சமூகம்
அலசல்
Published:Updated:

ஆர்.டி.ஓ அலைச்சல் இனி இல்லை! - மாற்றத்தை முன்வைக்கும் மோட்டார் வாகன மசோதா

மோட்டார் வாகன மசோதா
பிரீமியம் ஸ்டோரி
News
மோட்டார் வாகன மசோதா

செந்தில் ஆறுமுகம், சட்டப் பஞ்சாயத்து இயக்கம்.

ஜூலை 31-ம் தேதி, இரவு 8.44... ராஜ்ய சபாவில் நடத்தப்பட்ட ஓட்டெடுப்பின் முடிவு அறிவிக்கப்படுகிறது. எம்.பி-க்கள் ஆதரவு - 108. எதிர்ப்பு - 13. மோட்டார் வாகனத் திருத்த மசோதா 2019, அமோக ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம் 31 ஆண்டுகள் பழைமையான சட்டம் (மோட்டார் வாகனச் சட்டம் 1988), 93 திருத்தங்களோடு முற்றாகத் திருத்தி எழுதப்பட்டுள்ளது. இரவில் நிறைவேற்றப்பட்ட இந்தச் சட்டம், வியர்வையும் ரத்தமும் தெறித்து ஓடும் இந்திய சாலைப் போக்குவரத்துக்குப் புது வெளிச்சம் பாய்ச்சுகிறது.

வியர்வை சரி... ரத்தம்? ஆம். சாலை விபத்துகளால், இந்தியாவில் ஆண்டுக்கு சராசரியாக 1.5 லட்சம் பேர் மரணிக்கிறார்கள். நிமிடத்துக்கு ஒரு விபத்து, நான்கு நிமிடங்களுக்கு ஒரு மரணம் என ரத்தமயமாகவே இருக்கின்றன நமது சாலைகள். ‘‘இதுபோன்ற உயிர்பலி அவலங்கள், விபத்துகள் குறைக்கப்படவும் பாதுகாப்பான பயணத்தை உறுதிசெய்யவும் ஆர்.டி.ஓ அலுவலக நடைமுறைகளை சீர்திருத்தம் செய்யவுமே இந்த மசோதாவைத் தாக்கல் செய்கிறேன்” என்றார் மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி.

ஆர்.டி.ஓ அலைச்சல் இனி இல்லை! - மாற்றத்தை முன்வைக்கும் மோட்டார் வாகன மசோதா

பொதுமக்களுக்கு இதனால் என்ன பயன்? இருக்கிறது. ஓட்டுநர் உரிமம் பெறுதல், வாகனப் பதிவு போன்றவற்றை அந்தந்த ஏரியாவில் உள்ள ஆர்.டி.ஓ அலுவலகத்தில்தான் செய்ய முடியும் என்பது மாற்றப்பட்டு (பிரிவு: 8), இந்தச் சேவைகளை தமிழகத்தில் உள்ள எந்த ஆர்.டி.ஓ அலுவலகத்திலும் பெற்றுக்கொள்ளலாம் என்பது நல்ல சேதி! இந்தச் சேவைகளைத் தருவதற்கு ஆர்.டி.ஓ அலுவலகங்களைத் தாண்டி, அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களையும் பயன்படுத்திக் கொள்வதற்குச் சட்டத்தில் வழிவகை இருக்கிறது. பாஸ்போர்ட் வழங்குதலில் இதுபோன்ற நடைமுறை பின்பற்றப்பட்டு, அங்கு சிறப்பான சேவை வழங்கப்படுவதைக் கண்கூடாகக் காண்கிறோம். இதுபோன்ற காலத்தின் தேவைக்கேற்ற நடைமுறைகளின் மூலம், ஆர்.டி.ஓ அலுவலகத்துக்கு வருவது அலைச்சல் மிகுந்த பணி என்பது மாறி, இனிமையான ஓர் அனுபவம் என்ற நிலையை நோக்கி நகரும்.

