ஆசிரியர் பக்கம்
தொடர்கள்
லைஃப்ஸ்டைல்
தன்னம்பிக்கை
Published:Updated:

நமக்கு நாமே!

நமக்கு நாமே!
பிரீமியம் ஸ்டோரி
News
நமக்கு நாமே!

எனக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை வாட்ஸ்அப் மூலம் வரவழைத்துக் கொள்வேன். பிடித்ததைச் சமைப்பேன். நான் புத்தகப்பிரியை.

‘இளையவர்களுக்கு சிரமம் கொடுக்காமல் வாழ வேண்டும்’ என்பது முதியவர்கள் பலரின் எண்ணம். அப்படி, உணவு, மாத்திரை, பயணம் உள்பட அனைத்து விஷயங்களிலும் மற்றவர்களைவிட அதிக அக்கறையுடன் உங்களை நீங்களே பத்திரமாகப் பார்த்துக்கொள்வதற்காக கடைப்பிடிக்கும் சிறப்பான விஷயங்கள் பற்றி பகிரலாம். நீங்கள் எழுதும் சிறந்த விஷயங்களுக்கு ரொக்கப் பரிசு ரூ.300. சிறப்பான பகிர்வுக்கு புடவை அன்பளிப்பாக வழங்கப்படும் என்று சென்ற இதழில் அறிவித்திருந்தோம். அவற்றில் தேர்ந்தெடுக்கப்பட்டவை...

ரொக்கப் பரிசு ரூ.300: இடையூறு இல்லாமல்...

திருச்சியில் வசிக்கும் நானும் என் கணவரும் சென்னையில் வசிக்கும் என் மகனையும், மருமகளையும் பார்க்கச் செல்லும்போது அவர்களுடைய அலுவலகப் பணிக்கு இடையூறு இல்லாமல் சனி அல்லது ஞாயிறு நாள்களைத்தான் தேர்ந்தெடுப்போம். ரயில் பயணச் சீட்டுகளை நாங்களே ஆன்லைனில் புக் செய்து கொள்வோம். இரவு நேரம் பயணம் செய்து அதிகாலை அவர்கள் வீட்டுக்குச் சென்றால் அவர்களின் தூக்கம் கெடும் என்பதால் பகல் நேர ரயில் பயணத்தை மேற்கொள்கிறோம். எத்தனை நாள் தங்குகிறோமோ அதற்கேற்ப மருந்து, மாத்திரைகளை வாங்கிக் கொண்டு சென்று விடுகிறோம். சென்னை சென்றதும் நாங்களே கால் டாக்ஸி புக் செய்து அவர்கள் வீட்டுக்குச் சென்று விடுவோம். எங்களுடைய மகனை கார் எடுத்துக்கொண்டு ரயில் நிலையம் வரச் சொல்வதில்லை. வார நாள்களில் அவர்கள் அலுவலகம் சென்ற பிறகு நாங்களே உறவினர்கள் வீடுகளுக்கோ, கோயில்களுக்கோ சென்று வருவோம். விடுமுறை நாள்களில் அவர்களுடன் சேர்ந்து வெளியே செல்வோம்.

- ப.கீதா, திருச்சி-21

நமக்கு நாமே!

சிறப்புப் பரிசு புடவை: ஒவ்வொரு நாளும் இனிய நாளே!

என் வயது 81. கணவர் மறைந்து 15 வருடங்களாகின்றன. அன்று முதல் தனியாகத்தான் இருக்கிறேன். இரண்டு மகள்கள். இருவரும் சென்னையில்தான் வசிக்கிறார்கள். பாசமிகு மகள்கள், மாப்பிள்ளைகள், பேரக்குழந்தைகள். அவர்கள் என்னை, தங்களுடன் இருக்கச் சொல்லி அழைத்தும் தனியாகத்தான் இருக்கிறேன்.

எனக்குத் தேவையான மருந்து, மாத்திரைகளை வாட்ஸ்அப் மூலம் வரவழைத்துக் கொள்வேன். பிடித்ததைச் சமைப்பேன். நான் புத்தகப்பிரியை. சிறந்த நூல்களைப் படித்துவிடுவேன். படித்துக்கொண்டும் இருக்கிறேன். மேலும் தமிழ் நூல்களை ஆங்கிலத் துக்கும், ஆங்கில நூல்களைத் தமிழுக்கும் மொழிபெயர்த்திருக்கிறேன். இதுவரை சுமார் முப்பது நூல்கள் அப்படி மொழிபெயர்த்திருக்கிறேன். உறவுகளுடனும், நண்பர்களுடனும் தொடர்பில் இருப்பதால் தனியாக இருப்பதாக நினைப்பதே இல்லை. ஆனால் என்னைச் சந்திப்பவர்கள், `தனியாகவாக இருக்கிறீர்கள்’ என்று கேட்டால், உள்ளுக்குள் கோபம் வரும். ஆயிரம் உறவுகள் இருந்தாலும், `தனியாக வந்தோம்... தனியாகப் போகப் போகிறோம்...’ இதென்ன கேள்வி!? இன்றுவரை ஒவ்வொரு நாளும் எனக்கு இனிய நாளே. நான் நினைப்பதெல்லாம் என்னால் பிறருக்குச் சிரமம் கூடாது என்பதுதான்.

- மங்களம் சுந்தரேசன், சென்னை-28

வாசகர்களே... நீங்களும் எழுதி அனுப்பலாம். அனுப்ப வேண்டிய முகவரி:
நமக்கு நாமே! அவள் விகடன், 757, அண்ணா சாலை, சென்னை - 600 002. மின்னஞ்சல் முகவரி: avalvikatan@vikatan.com