
அதோகதியில் தினகரன்... அ.ம.மு.க-வை காலிசெய்யும் ஐவர் அணி!
‘‘போனால் போகட்டும் போடா’’ பாடலை ‘பிகில்’ அடித்தபடியே உள்ளே நுழைந்த கழுகாரிடம், ‘‘இந்தப் பாட்டை தினகரனுக்கு டெடிகேட் செய்யலாமா?’’ என்றபடியே வரவேற்றோம்.
சிரித்துவிட்டுத் தொடர்ந்தார் கழுகார். ‘‘தினகரன் அணியிலிருந்து தங்க தமிழ்ச்செல்வன் எழுப்பிய போர்க்கொடியைத் தொடர்ந்து, கலகலத்துப் போயிருக்கிறது அ.ம.மு.க முகாம். ஆளும் தரப்பினர் தங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை சுமுகமாக முடிந்துவிட்டது என்கிறார்கள். இதை அறிந்தே தினகரன் தரப்பு, ‘தங்கம் இனி நம்மிடம் வரமாட்டார்’ என்று தெரிந்து, அவர் பேசிய ஆடியோவை வெளியிட் டது. தங்கத்தைத் தடம் மாற்றியதில் உளவுத் துறைக்கும் முக்கியப் பங்கு உண்டாம்.’’
‘‘ஓஹோ.’’

‘‘தங்கம் மட்டுமல்ல... தினகரன் முகாமில் அடுத்தடுத்த முக்கியப் புள்ளிகளை முகாம் மாற்றும் வேலைகளைக் கச்சிதமாகச் செய்துவருகிறது உளவுத் துறை. குறிப்பாக, தினகரன் பின்னால் அணி திரண்டு பதவியை இழந்த 18 எம்.எல்.ஏ-க்களில் செந்தில்பாலாஜி, தங்க தமிழ்ச் செல்வன் ஆகிய இருவர் வீழ்ந்துவிட்டார்கள். மீதமிருக்கும் 16 பேருக்கும் குறிவைக்கப்பட்டிருக்கிறதாம். இரண்டு தினங் களுக்கு முன் தினகரன் அணியில் உள்ள வட மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்குக் காவல்துறை அதிகாரி ஒருவர் போன் செய்திருக்கிறார். ‘இனியும் அங் கிருந்து என்ன செய்யப் போகிறீர்கள்... ஆளும்கட்சி உங்க ளுக்குத் தேவையானதைச் செய்து தரும்’ என்று தூண்டில் போட்டுள்ளார். அதேபோல் பதவி இழந்த மற்றொரு
எம்.எல்.ஏ-வின் மைத்துனருக்கு உளவுத்துறை அதிகாரி ஒருவர் நேரடியாக, ‘மச்சானிடம் பேசிவிட்டு, அவர் எதிர்பார்ப்பதை மட்டும் கேட்டுச்சொல்லுங்கள்’ என்று வலை வீசியிருக்கிறார். இதனால், தினகரன் அணியில் மேலும் சில விக்கெட்டுகள் விழும்போல் தெரிகிறது.’’
“தினகரன் கதி அதோகதிதானா?’’
‘‘தினகரனை ஒழிக்கும் வேலையின் பின்னணியில் பி.ஜே.பி-யும் இருக்கிறதாம். ஆறு மாதங்களுக்கு முன்பிலிருந்தே பி.ஜே.பி தரப்பினர் பல்வேறு வழிகளில் தினகரன் தரப்பை அணுகியுள்ளனர். ஆனால், தினகரன் தரப்பு எதற்கும் பிடி கொடுக்கவில்லை. மாறாக, பி.ஜே.பி எதிர்ப்பு பிரசாரத்தைத் தீவிரமாக்கினார் தினகரன். இது பி.ஜே.பி தலைமைக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தியது. அதற்குப் பின்புதான் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையே இடைவெளியை ஏற்படுத்தும் வேலையை எடப்பாடி பழனிசாமி தரப்பு மூலம் தொடங்கியுள்ளனர். அந்தப் பணி ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோதே, தங்க தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட சிலருக்கு அ.தி.மு.க மூலம் வலைவிரிக்கச் செய்துள்ளனர்.’’
