மற்ற எபிசோடுகள்
Published:Updated:

அடங்க மறு: 15 - ஆண்களே... நீங்களும் கால்களை ஒடுக்குங்கள்!

அடங்க மறு
பிரீமியம் ஸ்டோரி
News
அடங்க மறு

இணைந்த கைகள்... தகர்ந்த தடைகள்...

வழக்கறிஞர் கே.சாந்தகுமாரி - ஓவியம்: ஜீவா

‘காலை அகட்டி உட்காராதே; மல்லாந்து படுக்காதே; கால்களைச் சேர்த்து வெச்சுத் தூங்கு...' நம் சமூகத்தில் இந்த அறிவுரைகளைக் கடந்துவராத பெண்கள் அரிது. உட்காரும்போதும், ஓய்ந்து படுக்கும்போதும், தன்னை மறந்து உறங்கும்போதும்கூட பெண்களை அடக்க மாக இருக்க வேண்டுமென நிர்பந்திக்கிற இந்தச் சமூகம், ஆண்களுக்கு அப்படி எந்த அறிவுரையும் சொல்வதில்லை. இந்த நிர்பந்தம், வீட்டில் மட்டுமல்ல பொது வெளியிலும் உண்டு. பேருந்து மற்றும் ரயில் பயணங்களிலும் கால்களைப் பரப்பி, கைகளை விரித்து இரண்டு பேர் உட்காரு மிடத்தை ஓர் ஆண் ஆக்கிரமித்திருக்கும் காட்சிகளைப் பார்த்திருப்போம்.

இப்படி கால்களை ‘V’ வடிவத்தில் விரித்து, அடுத்தவர் இடத்தையும் ஆக்கிரமித்து அமருவதை, 2013-ல் ‘மேன் ஸ்ப்ரெடிங்’ (Manspreading) என்று விமர்சித்தது `டம்ப்ளர்' (Tumblr) என்ற இணையதளம். 2015-ல் ‘Manspreading’ என்ற இந்தச் சொல் ஆக்ஸ் ஃபோர்டு அகராதியிலும் சேர்த்துக் கொள்ளப்பட்டது.

2014-ல் நியூயார்க் மற்றும் சியாட்டில் உள்ள மாநகரப் போக்குவரத்து அமைப்புகள், ரயில் மற்றும் பேருந்துகளில் நின்று கொண்டிருக்கும் பயணிகளுக்கான இடத்தை ஆக்கிரமிக்காமல் அமர வேண்டும் என்பதை வலியுறுத்தும்வண்ணம் ‘நண்பா பரப்புதலை நிறுத்து’ என்ற சுவரொட்டியை வெளியிட்டன. அதனையடுத்து ஃபிலடெல் பியா, சிகாகோ, வாஷிங்டன் டி.சி போன்ற மாகாணங்களிலும் ‘இரண்டு இருக்கைகளா நண்பா; அது தவறு’ என்ற சுவரொட்டி வெளியிடப்பட்டது.

அடங்க மறு: 15 - ஆண்களே... நீங்களும் கால்களை ஒடுக்குங்கள்!

ஓர் இருக்கைக்கு பயணச்சீட்டு எடுத்து விட்டு இருவருக்கான இருக்கைகளை ஆக்கிரமிப்பதைத் தடுத்து உத்தரவிட்டது ஸ்பெயினின் மாட்ரிடு (Madrid) போக்கு வரத்துக்கழகம். சில இடங்களில் அடுத்தவர் இருக்கையை ஆக்கிரமிக்கும் ஆண்களை சக பயணிகளே புகைப்படம் எடுத்து இணையத்தில் வெளியிட்டனர். இதை யொட்டி, சில கைதுகளும் நடந்தன.

அதே நேரம் ஆண்களுடைய உடல் அமைப்பை விமர்சிப்பதற்காகவே இந்தச் சொல் பயன்படுத்தப்படுவதாக விமர் சனங்கள் எழுந்தன. ‘ஆண்கள் கால்களை விரித்து உட்கார்வதற்கு எதிரான சுவரொட்டிகள் வைப்பது தேவையற்றது. சக பயணிகளிடம் இணக்கத்தோடு செயல் படுவதே நமது குறிக்கோள்’ என்றார் டொரன்டோ பொதுப் போக்குவரத்தின் பெண் ஊழியர் ஒருவர்.

