Published:Updated:

“சினிமாவில் கிடைத்த அவமானம்தான் என்னை முன்னேற வச்சுது!”

தினேஷ்
பிரீமியம் ஸ்டோரி
News
தினேஷ்

ஸ்கூல் காலத்தில இருந்து டிராமா, டான்ஸ்னு கல்ச்சுரல் நிகழ்ச்சிகள்ல ஆர்வமா கலந்துக்குவேன். கரூர்ல குறும்படப் போட்டி வச்சாங்க. அதுக்காக ‘இதுதான் ஆரம்பம்'ங்கிற குறும்படத்தை இயக்கி நடிச்சிருந்தேன்

சினிமா ஒரு மாய உலகம். ஓவர்நைட்டில் ஒருவரை புகழின் உச்சிக்குக் கொண்டு போகும். அதேநேரம், `ஒரு கதை இருக்கு சார், சொல்லட்டா', ‘நடிக்க ஒரு வாய்ப்பு கொடுங்க சார்' என்று சினிமாவை மட்டும் நம்பி கோடம்பாக்கத்திலேயே பழியாகக் கிடப்பவர்களை ஆண்டுக்கணக்கில் அலைய வைப்பதும் அதே சினிமாதான். கரூரைச் சேர்ந்த தினேஷ், இதில் புது ரகம். சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தாலும், ‘வருமானம்தான் முதலில் முக்கியம்' என்று அந்த சினிமாவில் கிடைத்த அவமானம் கொடுத்த ஊக்கத்தில், இன்று இளம் தொழில்முனைவோராக வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறார். அதேநேரம், சினிமாவிலும் ஜொலிக்கத் தொடங்கியிருக்கிறார். ஒரு நல்ல சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும், இவரது வாழ்க்கைக் கதைக்குள் ஒளிந்திருக்கின்றன.

“சினிமாவில் கிடைத்த அவமானம்தான் என்னை முன்னேற வச்சுது!”

கரூர் வெங்கமேட்டுப் பகுதியைச் சேர்ந்த தினேஷ், எம்.சி.ஏ படித்திருக்கிறார். இவரின் தந்தை குமார் வாடகைக்கு ஆட்டோ ஓட்டுபவர். வாடகை வீட்டில் குடித்தனம், வறுமை என 2015-க்கு முன்புவரை தினேஷின் வாழ்க்கை துயரத்தின் பிடியில் இருந்திருக்கிறது. ‘கரூர் 100 ரூபாய்க் கடை' என்று வீட்டுக்குத் தேவையான சிறுசிறு பொருள்களை விற்கும் கடையை ஆரம்பித்தபிறகு, மெல்ல மெல்ல அவரது குடும்பத்துக்குள் வசந்தம் வீசத் தொடங்கியிருக்கிறது. அந்த மகிழ்ச்சியோடு நம்மிடம் பேசினார் தினேஷ்.

‘‘அப்பா வாடகைக்கு ஆட்டோ ஓட்டுனதால், பெரிசா வருமானம் இருக்காது. பலவேளை பட்டினி கிடப்போம். ‘நீயாச்சும் படிச்சு கைநிறைய சம்பாதிக்கிற வேலைக்குப் போப்பா'ன்னு என்னைப் படிக்க வைத்தார். ‘ஐ.டி கம்பெனியில சேரணும்' என்பதுதான் லட்சியமா இருந்துச்சு.

ஸ்கூல் காலத்தில இருந்து டிராமா, டான்ஸ்னு கல்ச்சுரல் நிகழ்ச்சிகள்ல ஆர்வமா கலந்துக்குவேன். கரூர்ல குறும்படப் போட்டி வச்சாங்க. அதுக்காக ‘இதுதான் ஆரம்பம்'ங்கிற குறும்படத்தை இயக்கி நடிச்சிருந்தேன். பரிசுக்குத் தேர்வாகலை. அடுத்து ‘அப்பா'ங்கிற குறும்படத்துக்கு சிறந்த கதைப்பிரிவுக்கான அவார்டு கிடைச்சுது. படிச்சுக்கிட்டே குறும்படங்களில் நடிச்சேன். எம்.சி.ஏ கடைசி வருஷம் படிக்குறப்போ, சிவகார்த்திகேயனோட ‘காக்கிசட்டை’ படத்துக்கு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட்க்கு ஆடிஷன் வைக்கிறதாகக் கேள்விப்பட்டுக் கலந்துக்கிட்டேன். அதுல செலக்ட்டாகி படத்துலயும் நடிச்சேன். படத்தோட இயக்குநர் துரை செந்தில்குமார் எங்க ஊர்தான். நான் கரூர்னு தெரிஞ்சதும், ‘நல்லா நடிக்குறே'ன்னு தட்டிக்கொடுத்தார். அந்தத் தருணத்துல, ‘சினிமாதான் என் கரியர்'னு முடிவு பண்ணி, உடனே சென்னைக்கு வண்டி ஏறிட்டேன்.

