மற்ற எபிசோடுகள்
Published:Updated:

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-8

அப்புசாமி
பிரீமியம் ஸ்டோரி
News
அப்புசாமி

பழங்குடிகளின் இணைப்புப்பாலம்! - அப்புசாமி

அந்தியூர் வட்டாரத்தில் 33 பழங்குடி கிராமங்கள் இருக்கின்றன. 5 செட்டில்மென்ட்களில் சோளகர்களும் 2 செட்டில்மென்ட்களில் ஊராளிகளும் வசிக்கிறார்கள். மலையாளி பழங்குடிகளையும் சேர்த்து 16,000 மக்கள் வசிக்கக்கூடும். இவர்கள் அத்தனை பேருக்கும் ஏந்தலாக இருக்கிறார் அப்புசாமி. ரேஷன்கார்டு முதல் முதியோர் உதவித்தொகை வரை எதுவாக இருந்தாலும் இந்தச் சிவப்புச் சட்டைக் காரரைத்தான் தேடிவருகிறார்கள் அந்த மக்கள். அவர்களை அமரவைத்து, பசியாற்றி, மனுவும் எழுதித்தந்து, அதிகாரிகளிடம் அழைத்துச்சென்று தேவைகளைத் தீர்த்துவைக்கிறார். அவர் பாதம்படாத பழங்குடி கிராமங்களே இல்லை. தங்களைக் காக்கவந்த ரட்சகராக பழங்குடிகள் அவரைக் கொண்டாடு கிறார்கள்.

பல தலைமுறைகளாக நகரத்து வெளிச்சம் காணாமல் வனத்துக்குள்ளேயே வாழ்ந்து பழகிய மக்களின் அறியாமையை ஒரு தகப்பன் இடத்தில் இருந்து சகித்துக்கொண்டு அவர்களுக்காகவே வாழ்வை அர்ப்பணித்திருக்கிறார் அப்புசாமி.

அப்புசாமி பர்கூர் மலையில் இருக்கும் கடை ஈரட்டி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர். சிவப்புச் சட்டைதான் இவரின் அடையாளம். அந்தியூரில் இருந்தால் எம்.பி சுப்பராயனின் அலுவலகத்தில் இவரைப் பார்க்கலாம். மற்ற பொழுதுகளில் யாரோ ஒரு பழங்குடியின் பிரச்னைக்காக ஏதேனும் ஒரு மலைக் கிராமத்திற்குப் பயணித்துக் கொண்டிருப்பார்.

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-8

அப்புசாமியின் பேச்சில் பணிவும் கனிவும் ததும்புகின்றன.

‘‘இந்தியாவுல பழங்குடியா வாழ்றதுமாதிரி ஒரு துயரம் வேறெதுவுமில்லை தோழர். வனப்பாதுகாப்பு, விலங்குகள் பாதுகாப்புங்கிற பேர்ல அவங்களோட இயல்பான வாழ்க்கையைச் சிதைச்சு சமவெளிக்குக் கொண்டு வந்துட்டாங்க. இங்கே இந்த நீரோட்டத்திலயும் கலக்கமுடியாம, அவங்க வாழ்க்கையையும் வாழமுடியாமத் தவிக்கிறாங்க. இன்னைக்கும் பல குடும்பங்கள், அரசாங்கத்தோட பதிவேடுகளில்கூட இடம்பெறாம இருக்கு. சமீபத்துல இங்கிருக்கிற 15 கிராமங்கள்ல ஒரு ஆய்வு செஞ்சோம். 886 குடும்பங்கள்ல 218 குடும்பங்களுக்கு ரேஷன் கார்டே இல்லை. 574 பேருக்கு ஆதார் கார்டு இல்லை. 532 பேருக்கு வாக்காளர் அடையாள அட்டையே இல்லை. மொட்டபோடுன்னு ஒரு கிராமத்துல 80 குடும்பத்துல 6 பேருக்குதான் ஆதார் கார்டு இருக்கு. 3,500 பேர்ல 2,323 பேருக்கு சாதிச்சான்றே இல்லை. அவங்க எப்படி மத்த சமூகங்களோட போட்டிபோட்டு முன்னுக்கு வரமுடியும்?’’ - ஆதங்கம் தொனிக்கக் கேட்கிறார் அப்புசாமி.

