப் பிரதிநிதிகளை ஒருங்கிணைத்துச் செயல்படுகிறார்.

‘‘கிராம சபைன்னா டீ மிக்சர் சாப்பிடுற இடம், பஞ்சாயத்து ஆபீஸ்னா குப்பை அள்ளுறது, டியூப் லைட் போட்டுக் குடுக்கிற இடம்னு இப்பவும் ஒரு புரிதல் இருக்கு. திங்கள்கிழமைகள்ல கலெக்டர் அலுவலகங்கள் மனுக்களால குவியுது. முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு தினமும் பல ஆயிரம் மனுக்கள் வருது.

பஞ்சாயத்து ராஜ் சட்டப்படி ஊராட்சிங்கிறது அந்தப் பகுதிக்கான நாடாளுமன்றம். ஒரு எம்.பி-க்கு என்ன அதிகாரம் இருக்கோ, அதே அளவுக்கு தங்கள் பகுதிகளுக்குள்ள பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கு அதிகாரம் இருக்கு. ஆனா, கிராம சபை பொம்மை நிர்வாகமா இருக்கு. அதிகாரிகளோட ஆளுமைதான் அங்கே நடக்குது. இப்போதும் ஊராட்சித் தலைவரால் பள்ளியில் கெட்டுப்போன ஒரு கழிவறையைக்கூட சரிசெய்து தரமுடியாது. திட்டங்கள் மக்கள்கிட்ட இருந்து வரணும். கலெக்டர் ஆபீஸிலிருந்து வரக்கூடாது. மாநில சுயாட்சி பத்திப் பேசுறோம். ஆனா ஊராட்சிகளை சுயமா இயங்கவிடாம வச்சிருக்கோம்’’ - வருத்தம் தொனிக்கிறது நந்தகுமாரின் வார்த்தைகளில்.

நந்தகுமார் படித்தது, திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியில். அங்கு தொடங்கிய வாசிப்புப் பழக்கம்தான் அவருக்கான பாதையைத் தீர்மானித்துத் தந்திருக்கிறது. ‘‘கல்லூரிக் காலத்திலேயே எனக்கு அரசியல் ஈடுபாடு இருந்துச்சு. அரசியலை கவனிக்க கவனிக்க நிறைய கேள்விகள் வந்துச்சு. மக்கள் பிரதிநிதிகள்னு பலர் இருந்தும், அரசு அலுவலகங்கள்ல மக்கள் மனுக்களோட கால்கடுக்கக் காத்து நிக்கிறது ஏன்னு தோணும். முறைகேடா ஒரு வேலையை முடிச்சுக்கொடுக்கத்தான் லஞ்சம் வாங்குவாங்கன்னு இருந்த நிலை மாறி, இயல்பா நடக்கவேண்டிய வேலைகளுக்கே அதிகாரிகள் கைநீட்டுறதெல்லாம் கோபம் வரவழைச்சுச்சு.

எம்.சி.ஏ முடிச்சபிறகு சென்னையில ஒரு ஐ.டி நிறுவனத்துல வேலை கிடைச்சுச்சு. இங்கும் என் அறையில வாசிப்பு ஆர்வம் உள்ள நண்பர்கள் அமைஞ்சாங்க. கலாமோட எழுச்சி தீபங்களை ஒரு தம்பி தந்து இதை வாசிங்கண்ணான்னார். எழுச்சி தீபங்கள், நம் கனவுகளை ஆழ வேரூன்ற வைக்கிற புத்தகம். படிக்கிற எல்லாருக்கும் நாமளும் ஒரு லட்சியத்தைச் சுமந்துக்கிட்டு ஓடிப்பார்க்கலாமேன்னு தோணும். அப்படித்தான் எனக்கும் தோணுச்சு. 2004-ல் முதன்முதலில் உதயமூர்த்தி அய்யாவைப் பற்றிக் கேள்விப்பட்டேன். அவரைப் போய்ப் பார்த்தேன். நாங்க சந்திச்சபோது எனக்கு 23 வயது. அய்யாவுக்கு 75 வயது. அறம் சார்ந்த வாழ்க்கை பத்தி நிறைய பேசினார்.

இதற்கிடையில என்னை பெங்களூருக்குப் பணிமாறுதல் செஞ்சாங்க. அங்கு ஓராண்டு வேலை செஞ்சேன். பணி நிமித்தம் யு.எஸ் போகவேண்டிய நிர்பந்தம் உருவாச்சு. வேலையே வேண்டாம்னு முடிவு பண்ணி வெளியில வந்தப்போ எனக்கு 26 வயது...’’ முகம் பார்த்துச் சிரிக்கிறார் நந்தகுமார்.

