நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த மூலப்பள்ளிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் பெரியசாமி (63). இவர், கூலி வேலை செய்துவருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் பெரியசாமி தனது வீட்டுக்கு அருகிலுள்ள ரேஷன் கடைக்குச் சென்று, ரேஷன் பொருள்களை வாங்கிக்கொண்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக வந்த கார் ஒன்று பெரியசாமி ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்தின் மீது மோதியதில், நிலை தடுமாறி பெரியசாமி கீழே விழுந்தால், அவரின் கால்களில் பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர், அருகே இருந்த பொதுமக்கள் பெரியசாமியை மீட்டு ராசிபுரம் அரசின் மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பிவைத்தனர்.

அங்கே ஸ்கேன் எடுக்கும் பிரிவில் பணியாற்றும் மருத்துவமனை ஊழியர் தொடர் விடுமுறையில் இருப்பதால், மருத்துவமனையில் பணியில் இருந்த மருத்துவரும் செவிலியர்களும் பெரியசாமிக்கு முதலுதவி சிகிச்சை அளித்து, காலில் கட்டுப்போட்டு, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்ததாகச் சொல்லப்படுகிறது. ஆனால், தனக்குக் கால்களில் அதிக வலி ஏற்படுவதாக முதியவர் கதறியிருக்கிறார். பின்னர், அவருடைய உறவினர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ளனர்.
அப்போது, பெரியசாமியின் கால்களிலுள்ள கண்ணாடித்துகள்களை முறையாக அகற்றாமல், காயம்பட்ட இடத்தில் இறுக்கமாகக் கட்டுப்போட்டு, ராசிபுரம் அரசு மருத்துவமனை ஊழியர்கள் அப்படியே சேலம் மருத்துவமனைக்குப் பரிந்துரை செய்திருப்பது தெரியவந்திருக்கிறது. இந்த நிலையில், தனியார் மருத்துவமனையில் பெரியசாமிக்கு காயம்பட்ட இடத்திலிருந்து கண்ணாடித்துகள்களை எடுக்கும் வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் பரவிவருகிறது. இது குறித்து, பணியில் இருந்த மருத்துவர் ஒருவரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, "மருத்துவமனையில் எக்ஸ்-ரே, ஸ்கேன் செய்யும் பணியாளர் விடுமுறையில் இருப்பதால், ஸ்கேன் செய்ய முடியாமல் வேறு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்திருக்கிறார்கள்" என்று பதிலளித்திருக்கிறார்.

இன்னொருபக்கம், "ராசிபுரம் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள், பணியாளர்கள் பற்றாக்குறையால், இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்துவருகிறது. விபத்தில் படுகாயமடைந்த அந்தப் பெரியவருக்கு, விபத்து நடந்த இடத்திலிருந்து 108 ஆம்புலன்ஸில் அரசு மருத்துவமனைக்கு வரும்வரை வரும் வழியில், காயம்பட்ட இடத்தில் அவருக்கு முதலுதவி சிகிச்சைகூட அளிக்கப்படவில்லை" என்றனர் வேதனையாக!