சினிமா
தொடர்கள்
Published:Updated:

“புத்தகங்களே என் நம்பிக்கை!”

சலேஷ் தீபக் ஃபெர்னாண்டோ
பிரீமியம் ஸ்டோரி
News
சலேஷ் தீபக் ஃபெர்னாண்டோ

`பேரன்பு' படத்தில் வருகிற குழந்தைபோல என்னுடைய கேஸ் கிடையாது. அந்த அளவிற்கான தீவிரம் எனக்கு இல்லைங்கிறது பின்னாளில்தான் எங்களுக்கே புரிய ஆரம்பிச்சது.

``மாற்றுத்திறனாளிகளை இந்தச் சமூகம் இன்னமும் வித்தியாசமாகத்தான் பார்க்குது. என் தொழில் மீடியாவாக இல்லாமல் இருந்திருந்தால் நிச்சயம் ஒரு கூண்டுக்குள்தான் என் வாழ்க்கை இருந்திருக்கும். உன்னால இந்த வேலையெல்லாம் பண்ண முடியாதுன்னு சொன்னவங்க மத்தியில் தலைநிமிர்ந்து எனக்குப் பிடிச்ச வேலையைப் பண்ணிட்டிருக்கேன்!'’ என்றவாறு பேசத் தொடங்கினார் சலேஷ் தீபக் ஃபெர்னாண்டோ. இவர் பெருமூளை வாத நோயினால் பாதிக்கப்பட்டவர். யூடியூப் சேனல்களுக்கு சப் டைட்டில் எழுதிக் கொடுத்துக்கொண்டிருந்தவர் `வல்லவன் வகுத்ததடா' என்கிற படத்தின் மூலம் திரைப்படங்களுக்கும் சப் டைட்டில் எழுத ஆரம்பித்திருக்கிறார். அம்மாவுடன் பட விவாதம் செய்துகொண்டிருந்தவரை பேட்டிக்காகச் சந்தித்தோம்.

“சொந்த ஊர் ராமேஸ்வரம். மீனவக்குடும்பத்தைச் சேர்ந்தவங்களாக இருந்தாலும் அப்பா சிஏ படிச்சிருந்ததால வேலைக்காகச் சென்னைக்கு இடம் பெயர்ந்துட்டோம். நான் பிறந்து வளர்ந்ததெல்லாம் சென்னைதான். சின்ன வயசிலேயே என்னுடைய வளர்ச்சி கொஞ்சம் தாமதமாக இருந்ததனால டாக்டர்கிட்ட கூட்டிட்டுப் போயிருக்காங்க. அங்கே எனக்கு பெருமூளை வாதம்னும், இதுக்கு மேல எதுவும் பண்ண முடியாதுன்னும் சொல்லிட்டாங்க. ஆனாலும், அப்பா அம்மாவுக்கு என்னை அப்படியே விட்டுடக் கூடாதுங்கிற எண்ணம். ஆரம்பத்தில் ஒரு வருஷம் ஸ்பெஷல் ஸ்கூலில் படிச்சேன். பிறகு, நார்மல் ஸ்கூலிலேயே சேர்த்தாங்க. ஆரம்பத்தில் என்கூட சேர்வதற்கு எல்லாப் பசங்களும் தயக்கம் காட்டினாங்க. ஆனா, அதெல்லாம் கொஞ்ச நாளிலேயே சரி ஆகிடுச்சு.

“புத்தகங்களே என் நம்பிக்கை!”

எனக்கு ஒரு சர்ஜரி பண்ணினாங்க. அதுக்குப் பிறகு கிரட்ச் மாதிரி ஒண்ணு வச்சு நடந்துட்டு இருந்தேன். பிறகு அதுவும் தேவையில்லைன்னு சின்னச் சின்ன சப்போர்ட்டுடன் நானே நடக்க ஆரம்பிச்சிட்டேன். அப்பவே புத்தகங்கள்தான் என் நண்பன். அதேமாதிரி, பல படங்கள் பார்ப்பேன். சனி, ஞாயிறு விடுமுறைக்கு தவறாம எங்க அப்பா படத்துக்குக் கூட்டிட்டுப் போயிடுவாங்க. `ராஜா சின்ன ரோஜா' படம் பார்த்த பிறகு ரஜினிமீது ஒரு கிரேஸ் வந்தது. அப்பாவும் நானும் ரஜினி ரசிகர்கள். அம்மாவும் தம்பியும் கமல் ரசிகர்கள். அதனால ரெண்டு பேர் படங்களையும் தவறாமப் பார்த்திடுவோம். என்னுடைய இயலாமையிலிருந்து தப்பிக்கிறதுக்கான வழியாக திரைப்படங்கள்தான் இருந்தன.

