அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

இரட்டை கொலை... சடலங்கள்மீது சபதம்! - ‘பாட்ஷா’ பட பாணியில் நடந்த ஊராட்சி மன்றத் தலைவர் கொலை!

`ஸ்கெட்ச்’ வெங்கடேசன்
பிரீமியம் ஸ்டோரி
News
`ஸ்கெட்ச்’ வெங்கடேசன்

வெங்கடேசன், பிரபல ரௌடி குணாவின் ஆதரவாளராக இருந்திருக்கிறார். குணா டீமுக்கும், அவரின் எதிரணியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்திருக்கிறது.

நடிகர் ரஜினிகாந்த் நடித்த `பாட்ஷா’ படச் சம்பவம்போல, சென்னை அருகேயுள்ள மாடம்பாக்கத்தில் நண்பனின் கொலைக்குப் பழிக்குப் பழிவாங்க ஊராட்சி மன்றத் தலைவர் `ஸ்கெட்ச்’ வெங்கடேசன் கொலை நடந்திருக்கிறது. இந்தக் கொலைக்கு முன்பே நண்பனின் சடலத்தின்மீது கைதானவர்கள் சபதமெடுத்த அதிர்ச்சித் தகவலும் வெளியாகியிருக்கிறது!

இரட்டை கொலை... சடலங்கள்மீது சபதம்! - ‘பாட்ஷா’ பட பாணியில் நடந்த ஊராட்சி மன்றத் தலைவர் கொலை!

`ஸ்கெட்ச்’ வெங்கடேசன்

சென்னை கூடுவாஞ்சேரி மாடம்பாக்கம், அம்பேத்கர் தெருவைச் சேர்ந்தவர் `ஸ்கெட்ச்’ வெங்கடேசன். இவர், மாடம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தார். கடந்த 17-ம் தேதி, நண்பர்களான கவுன்சிலர் சத்யநாராயணன், ராமலிங்கம் ஆகியோருடன் மாடம்பாக்கம் சிலம்பு நகரிலிருக்கும் பாலத்தில் நின்று பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மூன்று பைக்குகளில் வந்த கும்பல், வெங்கடேசன்மீது நாட்டு வெடிகுண்டுகளை வீசியது. அதில் இரண்டு குண்டுகள் வெடிக்கவில்லை. ஒரு குண்டு மட்டும் வெடித்துச் சிதற வெங்கடேசனுடன் பேசிக்கொண்டிருந்தவர்கள் தப்பி ஓடினர். சுற்றிவளைக்கப்பட்ட வெங்கடேசனை அந்தக் கும்பல் சரமாரியாக வெட்டிக் கொன்றது. சம்பவத்தைக் கேள்விப்பட்ட மணிமங்கலம் போலீஸ்உதவி கமிஷனர் ரவி, இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தலைமையிலான போலீஸார் வெங்கடேசனின் சடலத்தை மீட்டு, கொலையாளிகளைத் தேடிவந்தனர்.

இந்த நிலையில், வெங்கடேசன் கொலை தொடர்பாக மாடம்பாக்கத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த சகோதரர்கள் நான்கு பேர் உட்பட ஆறு பேரை போலீஸார் கைதுசெய்தனர். இவர்களிடம் நடைபெற்ற விசாரணையில், கடந்த 2021-ம் ஆண்டில் நடந்த இரட்டைக் கொலைக்குப் பழிக்குப் பழியாகவே வெங்கடேசன் கொல்லப்பட்டதாகத் தெரியவந்திருக்கிறது. கைதானவர்கள் அளித்த தகவலின்படி, மேலும் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்கள்.

இரட்டை கொலை... சடலங்கள்மீது சபதம்! - ‘பாட்ஷா’ பட பாணியில் நடந்த ஊராட்சி மன்றத் தலைவர் கொலை!

கஞ்சா விற்பனை

இது குறித்து தாம்பரம் துணை கமிஷனர் சிபிசக்கரவர்த்தியிடம் பேசினோம்.