ஆண்களை ரகசியமாகப் புகைப்படம் எடுத்து வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்வது குற்றம்; ஆண்களுடைய உடலமைப்பை அவர்களுக்குத் தெரியாமல் புகைப்படம் எடுத்து வெளியிடுவது பழி வாங்கும் நட வடிக்கை; இரண்டு கால்களையும் சேர்த்துவைப்பது ஆண்களுக்கு வலியை ஏற்படுத்தும்; ஆண்களுடைய உடலமைப்பே அப்படி உட்கார் வதற்கான காரணம் என்று ஆண்கள் உரிமை அமைப்பு, அதை நியாயப்படுத்த முற்பட்டது. பெண்கள் இயக்கங் களோ, ‘எங்களுடைய நியாயமான கோரிக் கையை ஏற்பதற்கு பதிலாக எங்கள்மீது வன்முறையை ஏவி விடுகிறார்கள்’ என்று குற்றம் சாட்டின.

2019-ல் லைலா லாரல் (Laila Laurel) என்ற அமெரிக்க மாணவி, கால்களைச் சேர்த்து வைத்து உட்காரும் வகையில் இருக்கை ஒன்றை உருவாக்கினார். அதற்கு விருது கிடைத்தபோதிலும், ஆண் உரிமை அமைப்புகள் அதனை நிராகரித்தன.

நியூயார்க் மற்றும் பாஸ்டனில் தங்களுடைய இருக்கையைத் தாண்டி காலை அகட்டி உட்கார்கிற ஆண்களுக்கு 50 டாலர் அபராதம் விதிக்கப்பட்டதையடுத்து, பல ஆண்களின் கால்கள் விரிவதை நிறுத்தின. இதற்கிடையில், ‘ஆண்கள் காலை விரித்து அமர்வதற்கு காரணம் அவர்கள் உடல் அமைப்பல்ல; ஆணாதிக்க உணர்வு. தவிர, பெண்கள் மனதில் பாலியல்ரீதியான ஈர்ப்பை உருவாக்கு வதற்காகவும் ஆண்கள் அப்படி அமர்கிறார்கள் என்று பர்க்லி (Berkeley) பல்கலைக்கழகம் தன்னுடைய ஆய்வறிக்கையை வெளியிட்டது.

அடங்க மறு: 15 - ஆண்களே... நீங்களும் கால்களை ஒடுக்குங்கள்!

கொதித்துப்போன பெண்ணியவாதிகள், ஏறத்தாழ 28,000 பேர் பொது இடங்களில் `வுமென் ஸ்ப்ரெடிங்' (Woman Spreading) செய்து, தங்களுடைய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு எதிர்ப்பு களைத் தெரிவித்தனர். இதற்கு மற்ற பெண் களிடமிருந்து ஆதரவு மட்டுமல்ல, எதிர்ப்பும் வந்தது.

இந்த இடத்தில் பெண்ணியப் புகைப்பட கலைஞர் மரியன் வெக்ஸ் (Marianne Wex) என்பவரை உங்களுக்கு அறிமுகப்படுத்த விரும்புகிறேன். 1937-ல் ஜெர்மனியில் பிறந்த இவர், 1972 முதல் 1977 வரை 50,000-க்கும் மேற்பட்ட ஆண், பெண்களைப் புகைப்படம் எடுத்து, அவர்களின் உடல்மொழியை ஆய்வு செய்து, அதை ‘Let’s Take Back our Space”: ‘Female’ and ‘Male’ Body Language என்ற புத்தகமாக வெளியிட்டார். அப்புத்தகம் 1984-ல் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப் பட்டது. அந்தப் புத்தகத்திலிருந்த புகைப் படங்களில், ஆண்களின் உடல் மொழியையும், பெண்களின் உடல் மொழியையும் ஒப்பீடு செய்திருந்தார். ஆண்கள் நிமிர்ந்த நெஞ்சோடு தலை நிமிர்ந்து நிற்பதையும், பெண்கள் தோள்களைக் குறுக்கி, இரு கால்களையும் சேர்த்து வைத்து நிற்பதையும் எடுத்துக்காட்டின அவருடைய புகைப்படங்கள். பாலின சமத்துவமின்மை எப்படி நமக்குள்ளே ஊடுருவியிருக்கிறது என்பதை அப்பட்டமாக வெளிக்காட்டின அந்தப் புகைப்படங்கள்.