அப்புசாமிக்குப் பூர்வீகம் கொல்லிமலை. அங்குமிங்குமாகப் பெயர்ந்து அப்பாவின் காலத்தில் பர்கூர் மலைக்கு வந்தடைந்திருக்கிறது குடும்பம். சாமை, ராகி, கேழ்வரகு வேளாண்மைதான் குடும்பத்தொழில்.

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-8

‘‘பழங்குடிகள் ஒரு நூற்றாண்டு பின்தங்கியிருக்காங்க தோழர். பல பழங்குடி சமூகங்கள் இப்போதான் பள்ளிக்கூடம் பக்கமே ஒதுங்க ஆரம்பிச்சிருக்கு. ஆனா, பள்ளிக்கூடத்தைத் தாண்ட சாதிச்சான்று தேவைப்படுது. அதிகாரிகள்கிட்ட போனா, ‘அப்பாகிட்ட இருக்கா’, ‘அம்மாகிட்டா இருக்கா’ன்னு கேக்குறாங்க. அப்பா, அம்மாக்களெல்லாம் வனத்துக்குள்ள அவங்களுக்குத் தேவையானதைச் சேகரிச்சு சாப்பிட்டுக்கிட்டு நிம்மதியா இருந்தாங்க. அவங்க வாழ்க்கையை மாத்துறோம்னு சொல்லி வெளியில கூட்டிவந்துட்டு சின்னச்சின்ன உரிமைகளைக்கூடத் தர மறுக்கிறாங்க. சாதிச்சான்று கேட்டு ஒரு தலைமுறையே சோர்ந்துபோச்சு. சமீபத்துல ரெண்டு பேர் நீதிமன்றத்துலயும் தாசில்தார் அலுவலகத்திலயும் விரக்தியில தற்கொலை செஞ்சுக்கிட்டு இறந்துட்டாங்க. ஜனநாயகம் பேசுற நம் நாட்டுல இது எவ்வளவு பெரிய பாகுபாடு... அவலம்..?

அரசுக்கும் பழங்குடிகளுக்கும் இணைப்புப் பாலம் ஒண்ணு அவசியமா இருக்கு தோழர். ஒடுக்கப்பட்ட பல சமூகங்களுக்கு அரசியல் பலமாவது இருக்கு. பழங்குடிகளுக்கு அதுவும் இல்லை. அவங்க பிரச்னைகளைப் புரிஞ்சுக்கிட்டு யாருமே பேசுறதில்லை’’ - அப்புசாமியின் வார்த்தைகளில் அவ்வளவு அனல்.

அப்புசாமி மலையாளி பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். சேலம் மாவட்டத்தில் வாழும் மலையாளிகளைப் பழங்குடிகளாக அங்கீகரித்த அரசு, ஈரோடு மாவட்டத்தில் இருக்கும் மலையாளிகளை ஏற்கவில்லை.

‘‘ஈரோடு மாவட்டத்துல 15,000 மலையாளிகள் இருக்கோம். சாதிச்சான்றிதழ் கேட்டா, OC-ன்னு போட்டுத் தர்றாங்க. நாங்க பழங்குடிகள்னு நிரூபிக்க எங்ககிட்ட இந்த வாழ்க்கையைத் தவிர வேறெந்த ஆதாரமும் இல்லை. எங்களுக்கு மட்டுமல்ல... எல்லாப் பழங்குடிகளுக்கும் இந்தப் பிரச்னை இருக்கு. 1985-ல நடந்த பழங்குடியினக் கணக்கெடுப்பு முறையா நடக்கலே தோழர். பழங்குடிகளோட வாழ்க்கை பற்றி எந்தவிதப் புரிதலும் இல்லாத அதிகாரிகள் எடுத்த கணக்கெடுப்பு அது. பழங்குடிகளுக்கு நிரந்தர இடம்னு எதுவும் இருக்காது. பெரும்பாலான காலங்கள் அவங்க அடர் வனத்துக்குள்ள உணவு தேடிப் பயணிப்பாங்க. எங்கெல்லாம் வாழத்தகுந்த இடங்கள் இருக்கோ... அங்கெல்லாம் ஓரிரு குடும்பங்களா ஒண்டி வாழ்றதுதான் அவங்க இயல்பு. கணக்கெடுத்தவங்க இதையெல்லாம் முழுமையா ஆய்வு செய்யலே. அதனால ஏகப்பட்ட குளறுபடிகள்.

