அலசல்
Published:Updated:

முல்லைப்பெரியாறு... அணை திறக்கும் உரிமையை விட்டுக்கொடுத்ததா தமிழகம்? - கொந்தளிக்கும் விவசாயிகள்!

முல்லைப்பெரியாறு
பிரீமியம் ஸ்டோரி
News
முல்லைப்பெரியாறு

கேரளாவில் மழைக்காலம் வந்துவிட்டாலே அங்குள்ளவர்கள் முல்லைப்பெரியாறு விவகாரத்தைக் கையிலெடுத்து விடுகிறார்கள்.

மழை வெள்ளத்தால் சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களும் தத்தளிக்கும் சூழலில், முல்லைப்பெரியாறு அணை தனது முழுக்கொள்ளளவை எட்டுவதற்கு முன்பாகவே தண்ணீர் திறக்கப்பட்ட விவகாரம் ஐந்து மாவட்ட விவசாயிகளைக் கொந்தளிக்க வைத்திருக்கிறது.

1979-லிருந்தே முல்லைப்பெரியாறு விவகாரத்தில் கேரள அரசியல்வாதிகள் அரசியல் செய்துவருகிறார்கள். 2011-ல் முல்லைப்பெரியாறு அணையை இடித்துவிட்டு, அருகே புதிய அணையைக் கட்டப்போவதாக கேரள அரசு அறிவித்தது தென் தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அப்போது தேனி மாவட்டத்தில் நடந்த போராட்டத்தின்போது ஜெயபிரகாஷ் என்ற இளைஞர் தீக்குளித்து உயிரிழந்தார். இந்தநிலையில்தான் மீண்டும் முல்லைப்பெரியாறு விவகாரம் வெடித்திருக்கிறது.

முல்லைப்பெரியாறு... அணை திறக்கும் உரிமையை விட்டுக்கொடுத்ததா தமிழகம்? - கொந்தளிக்கும் விவசாயிகள்!

“கேரள அரசு தன்னிச்சையாக அணையில் தண்ணீரைத் திறந்துவிட்டது” என்று குமுறும் தேனி மாவட்ட விவசாயிகள் நம்மிடம், “கேரளாவில் மழைக்காலம் வந்துவிட்டாலே அங்குள்ளவர்கள் முல்லைப்பெரியாறு விவகாரத்தைக் கையிலெடுத்து விடுகிறார்கள். இந்த ஆண்டு, ‘முல்லைப்பெரியாறு அணை பலவீனமாக இருக்கிறது. பல லட்சம் மக்கள் உயிரிழக்கும் அபாயம் உள்ளது. அணையை இடித்துவிட்டு புதிய அணை கட்ட வேண்டும்’ என்று நடிகர் பிரித்விராஜ் உள்ளிட்ட சிலர் தூண்டிவிட்டார்கள். கேரள நீர்வளத்துறை அமைச்சர் ரோஸி அகஸ்டின் ‘அக்டோபர் 29-ம் தேதி முல்லைப்பெரியாறு அணையிலிருந்து கேரளப் பகுதிக்குத் தண்ணீர் திறக்கப்படும்’ என்று தன்னிச்சையாக அறிவித்தார். உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் கேரள அரசு, அணையின் நீர்மட்டம் 138.5 அடியாக இருக்கும்போதே தண்ணீரைத் திறந்துவிட்டது. இதன் மூலம் 125 ஆண்டுக்கால நடைமுறை மீறப்பட்டிருக்கிறது” என்றார்கள்.

அணை திறக்கப்பட்டதைத் தொடர்ந்து, ‘அணையில் தண்ணீர் திறக்கும் உரிமையைத் தமிழக அரசு, கேரளாவுக்கு விட்டுக்கொடுத்து விட்டது’ என்று விவசாய சங்கங்களும், அ.தி.முக., பா.ஜ.க., நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும் கண்டனம் தெரிவித்து போராட்டங்களை அறிவித்தன. அதன் பிறகு நிலைமையின் தீவிரத்தை உணர்ந்த தமிழக அரசு, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனை அனுப்பி அணையில் ஆய்வு மேற்கொள்ள வைத்தது. ஆய்வுசெய்த துரைமுருகன், “அணைக்கு நீர்வரத்து அதிகமிருந்ததால் தமிழக அரசு சார்பில் தண்ணீர் திறக்கப்பட்டது. மத்திய நீர்வள ஆணையம் ஒப்புதல் அளித்த மாதவாரியான அட்டவணையைப் பின்பற்றியே தண்ணீர் திறக்கப்பட்டது. தண்ணீர் திறக்கும்போது கேரள அமைச்சர் வந்திருந்தது தற்செயலானது” என்று அறிக்கை வெளியிட்டு, சமாளித்தார். தொடர்ந்து, பேபி அணையைப் பலப்படுத்த தடையாக இருக்கும் 15 மரங்களை வெட்ட கேரள அரசு அனுமதியளித்ததாக தமிழக முதல்வர், கேரள முதல்வருக்கு நன்றி தெரிவித்துக் கடிதம் எழுதினார். ஆனால், மறுநாளே கேரள அரசு, ‘பேபி அணைக்குக் கீழே உள்ள மரங்களை வெட்ட அனுமதி அளிக்கவில்லை’ எனப் பின்வாங்கியிருப்பது மீண்டும் சர்ச்சையைக் கிளப்பியது.

முல்லைப்பெரியாறு... அணை திறக்கும் உரிமையை விட்டுக்கொடுத்ததா தமிழகம்? - கொந்தளிக்கும் விவசாயிகள்!

அணை விவகாரம் பற்றி நம்மிடம் பேசிய ஐந்து மாவட்ட பெரியாறு-வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தினர், “1979 முதல் 2014 வரை 136 அடிக்குமேல், தண்ணீர் தேக்கவிடாமல் கேரள அரசு தடுத்தது. அந்த 35 ஆண்டுக்காலத்தில் கேரள அரசியல்வாதிகளும், பெரு முதலாளிகளும், சினிமா பிரபலங்களும் அணையின் நீர்பிடிப்புப் பகுதியை ஆக்கிரமித்து ரிசார்ட்டுகளையும், சொகுசு பங்களாக்களையும் கட்டிவிட்டார்கள். கேரள அரசுக்குப் படகு சவாரி மூலம் பல கோடி ரூபாய் வருவாய் கிடைக்கிறது. ஆனவச்சால் பகுதியில் நீர்பிடிப்புப் பகுதியை ஆக்கிரமித்து ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் கார் பார்க்கிங் கட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு வருடமும் தமிழக அரசு, அணையின் நீர்பிடிப்புப் பகுதியான 8,591 ஏக்கருக்கான குத்தகைத் தொகையை கேரள அரசுக்குச் செலுத்துகிறது. ஆனால், நீர்பிடிப்புப் பகுதியில் 600 ஏக்கர் வரை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பது பற்றி தமிழக அரசு கேள்வி எழுப்புவதில்லை” என்றார்.

இந்த விவகாரத்தில் தி.மு.க கூட்டணிக் கட்சிகளின் மெளனமும் ஐந்து மாவட்ட விவசாயிகளை வருத்தமடையச் செய்திருக்கிறது.

அன்வர் பாலசிங்கம்
அன்வர் பாலசிங்கம்

இது பற்றி நம்மிடம் பேசிய ஐந்து மாவட்ட பெரியாறு-வைகைப் பாசன விவசாயிகள் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம், “தமிழகத்தின் கட்டுப்பாட்டிலுள்ள அணையில் தண்ணீர் திறக்க வேண்டுமென்றால் தமிழக அமைச்சர்கள், கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகள் இருப்பதுதானே நடைமுறை... இந்த நடைமுறை இப்போது மாற்றப்பட்டது ஏன்? கடந்த 2011-ல் தேனி மாவட்டத்தில் நடந்த முல்லைப்பெரியாறு போராட்டத்தில் வைகோ, திருமாவளவன் ஆகியோர் பங்கேற்றனர். இப்போது தி.மு.க கூட்டணியில் இருக்கும் அனைத்துக் கட்சியினரும் மெளனம் காப்பது சரிதானா?” என்று கேள்வி எழுப்பினார். முல்லைப்பெரியாறு பாசன, குடிநீர் பாதுகாப்புச் சங்கத்தின் தலைவர் சதீஸ்பாபு, “தென்தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரப் பிரச்னையில் தி.மு.க அரசு மந்தமாகவே செயல்படுகிறது. தற்போது திறக்கப்பட்டுள்ள தண்ணீர் இழப்பால், தேனி மாவட்டத்தில் இரு போக சாகுபடி காலியாகிவிட்டது. இதனால் சுமார் 25 ஆயிரம் ஏக்கர் விவசாயம் பாதிக்கப்படும்” என்றார் வருத்தத்துடன்.

ஒருபக்கம் வெள்ளம்... இன்னொரு பக்கம் தண்ணீர் பற்றாக்குறை என்று தவிக்கும் விவசாயிகள்மீது அக்கறை காட்டவேண்டியது இரு மாநில அரசுகளின் கடமை!