ஆசிரியர் பக்கம்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
தொடர்கள்
Published:Updated:

கண்ணன் ஓவியங்கள் வரையும் ஜெஸ்னா சலீம்!

ஜெஸ்னா சலீம்
பிரீமியம் ஸ்டோரி
News
ஜெஸ்னா சலீம்

நான் இரண்டாவது குழந்தை கர்ப்பமாக இருந்தபோது, செய்தித் தாளில் இருந்த ஒரு கண்ணன் ஓவியத்தைப் பார்த்து முதன் முதலாக வரைந்தேன்

“கடந்த ஆறு வருடங்களாக 500-க்கும் மேற்பட்ட கண்ணன் ஓவியங்களை மட்டுமே வரைந்து வருகிறேன். பள்ளி நாள்களில் மேப்பைகூட சரியாக வரையத் தெரியாத நான், இன்று குட்டிக் கண்ணனை உயிரோட்டத்துடன் வரைவது எனக்கே ஆச்சர்யம்’’ என்கிறார் கேரளாவைச் சேர்ந்த இஸ்லாமியப் பெண் ஜெஸ்னா.

குருவாயூர் கிருஷ்ணன் கோயிலில் தனது கண்ணன் ஓவியங்களை ஒவ்வொரு வருடமும் காணிக்கையாக அளித்துவரும் ஜெஸ்னாவிடம் பேசினால், இன்னும் பல ஆச்சர்யத் தகவல்களைச் சொல்கிறார்.

குருவாயூர் கோயிலில்
குருவாயூர் கோயிலில்

‘`கோழிக்கோடு மாவட்டம் தாமரசேரியில் உள்ள பாரம்பர்ய இஸ்லாமியக் குடும்பம் எங்களுடையது. சிறு வயதில் வீட்டில் என்னை செல்லமாக ‘கண்ணா’ என்று அழைப்பார்கள். ஆனால், எனக்கு கண்ணன் என்றால் யார் என்று தெரியாது. 2009-ல் எனக்குத் திருமணம் முடிந்தது. கணவர் கோழிக்கோடு கோயிலாண்டியைச் சேர்ந்தவர். அவர் ஒருநாள் தன் நண்பர் வீட்டில், கையில் வெண்ணெய் வைத்திருக்கும் உன்னிக்கண்ணன் படத்தைக் காட்டி, ‘இவர்தான் கண்ணன்’ என்றார். மிகவும் பிடித்துப்போய்விட்டது. பிறகு கண்ணன் ஓவியத்தை எங்கு கண்டாலும் மிகவும் ஆர்வத்துடன் பார்த்து வந்தேன். அவர் என் மனதில் அச்சடித்ததுபோல் பதிந்து விட்டார்’’ என்று சொல்லும் ஜெஸ்னாவின் கணவர் சலீம், துபாயில் பணிபுரிகிறார். மகன் ஐந்தாம் வகுப்பும், மகள் இரண்டாம் வகுப்பும் படிக்கின்றனர்.

‘`நான் இரண்டாவது குழந்தை கர்ப்பமாக இருந்தபோது, செய்தித் தாளில் இருந்த ஒரு கண்ணன் ஓவியத்தைப் பார்த்து முதன் முதலாக வரைந்தேன். ‘அச்செடுத் ததுபோல் அருமையாக உள்ளது’ என்ற என் கணவர், அதை ஃபிரேம் போட்டுக் கொண்டு வர, எங்கள் குடும்ப நண்பர் சந்திரன் நம்பூதிரிக்கு அதைப் பரிசாகக் கொடுத்தேன். அதை பூஜை அறையில் வைத்த அவர், கண்ணன் தங்கள் வீட்டுக்கு வந்த நேரம் சில நல்ல காரியங்கள் நடந்ததாகக் கூறினார். அவர் பூஜை செய்யும் கோயிலுக்கு வருபவர்களிடமும் அதையே சொல்ல, ஒருவர் பின் ஒருவராக என்னிடம் கண்ணன் ஓவியம் வரைந்து தரச் சொல்லிக் கேட்டார்கள். கடந்த ஆறு ஆண்டுகளில் சுமார் 500-க்கும் மேற்பட்ட கண்ணன் ஓவியங்களை நான் வரைந்திருப்பது இப்படித்தான்’’ என்பவர், வெண்ணெய்க் கண்ணன் ஓவியங்கள் தவிர வேறு எதையும் வரைவதில்லை.