‘‘பி.ஜே.பி-யின் பிளான் பயங்கரமாக இருக்கிறதே?’’
‘‘மாநிலக் கட்சிகளைக் காலி செய்வதில் பி.ஜே.பி-க்கு நிகர் பி.ஜே.பி மட்டும்தான். ‘தங்க தமிழ்ச்செல்வன்
அ.தி.மு.க-வுக்குப் போக வாய்ப்பு உள்ளது’ என்று தகவல் கசிந்தாலும் தி.மு.க தரப்பிலிருந்தும் அவரை அணுகினார் களாம். செந்தில்பாலாஜி மூலம் தி.மு.க தரப்பு பேச்சு வார்த்தை நடத்தியுள்ளது. பி.ஜே.பி தரப்பும் சத்தமில்லாமல் தங்க தமிழ்ச்செல்வன் தரப்பிடம் பேசியுள்ளார்கள். ‘நயினார் நாகேந்திரன் மாதிரி உங்களுக்குக் கௌரவம் தரப்படும். விரைவில் மாநிலப் பொறுப்பில் மாற்றம் செய்ய உள்ளோம். உங்களை அந்தப் பொறுப்புக்குக்கூட கொண்டுவர வாய்ப்பு இருக்கிறது’ என்று வலை வீசப்பட்டுள்ளது. ஆனால், தங்கம் அவர்களுக்கு மெளனத்தையே பதிலாகக் கொடுத்திருக்கிறார்.”
‘‘எதற்காகத் தினகரன் கட்சிக்குள் இத்தனை களேபரங்கள்?’’
‘‘அ.ம.மு.க நிர்வாகிகளைக் கேட்டால், ‘தினகரன் அணுகுமுறையில் மாற்றம் வேண்டும்’ என்கிறார்கள். ‘துலாம் ராசிக்காரரான உங்களுக்கு அரசியலில் இன்னும் 22 வருடங்களுக்கு உச்ச திசை இருக்கிறது. முதல்வர் யோகம் உங்களுக்கு உள்ளது’ என்று ஜோதிடர் சொல்லியதால், அந்த மனநிலையிலேயே அவரது செயல்பாடுகள் உள்ளது என்கிறார்கள். அவரைச் சந்திக்க வேண்டும் என்றாலே ஐவர் அணியைக் கைகாட்டுகிறார்கள். இந்த ஐவர் அணியின் கட்டுப்பாட்டில் தான் தினகரன் இருக்கிறார் என்று பலரும் பகிரங்கமாகவே சொல்ல ஆரம்பித்துள்ளார்கள்.’’
‘‘ஐவர் அணியா?’’
‘‘கோவை சேலஞ்சர் துரை, நெல்லை மாணிக்கம்ராஜா, தஞ்சை ரெங்கசாமி, சென்னை வெற்றிவேல், திருச்சி மனோ கரன் இந்த ஐவரும்தான் தினகரனைச் சுற்றி இருக்கிறார்கள். எந்த நிர்வாகி தினகரனைச் சந்திக்க வேண்டும் என்றாலும் இவர்கள் மனதுவைத்தால் மட்டுமே அது சாத்தியமாம். கலை ராஜன் கட்சியைவிட்டுப் போனதற்கு வெற்றிவேலின் தனி ஆவர்த்தனமே காரணம் என்கிறார்கள். தினகரனிடம் பலரும் இதைப் பற்றிக் கூறியும், அவரது நடவடிக்கையில் மாற்றம் இல்லையாம்.’’
‘‘அ.தி.மு.க-வுக்குள் தங்க தமிழ்ச் செல்வனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு கிளம்பிவிட்டதே!’’
