ஆசிரியர் பக்கம்
தன்னம்பிக்கை
லைஃப்ஸ்டைல்
தொடர்கள்
Published:Updated:

வலிகளை மறந்து வலிமையைக் கொடுத்தது அந்த விபத்துதான்! - ஸ்ரேயாவின் தன்னம்பிக்‘கை’ கதை

ஸ்ரேயா
பிரீமியம் ஸ்டோரி
News
ஸ்ரேயா

தாமதமா ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டதால, செல்கள் முழுமையா செயலிழந்து, என் கைகள் நீல நிறமா மாறிடுச்சு. வேற வழியே இல்லைங்கிற நிலையில, என் ரெண்டு கைகளையும் நீக்கிட்டாங்க.

எதிர்பாராத பெரும் விபத்து, பெரும்பாலானோரையும் நிலைகுலையவே வைக்கும். ஆனால், அத்தகைய ஒரு விபத்தில் இரண்டு கைகளையும் இழந்த ஸ்ரேயாவை, அந்தச் சம்பவம் புதுப்பாய்ச்சலுடன் இயங்க வைத்திருப்பதுடன் இவரின் உத்வேகம், கை மாற்று அறுவை சிகிச்சை செய்ய நினைப்பவர்களுக்குத் தன்னம்பிக்கையையும் விதைக்கிறது.

இந்தியாவில் கை மாற்று அறுவை சிகிச்சை தற்போது பரவலாக நடைபெற்று வந்தாலும், பெரும்பாலானோருக்கும் மணிக்கட்டு அல்லது கைமூட்டு வரை மட்டுமே நீக்கப் பட்டு, தானமாகப் பெறப்படும் கைகள் பொருத்தப் படுகின்றன. ஆனால், இந்தியாவிலேயே முதல் நபராக ஸ்ரேயாவுக்குத்தான், ஒருவரிடமிருந்து தோள்பட்டைக்கும் கைமூட்டுக்கும் இடைப்பட்ட பகுதி வரையிலான (Biceps) இரண்டு கைகளும் தானமாகப் பெறப்பட்டுப் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், ஆசியாவிலேயே ஓர் ஆணின் கைகள் தானம் பெறப்பட்டு ஒரு பெண்ணுக்கு முதன் முறையாகப் பொருத்தப்பட்டதும் ஸ்ரேயா வுக்குத்தான். மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள புனே மாநகரில் உள்ள கல்லூரி ஒன்றில் இறுதி யாண்டு படிக்கும் ஸ்ரேயா, வீடியோகாலில் இணைந்து பாசிட்டிவிட்டியைக் கடத்துகிறார்.

வலிகளை மறந்து வலிமையைக் கொடுத்தது அந்த விபத்துதான்! - ஸ்ரேயாவின் தன்னம்பிக்‘கை’ கதை

“என் பூர்வீகம் கர்நாடகா. அப்பாவின் வேலை விஷயமா புனேவுல வசிக்கிறோம். இதே ஊர்ல ஸ்கூல் படிப்பை முடிச்ச நிலையில, கர்நாடக மாநிலம், மணிப்பால் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியில 2016-ல் பி.டெக் படிச்சுகிட்டிருந்தபோது ஸ்டடி லீவுக்காக வீட்டுக்கு வந்திருந்தேன். லீவு முடிஞ்சு புனேவு லேருந்து மணிபாலுக்கு பஸ்ல போயிட்டிருந் தேன். விடியற்காலை, நான் பயணம் செஞ்ச பஸ் விபத்துக்குள்ளாகி, மரத்துல மோதிக் கிடந்துச்சு. பலருக்கும் காயம். ஜன்னல் பக்கத்துல உட்கார்ந்திருந்த எனக்கு ரெண்டு கைகள்லயும் கண்ணாடித்துகள்கள் நிறைய ஏறியிருந்துச்சு. கால்கள்லயும் பலமான அடி.

