மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-7

 நிமல் ராகவன்
பிரீமியம் ஸ்டோரி
News
நிமல் ராகவன்

நீர்நிலைகளை மீட்கும் நிமல்

``நீரை நிலத்துக்குள்ள தேடாம வானத்தில இருந்து வரவழைக்கிற வழியைப் பாருங்கன்னு நம்மாழ்வார் அய்யா சொல்வார். நாம நீர்நிலைகளை அழிக்கிற அதே வேகத்துல வனங்களையும் அழிச்சுக்கிட்டிருக்கோம். வழக்கத்துக்கு மாறா அதிக மழை பெய்தாலும் அடுத்த சில மாதங்கள்ல வறட்சி வருது. நீரைச் சேகரிக்கிறதுலயும், நிர்வாகம் பண்றதுலயும் நம் முன்னோர்கள்கிட்ட இருந்த ஞானத்தை நாம இழந்துட்டோம்...’’ மிகுந்த பொறுப்புணர்வோடு பேசுகிறார் நிமல் ராகவன்.

நிமல், பேராவூரணிக்கு அருகேயுள்ள நாடியத்தைச் சேர்ந்தவர். தென்னை விவசாயம் செய்த தீவிர வேளாண் குடி நிமலுடையது. விவசாயத்திலிருந்து விலகி துபாயில் ஒரு வங்கியில் வேலை செய்தவர். கஜா புயல் மீட்புப்பணியில் தொடங்கிய பயணம், இன்று ‘இந்தியாவின் வாட்டர் வாரியர்' என்ற அங்கீகாரத்தைப் பெறுமளவுக்கு நீண்டிருக்கிறது. தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை மேம்படுத்த ஆசைப்படும் இளைஞர்கள் நிமலை நாடுகிறார்கள். வெற்றிடங்களில் மண்ணின் மரங்களைக் கொண்டு குறுங்காடுகளை உருவாக்குவது, செல்லுமிடங்களிலெல்லாம் விதைப்பந்துகளை வீசுவது என நிமல் சூழலியலுக்காகவே முழுமையாக இயங்குகிறார். நிமலின் கரங்களால் இதுவரை 127 ஏரிகள் புனரமைக்கப்பட்டுள்ளன.

‘‘நம்மகிட்ட அற்புதமான நீர் சேகரிப்புமுறைகள் இருந்திருக்கு. ஆறு, ஓடை, ஊருணி, குளம், பொய்கை, மடு, மோட்டைன்னு தேவைக்கும் நிலத்தன்மைக்கும் தகுந்தமாதிரி நம் முன்னோர் உருவாக்கி வச்சிருக்காங்க. ஒண்ணோடு ஒண்ணு இணைஞ்சிருக்கிற மாதிரி நேர்த்தியா வாய்க்கால்கள் அமைச்சிருக்காங்க. நாம எல்லா நீர்வரத்துப் பாதைகளையும் அழிச்சு நீராதாரங்களையெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா விழுங்கிக்கிட்டிருக்கோம். இந்தியா முழுவதும் சுற்றிய என் அனுபவத்துல, தமிழகத்துலதான் நீர்நிலை அழிவு தீவிரமா நடந்துக்கிட்டிருக்கு’’ - நிமலின் வார்த்தைகளில் கவலை படிந்திருக்கிறது.

 நிமல் ராகவன்
நிமல் ராகவன்

‘‘என் தாத்தா பெருநிலக்கிழார். ஏகப்பட்ட வயக்காடுகள், தென்னந்தோப்புகள் இருந்துச்சு. அம்மா பக்கமும் நல்ல வசதிதான். 21 வயசுல அப்பாவுக்கு உடல்நிலை முடியாமப் போச்சு. பெருங்கனவுகளோட இருந்த மனுஷன். படுத்த படுக்கையாயிட்டார். அப்பாவோட வைத்தியத்துல நிலபுலன்கள் கரைஞ்சிடுச்சு. எல்லாத்தையும்விட அப்பா முக்கியமில்லையா..? இறுதியா கொஞ்சம் நெல் விவசாயம், கொஞ்சம் தென்னை மரங்கள் மிஞ்சுச்சு.

காவிரிப்படுகைல வேளாண்மை மேல நம்பிக்கை குறைஞ்சுக்கிட்டே வருது. பிள்ளைகள் இன்ஜினீயரிங் படிச்சு, இதிலிருந்து விடுபடட்டும்னு நினைக்கிறாங்க பெரியவங்க. நானும் அப்படித்தான் சென்னை வந்து இன்ஜினீயரிங் படிச்சேன். துபாய்ல ஒரு வங்கியில வேலை தேடிக்கிட்டு 2014-ல கிளம்பிட்டேன்.