`பேரன்பு' படத்தில் வருகிற குழந்தைபோல என்னுடைய கேஸ் கிடையாது. அந்த அளவிற்கான தீவிரம் எனக்கு இல்லைங்கிறது பின்னாளில்தான் எங்களுக்கே புரிய ஆரம்பிச்சது. படிப்பு முடிச்சிட்டு வெளிநாட்டில் வேலை கிடைச்சது. அங்க எனக்கு எந்தக் குறையுமில்லை. ஆனாலும், ஒரு வருடத்திலேயே நம்மூரில் வேலை பார்க்கலாம் என்கிற எண்ணத்தில் திரும்பி வந்துட்டேன். இங்கே ஒரு கார்ப்பரேட் கம்பெனியில் கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் வேலை பார்த்தேன். நான் தாழ்வு மனப்பான்மையிலும், மன அழுத்தத்திலும் சிக்கிக் கொண்டது அங்கேதான்! ஒவ்வொரு ஆண்டு புரமோஷன் நேரத்திலும் அடுத்து பார்க்கலாம்னு கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் தள்ளிப் போட்டாங்க. என்கிட்ட டிரெயினிங் எடுத்துக்கிட்டவங்க எனக்கு சீனியர் ஆனாங்க. நான் மட்டும் ஆரம்பப்புள்ளியிலேயே இருந்தேன். என்னன்னு காரணம் கேட்கும்போது, `நீ ஒரு மாற்றுத்திறனாளி... உன்னால முடியுமான்னு தெரியலை'ன்னு மறைமுகமா குத்திக்காட்டும்படி சொல்லுவாங்க. என் திறமைக்கேற்ற அங்கீகாரம் மறுக்கப்பட்டுட்டே இருந்துச்சு. ஒரு கட்டத்துக்கு மேல இது நமக்கு வேண்டாம்னு முடிவெடுத்து அங்கிருந்து வெளியேறினேன்.

என்னை நேர்ல பார்த்தாதான் என்கிட்ட பேசத் தயங்குவாங்க. எழுத்துங்கிறது அப்படியில்லை. எழுத்து எப்படியாவது பலரிடம் நம்மளைக் கொண்டு போய்ச் சேர்த்திடும். அப்படி என் எழுத்து சிலருக்குப் பிடிக்க ஆரம்பிச்சது. சமூகவலைதளப் பக்கங்களில் கொஞ்சம் ஃபாலோயர்ஸ் வர ஆரம்பிச்சாங்க. `Awesome Machi' டிஜிட்டல் மீடியா தளத்தில் கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலை பார்க்கும்போதே ஃப்ரீலான்சராக இருந்தேன். அங்கேயே சினிமா விமர்சனம் உட்பட சினிமா சார்ந்த செய்திகளை எழுதுறதுக்கு முழு நேரம் வரச் சொல்லிக் கூப்பிட்டாங்க. அப்படியே அங்கே வேலைக்குச் சேர்ந்துட்டேன்” என்றவர் சப் டைட்டில் எழுத ஆரம்பித்த தருணம் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

“புத்தகங்களே என் நம்பிக்கை!”

“கோவிட் சமயத்தில் தினமும் ஆபீஸுக்குப் போக முடியாத சூழல். அந்தச் சமயம் எதார்த்தமா ஒரு வெப் சீரிஸிற்கு சப் டைட்டில் எழுத வாய்ப்பு கிடைச்சது. ஒரு நாள் முழுக்க உட்கார்ந்து அந்த வீடியோவிற்கு சப் டைட்டில் எழுதிக் கொடுத்தேன். கொஞ்சம் கொஞ்சமா அதிலுள்ள நுணுக்கங்களைக் கத்துக்கிட்டேன். பிறகு, பல முன்னணி யூடியூப் சேனல்களுக்கு சப் டைட்டில் எழுத ஆரம்பிச்சிட்டேன். ஆரம்பத்தில் ஒரு வீடியோவிற்கு சப் டைட்டில் எழுதிக் கொடுக்க 200 ரூபாய் சம்பளம் கொடுத்தாங்க. இன்னைக்கு நானே இரண்டு பேரை வேலைக்கு வைத்துக் கொள்ளும் அளவிற்கு வளர்ச்சி இருக்கு. இந்த வளர்ச்சியில் என் நண்பர்களுடைய பங்கு ரொம்பவே அதிகம். `இரவின் நிழல்' படம் குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் பட புரொமோஷனுக்காக அவர் பேசியதற்கு நான்தான் சப் டைட்டில் எழுதிக்கொடுத்தேன். என் நண்பன் விநாயக் துரை இயக்கத்தில் நடிகர் சரண்ராஜின் மகன் தேஜ் நடிக்கும் `வல்லவன் வகுத்ததடா' படத்திற்காக முதன்முதலில் சப் டைட்டில் எழுதியிருக்கிறேன்.

எனக்கு மீடியாவில் ஒருத்தரைக் குறிப்பிட்டுச் சொல்லணும்னா நடிகை வினோதினியை நிச்சயம் சொல்லுவேன். சப் டைட்டில் எழுதுறதை கரியரா ஆரம்பிக்கும்போது இன்னைக்கு இல்லைன்னாலும் ஒருநாள் நிச்சயம் பெரிய ஆளாக வருவேன்னு என்கிட்ட சொன்னாங்க. எனக்குப் புத்தகங்கள் புது உலகை அறிமுகப்படுத்தியிருக்கு. என் ஏக்கங்களை, என் தனிமையை அது சரி செய்ய உதவியிருக்கு. பல புத்தகங்கள் படிச்சிருக்கேன். ரஜினி படங்களைத் திரையில் பார்க்கும்போதெல்லாம் ஏதோ ஒரு இருக்கையில் என் அப்பாவை இன்றளவும் தேடிக்கொண்டே இருக்கிறேன்!'’ என்றார்.