நடப்பு
Published:Updated:

நாணயம் லைப்ரரி : அதிக செலவுக்குக் கடிவாளம் போடுவது எப்படி? - சேமிப்பை அதிகரிக்கும் டெக்னிக்

நாணயம் லைப்ரரி
பிரீமியம் ஸ்டோரி
News
நாணயம் லைப்ரரி

செல்வம் என்பது சேமிப்பில் ஈடுபடும் நபர்களுக்கே கிடைக்கும் மகத்தான வரம் என்பதை உணர்ந்தால் செலவு குறையும்!

வசியமான செலவுகளைச் செய்வதில் தவறில்லை. ஆனால், குறிக்கோள் ஏதும் இல்லாமல், பணத்தைத் தண்ணீராகச் செலவழிப்பது தவறு. குறிக்கோள்களுடன் செலவழித்து, சேமித்து முதலீடு செய்து வாழ்வது எப்படி என்பதைச் சொல்லும் ‘யூ ஆர் மேக்கிங் அதர் பீப்பிள் ரிச்’ என்னும் ரயான் ஸ்டெர்லிங் என்பவர் எழுதிய புத்தகத்தைத்தான் நாம் இந்த வாரம் பார்க்கப்போகிறோம்.
நாணயம் லைப்ரரி : அதிக செலவுக்குக் கடிவாளம் போடுவது எப்படி? - சேமிப்பை அதிகரிக்கும் டெக்னிக்

மனம் திருந்திய ஆசிரியர்..!

‘‘என் பயோடேட்டாவைப் பார்த்தீர்கள் என்றால், நீங்கள் அசந்துபோவீர்கள். அமெரிக்காவில் இருக்கும் மிகப்பெரிய பல்கலைக்கழகங்களில் படித்த படிப்பு, வால்ஸ்ட்ரீட்டில் முதலீட்டு அனுபவம், வங்கியில் நல்ல பதவி, பெரும் வருமானம், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் மதியம் மற்றும் இரவு உணவு, நகரத்தில் மிகச்சிறந்த குடியிருப்புகளில் மிகப்பெரிய அப்பார்ட்மென்ட் என பொறாமைப்பட வைக்கும். ஆனால், எனக்கு மட்டுமே தெரியும் நான் பணரீதியாக மிகப்பெரிய தோல்வியைச் சந்தித்து அமைதியாக மனதுக்குள் அழுதுகொண்டிருக்கிறேன் என்பது.

அனைத்தையும் வாங்கி அனுபவித்துவிட நினைக்கும் குணாதிசயம் கொண்ட நானும் ஒரு நாள் திருந்தினேன். பொறாமைப்படும் அளவுக்கு சம்பளம் இருந்தபோதிலும் எங்கும் கடன், எதிலும் கடன் என்ற நிலையில் இருந்துகொண்டு எப்போது சம்பள நாள் வரும் என்று எதிர்பார்க்கிற நிலையில், சேமிப்பு ஏதுமின்றி பிரச்னைகளில் (மனைவி டைவர்ஸ் செய்யும் அளவுக்குப் போய்விட்டார்) உழன்று கொண்டிருந்த நிலையிலிருந்து மீண்டவன் நான்’’ என்ற அறிமுகத்துடன் இந்தப் புத்தகத்தை ஆரம்பிக்கிறார் ஆசிரியர்.

அதிக செலவு அதிக பிரச்னை..!

“மனிதர்கள் அனைவருமே அவரவர் களுடைய ஆரம்பகால வாழ்க்கைச் சூழலில் கொஞ்சம் பணக்கஷ்டத்துடனேயே வளர்ந்திருப்பார்கள். இந்தக் கஷ்டம் ஒரு வலியை அவர்களிடத்தில் உருவாக்கியிருக்கும். அந்த வலிக்கான மருந்தாகவே அதீத செலவு (நுகர்வு) என்பது அமைந்துவிடுகிறது. ஆனால், தெரிந்தோ தெரியாமலோ வலிக்கு மருந்து போடுகிறோம் என்று நினைத்துக்கொண்டு தொடர்ந்து பெரிய அளவிலான செலவைச் செய்து, வலியைவிட பெரியதொரு மீளமுடியாத கொடிய நோய்க்கு நாம் ஆளாகிவிடுகிறோம். இதுபோல், நுகர்வை எக்கச்சக்கமாகச் செய்து நம்மைப் பணக்காரராகக் காட்டிக்கொள்ள முயல்வதன் மூலம் நாம் ஒருபோதும் பணக்காரராகவே முடியாது’’ என்று சொல்லும் ஆசிரியர், செலவைக் குறைப்பதற்கான மூன்று குணங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார்.

