Published:Updated:

நம்பிக்கை இழக்கவில்லை!

லிங்கசெல்வி
பிரீமியம் ஸ்டோரி
News
லிங்கசெல்வி

லிங்கசெல்வியின் கணவர் லிங்கேஸ்வரன் வியாபாரிகள் சங்க நிர்வாகி.

நான் வீட்டில் நுழைந்தபோது லிங்கசெல்விக்குக் கணவர் லிங்கேஸ்வரன் சாப்பாடு ஊட்டிக் கொண்டிருந்தார்.

கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டு என்னை வரவேற்கிறார் லிங்கசெல்வி. கணவனுக்கும் மனைவிக்கும் பெயர்ப்பொருத்தமே அமர்க்களம். லிங்கசெல்விதான் உரையாடலைத் தொடங்குகிறார்.

“ஓரளவுக்கு பேலன்ஸ் பண்ணி என்னால சுயமா சாப்பிட முடியும். ஆனாலும், இவர் எனக்கு தினமும் ரெண்டு வேளையாவது சாப்பாடு ஊட்டிவிடுவார். நானே குளிச்சுக்குவேன். நைட்டி மாதிரியான இலகுவான டிரஸ்ஸையும் உடுத்திக்குவேன். ஆனா, புடவை கட்டிவிடுறது, தலை முடிக்கு க்ளிப் மாட்டுறது மாதிரி தேவைகளை இவர்தான் செய்துவிடுவார். இன்னும் ஓரிரு வருஷத்துல என்னோட தேவைகளை நானே செய்துக்கிற அளவுக்குத் தயாராகிடுவேன்” – லிங்கசெல்வியின் முகத்தில் சுடர்விடும் மகிழ்ச்சிக்கும் நம்பிக்கைக்கும் குடும்பத்தினரின் அன்புதான் அஸ்திவாரம்.

லிங்கசெல்வியின் கணவர் லிங்கேஸ்வரன் வியாபாரிகள் சங்க நிர்வாகி. சங்கத்தின் சார்பில் நடக்கவிருந்த மாநாட்டுக்கு, தனது வீட்டின் அருகிலுள்ள சுவரில் பேனர் வைக்க ஏற்பாடு செய்தார். இரவு நேரத்தில் ஏராளமான ஊழியர்கள் இணைந்து பெரிய மெட்டல் பேனரைப் பொருத்திக் கொண்டிருந்தனர். இரண்டாவது தளத்திலிருக்கும் வீட்டின் பால்கனியில் இரும்புக் கதவில் கைகளைப் பிடித்துக்கொண்டு, அந்தப் பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்தார் லிங்கசெல்வி. பலத்த காற்றில் திடீரென சரிந்த பேனர், அருகிலிருந்த மின்சாரக் கம்பியில் மோதியவாக்கில் வீட்டின் பால்கனி தடுப்புக் கதவில் உரசியது. கண்ணிமைக்கும் நேரத்தில் லிங்கசெல்வியின் உடலில் மின்சாரம் பாய்ந்து, தலையில் பெரும் காயம் ஏற்பட்டது. அந்த விபத்தில் உயிர் தப்பினாலும், இரண்டு கைகளும் நீக்கப்பட்டன. அடுத்த ஓராண்டுக்காலம் லிங்கசெல்விக்குப் பெரும் வேதனைதான். நம்பிக்கையுடன் போராடியவர், கேரளாவில் இரண்டு ஆண்டுகள் தங்கியிருந்து ஓர் ஆணின் கைகளை தானமாகப் பெற்றுள்ளார். கைகளை உயர்த்திக் காட்டியவரின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருக் கெடுக்கிறது. விபத்து நடந்த பால்கனிக்கு அருகில் வந்தவரின் நினைவுகள் நான்காண்டு களுக்குப் பின்னோக்கிச் சென்றன.

நம்பிக்கை இழக்கவில்லை!
“விபத்து நடந்தப்போ, பால்கனி தடுப்பு கேட்டைத் திறந்துவெச்சிருந்தேன். என்மீது மின்சாரம் பாய்ந்த சில விநாடிகள்ல பவர்கட்டாகிடுச்சு. அதனாலதான் உயிர் பிழைச்சேன்.

நிலைதடுமாறி தடுப்புச் சுவருக்கு மறுமுனையில கீழே விழப்போனேன். படிக்கட்டில் ஏறி வந்திட்டிருந்த எங்க சின்னப் பையன் சத்தம்போட்டு என்னைக் கீழே இழுத்துப்போட்டான். மறுநாள்தான் எனக்கு நினைவு வந்துச்சு. தடுப்புக் கம்பியின் கீழ் பகுதியில என் வயிறு மோதி ரெண்டாப் பிளந்துடுச்சு. தொடையிலிருந்து சதையை எடுத்து ஆபரேஷன் செஞ்சு வயிற்றுப் பகுதியைச் சரி செய்தாங்க. உயிருக்கு ஆபத்தில்லை. ஆனா, கைகள்ல ஒவ்வொரு விரலும் அடுத்தடுத்து அழுக ஆரம்பிச்சது. மூணு நாளைக்கு ஒருமுறைன்னு 18 ஆபரேஷன் செய்தாங்க. ஒவ்வொரு விரலா நீக்கி, 60 நாள்கள்ல என் ரெண்டு கைகளையும் நீக்கிட்டாங்க.