“மாடம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது ஹனிபா என்பவருக்கு எட்டு மகன்கள். இவர்களில் மூத்தவர் ரபீக்கைத் தவிர மற்ற ஏழு பேரும் மாடம்பாக்கம் பகுதியில் வசித்துவருகின்றனர். இவர்களில் சிலர்மீது கொலை முயற்சி, கஞ்சா, திருட்டு என வழக்குகள் இருக்கின்றன. இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு முகமது ஹனிபாவின் மகன்கள் கஞ்சா விற்கிறார்கள் என மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சிலர் கூடுவாஞ்சேரி காவல் நிலையத்துக்குத் தகவல் கொடுத்தனர். அந்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு சிறைக்குச் சென்ற முகமது ஹனிபாவின் மகன்களில் சிலர், தங்களை போலீஸில் மாட்டிவிட்டவர்கள் மீது கடும் கோபத்திலிருந்தனர். அவர்களில் ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசனும் ஒருவர். இந்தச் சூழலில் சில மாதங்களுக்கு முன்பு, வெங்கடேசனை ஓர் அடையாளம் தெரியாத கும்பல் கொலை செய்ய முயன்றிருக்கிறது. அதில், லேசான காயங்களுடன் வெங்கடேசன் உயிர்பிழைத்துக்கொண்டார்.

சடலங்களின் மீது சபதம்!

இந்தச் சம்பவத்துக்குப் பிறகு, முகமது ஹனிபாவின் மூன்றாவது மகன் முகமது இஸ்மாயில், எட்டாவது மகன் இமாம் அலி ஆகியோர் 29-04-2021 அன்று படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் ஏழு பேர் கைதுசெய்யப்பட்டனர். தங்கள் சகோதரர்களின் இரட்டைக் கொலைக்குப் பழிக்குப் பழிவாங்க முகமது ஹனிபாவின் மகன்கள், இமாம் அலியின் நண்பர்கள் மோகன்ராஜ், பிரவீன், தனுஷ் ஆகியோர் முடிவெடுத்தனர். இதற்காக, படுகொலை செய்யப்பட்ட முகமது இஸ்மாயில், இமாம் அலியின் சடலங்கள்மீது சபதம் எடுத்திருக்கிறார்கள்.

மேலும், இந்த இரட்டைக் கொலைக்கு ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன்தான் `ஸ்கெட்ச்’ போட்டுக் கொடுத்ததாக முகமது சதாம் உசேனும், மோகன்ராஜும் கருதினர். இதனால், பழிக்குப் பழியாக வெங்கடேசனின் கொலை நடந்திருக்கிறது. கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து கத்திகள், நாட்டு வெடிகுண்டுகள், பைக்குகள் ஆகியவற்றைப் பறிமுதல் செய்திருக்கிறோம்” என்றார் விரிவாக.

ரவி, சிபிசக்கரவர்த்தி
ரவி, சிபிசக்கரவர்த்தி

மாணிக் ‘பாட்ஷா’ - ‘இமாம்’ மோகன்ராஜ்!

தனிப்படை போலீஸாரிடம் பேசினோம். ``வெங்கடேசன், பிரபல ரௌடி குணாவின் ஆதரவாளராக இருந்திருக்கிறார். குணா டீமுக்கும், அவரின் எதிரணியினருக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வந்திருக்கிறது. குணா டீமுக்கு ஸ்கெட்ச் போட்டுக் கொடுப்பதில் கில்லாடியாக இருந்தவர் வெங்கடேசன். வெங்கடேசன் மீது காவல் நிலையங்களில் சில வழக்குகள் இருந்தன. பின்னர் அவை தீர்க்கப்பட்டுவிட்டன. இதையடுத்து, ஊராட்சி மன்றத் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றிபெற்றிருந்தார் வெங்கடேசன்.

படுகொலை செய்யப்பட்ட முகமது இமாம் அலியின் பள்ளித் தோழர்கள்தான் மோகன்ராஜ், பிரவீன், அகமது பாஷா ஆகியோர். நண்பனின் மரணத்துக்குப் பழிவாங்க முடிவெடுத்த மோகன்ராஜ் தன் பெயரை ‘இமாம்’ மோகன்ராஜ் என்று மாற்றிக்கொண்டான். மேலும் அவன் தன் வலதுகையில் ‘இமாம்’ என்று பச்சை குத்தி வைத்திருக்கிறான். நண்பனைக் கொலை செய்ய ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த வெங்கடேசனைத் தீர்த்துக்கட்ட யூடியூப் மூலம் நாட்டு வெடிகுண்டு தயாரிப்பது எப்படி என்பதைக் கற்றுக்கொண்டிருக்கிறான். வெங்கடேசனை வெட்டிக் கொல்லும்போது ‘இமாம்’ என்று கத்திக்கொண்டே பழிவாங்கியிருக்கிறான் மோகன்ராஜ்” என்றனர்.

வன்முறை என்பது முடிவற்ற பாதை!