வெளிநாடுகளில் நடைமுறையில் உள்ள ஒரு திட்டம், இந்தச் சட்டத்தின் மூலம் இந்தியாவிலும் அறிமுகமாகிறது. தாங்கள் வாங்கிய ஒரு வாகனம் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தை ஏற்படுத்துவதாகவோ, வாகனத்தின் குறிப்பிட்ட பாகம் முறையாக இயங்கவில்லை என்றோ பொதுமக்கள் கருதினால், இதுகுறித்து அரசிடம் முறையிடலாம். இதுபோன்ற புகார்கள் அதிக அளவில் வருமானால், பழுதோடு விற்பனை செய்யப்பட்ட அனைத்து வாகனங்களையும் திரும்பப் பெறுமாறு அந்த நிறுவனத்துக்கு அரசு உத்தரவிடலாம். மேலும், அபராதம் விதிக்கப்படுவதோடு, பொதுமக்களுக்கு புதிய வாகனம் தரவேண்டிய பொறுப்பையும் அந்த நிறுவனம் ஏற்றுக்கொள்ள வேண்டும். அருமையான அம்சம்தானே!

விதிமுறைகளின்படி போடப்படாத மற்றும் முறையாகப் பராமரிக்கப்படாத சாலைகளால் விபத்துகள் ஏற்படும்பட்சத்தில், அந்தச் சாலைப்பணியைச் செய்த ஒப்பந்ததாரரும் விபத்துக்குக் காரணம் என்று கருதி, அவர்மேல் நடவடிக்கை எடுக்கப்படும் (பிரிவு 198); அவருக்கு அபராதம் விதிக்கப்படும். விபத்தில் சிக்கி ‘கோல்டன் ஹவர்’ என்று சொல்லப்படும் முதல் ஒரு மணி நேரத்துக்குள் அளிக்கப்படும் மருத்துவச் சிகிச்சை மற்றும் அதுதொடர்பான தொடர் சிகிச்சைச் செலவை அரசே ஏற்கும் (பிரிவு 162). விபத்தில் சிக்கியவரைக் காப்பாற்ற முன்வரும் பொதுமக்களை, காவல்துறையினர் உள்ளிட்ட எவரும் தொந்தரவு செய்யக் கூடாது. (பிரிவு 134). விபத்தில் சிக்கி உயிரிழந்தவருக்கான உடனடி இழப்பீட்டுத்தொகை 25,000 ரூபாய் என்று இருந்தது. இது இரண்டு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதற்குத் தேவையான நிதியை உருவாக்குவதற்கு ‘மோட்டார் வாகன விபத்து நிதி’ என்ற தனியான ஒரு நிதித்திட்டம் தொடங்கப்படவுள்ளது.

விபத்தில் இறந்தவர்களுக்கு இழப்பீடு அதிகரித்துள்ள வேளையில், சாலை விதிமீறல்களுக்கான அபராதமும் வாகனங்களுக்கான பதிவுக் கட்டணமும் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. ஹெல்மெட் அணியாமல் ஓட்டினால் ரூ.1,000 அபராதம் (முன்பு ரூ.100), குடித்துவிட்டு ஓட்டினால் ரூ.10,000 (முன்பு ரூ.2,000), ஓட்டுநர் உரிமம் இன்றி வண்டி ஓட்டினால் ரூ.5,000 (முன்பு ரூ.500), ஆம்புலன்ஸுக்கு வழிவிடாமல் ஓட்டினால் ரூ.10,000 அபராதம்! இந்தத் தொகை மிக அதிகமாக இருப்பதால், பயத்தின் காரணமாகப் பொதுமக்கள் விதிமுறைகளை மீறத் தயங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயம், இந்த அதிகபட்ச அபராதங்களால் லஞ்ச வேட்டை அதிகரித்துவிடவும் வாய்ப்பிருக்கிறது. இது தடுக்கப்பட வேண்டும் என்றால், போக்குவரத்துக் காவல்துறையினர், தங்களின் உடலிலேயே கண்காணிப்பு கேமராவைப் பொருத்தியிருக்க வேண்டும் என்ற நடைமுறை செயல்படுத்தப்பட வேண்டும்.

அபராதத்தொகை மிக அதிகமாக இருப்பதால், பயத்தின் காரணமாகப் பொதுமக்கள் விதிமுறைகளை மீறத் தயங்குவார்கள் என்று எதிர்பார்க்கலாம். அதேசமயம், இந்த அதிகபட்ச அபராதங்களால் லஞ்ச வேட்டை அதிகரித்துவிடவும் வாய்ப்பிருக்கிறது.

