
நம்பிக்கை நட்சத்திரம்
மூன்று மாதங்களாக வீட்டுக்குச் செல்லாமல் கொரோனாவுக்கு எதிராகக் களத்திலிருந்தே போராடிக்கொண்டிருக்கிறார் கேரளாவின் சுகாதாரத்துறை அமைச்சரான கே.கே.ஷைலஜா டீச்சர்.
கொரோனா வைரஸின் முதல் ‘ஹாட்ஸ்பாட்’ என்று சொல்லப்படும் சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து இந்தியாவின் முதல் கொரோனா நோயாளி வந்திறங்கிய இடம் கேரளம். பிறகு, கொரோனா தொற்று அதிகரித்து அதிக கொரோனா நோயாளிகளைக்கொண்ட மாநிலங்களில் ஒன்றாகக் கேரளம் மாறியது. ஆனாலும், குறுகிய காலத்திலேயே கொரோனாவை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்தி சாதனை படைத்தது கேரள அரசு. இந்த விஷயத்தில் இரண்டு பேர் மிகுந்த பாராட்டுதலுக்குரியவர்கள். ஒருவர், கேரள முதல்வரான பினராயி விஜயன். மற்றொருவர், சுகாதாரத்துறை அமைச்சரான கே.கே.ஷைலஜா டீச்சர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை கண்ணணூர் மாவட்டத்தைத் தாண்டி வெளியே பரவலாக அறியப் படாதவரான ஷைலஜா, இன்றைக்கு ஒட்டுமொத்த கேரள மக்களாலும் கொண்டாடப்படும் அமைச்சராகத் திகழ்கிறார். அறிவியல் பாடம் போதித்த ஆசிரியரான இவர், ஓய்வுபெறும் காலத்துக்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்பாகவே, விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார்.
கண்ணணூர் மாவட்டம் மட்டனூரில் பழசிராஜா கல்லூரியில் இளங்கலை வேதியியல் பட்டம் படித்த காலத்தில் இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்து பணியாற்றினார். பிறகு விஸ்வேஷ்வரய்யா கல்லூரியில் பி.எட் பட்டம் பெற்று, சிவபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் பணியில் சேர்ந்தார். ஆசிரியர் பணியிலிருந்து விலகிய பின்னர், முழுநேர அரசியல்வாதியாகிவிட்டார்.

ஆசிரியர் பணியிலிருந்து விலகிய பிறகு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பெரவூர் தொகுதியில் 1996-ல் போட்டியிட்டு எம்.எல்.ஏ-வாக வெற்றி பெற்றார். 2016-ல் கூத்துப்பரம்பா தொகுதியில் வெற்றிபெற்ற ஷைலஜா, பினராயி விஜயன் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசில் சுகாதாரத்துறை மற்றும் சமூகநலத்துறை அமைச்சராக இடம்பெற்றார். ஆரம்பத்தில் நிர்வாகத் திறன் இல்லாதவர், கணவரின் அரசியல் செல்வாக்கு மூலமாக அமைச்சர் பதவியைப் பிடித்தவர் என்றெல்லாம் ஷைலஜாவுக்கு எதிராக விமர்சனங்கள் எழுந்தன. ஆனால், 2018-ம் ஆண்டு நிபா என்ற வைரஸ் கேரளாவைத் தாக்கியபோதுதான், ஷைலஜாவின் ஆளுமைத்திறனை கேரளம் உணர ஆரம்பித்தது. கோழிக்கோடு, மலப்புரம் ஆகிய பகுதிகளில் நிபா வைரஸ் தாக்கியபோது கோழிக்கோட்டிலேயே தங்கி பம்பரமாகச் சுழன்று பணியாற்றினார் ஷைலஜா. மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள், பொதுமக்கள் என யார் வேண்டுமானாலும் எந்த நேரத்திலும் இவரை எளிதாகத் தொடர்பு கொள்ளலாம்; சந்திக்கலாம். நிபா பாதித்த பகுதிகளுக்கு தனி ஆளாகவே சென்று நிலைமைகளை ஆய்வுசெய்தார். கேரளாவில் 2018 மே 2 அன்று கண்டறியப்பட்ட நிபா வைரஸ், ஜூன் 10 அன்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. அதனால், கேரளாவைக் கவ்வியிருந்த பேரச்சம் நீங்கியது.
சீனாவிலிருந்து கேரளாவுக்கு கோவிட்-19 வைரஸ் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை முதன்முதலில் உணர்ந்தவர் ஷைலஜா டீச்சர்தான்.
நிபா தாக்குதல் முறியடிக்கப்பட்டு இரண்டு மாதங்கள்கூட ஆகாத நிலையில், கேரளாவுக்கு இன்னொரு பெரும் சோதனையாக வந்தது பெரு வெள்ளம். 2018 ஆகஸ்ட் 16 அன்று பெருகத் தொடங்கிய வெள்ளம் கேரளாவையே மூழ்கடித்தது. அப்போதும் ஷைலஜா வெள்ளத்தில் மூழ்கிய மக்களை மீட்பதிலும், நிவாரணப் பணிகளை முடுக்கிவிடுவதிலும் இரவு பகலாக இயங்கினார். 2019-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தின்போதும் இவரின் செயல்பாடுகள் போற்றுதலுக்குரியவை.