“சினிமாவில் கிடைத்த அவமானம்தான் என்னை முன்னேற வச்சுது!”

ஆனால், நான் நினைச்ச மாதிரி அது ஈஸியா இல்லை. வாய்ப்பு தேடிக் களைச்சுப்போனேன். ‘ஐ.டி ஃபீல்டுக்கே போயிறலாமா'ன்னு குழம்பினேன். இருந்தாலும், ‘இன்னும் ஒரு மாசத்துல வாய்ப்பு கிடைக்கலன்னா ரூட்டை மாத்திருவோம்'னு நினைச்சு வாய்ப்பு தேடத் தொடங்கினேன். அப்போ சாலிகிராமத்தில் ஒரு முக்கிய நடிகரின் பட ஷூட்டிங் நடைபெறுவதைக் கேள்விப்பட்டுப் போனேன். உள்ளே போய் யூனிட்டில் இருக்கிற வேலைகளைப் பார்க்க ஆரம்பித்தேன். மூணு மணி நேரம் யாரும் என்னை எதுவும் கேட்கலை. ஷாட் முடிஞ்சு இயக்குநர் ரிலாக்ஸா உட்கார்ந்ததும், நான் போய் வாய்ப்பு கேட்டேன். உடனே அவர் கடுமையா கோபமாகி, ‘உன்னை யார் உள்ளே விட்டது'ன்னு தகாத வார்த்தைகள்ல திட்டினார். எனக்குக் கண்கள் கலங்கிடுச்சு.

அங்கிருந்து அழுதபடியே, 10 கி.மீ. நடந்து நான் தங்கியிருந்த இடத்துக்கு வந்தேன். ‘நாம் நினைப்பதுபோல் சினிமா இல்லை. முதல்ல வருமானத்துக்கு வழி பண்ணணும்'னு மனசுல நினைச்சுக்கிட்டேன். தி.நகர் பிளாட்பாரத்துல மாற்றுத்திறனாளிகள் பலர், 100 ரூபாய்க்கு சின்னச் சின்னப் பொருள்கள் விற்பதைப் பார்த்தேன். ‘கரூர்ல இதுபோல கடை வைக்கலாம்’னு யோசனை வந்தது. ‘எங்கெல்லாம் பொருள்கள் வாங்குறீங்க’ன்னு அவங்ககிட்ட கேட்டுத் தெரிஞ்சுக்கிட்டு ஊருக்கு வந்தேன்.

“சினிமாவில் கிடைத்த அவமானம்தான் என்னை முன்னேற வச்சுது!”
“சினிமாவில் கிடைத்த அவமானம்தான் என்னை முன்னேற வச்சுது!”

கரூர் பஜார்ல கடை வைக்க இடம் தேடி அலைஞ்சேன். ஒருத்தரும் இடம் தரலை. இந்நிலையில்தான், 2015-ம் வருஷம் தீபாவளி வந்தது. நண்பர் ஒருவர்கிட்ட பத்து நாளுக்கு ஆம்னி வேனை உதவிக்கு வாங்கிக்கிட்டேன். நண்பர்கள்கிட்ட ரூ. 30,000 கடனை வாங்கி, திருப்பூர் போய் துணிகளை பர்ச்சேஸ் பண்ணி வந்து, ஆம்னி வேனில் வைத்து சாலையோரத்துல விற்பனை செஞ்சேன். கரூர் பஜார்ல நான் விற்பனை செய்யும் விதத்தைப் பார்த்து இம்ப்ரஸான ஒரு நகைக்கடை உரிமையாளர், ‘தீபாவளி வரைக்கும் என் கடையில் வைத்து விற்பனை பண்ணிக்க'ன்னு சொன்னார். ஆனா, தீபாவளிக்கு இன்னும் ஏழு நாள் இருக்கும்போதே, சாவியை அவர்கிட்ட திருப்பிக் கொடுத்தேன். மூணே நாளில் நான் எல்லாத்தையும் விற்றதைக் கேட்டு அசந்துபோன அவர், தன் கடையை அட்வான்ஸ் வாங்காமல் வாடகைக்குக் கொடுத்தார். துணி வித்ததில் ரூ. 50,000 லாபம் கிடைச்சுச்சு. நண்பரோட அப்பாகிட்ட கூடுதலா ரூ. 3 லட்சம் கடன் வாங்கி, ‘கரூர் 100 ரூபாய் கடை' ஆரம்பிச்சேன். டி ஷர்ட், கைலி, ஷார்ட்ஸ், கலர் வேஷ்டி, காவி வேஷ்டி, மிடி, சுடி, நைட்டி, ஹேண்ட்பேக், பெல்ட், கிப்ட் டாய்ஸ்னு எதை எடுத்தாலும் வெறும் 100 ரூபாய்க்கு விற்க ஆரம்பித்தேன்.

