
மணவாழ்க்கை உங்கள் சாய்ஸ்
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
இந்த உலகில் உள்ள அத்தனை ஓவியர்களும் எவ்வளவு வரைந்தாலும் வரைந்து முடிக்கவே முடியாத ஓவியம்… பெண்களின் முகம்.
வெவ்வேறு பெண்கள் என்று இல்லை. ஒரே பெண், ஒரே முகம்தான் என்றாலும் அவர்கள் ஒவ்வொரு தருணத்துக்கும் வேறு வேறு முகத்தை வைத்திருக்கிறார்கள்.
நுனிநாக்கை வெளியே நீட்டிக்கொண்டு, மேல்கண்ணால் பார்த்தபடி சிவப்பு காயினை கேரம் போர்டு குழிக்குள் தள்ளும் தேவதையின் முகம் ஒரு தனி முகம். கூந்தலைத் தூக்கி பின்னால் போடும்போது ஓர் அலட்சிய முகம். கூந்தலைத் தூக்கி முன்னால் போடும்போது அடக்க முகம்.
பர்கரை முன் உதட்டுப் பற்களால் கடிக்கும்போது ஒரு முகம். மெல்லும்போது ஒரு முகம். விழுங்கும்போது ஒரு முகம். விழுங்கிய பிறகு ஒரு முகம். கீழ் இமையை இழுத்து மை வைக்கும்போது ஒரு முகம். வைத்த பிறகு வேறு முகம். காதலனை `எருமை மாடு' என்று அழைக்கும்போது ஒரு தனி செல்ல முகம். குழந்தைகளைக் கொஞ்சும் பெண்களின் முகத்தை வரைவதற்கு மட்டும் ஓவியர்கள் ஒரு தனி கோர்ஸ் படித்தாக வேண்டும்.

இவை எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிடும் ஒரு முகம் இருக்கிறது. அது, மணப்பெண்ணின் முகம். திருமண தினத்தன்று நாள் முழுவதும் ஒரு பெண்ணின் முகம் விதம்விதமாக மாறிக்கொண்டே இருக்கிறது. நிலாவை வாய்க்குள் வைத்திருப்பதுபோல எப்போதும் பிரகாசமான முகம். தோழிகளின் கிசுகிசுப்பில் கன்னத்தில் படரும் வெட்கச்சிவப்பை எடுத்து ஒரு வானம் முழுவதும் அடித்துவிடலாம். கும்பல் நடுவே புதுக்கணவன் சுண்டுவிரலை இழுக்க, புன்னகையுடன் பற்களைக் கடித்தபடி முறைக்கும் ஓரக்கண்களின் முனையில் சொர்க்கத்தை வைத்தது யார்? கல்யாணப் பந்தியில், உறவினர் புடைசூழ... கேமராக்கள் மின்ன… புதுக்கணவன் உணவை ஊட்டும்போது மாறும் பெண்ணின் வெட்கச் சந்தோஷ முகத்தை நீங்கள் வேறு என்றைக்கும் பார்க்கவே முடியாது.
ஸ்ருதியும் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, அவள் திருமண நாளன்று அப்படித்தான் இருந்தாள். ஸ்ருதி, 23 வயதில் இளமைக் கன்னாபின்னாவென்று ஊஞ்சலாடும், கலகலப்பான சென்னைப் பெண்.
முதலிரவு... படுக்கை அறையில் ஸ்ருதிக்காக ஆவலுடன் காத்துக்கொண்டிருந்தான் புது மாப்பிள்ளை திலீப். அறையிலிருந்த டி.வி-யில் ஏதோ படம் ஓடிக்கொண்டிருந்தது. கதவு திறந்தது. நைட்டியில் மேக்கப் ஏதுமின்றி, வெறுங்கையுடன் வேக வேகமாக வந்த ஸ்ருதியை திலீப் அதிர்ச்சியுடன் பார்த்தான்.