நாணயம் லைப்ரரி : அதிக செலவுக்குக் கடிவாளம் போடுவது எப்படி? - சேமிப்பை அதிகரிக்கும் டெக்னிக்

செலவைக் குறைக்கும் மூன்று குணங்கள்..!

‘‘விழிப்புணர்வு, பொறுப்புணர்வு மற்றும் நடவடிக்கை என்ற மூன்று விஷயங்கள் முக்கியமானவை. இதில் விழிப்புணர்வு என்பது, உலகத்தில் உள்ள அனைத்து விஷயங்களையும் இன்றைக்கே வாங்கி அனுபவித்துவிடுவதே சிறந்தது என்ற உந்துதல் உங்களைச் செயல்பட வைக்கும்.

நுகர்வு என்பது இன்றைக்கே, இப்போதே என்பது நம்முடைய வளர்ச்சிக்கு மிகப்பெரிய முட்டுக்கட்டையைப் போடும் ஒரு விஷயம் என்ற விழிப்புணர்வு உங்களுக்கு கட்டாயம் இருக்க வேண்டும். இந்தப் பொருள்கள் எல்லாம் நம்மிடம் இல்லை என்றால், நம்முடைய அந்தஸ்துக்கு அது குறைவு என்று நாம் நினைக்கும் போதிலேயே நாம் முட்டாள்தனமான நிதி சார்ந்த முடிவுகளை எடுக்க ஆரம்பித்து விடுகிறோம்.

இரண்டாவதாக, பொறுப்புணர்வு. நம்முடைய வாழ்வில் நமக்கு என்ன வேண்டும் என்பதைத் தீர்க்கமாக முடிவு செய்து அதற்குண்டான பாதையை வகுத்து அதில் செவ்வனே நடந்துசெல்வதையே பொறுப்புணர்வு.

நாணயம் லைப்ரரி : அதிக செலவுக்குக் கடிவாளம் போடுவது எப்படி? - சேமிப்பை அதிகரிக்கும் டெக்னிக்

மூன்றாவது, மேற்சொன்ன இரண்டையும் நிறைவேற்றத் தேவையான நடவடிக்கைகளைத் தவறாமல் எடுக்க வேண்டியதன் அவசியத்தை. நடவடிக்கை என்றவுடன் பர்ஃபெக்ட்டான, ரிசல்ட்டுகளைக் கொண்டுவரும் வகையிலான விஷயங்கள் மட்டும் என்றில்லை. நாம் நம்முடைய கொள்கைகளை நோக்கி முன்னேறிச் செல்வதற்காக எந்த அளவில் உறுதியுடன் இருக்கிறோம், முன்னேற்றம் எந்தளவில் நடக்கிறது என்பதைக் கண்காணிப்பது, முன்னேற்றம் நடக்காமல் பின்னடைவு ஏற்பட்டால் அதைத் தாங்கிக்கொண்டு முன்னேற்றத்துக்காக அயராமல் பாடுபடுவதுதான்’’ என்கிறார் ஆசிரியர்.

செலவைக் கட்டுப்படுத்துவது எப்படி?

புத்தகத்தின் இறுதியில், இந்தச் செல்வம் சேர்க்கும் முயற்சியில் உங்களுக்கு எந்தளவுக்குப் பொறுப் புணர்வு இருக்கிறது, எந்தளவுக்குப் பொறுப்புடன் செயல்படுகிறீர்கள் என்பதை அவ்வப்போது அளவீடு செய்துகொள்வதற்கான பயிற்சிப் பாடங்களும் தரப் பட்டுள்ளது.

இன்றைக்கே இப்போதே ஒரு பொருளை வாங்க வேண்டும், ஒரு சேவையை அனுபவித்துவிட வேண்டும் என்ற எண்ணத்தைக் கைவிடுவது எப்படி என்று விளக்கமாகச் சொல்லும் ஆசிரியர், இதைச் சிறப்பாகச் செயல்படுத்த வாழ்வின் அர்த்தம் மனநிறைவு என்பதில் இருப்பதுதானே தவிர, நுகர்வில் இல்லை என்பதை முதலில் நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்கிறார்.

