சினிமா
Published:Updated:

சினிமா விகடன்: அமைதியும் ஓர் இசைதான்!

ஜஸ்டின் பிரபாகரன்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜஸ்டின் பிரபாகரன்

முதல்முறையா அவங்ககூட வொர்க் பண்ணப்போறோம், எப்படி அவங்க லைனுக்கு செட்டாவேன்னு சின்ன யோசனையும் தயக்கமும் இருந்துச்சு.

பண்ணையாரும் பத்மினியும்’ வெளியானபோது, ‘யாருப்பா இந்தப் படத்துக்கு இசை?’ என எல்லோரையும் தேட வைத்தவர், ஜஸ்டின் பிரபாகரன். படங்கள் பேசத்தவறினாலும் இவரின் இசை பேசத் தவறியதில்லை. தமிழ்ப் படங்கள், சில மலையாளப் படங்கள் என இசையமைத்து வந்தவருக்கு, ‘டியர் காம்ரேட்’ மூலம் ஜாக்பாட் அடித்தது. தற்போது, தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என இந்த மதுரைக்காரர் செம பிஸி. ஹைதராபாத்தில் பிரபாஸ் படத்திற்கு இசையமைத்துக் கொண்டிருந்தவரிடம் பேசினேன்.

`` ‘டியர் காம்ரேட்’ படத்துக்குப் பிறகு, உங்களுடைய கரியரை எப்படிப் பார்க்குறீங்க?’’

“ரொம்ப முக்கியமான படம். அதன் இயக்குநர் பரத் எனக்கு ரொம்ப வருஷமா பழக்கம். அந்தப் படத்தோட ஆல்பம் சரியா அமைஞ்சதுக்கு அவர் முக்கிய மான காரணம். பிரபாஸ் சாருடைய ‘ராதே ஷியாம்’, இந்தியில கரண் ஜோகர் சார் தயாரிப்புல ‘மீனாட்சி சுந்தரேஸ்வரர்’னு நெட்ப்ளிக்ஸ் ஒரிஜினல்ஸ், மலையாளத்துல பகத் பாசில் சாருடைய ஒரு படம்னு வொர்க் போயிட்டிருக்கு. எல்லாமே ‘டியர் காம்ரேட்’ கொடுத்த வாய்ப்புதான்.”

``நெட்ப்ளிக்ஸ் தயாரிக்கிற ‘பாவக் கதைகள்’ல சுதா கொங்கராவுடைய பகுதிக்கு இசையமைச்ச அனுபவம்?’’

“முதல்முறையா அவங்ககூட வொர்க் பண்ணப்போறோம், எப்படி அவங்க லைனுக்கு செட்டாவேன்னு சின்ன யோசனையும் தயக்கமும் இருந்துச்சு. ஆனா, அவங்க வந்து பத்து நிமிஷத்துல என்னை கூல் பண்ணி, எனக்கான சுதந்திரத்தையும் கொடுத்தாங்க. ‘தங்கமே’ன்னு தீம் சாங்கும் பேக் கிரவுண்ட் ஸ்கோரும் பண்ணினேன். அந்தப் பாடலுக்குத் தனித்துவமான குரல் தேவைப்பட்டது. அதனால, பாண்டிச்சேரியில இருந்து முருகவேள்னு ஒரு பாடகரைக் கூட்டிட்டு வந்து பாடவெச்சோம். இவர் ‘ஜோக்கர்’ படத்துல வர்ற ‘ஓல ஓல குடிசையில’ பாடலைப் பாடியவர். சுதா மேம் ரொம்பப் பிரமாதமா எடுத்திருந்தாங்க.”

``பாலிவுட்ல இருந்து ‘மீனாட்சி சுந்தரேஸ்வரர்’ நெட்ப்ளிக்ஸ் ஒரிஜினல்ஸுக்கான வாய்ப்பு எப்படி வந்தது? மதுரை கனெக்ட் இருக்கிறதனால உங்களுக்கு எவ்ளோ ஸ்பெஷல்?’’

