மியான்மரில் நடைபெற்றுவரும் ராணுவ ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்துவருபவர் ஆங் சான் சூகி. 1991-ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர். இவருடைய தேசிய ஜனநாயக லீக் கட்சி 2020-ல் நடந்த தேர்தலில் வெற்றிபெற்றது. ஆனால், தேர்தலில் முறைகேடு நடந்ததாகக் கூறி, கடந்த 2021-ம் ஆண்டு இவரின் ஆட்சி அதிகாரத்தை ராணுவம் மீண்டும் கைப்பற்றியது.
இதையொட்டி, ஆங் சான் சூகி மீது ராணுவத்துக்கு எதிராக கிளர்ச்சியைத் தூண்டியது, கொரோனா விதிகளை மீறியது, லஞ்சம் பெற்றது எனப் பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டன. இதில் சட்டவிரோதமாக வாக்கி டாக்கி இறக்குமதி செய்து பயன்படுத்தியது மற்றும் கொரோனா விதிகளை மீறியது தொடர்பான வழக்குகளில் ஏற்கெனவே ஆங் சான் சூகிக்கு நீதிமன்றம் ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது

இந்த நிலையில், 2017-18-ம் ஆண்டில் யாங்கூன் முன்னாள் முதல்வர் பையோ மின் தீனிடமிருந்து 6 லட்சம் டாலர் மற்றும் ஏழு தங்கக் கட்டிகளை லஞ்சமாகப் பெற்றதாக வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், சூகிக்கு ஐந்து ஆண்டு சிறைத் தண்டனை விதித்து மியான்மர் சிறப்பு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. மேலும் அவர்மீது பல்வேறு ஊழல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.