“தம்பி… அந்த ஜன்னலை எல்லாம் சாத்துப்பா…” என்று ஸ்ருதி கூற திலீப் ஒன்றும் புரியாமல் சுற்றும்முற்றும் பார்த்தான். “உன்னைத்தான் தம்பி சொல்றேன்” என்று ஸ்ருதி கூற… `தம்பியா?' என்ற திலீப் மிரட்சியுடன் எழுந்து ஜன்னல் கதவைச் சாத்தினான். “ஃபர்ஸ்ட் நைட் அன்னிக்கி, டி.வி-யில படம் பாத்துட்டிருக்கியே… நீயெல்லாம் ஒரு ஆம்பள… சை” என்று அவள் சொன்னவுடன், திலீப் டி.வி-யை அணைத்தான்.
“ஸ்ருதி… இந்த ஃபர்ஸ்ட் நைட்டுன்னா, பாலெல்லாம் எடுத்துட்டு வருவாங்களே” என்றான்.
“ஏன்... இதுவரைக்கும் நீ பாலே குடிச்ச தில்லையா... பக்கி… இப்படி பக்கத்துல வந்து உக்காரு” என்ற ஸ்ருதியை திகிலுடன் பார்த்தபடி திலீப் அமர்ந்தான். திலீப்பின் தோளைத் தடவி, முகத்தைத் தடவிய ஸ்ருதி, “உயரமா வாட்டசாட்டமா நல்லாதான் இருக்கே. பொண்ணுங்க எல்லாம் மொச்சுருப்பாளுகளே...”
“நான் யாருகிட்டயும் வெச்சுக்கமாட்டேன். கூச்ச சுபாவம் அதிகம்.”
“கூச்சம்னா...” என்றாள் ஸ்ருதி
“கூச்சம்னா… அதுவந்து… வெட்கம்…”
“வெட்கம்னா...”
“வெட்கம்னா… ம்… இந்த சினிமாவுல எல்லாம், தெருவுல ஹீரோயின், ஹீரோவைத் தேடுவா. அதை ஹீரோ ஒளிஞ்சிருந்து பார்ப்பான். அப்புறம் சட்டுன்னு ஹீரோ வெளியே வர்றப்ப… ஹீரோயின் முகத்துல ஒண்ணு வரும்ல...”
“ஆமாம்… முகமெல்லாம் செவந்து, லைட்டா கேணச்சி மாதிரி சிரிப்பாளுக!”

“கரெக்ட். அதுக்கு பேருதான் வெட்கம்.”
“ஓ… அதுக்கு பேருதான் வெட்கமா... நான் என்னத்தக் கண்டேன்… ஓகே… ஆரம்பிக்கலாமா...” என்றாள் ஸ்ருதி படுத்தபடி.
“என்னத்த?”
“என்னத்தவா... ஃபர்ஸ்ட் நைட்டதான்டா பரதேசி…”
“பரதேசியா? ஒய்…” என்று கத்தியபடி திலீப் அவள்மீது பாய்ந்தான்.
ஒரு திருமண நாளின் இரவு எவ்வளவு அழகாக… எவ்வளவு கொண்டாட்டமாக ஆரம்பமாகிறது. பிறகுவந்த தேன் தடவிய நாள்களில், இந்த உலகில் யாருக்கும் அமையாத வாழ்க்கை தங்களுக்கு மட்டும் அமைந்துவிட்டது போல திலீப்பும் ஸ்ருதியும் முகமெங்கும் பூரிப்புடன் உலா வந்தார்கள். ஹனிமூன் சென்று இரண்டு டூரிஸ்ட் ஸ்பாட்டில் பேருக்கு போட்டோ எடுத்துக்கொண்டு மீதி நேரமெல்லாம் அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தார்கள். அலுவலக நேரம் முடிந்தவுடன், நிலநடுக்கம் ஏற்பட்ட கட்டடத்திலிருந்து வெளியேறுவது போல அரக்கப் பரக்க வீட்டை நோக்கி ஓட்டம். இடையில் ஆருயிர் நண்பர்களின் போன் வந்தால் முதல் ரிங்கிலேயே கட். `ஐயம் தி லக்கியஸ்ட் மேன்/விமன் இன் தி வேர்ல்டு’ என்று டயலாக். தினந்தோறும் பேச்சு… சிரிப்பு… வெட்கம்… கொஞ்சல்… சிணுங்கல்… ஊடல்… கூடல்… செல்லக்கோபங்கள்… காதல் பார்வைகள்… காதோரக் கிசுகிசுப்புகள்… காமத் தவிப்புகள்… இன்னும் எத்தனை கோடி இன்பம் வைத்தாய் இறைவா இந்த வாழ்வில்!