‘‘ஆமாம். போஸ்டரெல்லாம் அடித்து ஒட்டிக் கலக்கியுள்ளனர். இதெல்லாம் தேனி மாவட்டத்தில் தனி ராஜாங்கம் நடத்த நினைக்கும் பன்னீர்செல்வத்தின் ஏற்பாட்டில்தான் நடக்கிறதாம். தங்க தமிழ்ச்செல்வன் மீண்டும் தலையெடுப் பதை பன்னீர்தரப்பு விரும்பவில்லையாம். அதனால், உடனடியாகத் தங்க தமிழ்ச்செல்வனை சேர்க்கமுடியாமல் எடப்பாடி தரப்பு தவிக்கிறது. அதனால் தான், ஆரம்பத்தில் தங்க தமிழ்ச்செல்வனை வரவேற்போம் என்று சொன்ன அமைச்சர் ஜெயக்குமார், தற்போது, ‘தலைமைதான் முடிவெடுக்கும்’ என்று சொல்லி ஜகா வாங்கியுள்ளார்.’’
‘‘ஓஹோ!’’
‘‘தி.மு.க-வும் தினகரன் தரப்பில் யாரை இழுக்கலாம் என்று ஆழம்பார்த்து வருகிறது. பழனியப்பன்மீது தி.மு.க கண் வைத்துள்ளதாம். பி.ஜே.பி, அ.தி.மு.க, தி.மு.க ஆகிய மூன்று கட்சிகளுமே தினகரனால் பதவி இழந்த எம்.எல்.ஏ-க் களைப் பங்குபோட காய் நகர்த்தி வருகின்றன. இதனால், தினகரன் முகாம் கலகலத்துப்போகவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள்!”
‘‘சசிகலா என்ன நினைக்கிறாராம்?’’
“அவர் தினகரன்மீது வருத்தத்தில் இருப்பதாகச் சொல்கிறார்கள். ‘தேர்தலுக்கு முன்பு பல்வேறு வழிகளில் அவருக்குக் ‘கொட்டிக்’ கொடுத்தேன். ஐந்து எம்.எல்.ஏ சீட், இரண்டு எம்.பி சீட் வெற்றி பெறுவேன் என்றார். எதுவும் நடக்கவில்லை. இனியும் தினகரனை நம்பமாட்டேன்’ எனச் சிறையில் தன்னைச் சந்தித்த நபரிடம் சொல்லிப் புலம்பியுள்ளார் சசிகலா.’’
‘‘சரி, சட்டமன்றக் கூட்டத்தொடர் எப்படி இருக்குமாம்?’’
‘‘சட்டமன்றக் கூட்டம் சப்பென்று முடிந்துவிடவே வாய்ப்புகள் அதிகம் என்கிறார்கள். எடப்பாடி தரப்பு தங்களுக்கு நெருக்கமான ஒருவரிடம் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, ‘தி.மு.க-வில் என்ன நடந்தாலும் எங்க ளுக்கு உடனடியாகத் தெரிந்துவிடும்’ என்று நக்கலாகச் சொல்லியிருக்கிறது. இதற்குப் பின்னால் சில திரைமறைவு வேலைகள் நடந்தன என்கிறார்கள்.’’
‘‘என்னவாம்?’’
‘‘சமீபத்தில் தனியார் மருத்துவ மனைக்குச் சென்ற முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தி.மு.க மூத்த நிர்வாகி ஒருவர் சந்தித்தார் அல்லவா? அதன் தொடர்ச்சியாகத்தான் எடப்பாடி தரப்பு இப்படி நக்கல் அடித் துள்ளது. அந்தச் சந்திப்பு 35 நிமிடங்கள் நடந்ததாம். ஹாஸ்யமாகப் பேசும் அந்த தி.மு.க மூத்த நிர்வாகி, ‘உங்களுக்கு எதி ராக நாங்கள் பெரிதாக ஏதும் செய்யப் போவதில்லை. களத்திலிருக்கும் என் வாரிசுக்கு எதிராக நீங்களும் எதையும் செய்யாமலிருந்தால் போதும். உங்களுக்கு வேண்டியதை நான் செய்து தருகிறேன்’ என்று உறுதி கொடுத்துள்ளாராம். இந்தத் தகவல்
தி.மு.க தலைமைக்குத் தெரிந்தும் சம்பந்தப்பட்ட நிர்வாகியைக் கேள்வி கேட்க முடியவில்லையாம்.’’
‘‘ஏன்?’’
‘‘அவர் மட்டும் அ.தி.மு.க-வுடன் இணக்கம் காட்டினால் பரவாயில்லை.... வட மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் தி.மு.க அமைச்சர் ஒருவரும் அ.தி.மு.க அமைச்சர் ஒருவரைச் சந்தித்துள்ளார். அன்று தி.மு.க பிரமுகர் வசம் இருந்த துறை இன்று அந்த அ.தி.மு.க அமைச் சரிடம் உள்ளது. இந்தச் சந்திப்பிலும் சில சமாதானங்கள் பேசப்பட்டனவாம். பூட்டுக்குப் பெயர் போன மாவட்டத்தைச் சேர்ந்த தி.மு.க நிர்வாகியும் தன் கட்சி எம்.எல்.ஏ ஒருவர் மூலம் அ.தி.மு.க தரப்பிடம் இணக்கத்தைக் கையாண்டு வருகிறார். இப்படி மாவட்டத்துக்கு மாவட்டம் கைகோத்திருந்தால் தலைமை என்னதான் செய்யமுடியும்?’’
‘‘அதுவும் சரிதான்!’’
‘‘இதனால், சபாநாயகர் மீதான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை மட்டும் சபைக்குள் கொண்டுவந்து நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்று காட்டலாம் தி.மு.க’’ என்று சொன்ன கழுகார், ‘‘தி.மு.க தலைமைக்கு செக் வைக்கும் திட்டத்தை பி.ஜே.பி தரப்பில் கையில் எடுத்துள்ளனர். தி.மு.க-வின் முக்கியத் தலைவரை, மற்றொரு கட்சியின் முக்கிய பிசினஸ் புள்ளி ஒருவர் சமீபத்தில் சந்தித்தார். அவர் கையிலிருந்த ஃபைலில் டெல்லி அமலாக்கத் துறையின் முத்திரை இருந்துள்ளது. அதில் தி.மு.க முக்கியத் தலைவரின் உறவினர் குறித்த சில விஷயங்கள் குறிப்பிடப்பட்டிருந்தனவாம். இதைப் பார்த்து அப்செட் ஆன அந்த முக்கியத் தலைவரிடம், ‘நீங்கள் எங்களுக்கு ஒத்துழைத்தால்போதும்’ என பாலிஸாகச் சொல்லியுள்ளார் பிசினஸ் புள்ளி. அந்த விவரங்களை அடுத்தடுத்த இதழ்களில் விரிவாகச் சொல்கிறேன்” என்றபடி சிறகை விரித்துப் பறந்தார்.
தி.மு.க பேரைச் சொல்லி மிரட்டல்!
சென்னை மாநகராட்சியின் பொறியியல் துறையில் நந்தி போல ஒருவர் இருக்கிறார். இவருக்கு நீண்டகாலமாகவே ‘புகழ்’பெற்ற நேர்மையான ஓர் அதிகாரியின் பதவியின் மீது பேராசை. இதனால், கடந்த சில மாதங்களாக, ‘விரைவில் தி.மு.க ஆட்சி வரப்போகிறது... அப்புறம் எல்லாம் நான்தான்’ என்று அதிகாரிகள் பலரையும் மிரட்டி வசூல் வேட்டையில் இறங்கியிருக்கிறாராம். இதனால், ‘தி.மு.க ஆட்சியில் இல்லாதபோதே இப்படி என்றால், ஆட்சிக்கு வந்தால் மனிதர் எப்படியெல்லாம் ஆட்டுவிப்பாரோ’ என்ற புலம்பல் சத்தம் ரிப்பன் மாளிகையில் அதிகமாகவே கேட்கிறதாம்!