அதுவரைக்குமே 35 லட்சம் ரூபாய் செலவாகிடுச்சு. பிறகு, தாம்பரத்துல இருந்த அக்காவின் வீட்டுல ரெண்டு மாசம் தங்கினேன். தொடை முழுக்கக் காயம் இருந்ததால, நாலுமாசம்வரை நடக்கக்கூட முடியலை. கையில்லாத நிலையை என்னால ஏத்துக்கவும் முடியலை. ஆஸ்பத்திரியில இருக்கும் போதும், அக்கா வீட்டுல இருந்தபோதும், ‘என்னைக் கொன்னுடுங்க. வாழ விரும்பலை’ன்னு அடிக்கடி சொல்லுவேன்” - தளர்வான குரலில் கூறும் லிங்கசெல்வியை, ஒட்டுமொத்தக் குடும்பமும் தாங்கிப் பிடித்து நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது.

நம்பிக்கை இழக்கவில்லை!

மனைவியின் கரங்களைப் பற்றிக்கொண்டு பேசும் லிங்கேஸ்வரன், “ஒருநாள் யதேச்சையா நியூஸ் பேப்பர் படிச்சப்போ, கேரளாவின் எர்ணாகுளத்திலுள்ள ஒரு ஆஸ்பத்திரியில சிலருக்குக் கை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டதா செய்தி இருந்துச்சு. குடும்பத்துல பலரும் மனைவிக்குக் கைதானம் செய்ய முன் வந்தாங்க. உடனே அந்த ஆஸ்பத்திரிக்குப் போனோம். ‘விபத்து நடந்ததில் இருந்து ஒரு வருஷம்வரை உடலில் எலக்ட்ரிக்கல் ரியாக்‌ஷன் இருக்கும் என்பதால், அதன் பிறகுதான் ஆபரேஷன் செய்ய முடியும்’னு சொல்லிட்டாங்க.

விபத்து நடந்து ஒருவருஷம் கழிச்சு கைமாற்று சிகிச்சை தொடங்குச்சு. நமக்குப் பொருந்துற மாதிரி கை தானம் கிடைச்சா, உடனடியா அதைப் பொருத்தியாகணும். எனவே, ஆஸ்பத்திரிக்குப் பக்கத்துலயே தங்கச் சொன்னாங்க. வாடகைக்கு வீடு பிடிச்சுத் தங்கிட்டோம். 2018-ல கேரளாவைச் சேர்ந்த அருண் ராஜ்ங்கிற இளைஞர் மூளைச்சாவு அடைந்தார். அவரோட கைகளை என் மனைவிக்குப் பொருத்தினாங்க.

25 டாக்டர்கள் சேர்ந்து 20 மணிநேரம் அந்த ஆபரே ஷனைச் செய்தாங்க. பொருத்திய கைகளை இயங்க வைக்கும் சிகிச்சை ஒருவருஷம் நடந்துச்சு.

போன வருஷம்தான் வீட்டுக்கு வந்தோம். இன்னைக்குவரை அருண்ராஜைக் கடவுளா கும்பிட்டுக்கிட்டிருக்கோம்” என்று நெகிழ்கிறார் லிங்கேஸ்வரன்.

“அந்த விபத்து நடந்ததி லிருந்து எனக்கு மீண்டும் கைகள் பொருத்தப் படுற வரைக்கும் என் கணவர் எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கலை. தாடியையும் எடுக்கவேயில்லை. எனக்குக் கைதானம் கிடைச்ச பிறகுதான் இயல்புநிலைக்குத் திரும்பினார். குடும்பத்தினர் என்னைக் குழந்தை மாதிரி பார்த்துக்கிறாங்க. தானம் பெற்ற கைகள் என் உடலோடு பொருந்தியிருந்தாலும், அதுல நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். அதற்கேற்ப மொத்த உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் பேலன்ஸ் செய்ய, வாழ்நாள் முழுக்க தினமும் மாத்திரைகள் சாப்பிடணும். இதுக்கே மாசத்துக்குப் பதினைந்தாயிரம் ரூபாய் செலவாகுது. தவிர, நோய்த்தொற்று ஏற்பட வாய்ப்புள்ளதால, எச்சில் இலையைத் தொடக்கூடாது, இறுதிச் சடங்குகள்ல கலந்துக்கக்கூடாது, பாத்திரம் கழுவக்கூடாது, கூட்டமுள்ள இடங்களுக்குப் போகக்கூடாது. மத்தவங்களுக்கு இருப்பது போல கைகளில் முழுமையான செயல்பாட்டை என்னால எதிர்பார்க்க முடியாது. ஆனாலும், என்னோட தேவைகளைப் பூர்த்தி செய்துக்க முடியும். ஒரு வருஷமா கைக்கு நிறையவே பயிற்சி கொடுத்து, இப்போ ஓரளவுக்கு இயக்கம் நல்லாருக்கு. இதை இன்னும் அதிகப்படுத்தணும்” – புன்னகையுடன் கூறும் லிங்கசெல்வியை மகன்கள் இருவரும் ஆறுதலாக அணைத்துக்கொள்கின்றனர்.