‘‘நம் வாழ்க்கையை சுலபம் ஆக்கவும், செளகர்யம் ஆக்கவும் அதிக விலையைக் கொடுக்கிறோம். அந்த விலை நம்மை மனச்சோர்வடைய வைத்து நிதி ரீதியாகச் சிக்கல்களைக் கொண்டுவந்து சேர்த்துவிடுகிறது. இதைவிட செளகர்யக் குறைவான வாழ்க்கையை வாழ்வதே சிறந்தது என்பதைப் புரிந்துகொண்டு செயல்படுங்கள். நினைவிருக்கட்டும், பல விதமான பொருள்களை வலியே தெரியாமல் மனிதர்களை வாங்க வைப்பது என்பதற்கான வழிகளைக் கண்டுபிடிக்க பெரும் சம்பளம் தரப்பட்டு மூளைகள் கசக்கிப் பிழியப்படுகின்றன. ஆனால், பொருள்களால் அமைந்த பெருவளம் என்பது சிறப்பான வாழ்க்கையல்ல. வாழ்வின் அர்த்தத்தால் அமைந்த பெருவளமே சிறப்பான வாழ்க்கை. ஆனால், இதைப் புரிந்து கொள்ளும்போது எல்லாமே நம் கையை மீறிச் சென்றுவிடும்’’ என்று எச்சரிக்கை செய்கிறார் ஆசிரியர்.

நாணயம் லைப்ரரி : அதிக செலவுக்குக் கடிவாளம் போடுவது எப்படி? - சேமிப்பை அதிகரிக்கும் டெக்னிக்

கட்டுப்பாடு அவசியம்..!

“உங்களுக்கென்று பணச்சட்டம் ஒன்றை உருவாக்கிக்கொண்டு வாழப் பழகுங்கள். இது மிகமிக அவசியமான ஒன்று. எனக்கு இதுதான் வேண்டும். இந்தக் காரியத்துக்கு மட்டும்தான் நான் செலவு செய்வேன். எந்தச் செலவு செய்யும் முன்னரும் இது என்னுடைய பணச்சட்டத்துக்கு 100 சதவிகிதம் ஒத்துவருமா என்று பார்ப்பேன். சரிவராவிட்டால் செலவழிக்க மாட்டேன் என்பதில் உறுதியாக இருங்கள். அப்படிச் செய்யும்போதுகூட சில சமயம் நீங்கள் தவறிழைப்பீர்கள். பணச்சட்டம் இருப்பதாலும் அதற்கு உகந்த செலவைச் செய்யாமல் சட்டத்தை மீறி செயல்பட்டதாலும் உங்கள் மனதில் ஒரு குறுகுறுப்பு இருந்து கொண்டேயிருக்கும். அடுத்தமுறை தவறேதும் சுலபத்தில் நடக்காது. உங்களுக்கான தனிப்பட்ட பணச்சட்டம் இல்லாதுபோனால் இதுபோன்ற குறுகுறுப்புகள் என்பது தோன்றாது போய் தலைக்கு மேலே விஷயம் போன பின்னாலேயே உங்களுக்கு எல்லாம் புரியவரும்.

செல்வம் என்பது சேமிப்பவர்களுக்கே கிடைக்கும் மகத்தான வரம். உங்கள் வருமானத்தின் நிலை என்னவாக இருந்தாலும் அத்தியாவசிய செலவுகள் எந்த அளவுக்கு இருந்தாலும், அநாவசியங்களைக் கண்டறிந்து ஒதுக்கினால் மட்டுமே செல்வத்தை சேகரிக்க முடியும். இன்றைக்கே இப்போதே அதற்கான முயற்சியை எடுங்கள். செல்வம் உங்களுக்காக காத்துக்கொண்டிருக்கிறது’’ என்ற நம்பிக்கை வார்த்தைகளுடன் புத்தகத்தை முடித்துள்ளார் ஆசிரியர். செலவைக் குறைத்து சேமிப்பை வளர்க்க வழிகளைச் சொல்லும் இந்தப் புத்தகத்தை அனைவரும் ஒருமுறை படிக்கலாம்!

- நாணயம் விகடன் டீம்