தட்டுத்தடுமாறி பஸ்லேருந்து வெளியே வந்த என்னை சிலர், ஆஸ்பத்திரியில சேர்த் தாங்க. ஆனா, தாமதமா ஆஸ்பத்திரியில சேர்க்கப்பட்டதால, செல்கள் முழுமையா செயலிழந்து, என் கைகள் நீல நிறமா மாறிடுச்சு. வேற வழியே இல்லைங்கிற நிலையில, என் ரெண்டு கைகளையும் நீக்கிட்டாங்க. அந்த நிலையை ஏத்துக்க முடியாம ரொம்பவே கலங்கினபோது, என் பெற்றோர், ‘கைகள் மட்டும்தானே போச்சு? உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலமா மறுபடியும் கை களைப் பொருத்துற தொழில்நுட்பம் இருக்கு. நீ நம்பிக்கையை இழக்காதே...’ன்னு எனக்குப் பிடிப்பை ஏற்படுத்தினாங்க” என்று தன் பெற்றோரைப் பார்த்துப் புன்னகைக்கிறார் ஸ்ரேயா.

வலிகளை மறந்து வலிமையைக் கொடுத்தது அந்த விபத்துதான்! - ஸ்ரேயாவின் தன்னம்பிக்‘கை’ கதை

விபத்தில் கைகள் நீக்கப்பட்டவர்களுக்கு ஓராண்டுக்குப் பிறகே கை மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்படும். அதன்படியே, கேரளாவிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் கை தானம் கேட்டுப் பதிவு செய்த ஸ்ரேயாவுக்கு, மூளைச்சாவு ஏற்பட்ட இளைஞர் ஒருவரின் கைகள் தானமாகக் கிடைக்க, அதிர்ஷ்டவசமாக அன்றைய தினமே கை மாற்று அறுவை சிகிச்சையும் நடைபெற்றுள்ளது.

பெற்றோருடன் ஸ்ரேயா
பெற்றோருடன் ஸ்ரேயா

“ நான் யாரையும் எதுக்காகவும் சார்ந்திருக்கக் கூடாதுனு ரொம்பவே உறுதியா இருந்த என் பெற்றோர், கைகள் இயக்கத்துக்கான சிறப்புப் பயிற்சிகள் கொடுத்து என்னைக் கவனிச்சு கிட்டாங்க. அந்த விபத்தால படிப்பு தடைப் பட்டிருந்த நிலையில, 2019-ல் பி.ஏ வகுப்பில சேர்ந்தேன். நடந்ததையெல்லாம் நினைச்சுக் குழப்பிக்காம, சந்தோஷமா இயங்கிட்டிருக் கேன். டிரஸ் பண்ணிக்கிறது, வீட்டு வேலைகள் செய்யுறது, ஓரளவுக்கு எடையுடைய பொருள் களையும் சிரமின்றி தூக்குறது, கார் ஓட்டுறது, உடற்பயிற்சி பண்றது, எக்ஸாம் எழுதுறதுனு எனக்கான தேவைகளை நானே செய்துக்கிறேன்.

ஸ்கூல், காலேஜ்னு பல இடங்கள்லயும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை பத்தின விழிப்புணர்வும் கொடுக்கிறேன். என்னைப் பார்த்து பலரும் நம்பிக்கையோடு கை மாற்று அறுவை செய்திருக்காங்க. மாஸ்டர் டிகிரி படிச்சுட்டு, நல்ல வேலைக்குப் போய் பெற்றோரை நல்லபடியா பார்த்துக்கிறதுடன், அவங்க பெருமைப்படுற மாதிரி நடந்துப்பேன்” என்கிற ஸ்ரேயாவின் மகிழ்ச்சி, தீர்வுகள் இல்லாத பிரச்னைகளே இல்லை என்னும் மெசேஜை அழுத்தமாக உணர்த்துகிறது.