
மீஞ்சூர் பகுதியில் உள்ள எளிய குடும்பத்துக் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தக் களமிறங்கியவர்.
ஆறுமுகம். வயது 30, ஊர் : பாக்கம் (மீஞ்சூர் ஒன்றியம்), வேலை : தனியார் பள்ளி ஆசிரியர், அடையாளம் : மக்களுக்கானவன்.
தனி ஒரு மனிதனால் என்ன செய்துவிட முடியும் என்ற கேள்விக்கு எத்தகைய மாற்றத்தை வேண்டுமானாலும் நிகழ்த்த முடியுமென நம்பிக்கையூட்டுகிறது ஆறுமுகத்தின் செயல்பாடு. மீஞ்சூர் பகுதியில் உள்ள எளிய குடும்பத்துக் குழந்தைகளின் கல்வியை மேம்படுத்தக் களமிறங்கியவர். பத்தாண்டுகளாகக் கல்வி, சுகாதாரம், உணவு என உதவி, அம்மக்களின் இடர்களைத் துடைப்பவர்.
மீஞ்சூர் ஒன்றியம் - பழவேற்காடு பகுதி. ஆறுமுகத்தை நேரில் சந்திப்பதற்காகச் சென்றிருந்தோம். வெள்ளந்தியான சிரிப்போடு நம்மை வரவேற்றார். “உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டோம், உங்களைத் தெரிஞ்சுக் கலாம்னு’’ நாம் பேசத் தொடங்கும்போதே இடைமறித்தவர் “பக்கத்து ஊருக்குத்தான் போறேன். வாங்க அங்க போய்ப் பேசுவோம்” என நம்மைப் பின்தொடரச் சொல்லிவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். கடலும் வயலுமென நீளும் பாதைகளின் வழியே பயணித்தோம். சில கிலோமீட்டருக்கு ஒரு கிராமமென அமைந்தி ருந்தது. ஆறுமுகத்தின் வண்டிச் சத்தம் கேட்டதும் குழந்தைகள் குதூகலித்தார்கள். தூரத்திலிருந்து “குட் மார்னிங் சார்” எனக் குரல்கள் இடைவிடாது கேட்டன.

சார், வாத்தியார், டீச்சர் என அழைத்த வண்ணம் ஒவ்வொரு கிராமத்திலும் மக்கள் அவரைச் சூழ்ந்துகொள்கிறார்கள். “படிக்கிறதுக்கு நோட்டு வேணும் சார்”, “என்னோட முதியோர் பென்ஷன் இன்னும் வரல தம்பி”, “அந்த மூணாவது வீட்டுப் பாட்டிக்குச் சாப்பாட்டுக்கு வழி இல்லப்பா”, “பல்லு வலியா இருக்கு” என குடும்ப உறுப்பினர்போல அவரவர் பிரச்னைகளை ஆறுமுகத்திடம் முறையிடுகிறார்கள். மாறாத புன்னகையுடன் ஒவ்வொருவருக்கும் பதில் சொல்கிறார். சில தன்னார்வலர்கள் மூலம் மதிய உணவைக் குழந்தைகளுக்கும் ஆதரவற்றோருக்கும் பகிர்ந்தளிக்க முன்னேற்பாடுகளைச் செய்து விட்டுப் புறப்பட்டார். அவர் வண்டியை எடுத்ததும், எங்கிருந்தோ ஓடி வந்த நடுவயதுப் பெண் தானாகப் பின்சீட்டில் ஏறி அமர்ந்து கொண்டார். “ எங்கம்மா போகணும்” என இவர் கேட்க, “ நீங்க போற வழியில இறங்கிக்குறேன்” என உரிமையோடு கேட்டு வசதியாக அமர்ந்து கொண்டார்.
“என்னோடது ரொம்ப ஏழ்மையான குடும்பம். குடிக்கு அடிமையாகி அப்பா இறந்துட்டாங்க. அம்மா விவசாயக் கூலி. மதிய உணவுக்காகவே பள்ளிக்குப் போன முதல் தலைமுறைப் பட்டதாரி நான். அப்போவெல்லாம் ஸ்கூல்ல எல்லா உதவியும் எனக்கு என் ஆசிரியர்கள்தான் பண்ணுனாங்க. வீட்டுல லைட் இருக்காது, படிக்கவும், மழைக்காலத்துல தங்கிக்கவும் எனக்கு இந்த ஸ்கூல் லைப்ரரிலதான் இடம் கொடுத்தாங்க. ஆசிரியர்கள் அவங்க சாப்பாட்டைக்கூட எனக்குக் கொடுத்துடுவாங்க. படிப்போடு சேர்த்து சமூகத்தையும் அவங்ககிட்ட இருந்து நான் கத்துக்கிட்டேன்’’ தனது ஆசிரியர்கள் குறித்துப் பேசுகையில் ஆறுமுகம் குரலில் அவ்வளவு பெருமிதம்.

“ஸ்கூல் முடிஞ்சதும் நியூ காலேஜ்ல சேர்ந்தேன். இரண்டாவது வருஷம் படிக்கும்போதே எனக்கு என் ஆசிரியர்கள் செஞ்சத, நம்ம அடுத்து வர பிள்ளைகளுக்குச் செய்யணும்கிற எண்ணம் தோணிக்கிட்டே இருந்தது. எங்க ஊருல பத்தாவதுக்கு மேல யாரும் படிக்கவே மாட்டாங்க. படிக்கிறவங்களும் பெரும்பாலும் பெயில் ஆகி வேற வேலைக்குப் போய்டுவாங்க. அதை மாத்தணும்னு முடிவு செஞ்சேன். என் காலேஜ் பிரெண்ட்ஸ் சிலரைக் கூட சேர்த்துக்கிட்டு, சாயங்காலம் பத்தாவது பசங்களுக்கு இலவச டியூஷன் எடுக்க ஆரம்பிச்சேன். அந்த வருஷம் எங்க ஊருல பத்தாவது தேர்வு எழுதினவங்க ‘ஆல் பாஸ்.’ நிறைய பேரு 400 மார்க்குக்கு மேல எடுத்திருந்தாங்க. ரிசல்ட் வந்த அன்னைக்கு எங்க ஊரே அதைத் திருவிழா மாதிரி கொண்டாடினாங்க. அங்க ஆரம்பிச்சது இப்போ பத்து வருஷத்துக்கு மேல ஆச்சு” என்கிறார்.
இன்று ஆறுமுகமும் அவர் நண்பர்களும் சேர்ந்து, அப்பகுதியில் உள்ள சுமார் இருபது கிராமங்களில் இலவச டியூஷன் சென்டர் நடத்து கிறார்கள். அந்தந்தப் பகுதியிலேயே ஒரு ஆசிரியர் தன்னார்வலராக முன்வந்து மாணவர்களுக்குப் பாடம் எடுக்கிறார். இன்று இந்தக் கல்வி மையங்களில் 850 மாணவர்கள் பயனடைகிறார்கள், 27 ஆசிரியர்கள் தன்னார்வலர்களாகப் பணிபுரிகிறார்கள். மாணவர்களின் படிப்பு மட்டுமல்லாமல், குளிப்பது முதல் நோய்த்தடுப்பு வரை எல்லாவற்றிற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது, மரம் நடுவது, பெண்களுக்குத் தொழிற்கல்வி பயிற்றுவிப்பது, ஊருக்குத் தேவையான சுகாதார வசதிகள், மருத்துவ உதவிகள், தண்ணீர்த் தேவை, அரசு வழங்கும் சலுகைகளை மக்களுக்குக் கொண்டு சேர்ப்பது, வீட்டுக்கு வசதிகள் அமைத்துக் கொடுப்பது ஆதரவற்றோருக்கு உதவுவது என அந்த கிராமத்தின் மேம்பாட்டிற்குத் தேவையான விஷயங்களையும் முன்னெடுத்துச் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ஆறுமுகத்தின் பணியைப் பற்றிக் கேள்விப்பட்ட சில தன்னார்வலர்கள் மக்களுக்கு உதவும் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொள்கிறார்கள். தனியார் பள்ளி ஆசிரியராக தன் வாழ்வாதாரத்திற்கு எட்டு மணி நேரமும், மீதமுள்ள தன் வாழ்க்கையை மக்களுக்காகவும் அர்ப்பணித்திருக்கிறார். அப்பகுதியிலுள்ள சுமார் 100 கிராமங்களில் ‘Support group’ எனும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பை உருவாக்கி யிருக்கிறார். ஊருக்கோ, தனிநபருக்கோ ஒரு பிரச்னை எனில் முதல் ஆளாக அங்கு நிற்கிறார்கள் இந்த இளைஞர்கள்.
மாலை நான்கு மணி ஆனதும் அவரைச் சுற்றி இளைஞர்கள் கூடுகிறார்கள். அவரவர் பணியை முடித்து விட்டு நேரே அவர்கள் ஆறுமுகத்திடம் வந்துவிடு கிறார்கள். “இன்னைக்கு என்ன சார் வேலை?” என்றதும், ஒவ்வொருவருக்கும் ஒரு பணியைக் கொடுத்து அனுப்பி வைக்கிறார்.
வந்திருந்தவர்களில், அபித் என்ற கல்லூரி மாணவனிடம் பேசினோம், “சார்தான் எங்களுக்கு எல்லாமே, ‘இவனெல்லாம் எங்க உருப்படப்போறான்’னு எங்க வீட்ல திட்டினே இருப்பாங்க, ஒருநாள் சார் வீட்டாண்ட வந்தாரு. சாப்பாடு கொடுக்கப் போறேன், கூட வரியான்னு கேட்டுக் கூட்டிப் போனாரு, அன்னைக்குப் பசியோட இருக்கவங்களுக்கு சாப்பாடு கொடுக்கச்சொல்ல, மனசுக்கு ரொம்ப சந்தோசமா இருந்துச்சு. அன்னைலேருந்து சார்கூடதான் இருக்கேன். இப்போல்லாம் எங்க வீட்ல என்ன மதிப்பா பாக்குறாங்க” என்கிறார் மகிழ்ச்சியோடு.
மாலை ஆறுமுகத்திடம் விடைபெற்று அங்கிருந்து கிளம்பினோம். கையில் நோட்டு புத்தகங்களோடு வந்த மாணவர்கள் சமூக இடைவெளியுடன் ஒற்றை விளக்கின் கீழ் அமர்ந்து படிக்கத் தொடங்கினார்கள். அந்த விளக்கொளியில் இருள் மெல்ல பிரகாசமானது.