அதன்பின் உதயமூர்த்தி நடத்திய ‘நம்பு தம்பி நம்மால் முடியும்' இதழில் நிறைய எழுதினார் நந்தகுமார். ‘‘அப்போ எனக்கு காந்தி கிராமப் பல்கலைக்கழகப் பேராசிரியர் பழனிதுரையைச் சந்திக்கிற வாய்ப்பு கிடைச்சுச்சு. அவர் எழுதின ‘கிராம ஊராட்சி நிர்வாகம்'ங்கிற புத்தகத்தை வாசிச்சேன். அதுதான் இப்போவரைக்குமான என் பயணத்தை வடிவமைச்சது. ஊராட்சிங்கிறது எவ்வளவு வலுவான கட்டமைப்பு, உலகளவுல அதிகாரப் பரவல் எப்படி நடக்குது, அதுல இருக்கிற சாத்தியங்கள் என்னென்ன என்று எல்லாக் கேள்விகளுக்கும் அந்த புத்தகத்துல பதில் கிடைச்சுது. இதுக்குள்ளதான் வேலை செய்யணும்னு தீர்மானிச்சேன்.

இந்திய அரசியலமைப்புல 1992-ல செய்யப்பட்ட 73-வது சட்டத்திருத்தம் உள்ளாட்சி அமைப்புகளை அதிகாரம் மிக்கதா மாற்றுது. அதற்கு முன்பு 1958-ல பஞ்சாயத்து சட்டம் இருந்தாலும் கிராம சபையோ, பெண்கள், பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீடு உரிமையோ கிடையாது. மாநிலத் தேர்தல் ஆணையமோ, மாநில நிதிக்குழுவோ இல்லை. 1992 சட்டத்திருத்தம் சுதந்திர இந்தியாவுல கிராமங்கள் வரைக்கும் அதிகாரங்களைக் கொண்டுபோய்ச் சேர்த்துச்சு.

ஜனநாயகத்தின் ஆணிவேர்னு சொல்லப்படுற மக்கள் கையில ஓட்டு போடுறதைத்தவிர எந்த அதிகாரமும் இல்லை. தமிழகத்தின் 12,525 ஊராட்சி மன்றங்களும் வலுவான நிர்வாக அமைப்பாக மாறினால் அந்தந்தப் பகுதிகள் சுயமாவே தன்னிறைவு அடைஞ்சிடும். அதிகாரப்பரவல் ஒண்ணுதான் மக்களை சக்திமிக்கவர்களா ஆக்கும்ங்கிற புரிதலை பழனிதுரை அய்யாவோட நிகழ்ந்த உரையாடல்கள் உணர்த்துச்சு. அரசமைப்புச் சட்டம் வழங்கியிருக்கிற அதிகாரங்களைப் பஞ்சாயத்துகளுக்குக் கொண்டு சேர்த்து, பஞ்சாயத்துத் தலைவர்களுக்கும் மக்களுக்கும் அதுதொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்திட்டா மிகப்பெரிய மாற்றம் வந்திடும். இதை நோக்கி நகர ஆரம்பிச்சேன்.

காந்தி கிராமப் பல்கலைக்கழகத்தோட இணைஞ்சு, விருதுநகர் மாவட்டத்துல 7 கிராம ஊராட்சிகள்ல வேலை செய்ய ஆரம்பிச்சோம். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், சுய உதவிக் குழுக்கள், மாணவர்களை ஒருங்கிணைச்சோம். வளர்ச்சித் திட்டங்கள், மானியங்களை கிராமங்களுக்குக் கொண்டு வந்து சேர்த்தோம். சில பஞ்சாயத்துகள்ல நாங்க எதிர்பார்த்த விளைவுகள் கிடைச்சுச்சு.

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-6

இந்தச் சூழல்லதான் குத்தம்பாக்கம் இளங்கோ அண்ணனைச் சந்திச்சேன். பார்த்த விஞ்ஞானி வேலையை விட்டுட்டு, தன் கிராமத்தை வளர்த்தெடுக்க வந்தவர். அவர், ‘குத்தம்பாக்கம் வா... நிறைய வேலையிருக்கு'ன்னு கூப்பிட்டார். ‘கிராமத் தன்னாட்சி அறக்கட்டளை'ன்னு அண்ணன் ஒரு டிரஸ்ட் வச்சிருந்தார். அங்கேயே தங்கி, ஊர் மக்கள் தர்ற உணவைச் சாப்பிட்டுக்கிட்டு வேலை செஞ்சோம். மூன்று ஆண்டுகள் மிகப்பெரிய அனுபவமா அது இருந்துச்சு. ஒரு பஞ்சாயத்துத் தலைவர் நினைச்சா என்ன மாதிரியான மாற்றங்கள் நடக்கும்னு புரிஞ்சுச்சு. குத்தம்பாக்கத்துல 100 ஏக்கர் மேய்ச்சல் நிலப் புறம்போக்கு இருந்துச்சு. ஆவடி, திருவேற்காடு, பூந்தமல்லி, திருவேற்காடு நகராட்சிகளோட குப்பைகளை அங்கே கொட்ட முடிவெடுத்தாங்க. மக்கள் திரண்டெழுந்து போராடினாங்க. அதுலயும் முழுமையா நின்னேன். கடுமையான போராட்டங்களுக்குப் பிறகு அந்தத் திட்டத்தை அரசு கைவிட்டுச்சு.