கேரளாவைச் சேர்ந்த மாணவர்கள் வூஹான் மாகாணத்தில் படித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் மூலம் கேரளாவுக்கு கோவிட்-19 வைரஸ் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதை முதன்முதலில் உணர்ந்தவர் ஷைலஜா டீச்சர்தான். எனவே, வூஹானிலிருந்து மாணவர்கள் கேரள விமான நிலையத்தை வந்தடைந்தவுடன் அங்கேயே மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்வது, அவர்களைத் தனிமைப்படுத்துவது, சிகிச்சை அளிப்பது என்று முன்கூட்டியே திட்டமிட்டு அனைத்து நடவடிக்கைகளையும் கேரள அரசு மேற்கொண்டது. அடுத்தடுத்த நாள்களில் வெளிநாடுகளிலிருந்து ஏராளமானோர் கேரளாவுக்கு வரத் தொடங்கியதால், கொரோனா நோயாளிகள் எண்ணிக்கை கேரளாவில் அதிகரித்தது. ஆனாலும், வெகுவிரைவிலேயே கொரோனாவைக் கட்டுப்படுத்தி, இப்போது இந்தியாவுக்கே முன்மாதிரியாக கேரளா விளங்குகிறது.
ஷைலஜா டீச்சரின் கணவரான பாஸ்கர் மாஸ்டரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர். இவரும் பள்ளியில் ஆசிரியராக இருந்து, பிறகு தீவிர அரசியலுக்கு வந்தவர். மட்டனூர் நகராட்சியின் துணைத் தலைவராக ஐந்து ஆண்டுகளும், தலைவராக ஐந்து ஆண்டுகளும் இருந்தவர். பாஸ்கரன் மாஸ்டரைத் தொடர்புகொண்டபோது, “நான் மட்டனூரில் இருக்கிறேன். ஷைலஜா டீச்சர் திருவனந்தபுரத்தில் இருக்கிறார். அவர் வீட்டுக்கு வந்தே மூன்று மாதங்களாகிவிட்டன” என்று சிரித்தபடியே சொல்கிறார்.
“கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்காக டீச்சர் திருவனந்த புரத்திலேயே தங்கிவிட்டார். பகல் நேரத்தில் எங்களுடன் பேச அவருக்கு நேரம் இருக்காது. இரவு 11 மணிக்கு மேல்தான் எங்களுக்கு அழைப்பு வரும். அதற்காக நாங்கள் காத்திருப்போம்” என்கிற பாஸ்கரன் மாஸ்டரிடம், அவர்களின் திருமணம் மற்றும் குடும்பம் பற்றி கேட்டோம்.
“ஷைலஜா மாணவர் சங்கத்தில் மாவட்ட அளவில் நிர்வாகியாக இருந்து செயல்பட்டார். நான் வாலிபர் சங்கத்தில் மாநிலக்குழு உறுப்பினராக இருந்தேன். ஒரே மாவட்டம் என்பதால் அடிக்கடி சந்தித்துக்கொள்வோம். திருமணம் செய்துகொள்ள எங்கள் இருவருக்குமே விருப்பம் இருந்தது. 1981-ல் சி.பி.எம் தலைவர்கள் தலைமையில் எங்கள் திருமணம் நடைபெற்றது. எங்களுக்கு நெசிஸ்த், சோபித் என இரு மகன்கள். இருவருமே இன்ஜினீயர்கள். இருவருக்கும் திருமணம் ஆகிவிட்டது. ஒரு மகன் அபுதாபியிலும் இன்னொரு மகன் கண்ணணூர் விமான நிலையத்திலும் பணியாற்றுகிறார்கள்.
மிகவும் எளிமையானவர். எந்தப் பிரச்னைக் கும் அறிவியல் ரீதியான அணுகுமுறைதான் சரியான தீர்வு என்ற நம்பிக்கையில் உறுதியாக இருப்பவர் ஷைலஜா. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியினர் ஏதேனும் குற்றம்சாட்டினால் ஆதாரபூர்வமாகப் பதிலளிப்பார். எதையும் பொத்தாம்பொதுவாகப் பேசமாட்டார். வைரஸ்கள் குறித்து நிறைய படித்துப் படித்து, அதில் ஒரு நிபுணர் போல ஆகிவிட்டார். வீட்டில் இருக்கும்போதுகூட, இரவு ஒரு மணி வரையில் இணையத்தில்தான் இருப்பார்.
கீழ் நிலைகளில் பணியாற்றும் ஆசா பணியாளர்களையும்கூட பெயர் சொல்லி அழைக்கும் அளவுக்கு எல்லோருடனும் மிகவும் நெருக்கமாகப் பழகுவார். அவரது செயல்பாடுகள் பற்றி ஊடகங்களும் மக்களும் பாராட்டும்போது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் பாஸ்கரன் மாஸ்டர்.
நிபா வைரஸைச் சிறப்பாகக் கட்டுப்படுத்தியதற்காக, கிழக்கு ஐரோப்பாவின் மோல்டோவாவில் உள்ள 120 ஆண்டுகள் பழைமை வாய்ந்த தேசிய மருத்துவப் பல்கலைக்கழகம், ஷைலஜா டீச்சருக்கு ‘வருகைதரு பேராசிரியர்’ அந்தஸ்தை வழங்கி கௌரவித்துள்ளது.
``வருகைதரு பேராசிரியர் என்ற அந்தஸ்து, கேரள பொது சுகாதாரத்துக்குக் கிடைத்துள்ள மிகப்பெரிய அங்கீகாரம்” என்று மகிழ்ச்சியுடன் குறிப்பிடுகிறார் ஷைலஜா.
ஷைலஜா டீச்சர்… கேரளாவின் நம்பிக்கை நட்சத்திரம்.