விவசாயக் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு இருக்கிற நெருக்கடி, எந்தத் தொழில்ல இருந்தாலும் மனசுக்குள்ள பெரிய குற்ற உணர்வு இருக்கும். அஞ்சாறு வருஷத்துல சம்பாதிச்சுக்கிட்டுப் போய் விவசாயம் செய்யணும்னு தோணும். அதுவும் துபாய் மாதிரி ஒரு வெப்ப மண்டல நாட்டுல வேலை செய்யும்போது அதுமாதிரியான வருத்தம் நிறைய இருக்கும்.

எங்க பாரம்பர்ய வீடு ரொம்பவே சிதைஞ்சு போச்சு. அதைக் கட்டலாம்னு முடிவு செஞ்சோம். அப்பா காலத்துக்குள்ள அதைச் செய்ய விரும்பினேன். 2018-ல அதுக்காக ஊருக்கு வந்தேன். நவம்பர் 13-ம் தேதி வெளியூர்ல இருந்து சில நண்பர்கள் ‘உங்க பகுதியில புயல் அடிக்கப் போகுது... பாத்துக்கோங்க'ன்னு சொன்னாங்க. ஊர்ல சொன்னபோது பசங்க எல்லாம் சிரிச்சாங்க. ஏன்னா, அதற்கான எந்த அறிகுறியும் அப்போ இல்லை. ஆனாலும் நாங்க, ‘கஜா புயல் மீட்புக்குழு'ன்னு சோஷியல் மீடியாவுல ஒரு பேஜ் ஆரம்பிச்சோம். பல பேர் ‘என்னய்யா ஆச்சு உங்களுக்கு'ன்னு வந்து கிண்டலா கமென்ட் போட்டாங்க. 15-ம் தேதி அதிகாலை எழுந்து பார்த்தா மொத்த ஊரும் வெட்டவெளியாக் கிடக்கு. பெரும் வாழ்வாதாரமா இருந்த தென்னை மரங்கள் எல்லாம் முறிஞ்சு கிடக்கு. பல விவசாயிகள் அந்த ஒற்றை இரவுல தெருவுக்கு வந்துட்டாங்க...’’ கண்கள் கலங்குகின்றன நிமலுக்கு.

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-7

அன்றுதான் நிமலுக்கு துபாய் விமானம். அதிகாரிகளிடம் பேசி விடுமுறையை நீட்டித்தார். சமூக ஊடகங்கள் மூலம் உலகெங்கும் இருந்து உதவிகளைப் பெற்றார். ‘‘சாய்ந்த தென்னை மரங்கள்ல ஏராளமான இளநீர் இருந்துச்சு. வெளியூர் நண்பர்கள்கிட்ட பேசி அதையெல்லாம் சேகரித்து வித்து விவசாயிகள் கையில பணமா தந்தோம். விழுந்த மரங்களை அகற்றி, தோட்டங்களைத் துப்புரவு செஞ்சோம். உடனடி வாழ்வாதார உதவிகளை ஒருங்கிணைச்சோம். சமூக ஊடகங்கள் மூலமாவே, ‘பிறந்த நாள், சுப காரியங்கள், நினைவு நாள்களுக்கு டெல்டா மக்களுக்கு மரக்கன்றுகள் வாங்கித்தாங்க'ன்னு கேட்டோம். 90,000 கன்றுகள் கிடைச்சுச்சு. கிட்டத்தட்ட 90 கிராமங்கள்ல வேலை செஞ்சோம். விவசாயிகளின் துயரங்களைப் பார்த்தபிறகு, ‘இனிமே துபாய் போறது சரியில்லை’ன்னு தோணுச்சு.ரிசைன் பண்ணிட்டேன்.

காவிரிப் பிரச்னை டெல்டாவோட தலையாய பிரச்னையா இருக்கு. பெருமழைக்காலங்கள்ல வெள்ளத்தால தவிக்கிற விவசாயிகள் மற்ற நேரங்கள்ல வறட்சியால தவிக்கிறாங்க. நீர்நிலைகளையும் நீர்வழிப்பாதைகளையும் சீரழிச்சதுதான் எல்லாத்துக்கும் காரணம்னு புலப்பட்டுச்சு. இதுல முழுமையா இறங்கணும்னு முடிவு செஞ்சேன். கஜா புயலுக்குப் பிறகு ஏதாவது செஞ்சாகணும்னு நிறைய இளைஞர்கள் துடிப்பா இருந்தாங்க. எல்லோரும் இணைஞ்சு ‘கடைமடைப் பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்க'த்தை ஆரம்பிச்சோம். முதற்கட்டமா பேராவூரணிப் பெரியகுளத்தைச் சீரமைக்க முடிவு செஞ்சோம். 564 ஏக்கர் குளம். பல வருடங்களா பராமரிக்காம சாலையோட உயரத்துக்கு ஏறிக் கிடந்துச்சு.