இதற்கிடையிலே நிறைய இளைஞர்களைப் பஞ்சாயத்துத் தேர்தலுக்குத் தயார்படுத்தவும் செஞ்சோம். அந்தந்தப் பகுதிகள்ல அவங்க தீவிரமா வேலை செஞ்சாங்க. நம்மாழ்வார் அய்யாவை வானகத்துல சந்திச்சபிறகு மேலும் திறப்புகள் கிடைச்சுச்சு. உள்ளாட்சி அதிகாரப் பரவல் தாண்டி நாம செய்ய வேண்டிய விஷயங்களை எல்லாம் அய்யா போதிச்சார். ‘புழுதிக்காகவும் புழுதியில நிக்கிறவனுக்காகவும் வேலை செய்ங்க’ன்னு அய்யா சொன்னார். அங்கே கிடைச்ச புரிதலால இந்தியா முழுவதும் பயணம் செஞ்சேன். தண்ணீர் மனிதர் ராஜேந்திர சிங்கைப் பார்த்து உரையாடினேன். ராஜஸ்தான்ல ‘ஆரவாரி ரிவர் பார்லிமென்ட்'னு ஒரு அமைப்பை உருவாக்கி ஒரு நதியை மக்களே நிர்வகிக்கிறாங்க. சூழலியல் சார்ந்த பிரச்னைகள்ல அதிகாரப் பரவலைக் கொண்டு சேர்க்கிற அந்த வழிமுறைகளை அங்கே தெரிஞ்சுக்க முடிஞ்சது.

இந்த அனுபவங்கள் எல்லாம், என்ன செய்யணும்ங்கிற தெளிவைக் கொடுத்துச்சு. ‘உள்ளாட்சி உங்களாட்சி'ங்கிற முழக்கத்தோட தன்னாட்சி அமைப்பைத் தொடங்குனோம். 2016 உள்ளாட்சித் தேர்தல்ல தமிழ்நாடு முழுவதும் பயணம் செஞ்சு வேட்பாளர்கள் மத்தியில பேசினோம். நம்கூட வளர்ந்த நிறைய நம்பிக்கையான இளைஞர்கள் உள்ளாட்சி அமைப்புகள்ல பொறுப்புக்கு வந்தாங்க. சமூக ஊடகங்கள் வளர்ந்தபிறகு எங்கள் பணி எளிதாயிடுச்சு. தொடர்ந்து அந்தப் பணிகளை முழு வீரியத்தோட செஞ்சுக்கிட்டிருக்கோம்’’ என்கிறார் நந்தகுமார்.

இப்போது தன்னாட்சி அமைப்பின் நிர்வாகத்தில் 37 இளைஞர்கள் இயங்குகிறார்கள். கிராமசபை நிர்வாகத்தில் அக்கறை காட்டும் அரசியல் கட்சிகளோடும் இணைந்து பணியாற்றுகிறார்கள்.

‘‘இப்பவும் ஒடுக்கப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பஞ்சாயத்துத் தலைவர்கள் சுதந்திரமா கொடிகூட ஏற்ற முடியலே. கிராமங்களோட வளர்ச்சிக்கு மிகப்பெரிய தடையா இருக்கிற இந்த விஷயங்களும் மாறணும். ஊரக வளர்ச்சிக்கு மத்திய அரசும் மாநில அரசுகளும் பலகோடி ரூபாய் ஒதுக்குறாங்க. மக்கள் தொகை, பரப்பளவு அடிப்படையில ஒரு ஊராட்சிக்கு 50 லட்ச ரூபாயாவது வரும். இதை முறையா நிர்வகிச்சா கிராமங்கள் தன்னிறைவு பெறும்.

சென்னையிலிருந்து முதல்வர் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கலாம். ஆனா உள்ளூர்ல இருக்கிற குளங்கள், குட்டைகள், கழிவறைகள், கால்நடைகளைப் பார்க்க, பாதுகாக்க என கிராம சபை அதிகாரத்தோட இயங்கணும். இன்னைக்கு பல ஊராட்சிகள்ல இது நனவாகியிருக்கு. ஓடந்துறை சண்முகம், மைக்கேல்பட்டினம் ஜேசுமேரின்னு பல முன்னுதாரணத் தலைவர்கள் உருவாகியிருக்காங்க. தமிழகம் நிச்சயம் மாறும்!’’

அன்பும் புன்னகையுமாக கரம் பற்றி விடை தருகிறார் நந்தகுமார்!

- வருவார்கள்...