“ `டியர் காம்ரேட்’ பாடல்களும் பின்னணி இசையும் ரொம்பப் பிடிச்சு கரண் ஜோகர் சார் அப்போ ட்வீட் பண்ணிருந்தார். அவர்தான் இதுக்குத் தயாரிப்பாளர். இந்திப் படமா இருந்தாலும் மதுரை பேக் ட்ராப்ல பாதிக் கதை நடக்கும். அதனால அவங்களும் தென்னிந்தியாவுல இருந்து ஒருத்தர் மியூசிக் பண்ணுனா நல்லாருக்கும்னு நினைச்சிருக்காங்க. ஐந்து பாடல்கள் இருக்கு. இந்தி மக்களுக்குப் பிடிக்கிற மாதிரி நம்ம ஊர் இசையைக் கொடுக்கணும்னு நினைச்சு வொர்க் பண்ணிட்டிருக்கேன். அந்த ஊர்க் கருவிகளைப் பயன்படுத்தி நம்ம ஊர் ட்யூனை கம்போஸ் பண்ணிக்கிட்டிருக்கேன். நீங்க சொன்ன மாதிரி நானும் மதுரை. நான் அறிமுகமாகுற இந்திப் படத்துடைய களமும் மதுரைங்கிறதனால கொஞ்சம் என்ன, நிறையவே பர்சனல் கனெக்ட் இருக்கு.”

``தெலுங்குல ‘ராதே ஷியாம்’, மலையாளத்துல பகத் பாசில் படம் - இவை இரண்டும் எந்த அளவுல இருக்கு?’’

“ `ராதே ஷியாம்’ பக்கா லவ் ஸ்டோரி. இதுவரை நான்கு பாடல்களை முடிச்சுக் கொடுத்திருக்கேன். நல்லா வந்திட்டிருக்கு. பகத் சாருடைய படம் பாதி முடிஞ்சுடுச்சு.இதுவரை ரெண்டு பாடல்கள் கொடுத்திருக்கேன். இது ஒரு எமோஷனல் டிராமா. எனக்கு ரொம்பப் பிடிச்ச நடிகர் பகத் பாசில். அவரை இன்னும் சந்திச்சதில்லை. அதுக்காகவும் வெயிட்டிங்!”

சினிமா விகடன்: அமைதியும் ஓர் இசைதான்!

``வெவ்வேறு மொழிப் படங்களுக்கு இசையமைக்கும்போது அங்கிருக்கிற மனிதர்கள், அந்த ஊர் சினிமா கலாசாரத்துக்கு எப்படி உங்களைப் பொருத்திக்குவீங்க?’’

“இசை எல்லோருக்கும் பொதுவானதுதான். ஆனா, மற்ற மொழிப் படங்களுக்கு இசையமைக்கும்போது, அந்த ஊருக்கான இசைக்கருவிகளிலும் பாடல் வரிகளிலும்தான் அதிகமா கவனம் செலுத்துவேன். ‘ராதே ஷியாம்’ தமிழ் டப் பண்ணும்போது, தெலுங்குப் பாடல்வரிகள்ல இருந்த அதே பொருள் இல்லாமல் சூழலையும் ட்யூனையும் மட்டும் கொடுத்துப் பாடலாசிரியர்கள்கிட்ட எழுதச் சொல்லுவேன். அப்போ ப்ரெஷ்ஷா இருக்கும். அந்தப் பாடல் வரிகளை அப்படியே தமிழ் மொழிமாற்றம் செஞ்சா டப்பிங் பட உணர்வு தரும். அதனால, அதைத் தவிர்த்திடுவேன். அந்தந்த மக்கள் வாழுற இடம், அந்தக் கலாசாரம், அவங்க விரும்புற கலை - இந்த விஷயங்கள்லதான் அந்தந்த மொழி சினிமா மாறுபடுதுன்னு நம்புறேன். சினிமாவுக்குள்ள வந்துட்டா அதுவே நம்மளை அந்த ஊர் நபரா மாத்திடுது. அது எனக்கு சமீபமாதான் புரிஞ்சது. ஒரு கலைஞனா நம்மளை ஒரு வட்டத்துக்குள்ள வெச்சுக்கத் தேவையில்லை.”