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு...
சென்னை, குடும்ப நல நீதிமன்றம். மாலை நான்கு மணி. அன்றுதான் திலீப் - ஸ்ருதி விவாகரத்து வழக்கின் தீர்ப்பு என்பதால், இருவரும் நீதிமன்றத்துக்கு வந்திருந்தார்கள். நீங்கள் சினிமாக்களில் பார்ப்பது போல, முழுக்கை ஜாக்கெட்டுடன், தடித்த ஃபிரேம் கண்ணாடி அணிந்திருக்கும் பெண் நீதிபதி இருவரையும் கூண்டில் நிற்க வைத்து, `திலீப் - ஸ்ருதி ஆகிய இருவருக்கும் விவாகரத்து வழங்கப்படுகிறது’ என்றெல்லாம் சொல்லவில்லை.
திலீப் தனது வக்கீலிடம், “இப்ப தீர்ப்பு சொல்வாங்களா சார்?” என்றார்.
“நேர்ல எல்லாம் சொல்ல மாட்டாங்க. ‘ஏ’ டைரில ஜட்ஜ்மென்ட் என்ட்ரி போட்டிருப்பாங்க. அதைப் பாத்தா தெரிஞ்சுடும். அப்புறம் ஜட்ஜ்மென்ட் காப்பி வரும். வாங்க…” என்று முன்னால் செல்ல… அவர்கள் பின்னாலேயே ஸ்ருதியும் ஸ்ருதியின் வக்கீலும் சென்றார்கள். ‘ஏ’ டைரியை எடுத்துப் பார்த்த வக்கீல், “ஓபி அலௌவ்டு” என்றார்.
“அப்படின்னா?”
“டைவர்ஸ் கொடுத்தாச்சு.”
அவ்வளவுதான்... குதூகலமும் கொண்டாட் டமுமாக ஆரம்பித்த மூன்றாண்டுக் கால வாழ்க்கை ‘ஓபி அலெளவ்டு' என்ற இரண்டே வார்த்தைகளில் முடிந்து போனது. இடையில் என்ன நிகழ்ந்தது? எங்கே தவறு நடந்தது? மலர்களின் மேல்தானே நடக்க ஆரம்பித்தார்கள். எப்போது அவை முட்களாக மாறின?

இந்தியாவில் இருபது, முப்பது ஆண்டுகளுக்கு முன்பெல்லாம் விவாகரத்து என்பது சினிமாக்களில் பணக்காரப் பெண்கள் செய்யும் ஒரு விஷயமாக மட்டுமே நமக்குத் தெரியும். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் விவாகரத்து என்பது சர்வ சாதாரணம். அமெரிக்காவில் ஆயிரத்துக்கு, ஐந்நூறு திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. இந்தியாவில் பத்தாண்டுகளுக்கு முன்பு வரையிலும்கூட ஆயிரத்தில் ஒரு திருமணம்தான் விவாகரத்தில் முடிந்தது. இப்போதோ இந்தியாவில் ஆயிரத்துக்கு, பதிமூன்று திருமணங்கள் விவாகரத்தில் முடிகின்றன. அதுவும் அதிக அளவில் விவாகரத்து கோருவது பெண்கள்தான்.