`ஆண்கள் நிற்கும் விதம், உட்காரும் விதம், நடக்கும் விதம் என அவர்களுடைய அனைத்து உடல் மொழிகளும் ஆணாதிக்க உடல் மொழிகளே... வரலாறு நெடுகிலும் ஆண்கள் இப்படித்தான் இருந்திருக்கிறார்கள். அதன் ஓர் இழைதான், பொதுப் போக்குவரத்து வாகனங்களின் இருக்கைகளிலும், பூங்காக் களின் நீண்ட பெஞ்சுக்களிலும் அதிகபட்ச இடத்தை ஆண்கள் ஆக்கிரமிப்பது’ என்கிறார் மரியன்.

முரண்பாடான ஒரு விஷயம் சொல் லட்டுமா? கலிஃபோர்னியா பல்கலைக் கழகத்தின் மனித நடத்தைகள் குறித்த ஆய்வாளரான தான்யா, டேட்டிங் ஆப் ஒன்றில் ஆண்களின் பலவித புகைப்படங்களை வெளியிட்டு பெண்களுக்குப் பிடித்த ஆண் உடல்மொழி குறித்து அறிய முயன்றார். அதில், `காலை விரித்து இருக்கையின் பெரும் பகுதியை ஆக்கிரமிக்கும் ஆண்கள் மிகுந்த மன உறுதி கொண்டவர்கள்’ என்றும், அந்தப் புகைப்படங்களே தங்களை ஈர்த்ததாகவும் தெரிவித்தனர் பல பெண்கள்.

இதேபோல, 2015-ல் நியூயார்க் நகரில் `MIC’ என்ற ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வு ஒன்றில், காலை அகட்டி அமர்ந்திருந்த பெண்களின் புகைப்படம் ஆண்களை வெகுவாக ஈர்த்ததாக முடிவு வெளியானது. என்னைப் பொறுத்தவரை, மேன் ஸ்ப்ரெடிங் கும் வேண்டாம், அதற்கு எதிராக வுமென் ஸ்ப்ரெடிங்கும் வேண்டாம். அடுத்தவர் உரிமையைப் பறிக்காமல் சம உரிமையுடன் வாழ்வோமே...

- நிறைவடைந்தது

தொகுப்பு: ஆ.சாந்தி கணேஷ்

 கே.சாந்தகுமாரி
கே.சாந்தகுமாரி

போர் தொடரட்டும் தோழிகளே!

நங்கேலியில் தொடங்கி மசூமா ரணல்வி வரை அடையாளம் அறியப்படாத பல சகோதரிகள், அநியா யங்களுக்கு அடங்க மறுத்த வரலாற்றில் எட்டு மாதங்கள் பயணித்தோம். வெற்றிபெற்ற பெரும் போராட்டங்களின் கதைகள் அறிந்த நாம், தங்களுடைய எதிர்ப்பு களால் பாலின சமத்துவத்தை உத்தரவாதப் படுத்திய பெண்ணுரிமைப் போராளிகளின் வலி மிகுந்த சரித்திரங்களையும் தெரிந்து கொண்டோம்.

18-ம் நூற்றாண்டு தொடங்கி 20-ம் நூற்றாண்டு வரை பாலினத்தின் பேராலும், ஆணாதிக்கத்தின் பேராலும் பெண்களின் சிறகுகளை முறித்த மதங்களின் பெயரிலான கட்டுப்பாடுகள், சனாதன அடக்குமுறை, இனவெறி அரசியல் ஆகிய வற்றிலிருந்து விட்டு விடுதலையாக விரும்பும் பெண்ணுரிமை பாதையில் தடம் பதித்தோம்.

இந்தத் தொடர், இந்த இதழுடன் நிறைவு பெறுகிறது. ஆனால், ‘அடங்க மறு’ என்கிற கோஷத்துடன் நாம் தொடர்ந்து கொண்டிருக்கும் போர், முற்றுப்பெறுவது ஆணாதிக்கவாதிகளின் கைகளில்தான் இருக்கிறது. ஆம், ஆணாதிக்கம் அடங்கும்வரை போர் தொடரட்டும் தோழிகளே!

இத்தொடரின் வாயிலாக, ‘நமக்கான உரிமையை நாமே வென்றடைவோம்’ என்று உரத்துச்சொல்ல வாய்ப்பளித்த அவள் விகடனுக்கு நன்றி. வாசிக்கும் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் நம்பிக்கைக் கீற்றை ஒளிரச் செய்யும் அடங்க மறுத்த பெண்களைப் பற்றிய என் பதிவுகளுக்கு இடமளித்த ஆசிரியர் குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள்