ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

2K kids: எதிர்பாரா விபத்து... இழந்த நினைவுகள்... இப்படித்தான் மீண்டேன்!

விபத்து
பிரீமியம் ஸ்டோரி
News
விபத்து

- க.செங்கொடி

திருப்பூர் மாவட்டம், காங்கேயம்தான் என் சொந்த ஊர். நான் செங்கொடி இப்போது சென்னை, இலயோலா கல்லூரியில் டிஜிட்டல் ஜர்னலிசம் மூன்றாமாண்டு படிக்கிறேன். என் தங்கை தமிழழகி, சென்னை அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு படிக்கிறாள்.

என் பெற்றோர் கண்ணுசாமி - சுமதி. எங்கள் குடும்பமும் பெரியப்பாவின் குடும்பமும் ரொம்பவே நெருக்கம். என் அப்பாவின் அண்ணனும் அம்மாவின் அக்காவும்தான் பெரியப்பா - பெரியம்மா. இதுவே இரண்டு குடும்பமும் கூடுதல் நெருக்கத்துடன் பழகுவதற்கு முக்கிய காரணம். நான், என்னுடைய தங்கை மற்றும் பெரியப்பா பிள்ளைகளான பாரதி செல்லம், தீட்சண்யா அனைவரும் ஒரு வீட்டுப்பிள்ளைகள்போல அன்புடனும் ஒற்றுமையுடனும் வளர்ந்தோம்.

எங்கள் குடும்பம்
எங்கள் குடும்பம்

2020 ஜூலை 2. நானும், பெரியப்பா பெண் தீட்சண்யாவும் ஸ்கூட்டியில் காலை 7.30 மணிக்கு, எங்கள் வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவிலிருந்த தாத்தா, பாட்டி வீட்டுக்குச் சென்றோம். நான்குவழிச் சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராமல் ஏற்பட்ட விபத்தில் ஒரு கார் எங்கள்மீது வேகமாக மோதியது. சினிமாவில் எல்லாம் பார்ப்போமே... அப்படி காரின் மேல் பகுதியில் விழுந்து, பிறகு தரையில் தூக்கியெறியப் பட்டேன் நான். என் தங்கையும் தூக்கி வீசப்பட்டு சாலையின் ஓரத்தில் விழுந்தாள். நான் பேச்சுமூச்சின்றியும், என் தங்கை கை முறிந்து திருகியும் கிடந்ததைப் பார்த்தவர்கள் பதறியிருக் கிறார்கள். அந்த நேரத்தில், எங்கள் பக்கத்து வீட்டு ஷ்யாம் வில்சன் பிரபு அண்ணா எங்களை யதேச்சையாக கைப்பேசியில் அழைக்க, அங்கிருந்த யாரோ அவர்களுக்கு எங்கள் விபத்து பற்றி தகவல் சொல்ல, அவர்களும், எங்கள் குடும்பத்தினரும் ஓடோடி வந்தனர். என்னையும், தங்கையையும் தனித்தனி ஆம்புலன்ஸில் காங்கேயம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். என் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக இருந்த தால், மேல்சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல வேண்டிய அவசரம். ஓர் உயிரைக் காக்கும் பொறுப்புடனும், தவிப்புடனும், வேகத்துடனும், அந்த ஆம்புலன்ஸை இயக்கிய ஓட்டுநரை இப்போதும் நன்றியுடன் பேசுவார்கள் வீட்டில். நான் கோவையில் ஒரு தனியார் மருத் துவமனையில் அனுமதிக்கப்பட்டேன். என்னைத் தொடர்ந்து, தங்கையும் அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தங்கைக்குப் பெரிய பிரச்னை இல்லை. ஆனால், தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப் பட்ட நான், உயிர் பிழைப்பேனா என்று மறுநாள் தான் கூற முடியும் என்றிருக்கிறார்கள் மருத்து வர்கள். மறுநாள் எனக்குக் காலிலும், கண்ணிலும் அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டன. ஒன்றல்ல, இரண்டல்ல... 26 நாள்கள் ஐசியூ-ல் வைக்கப் பட்டேன். சுயநினைவின்றி மயக்கநிலையில்தான் இருந்திருக்கிறேன். அதனால் எனக்கு திரவ உணவு மூக்கின் வழியாகக் கொடுக்கப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், என் பெற்றோருக்கு அடுத்த இடியை இறக்கினார்கள் மருத்துவர்கள். ‘கண் விழித்தாலும் பழைய நினைவுகள் இருக்குமா என்பது சந்தேகம்’ என்று அவர்கள் சொல்ல, என் குடும்பத்துக்கு உலகமே நின்றுவிட்டிருக்கிறது. கண் விழித்தபோது... எனக்குப் பழைய நினைவுகள் இல்லை. ‘நான் யார், எங்கிருக்கிறேன்...’ என்று சில தமிழ் சினிமா ஹாஸ்பிடல் சீன்களில் பார்க்கும் அதே சூழ்நிலை. அதிர்ந்து, அழுத என் குடும்பம் பின்னர் நிதர்சனத்தை ஏற்று, சிகிச்சை யில் நம்பிக்கை வைத்து நாள்களை எதிர்கொண்டது. பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக எனக்கு நினைவுகள் மீள, மருத்துவ மனையிலிருந்து டிஸ்சார்ஜ். ‘முழுமையாக குணமாக ஒரு வருடமாகலாம்’ என்றிருக்கிறார்கள் மருத்துவர்கள்.

 தீட்சண்யா -  க.செங்கொடி
தீட்சண்யா - க.செங்கொடி

வீட்டிலேயே தினமும் ஊசி, மருந்து, மாத்திரைகள் என சிகிச்சை தொடர்ந்தது. வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு செவிலியர் தினமும் வந்து ஊசி போடுவார். ஆரோக்கியமும் நினைவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக மீண்டாலும், என் கால்கள் முறிந்துவிட்டதால் என்னால் முன்னர் போல நடக்க முடியாது. என் பெரியப்பா, தன் வீட்டில் வைத்து கண்டிப்புடன் என்னை ஃபிஸியோதெரபி சிகிச்சை எடுத்துக்கொள்ளச் செய்தார். நான் சோம்பேறித்தனம்பட்டாலும் விட மாட்டார். தினமும் மூன்று விதமான உடற்பயிற்சி களை, பரிந்துரைத்த செட்களில், பரிந்துரைத்த நேரம்வரை செய்யாமல் என்னை விடமாட்டார். அவரால் என் குணம்பெறுதல் விரைவானது. என்றாலும், இன்னொரு பிரச்னை கிளம்பியது. எனக்குத் தலையில் அடிப்பட்டதால் எல்லையற்ற கோபம் வரும். கட்டுப்படுத்த முடியாமல், கையில் எது இருந்தாலும் எடுத்து வீசுவேன். பின் மனநல மருத்துவரிடம் சிகிச்சை எடுத்தேன்; என்னை சரி செய்துகொண்டேன். இப்போது உடலளவிலும், மனதளவிலும் நான் குணம் பெற்றுவிட்டேன்.

இந்த இக்கட்டான காலகட்டத்தில் நான் கற்றதும் பெற்றதும் இவைதான். உலகின் மிகச் சிறந்த இயந்திரம், மனித உடல். அது தானே தன்னைச் சரிசெய்துகொள்ள 100% முயற்சி எடுக்கும். அதற்குத் துணையாக நம் நம்பிக்கையை நம் உடலுக்குத் தர வேண்டும். அப்படித்தான், ‘எல்லாம் சரியாகிவிடும்’ என்று நானும் என் குடும்பத்தினரும் அனுதினமும் நம்பினோம்.

எனவே, மருத்துவமனைப் படுக்கையில் இருப் பவர்கள், எந்த இக்கட்டான சூழ்நிலையிலும் அதிலிருந்து மீண்டுவிடுவோம் என்ற நம்பிக்கையை இழக்கக் கூடாது. விபத்து, நினைவிழப்பு என இத்தனை நடந்த பின்னரும், என்னைத் தனியாக சென்னைக்குப் படிக்க அனுப்பியிருக்கிறார்கள் என் குடும்பத்தினர். எனவே, நோயிலிருந்து மீண்டவர்களை நோயாளியாகவே நினைக்காமல், ‘மறுபடியும் ஏதாச்சும் ஆகிட்டா...’ என்ற எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல், அவர்களை இந்த உலகத்திடம் அனுப்பிவையுங்கள். நானே சாட்சி!