அதிகரித்துவரும் விவாகரத்துகளின் எண்ணிக்கையைவிட, வேறு ஒரு விஷயம் என் மனத்தை நெருடுகிறது. விவாகரத்து செய்யவில்லையென்றாலும் கூட, நம் நாட்டில் ஐம்பது சதவிகிதத்துக்கும் மேற்பட்ட தம்பதிகள் தினந்தோறும் சண்டைகளுடனும் பல்வேறு மனக்கசப்புகளுடனும் குழந்தைகளுக்காகவும் சமூக அந்தஸ்துக்காகவும் மட்டுமே சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
அதுவும் 1990-களின் பொருளாதார சீர்திருத்தங் களுக்குப் பிறகு உருவான கார்ப்பரேட் சமூகத்தில் புதிய தலைமுறை தம்பதி களுக்கிடையே ஏராளமான முரண்பாடுகள், சச்சரவுகள், மன அழுத்தங்கள். முன்பு எப்போதையும்விட இந்தத் தலைமுறையில் இந்திய கணவன் மனைவி உறவு மிகவும் சிக்கலான நிலையில் உள்ளது. காரணம் என்ன? இதற்குத் தீர்வு என்ன?
குறிப்பாக... முந்தைய தலைமுறை தம்பதியரின் பிரச்னை வேறு. இன்றைய இளைய தம்பதியரின் பிரச்னைகள் வேறு. எனவே, புதிய தலைமுறையினரின் மணவாழ்வு சிக்கல்களைக் குறித்தே இத்தொடரில் பேச உள்ளோம்.
முதல் அத்தியாயத்தை முடிப்பதற்கு முன் ஒரு சிறு வேண்டுகோள்...
இன்றைய சூழ்நிலையில் கணவன் மனைவிக்கிடையே எந்த விஷயங்கள் தொடர்பாக அடிக்கடி சண்டை ஏற்படுகிறது என்று எழுதுங்களேன்.
அது குறித்து விரிவாக விவாதிப்போம்.
ஜி.ஆர்.சுரேந்தர்நாத்
1990-களின் இறுதியில் அறிமுகமான தமிழ் எழுத்தாளர்களில், தொடர்ச்சியான தனது காதல் கதைகள் மூலமாக பரவலான வாசகர்களின் கவனத்தை ஈர்த்தவர் எழுத்தாளர் ஜி.ஆர்.சுரேந்தர்நாத். கடந்த இருபதாண்டு களுக்கும் மேலாக எழுதி வரும் இவரது எழுத்தில் காணப்படும் ரொமான்ஸ் மற்றும் நகைச்சுவைக்காக ஒரு தனி வாசகர் கூட்டம் உண்டு. கடந்த 2003-ம் ஆண்டு, ஆனந்த விகடன் இதழின் ஓவியச் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற இவரது 125-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், நூறுக்கும் மேற்பட்ட கட்டுரைகள், ஒன்பது மாத நாவல்கள், ஒரு தொடர்கதை ஆகியவை பிரசுரமாகியுள்ளன. இவருடைய படைப்புகள் 18 புத்தகங்களாக வந்துள்ளன.

`வேலையற்றவனின் டைரி’ கட்டுரைத் தொடரில் எழுதிய நகைச்சுவைக் கட்டுரைகள் மூலமாக, கதைகள் படிக்கும் பழக்கமில்லாத ஒரு பெரும் வாசகர் பரப்பின் கவனத்தை ஈர்த்தவர் இவர். திருச்சி, பாரதிதாசன் பல்கலைக்கழக மாணவி ஒருவர், `ஜி.ஆர்.சுரேந்தர்நாத் கதைகளில் ஆண் பெண் உறவுகள்' என்ற தலைப்பில் முனைவர் பட்டத்துக்காக இவருடைய கதைகளை ஆய்வு செய்து வருகிறார். பணி நிமித்தமாக இப்போது சென்னையில் வசிக்கிறார்.