மக்கள்கிட்ட பேசினோம். நிறைய பேர் கைகொடுத்தாங்க. 107 நாள்கள். முழுமையா தூர்வாரி கரைகளைப் பலப்படுத்தினோம். அது மிகப்பெரிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் கொடுத்துச்சு. அடுத்தடுத்து பேராவூரணி வட்டாரத்துல நிறைய குளங்களை மீட்டுருவாக்கம் செஞ்சோம். சில கிராமங்கள்ல கோயில் திருவிழாக்கள்ல கலை நிகழ்ச்சிகளை நிறுத்திட்டு அதற்காக சேகரிச்ச பணத்தை எங்க பணிக்குக் கொடுத்து உற்சாகப்படுத்தினாங்க.

பின்பு
பின்பு

நிறைய பேர் அழைச்சுப் பாராட்டினாங்க. ‘மில்க்கி மிஸ்ட்' சதீஷ்குமார், எங்க வேலையைப் பாராட்டி 47 லட்சத்துக்கு ஒரு ஜே.சி.பி எந்திரத்தையே புதுசா வாங்கித் தந்தார். ஏராளமான நீர்நிலைகளை அந்த எந்திரம் மீட்டுருவாக்கம் செஞ்சுக்கிட்டிருக்கு...’’ பெருமிதம் ததும்பப் பேசுகிறார் நிமல்.

நிமல் குறித்த நம்பிக்கையான செய்திகளைக் கண்டு தமிழகம் எங்குமிருந்து அழைப்புகள் வரத் தொடங்கின. தஞ்சை கடந்து பயணிக்க ஆரம்பித்தார் நிமல். ‘‘எங்களை மாதிரியே ‘நம் தாமிரபரணி’, ‘பயோட்டா சாயில்’, ‘எஸ்க்னோரா’, ‘ஊர்கூடி ஊரணி காப்போம்’ மாதிரி சில அமைப்புகள் பல மாவட்டங்கள்ல நீர்நிலைகளை மேம்படுத்துற வேலையைச் செஞ்சுக்கிட்டிருந்தாங்க. எல்லோரும் ஒருங்கிணைஞ்சோம். சிவகங்கையில வள்ளிச்சரண் அக்காவோட இணைஞ்சு அந்த மாவட்டத்துல உள்ள ஏரி, கண்மாய்களைச் சீரமைச்சோம். மத்திய நீர்வள அமைச்சகத்தோட சமூக ஊடகங்கள்ல என்னைப் பத்தி எழுதியிருந்தாங்க. அதைப் பார்த்து நம் ராணுவத்தில இருந்து உத்தரப்பிரதேசத்துல ‘மெக்சர்ஸன்'னு ஒரு ஏரியைத் தூர்வார அழைச்சாங்க. திரிவேணி சங்கமத்தை ஒட்டி கங்கை நீரை ஆதாரமாகக் கொண்ட ஏரி... 15 ஏக்கரும் ஆகாயத்தாமரையால மூடியிருந்துச்சு. ராணுவ வீரர்களோட சேர்ந்து அந்த ஏரியைச் சீரமைச்சோம்.

உடன்குடி தண்டுபத்து கிராமத்துல 5 ஏரிகளைச் சீரமைச்சோம். இடிந்தகரையில ஜெர்மன் உதவியோட 1970-ல கட்டப்பட்ட ஒரு தடுப்பணை உடைஞ்சு கடல்நீர் கலந்திடுச்சு. அந்த அணையை சரிபண்ணி மேம்படுத்தினோம்.

முன்பு
முன்பு

சுதந்திரத்துக்குப் பிறகு புதுசா நீர்நிலைகளை நாம உருவாக்கவே இல்லை. அதையும் மாத்த நினைச்சோம். திண்டுக்கல், சத்திரப்பட்டில மேற்குத்தொடர்ச்சி மலையில இருந்து வடியிற தண்ணீரைத் தேக்கி இரண்டு ஏரிகளை உருவாக்கினோம். நாகப்பட்டினத்துல பிரதாபராமபுரம் ஏரி, தஞ்சாவூர்க் கள்ளப்பெரம்பூர் ஏரி, திருவள்ளூர், பெரம்பலூர் மாவட்டங்கள்ல சில ஏரிகள்னு பயணம் பெரிசாச்சு. இப்போ தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்ட கடலோரப் பகுதிகள்ல உள்ள நீர்நிலைகளைக் கையில எடுத்திருக்கோம். 40 கிலோ மீட்டர் பரப்பளவுல உள்ள ஏரிகள், குளம், குட்டைகளை மேம்படுத்துற வேலைகள் தொடங்கியிருக்கு...’’ என்கிறார் நிமல்.

புனரமைக்கும் நீர்நிலைகளில் குறுங்காடுகள் அமைக்கப்படுகின்றன. கரைகளில் மண்ணின் மரங்கள் நடப்படுகின்றன.

‘‘விஷத்தைக் கொட்டி மண்ணைத் துன்புறுத்தாம விட்டா அதன்வேலையை அது தானாவே செஞ்சுக்கும். நம் வேலை விதைக்குறது மட்டும்தான்...’’

செயலாலும் சிந்தனையாலும் நம்பிக்கை விதைக்கிறார் நிமல்.