``இசையமைப்பாளர்களுக்கும் பாடலாசிரியர்களுக்கும் இடையே நல்ல புரிந்துணர்வு இருந்தால்தான் அந்தப் பாடல் வெற்றியடையும். தெரியாத மொழியில வேலை செய்யும்போது அது எப்படி சாத்தியப்படுது?’’

“பாடலாசிரியர்கள்கிட்ட கேட்டு அர்த்தம் தெரிஞ்சுக்குவேன். ‘நான் சவுண்டிங் பாத்துக்குறேன், நீங்க வரிகளைப் பார்த்துக்கோங்க’ன்னு சொல்லி இயக்குநரை கூடவே இருக்கச் சொல்வேன். சில இடங்கள்ல பொருள் சூப்பரா இருக்கும். ஆனா, சவுண்டுக்கு செட்டாகாது. அப்போ மாத்திக்கச் சொல்வேன். நானும் சில இடங்கள்ல மாத்திக்குவேன். சினிமா ஒரு கூட்டு முயற்சிதானே? எல்லோருடைய எண்ணங்களையும் சேர்த்து அதுல பெஸ்ட்டா வர்றதை பயன்படுத்துறோம்.”

``ஓர் இசையமைப்பாளராக ‘அமைதி’ங்கிற வார்த்தையை எப்படி விளக்குவீங்க?’’

“இந்த வார்த்தைக்கு அவ்ளோ பவர் இருக்கு. படம் ஓடிட்டு இருக்கும்போது பின்னாடி இசை ஒலிச்சுக்கிட்டே இருக்கிறது மட்டும் பின்னணி இசை கிடையாது. ஒரு இடத்துல இசை ஒலிக்காமல் இருக்கிறதும் பின்னணி இசைதான். அந்த இசைக்குப் பெயர் அமைதி. நல்லா கவனிச்சா அமைதிக்குப் பிறகு, வரக்கூடிய இசை ரொம்ப பவரா இருக்கும். அதுக்குக் காரணம், அந்த அமைதி. இது என் பார்வை.”

``ஏன் தமிழ் சினிமா டெக்னீஷியன்கள் இந்திய சினிமாவுல அவ்ளோ வான்டடா இருக்காங்க?’’

“நான் உணர்ந்தது என்னன்னா, நாம டெக்னிக்கலா மட்டும் வேலை செய்றதில்லை, அதீத ரசனையோடும் வேலை செய்றோம். ஒரு விஷயம் பிடிச்சுடுச்சுன்னா, அதை ரசிச்சுக் கொண்டாடுறோம். இந்த அதீத ரசனையும் உழைப்பும்தான் காரணம்னு நினைக்கிறேன்.”

``தமிழ் தாண்டி மற்ற மொழிகளிலும் படங்கள் பண்ணிட்டிருக்கீங்க. எவ்ளோ சந்தோஷமா இருக்கு? தமிழில் என்னென்ன படங்கள் இருக்கு?’’

“இதை ஒரு பயணமாதான் பார்க்கிறேன். கலைத்துறையைப் பொறுத்தவரை, இதுதான் முடிவுன்னு கிடையாது. ஓடிக்கிட்டே இருக்க வேண்டியதுதான். தமிழில் விக்ரம் சுகுமாரன் சார் இயக்கத்துல ‘இராவணக் கோட்டம்’ இருக்கு, ‘நவரசா’ ஆந்தாலஜியில கே.வி.ஆனந்த் சார் பகுதிக்கு வொர்க் பண்றேன். இன்னும் ரெண்டு படங்களுக்கு பேசிட்டிருக்காங்க.”