கடைப் பேரு வித்தியாசமா இருந்ததால், ஆரம்பத்தில் இருந்தே நல்லா வியாபாரம் நடந்தது. நண்பர்கள்கிட்ட வாங்கின கடனை அடைச்சேன். 2018-ல் எனக்குத் திருமணம் ஆனது. அந்த வருஷமே ரூ. 20 லட்சத்துல சொந்தமா வீடு வாங்கினேன். இவ்வளவு காலம் எங்களுக்காக உழைத்த எங்கப்பாவை, அதுல உட்கார வச்சு அழகு பார்த்தேன். இன்னொரு பக்கம், சென்னைக்குப் போய் அருவி, கொடி, வடசென்னைன்னு பல படங்கள்ல சின்னச் சின்ன ரோல்கள்ல நடிச்சேன். ‘மெட்ரோ’ பட இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன், அடுத்த படத்துல நல்ல ரோல் தர்றதா சொல்லியிருக்கார். தொழிலை அதிக நேரம் கவனிக்குறேன். ஆடிஷன் நடக்கும் நாள்களில் மட்டும், மனைவியிடம் கடையைப் பார்த்துக்கச் சொல்லிட்டு, நான் போய் கலந்துக்குவேன்.

“சினிமாவில் கிடைத்த அவமானம்தான் என்னை முன்னேற வச்சுது!”
“சினிமாவில் கிடைத்த அவமானம்தான் என்னை முன்னேற வச்சுது!”

ஆனா, என் மூணு நண்பர்கள் சினிமாவை மட்டும் நம்பி காலத்த ஓட்டுறாங்க. ‘என்னைப்போல முதல்ல வருமானத்துக்கு வழி பண்ணிக்கிட்டு, சைடுல சினிமா வாய்ப்பு தேடுங்க'ன்னு அறிவுறுத்துறேன். அதோட, அவங்களுக்கு ரெகுலரா பண உதவியும் செய்றேன். சினிமாவில் கண்டிப்பாக ஒருநாள் எல்லோருக்கும் தெரியும் முகமாக மாறுவேன். அதுக்கு சமமா, இந்த நூறு ரூபாய்ப் பொருள்கள் விற்கும் கான்செப்ட்டை தமிழகம் முழுக்கக் கொண்டு போற முயற்சியிலும் இருக்கிறேன். நிறைய ஊர்கள்ல என் கடையைத் திறக்கணும். அதை நிச்சயம் சாதிப்பேன்.

அந்த இயக்குநர் அன்னைக்கு என்னைக் கடுமையா திட்டாம இருந்திருந்தா, நான் கண்டிப்பா இந்தத் தொழிலைத் தொடங்கியிருக்கமாட்டேன். ‘ஒரு வாய்ப்பு கொடுங்க சார்'ன்னு யாருகிட்டயாவது கேட்டுக்கிட்டே இருந்திருப்பேன். ‘எல்லாம் நன்மைக்கே'ன்னு சொல்லப்படுவது, என் வாழ்க்கையில் சத்தியமான வார்த்தையா பலிச்சிருக்கு. சென்றாயிலு, மதிகிருஷ்ணன், அய்யப்பன், கதிரவன், குருராஜ்னு எனக்குக் கிடைத்த நண்பர்கள்போல நண்பர்கள் கிடைத்தால், எல்லோருக்கும் வெற்றி கிடைக்கும்’’ என்று கூறி முடித்தார்.

ஒரு பயோபிக் சினிமாவுக்கான அத்தனை அம்சங்களும் தினேஷ் வாழ்க்கையில் நிறைந்திருக்கின்றன. முயற்சிகள் கைகூட வாழ்த்துகள்.