‘தேசிய போக்குவரத்துக் கொள்கை’, ‘தேசிய சாலைப் பாதுகாப்புக் குழு’ போன்றவை அமைக்கப்படவுள்ளன என்று சட்டத்திருத்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ‘தேசிய வாகனப் பதிவேடு’, ‘தேசிய ஓட்டுநர் உரிமப் பதிவேடு’ போன்றவற்றை உருவாக்கி, அதன்மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து வாகனங்கள், லைசென்ஸ் குறித்த விவரங்களையும் கணிப்பொறித் தகவலாக மாற்றுவதற்கான திட்டம் செயல்படுத்தப்படும் என்கிறது மசோதா. வரவேற்கத்தக்க நல்ல முயற்சிதான். மாநிலங்களின் கருத்துகளை உள்வாங்கி, இந்தக் கொள்கைகள் உருவாக்கப்படவேண்டும் என்பது முக்கியமானது!

சரி, இந்த மசோதா மீதான விவாதத்தின்போது தமிழக எம்.பி-க்களின் எதிர்வினை எப்படி இருந்தது?

மக்களவையில் கனிமொழி பேசியது பலரின் புருவங்களை உயர்த்தியிருக்கும். `இந்த மசோதா, மாநிலங்களின் உரிமையில் பெரிதும் தலையிடுகிறது’ என்ற கருத்தை வலுவாகப் பதிவுசெய்தார் கனிமொழி. ராஜ்ய சபாவில் தி.மு.க எம்.பி-யான சண்முகம், `இந்த மசோதா, எந்த வகையிலும் விபத்துகளைத் தடுக்க உதவாது’ என்று எச்சரித்தார். மக்களைவையில் பேசிய காங்கிரஸ் எம்.பி-யான ஜோதிமணி, ‘அதிகாரங்களை மத்தியில் குவிப்பதிலும் கார்ப்பரேட்டுகளுக்கு சேவகம் செய்வதிலும்தான் ஆளும் பா.ஜ.க அரசு கவனமாக இருக்கிறது’ என்று கொதித்தார். அத்துடன், ‘மாநிலத்தில் எந்தெந்த வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்ற கொள்கை முடிவெடுக்கும் அதிகாரத்தை, மத்திய அரசு தன்னிடமும் வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறது. இது மாநிலங்களின் உரிமையில் தலையிடும் விஷயம் அல்லவா?’ என்று தனக்கு கொடுக்கப்பட்ட எட்டு நிமிடங்களில் ஏராளமான விஷயங்களைக் குறிப்பிட்டு எதிர்க்குரல் எழுப்பினார்.

மாநிலங்களவையில் அ.தி.மு.க எம்.பி-க்கள் நவநீதிகிருஷ்ணன், விஜிலா சத்யானந்த் ஆகியோர், ‘தேசிய போக்குவரத்துக் கொள்கை குறித்து, மாநிலங்களிடம் கலந்தாலோசிக்கப் படும்’ என்று சொல்லப்பட்டுள்ளதில் ‘கலந்தாலோசிக்கப்படும்’ என்ற வார்த்தையை ‘ஒப்புதல் பெறவேண்டும்’ என்று மாற்றுமாறு கோரிக்கைவிடுத்தனர். நிதின் கட்கரி, இ்ந்தக் கோரிக்கை ஏற்கப்படுவதாகத் தெரிவித்தார். முக்கியமானதோர் இந்த மாற்றம் வரவேற்புக்குரியது.

மோட்டார் வாகன மசோதாவானது மக்களவை, மாநிலங்களவையில் நிறைவேறி விட்டது. விரைவில் இது சட்டமாக அறிவிக்கப்படும். வரவேற்புக்குரிய பல அம்சங்களைக்கொண்ட இந்தச் சட்டத்தின் பிரிவுகள் முறையாகச் செயல்படுத்தப்பட வேண்டும். பொதுமக்களின் ஆர்.டி.ஓ அலுவலக அலைச்சல்கள், சாலை விபத்துகள், மரணங்கள் குறைக்கப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!