மாரத்தான் மனிதர்கள் - மாற்றத்துக்காக தொடர்ந்து களமாடும் மனிதர்கள்-8

அந்த மக்களோட இயலாமை, போதாமைகளை எல்லாரும் தங்களுக்குச் சாதகமா பயன்படுத்திக்கிறாங்க. நிலங்களைத் திருத்தி வயலாக்கி விவசாயம் செய்ற பழங்குடிகளோட அறியாமையைப் பயன்படுத்தி ஒரு மூட்டை ராகியோ, கொள்ளோ, சிலநூறு ரூபாய் பணமோ கொடுத்துட்டு, அதிகாரிகளை வச்சு மிரட்டி நிலங்களை எழுதி வாங்கிடுவாங்க. நிறைய பழங்குடிகள் இப்படி நிலத்தை இழந்து நிர்க்கதியா நிக்குறாங்க. காவல்துறையும் அதிகாரிகளும் ஆதிக்கசக்திகளுக்குத்தான் ஆதரவா இருக்காங்க. வழக்கறிஞர்கள் நண்பர்கள் மூலமா வழக்குப் போட்டு பலருக்கு நிலங்களை மீட்டுத் தந்திருக்கோம். நாங்கெல்லாம் கூடநிக்குறதால இப்போ நிலம் பறிக்கிறவங்களுக்கு கொஞ்சம் பயம் வந்திருக்கு’’ என்கிறார் அப்புசாமி.

அப்புசாமி 9-ம் வகுப்புவரை படித்திருக்கிறார். பள்ளியைத் தொட்ட முதல் தலைமுறை. படிப்பை இடைநிறுத்திவிட்டு இரண்டாண்டுகள் அப்பாவோடு சேர்ந்து விவசாயம் பார்த்தவர், அதன்பிறகு இளைஞர் பெருமன்றத்தில் இணைந்து இயங்கத் தொடங்கிவிட்டார்.

‘‘அது ஒரு நெருக்கடிக்காலம் தோழர். எங்க பகுதியில வீரப்பன் ஆள்கள் சர்வசாதாரணமா வந்து சந்தன மரங்களை வெட்டிட்டுப் போவாங்க. அவங்களை விட்டுட்டு பழங்குடி மக்களை மிகப்பெரும் சித்திரவதைக்கு ஆளாக்குச்சு அதிரடிப்படை. பல குடும்பங்கள் அழிஞ்சிடுச்சு. பல மரணங்கள் பதிவாகவேயில்லை. நான் படிச்சவரைக்கும் சர்வாதிகாரிகள்கூட அப்படியொரு சித்திரவதையைச் செய்யலே. மிகப்பெரிய அரச வன்முறை அது. அந்தச்சூழல்ல இடதுசாரி அமைப்புகள் மிகப்பெரிய பக்கபலமா நின்னாங்க. வி.பி.குணசேகரன், ப.பா.மோகன், சி.ஆர்.மாதையன் மாதிரி தோழர்களோட இணைஞ்சு கிராமம் கிராமமாப் போய் மக்களுக்கு நம்பிக்கை கொடுத்தோம். வழக்கெடுத்தோம். போராட்டங்கள் நடத்தினோம்.

நம் நாட்டுல இப்பவும்கூட குரலில்லாத ஒரு சமூகம் பழங்குடி சமூகம்தான். சின்னச்சின்ன சலுகைகள், உரிமைகள்கூட அவங்களை இன்னும் வந்தடையல. தாசில்தார், கலெக்டர்னு எந்த அதிகாரிகளும் அவங்களைப் பொருட்டாவே நினைக்கிறதில்லை. தங்களோட பிரச்னைகளை உணர்ந்து பேசுற தெளிவையே பழங்குடிகள் இன்னும் பெறலே. ‘உங்களுக்கு முதியோர் உதவித்தொகை கிடைக்கும்’னு போய்ச் சொன்னா, ‘யாரு கொடுப்பாங்க’ன்னு கேப்பாங்க. ‘விசாரணை இருக்கு, வாங்க’ன்னா வரமாட்டாங்க. இன்னைக்கும் பல கிராமங்கள்ல மொபைல் போன் இல்லை. போக்குவரத்து வசதியில்லை. நடந்துபோய்தான் அவங்களைச் சந்திக்கணும்.

அப்புசாமி
அப்புசாமி

பழங்குடிகள் அதிகாரிகளைக் கண்டா நடுங்குவாங்க. அந்த அச்சத்தைப் போக்கி தலையாரியில இருந்து கலெக்டர் வரைக்கும் எல்லாரும் நமக்கு சேவை செய்ற ஊழியர்கள் தான்னு புரிய வைக்கிறது சவாலாத்தான் இருந்துச்சு.