‘`மற்ற கடவுளர் ஓவியங்களை நான் வரைந்து பார்த்திருக்கிறேன். ஆனால் வெண்ணைய்க் கண்ணனை வரையும்போது கிடைக்கும் இனம்புரியாத ஆனந்தமும், மனநிறைவும், நேர்த்தியும் வேறு ஓவியங்கள் வரையும்போது கிடைக்கவில்லை என்பதால் வேறெதுவும் வரைவதில்லை” என்கிறார்.

கண்ணன் ஓவியங்கள் வரையும் ஜெஸ்னா சலீம்!

“ஓர் ஓவியம் வரைந்து முடிக்க ஐந்து நாள்கள் ஆகும். ஒரு மாதத்தில் ஐந்தாறு, ஓவியங்கள் வரைய முடியும். ஓர் ஓவியத்துக்கு பெயின்ட் முதல் ஃபிரேம் வரை 2,000 ரூபாய் செலவாகும்; 5,000 ரூபாய்க்கு வரைந்து கொடுக்கிறேன். செலவுகள் போக மாதம் சுமார் 20,000 ரூபாய் கிடைக்கும். ஓவியங்களை வரைந்து வீட்டில் வைக்க மாட்டேன். யாராவது கேட்டதும்தான் வரைய ஆரம்பிப் பேன். இப்போது கையில் 20 ஆர்டர்கள் உள்ளன. என் ஓவியத்தில் கண்ணன் உயிரோட்டத்துடன் இருப்பதாகவும், சகல ஐஸ்வர்யங்களையும் கொடுப்பதாகவும் வாங்கியவர்கள் சொல்லும்போது சிலிர்ப்பாக இருக்கும்’’ என்பவர், குருவாயூர் கோயிலுக்குச் சென்றுவரும் அனுபவத்தை பகிர்ந்து கொண்டார்.

கண்ணன் ஓவியங்கள் வரையும் ஜெஸ்னா சலீம்!

“குருவாயூர் கோயிலுக்கு, புத்தாண்டு மற்றும் கிருஷ்ண ஜயந்தியன்று காணிக்கையாக கண்ணன் ஓவியம் கொடுக்கத் தொடங்கினேன். ஆரம்பத்தில், கோயில் உண்டியல் மேல் என் ஓவியத்தை வைத்துவிட்டு அங்குள்ள செக்யூரிட்டியிடம் சொல்லிவிட்டு வந்து விடுவேன். ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு இருந்து தேவசம்போர்டு உறுப்பினர்கள், கோயில் வளாகத்தில் வைத்து என்னிடம் நேரடியாக ஓவியத்தைப் பெற்றுக் கொள் கின்றனர். என் ஓவியத்தில் ஒன்று, குருவாயூர் கோயிலுக்குள் வைக்கப்பட்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். மற்ற ஓவியங்களை ஏலத்துக்கு விடுவதாக அறிந்தேன்’’ என்று பூரிப்புடன் சொல்பவர், சில சங்கடங்களையும் பகிர்ந்துகொண்டார்.

“கண்ணன் ஓவியம் வரைய என் பிறந்த வீட்டினரும், புகுந்த வீட்டினரும் முழு ஆதரவு தருகிறார்கள். ஆனால் சிலர் தொடர்ச்சியாக எதிர்த்து வருகிறார்கள். அதனால் மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆனால், 75 சத விகிதப் பேர் எனக்கு ஆதரவாக இருக்கும் போது, 25 சதவிகிதப் பேருக்காக நான் ஏன் கவலைப்பட வேண்டும் என்று இப்போது முடிவெடுத்து விட்டேன்’’ என்று தீர்க்கமாகச் சொன்னார் ஜெஸ்னா.