அரசியல்
அலசல்
Published:Updated:

“பஸ் வசதி வேணும், ரேஷன் கடை வேணும்னு கேட்டா... டாஸ்மாக் கட்டித் தர்றாங்க!”

செட்டிசாலப்பாளையம்
பிரீமியம் ஸ்டோரி
News
செட்டிசாலப்பாளையம்

எங்க ஊர்ல ரேஷன் கடையும் இல்லை. உஞ்சனைக்குப் பாதி மக்களும், போக்கம்பாளையத்துக்குப் பாதி மக்களும் போய் ரேஷன் பொருள்கள் வாங்கிட்டு வரணும்.

‘‘பிள்ளைக பள்ளிக்கூடம் போக, பொழப்புக்கு வெளியில போக ஒரு பஸ் வசதி இல்லை. செஞ்சு தாங்கனு கேட்டா... நாங்க கேட்காத டாஸ்மாக் கடையை எங்களுக்கு ஏற்பாடு பண்ணிக்கிட்டிருக்காங்க” என்று நொந்துபோய்ச் சொல்கிறார்கள் நாமக்கல் மாவட்டம், செட்டிசாலப்பாளையம் கிராம மக்கள்!

நாமக்கல் மாவட்டம், எலச்சிப்பாளையம் ஒன்றியத்தில் இருக்கிறது செட்டிசாலப்பாளையம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராஜேந்திரன் பேசினார்... ‘‘பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் எங்க ஊருக்கு அரசுப் பேருந்து ஒண்ணு வந்துகிட்டு இருந்துச்சு. சாலை போடுறதுக்காக அதைத் தற்காலிகமா நிறுத்தினாங்க. நிறுத்தின பேருந்தைத் திரும்ப விடவே இல்லை. தனியார் மினி பஸ் ஒண்ணு வந்துச்சு. அதான் ஒரு பஸ் வருதுல்லன்னு, அரசுப் பேருந்தை விடாம இழுத்தடிச்சாங்க. ஆறே மாசத்துல அந்த மினி பஸ்ஸும் வரலை. அன்னிலருந்து இன்னிக்கு வரைக்கும் பேருந்து வசதியில்லாம அல்லாடிக்கிட்டிருக்கோம்.

எங்க ஊர்லருந்து பஸ் ஏறணும்னா, நாலு திசையிலும் குறைஞ்சது நாலு கிலோமீட்டர் நடக்கணும். வடமேற்குப் பக்கம் குமாரமங்கலம், தெற்குப் பக்கம் சித்தாலந்தூர், கிழக்குப் பக்கம் உஞ்சனைனு போய்த்தான் பஸ் பிடிக்க வேண்டியிருக்கு. அஞ்சாம் வகுப்புக்கு மேல படிக்கணும்னா, அந்த ஊர்களுக்குத்தான் போகணும். படிக்கிற பிள்ளைகளும் நாலு கிலோமீட்டர் தூரம் நடந்தே போயிட்டு வர்றாங்க. தினமும் திருச்செங்கோடு, நாமக்கல்னு வேலைக்குப் போறவங்களும், பஸ் பிடிக்க அரக்கப்பறக்க ஓடவேண்டியிருக்கு’’ என்றார் வருத்தத்துடன்.

அந்த ஊர்ப் பெண்களான தமிழ்செல்வி, வசந்தா மணி இருவரும், ‘‘எங்க ஊருக்கு பஸ் வசதி கேட்டு, பத்து வருஷமா நாங்க பார்க்காத ஆளுங்க இல்லை. அதுக்கு வழிபண்ணாத அரசு, எங்க ஊரு எல்லையில புதுசா ஒரு டாஸ்மாக் திறக்க கட்டடம் கட்டிக்கிட்டு இருக்கு. நாங்க வெளியூர் போய் படிக்கவும், நாலு காசு சம்பாதிக்கவும் வழிபண்ணித் தரச்சொல்லிக் கேட்டா, உள்ளதையும் கெடுக்கிற மாதிரி டாஸ்மாக் கடையைக் கொண்டுவர்றாங்க. சாராயத்தைக் குடிச்சுட்டு ஊருக்குள்ள சண்டை சச்சரவு ஏற்பட, அதிகாரிங்க வழி பண்றாங்க. இது நியாயமா?

“பஸ் வசதி வேணும், ரேஷன் கடை வேணும்னு கேட்டா... டாஸ்மாக் கட்டித் தர்றாங்க!”

எங்க ஊர்ல ரேஷன் கடையும் இல்லை. உஞ்சனைக்குப் பாதி மக்களும், போக்கம்பாளையத்துக்குப் பாதி மக்களும் போய் ரேஷன் பொருள்கள் வாங்கிட்டு வரணும். எப்போ ரேஷன் பொருள்கள் கொடுப்பாங்கன்னே தெரியாது. தெரிஞ்சுக்கிட்டுப் போனாலும், அன்னிக்கு எங்களோட ஒரு நாள் பொழப்பு போயிரும். எங்களுக்கு டாஸ்மாக் வேண்டாம் சாமி. பஸ் வசதியும், ரேஷன் கடை வசதியும் பண்ணிக்கொடுங்க. உங்களுக்குப் புண்ணியமா போகும்’’ என்றார்கள்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங்கிடம் பேசினோம். அனைத்தையும் பொறுமையாகக் கேட்டுக் குறித்துக்கொண்டவர், ‘‘உடனே அதிகாரிகளை அனுப்பி ஆய்வுசெய்யச் சொல்கிறேன். அந்த மக்களுக்கு நல்லதே நடக்கும்’’ என்று உறுதியளித்தார்.

கேட்டதைக் கொடுங்க... கெட்டதைக் கொடுக்காதீங்க!