இன்னைக்கு கொஞ்சம் மாற்றம் நடந்திருக்கு. ஏதாவது பிரச்னைன்னா தேடி வந்து சொல்றாங்க. ரேஷன்கார்டு, ஆதார் கார்டு, வாக்காளர் அட்டை, நலவாரிய அட்டைன்னு அவங்களுக்குக் கிடைக்க வேண்டிய உரிமைகளை அதிகாரிகள்கிட்ட பேசி வாங்கித் தர்றேன்.

பல கிராமங்கள்ல தண்ணீர்ப் பிரச்னை இருந்துச்சு. தொடர் போராட்டங்களுக்குப் பிறகு இப்போ ஓரளவுக்கு சரி பண்ணியிருக்கோம். மனிதர்-விலங்கு எதிர்கொள்ளல் இந்தப் பகுதிகள்ல அதிகம் நடக்கும். கீழேயிருந்து பலர் மலைக்கு வந்து நிலங்களைப் பிடிச்சு வேலி போட்டுட்டதால விலங்குகள் தடுமாறி குடியிருப்புகளுக்குள்ள போயிடும். காயம்பட்டவங்களுக்கு நல்ல சிகிச்சைகூடக் கிடைக்காது. இன்னைக்கு அதுல ஒரு பெரிய விழிப்புணர்வை உருவாக்கியிருக்கோம். பாதிக்கப்பட்டவங்களுக்கு நஷ்டஈடு வாங்கித்தந்திருக்கோம்.

பர்கூர் மலையில 25 பள்ளிகள் இருக்கு. ஆரம்பத்துல ஆசிரியர்கள் பள்ளிக்கு வர்றதேயில்லை. அந்தந்தப் பகுதிகள்ல எட்டாவது, ஒன்பதாவது படிச்ச பசங்களை ஸ்கூலைத் திறந்து பாடம் நடத்தச் சொல்லிட்டு மாசம் ஒரு தடவை வந்துபோவாங்க. ஒருநாள் எல்லாரும் திரண்டு 25 பள்ளிகளுக்கும் பூட்டுப் போட்டோம். ‘ஆசிரியர்களே வராத பள்ளி எங்களுக்குத் தேவையில்லை’ன்னு சொன்னோம். அதுவரைக்கும் அந்தப் பக்கமே எட்டிப்பார்க்காத அதிகாரிகளெல்லாம் தேடி வந்தாங்க. ஒரே நாள்ல பிரச்னை தீர்த்துச்சு.

பிரச்னைகளை அதிகாரிகள் கவனத்துக்குக் கொண்டு போறது, பத்திரிகையாளர்களுக்குச் சொல்லி வெளியில் கொண்டு வர்றது, அதிகாரிகளை மக்கள்கிட்ட அழைச்சுட்டுப் போறதுன்னு ஒரு திட்டமிடலோடு இயங்கிக்கிட்டிருக்கேன் தோழர்...’’ என்கிறார் அப்புசாமி.

``தினமும் பல கிலோ மீட்டர் நடந்தே சுத்துறாருன்னு ஒரு சைக்கிள் வாங்கித் தந்தோம். அதையும் தள்ளிக்கிட்டே நடந்தார். அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சுது, அப்புசாமிக்கு சைக்கிளே ஓட்டத்தெரியாதுன்னு...” என்று அப்புசாமியின் கரம்பற்றிச் சிரிக்கிறார்கள் உடனிருக்கும் தோழர்கள்.

யாருக்கு ஆதரவு தேவையோ, ஆறுதல் தேவையோ, அரவணைப்பு தேவையோ அவர்களைத் தேடிச்சென்று உதவுவதுதான் உண்மையில் மகத்தான சேவை. அப்புசாமி அந்த மகத்தான சேவையைச் செய்துகொண்டிருக்கிறார். துளியளவும் அவருக்கு எதிர்பார்ப்பில்லை. எந்த வெளிச்சமும் தன்மீது விழவேண்டுமென்று ஆசையில்லை. சிவப்புச் சட்டையை அணிந்து கொண்டு பாதம் தேய நடந்துகொண்டேயிருக்கிறார். அவர் பாதம்பட்ட நிலமெல்லாம் பசுமை பூக்கிறது!

- வருவார்கள்