பங்குச் சந்தை
நடப்பு
Published:Updated:

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்... வீட்டுக்கடனுக்கு மானியம் பெறுவது எப்படி?

கேள்வி - பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி - பதில்

கேள்வி - பதில்

மியூச்சுவல் ஃபண்டில் ரூ.5 லட்சம் வரை முதலீடு செய்துள்ளேன். இந்த முதலீடுகளை அடமானமாக வைத்து வங்கிக்கடன் பெற முடியுமா?

வெங்கடேசன், சென்னை

ஆர்.கணேசன், உதவிப் பொதுமேலாளர் (ஓய்வு), பஞ்சாப் நேஷனல் பேங்க்

“மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டை அடமானமாக வைத்துக் கடன் தரும் திட்டம் வங்கிகளில் நடைமுறையில் இருக்கிறது. ஆனால், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டில் அதிக ஏற்ற இறக்கச் சூழல் இருக்கும் காரணமாக உறுதியான வருமானத்தை எதிர்பார்க்க இயலாததால், அதற்குக் கடன் தருவதற்கு வங்கிகள் அதிக ஆர்வம் காட்டுவதில்லை. அப்படியே வங்கிக் கடன் தருவதாக இருந்தாலும் அதற்கு நிறைய கட்டுப்பாடுகள் இருக்கின்றன.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்... 
வீட்டுக்கடனுக்கு 
மானியம் பெறுவது எப்படி?

முதலீடு செய்யப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் செயல்பாட்டின் அடிப்படையிலேயே கடன் தொகை நிர்ணயிக்கப்படும். பெரும்பாலும், முதலீட்டுத் தொகையில் பாதி அளவுக்குத்தான் கடன் தருவார்கள். அதேபோல, இதற்கான வட்டியும் மற்ற கடன் திட்டங்களைவிட அதிகமாக இருக்கும்.”

ஜி.டி.கோபாலகிருஷ்ணன், ஆர்.கணேசன்
ஜி.டி.கோபாலகிருஷ்ணன், ஆர்.கணேசன்

பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் 200 பங்குகளை தலா ரூ.3,715 என்ற விலைக்கு வாங்கினேன். பங்கு விலை தொடர்ந்து உயர்ந்து, தற்போது ரூ.4,023 என அதிகபட்ச உச்சத்தில் உள்ளது. எனக்கு இப்போது எந்தப் பணத்தேவையும் இல்லை என்பதால், இன்னும் விலை உயருமென்று காத்திருக்கலாமா அல்லது தற்போதே விற்கலாமா?

செந்தில்குமார், திண்டுக்கல் ரெஜி தாமஸ், பங்குச்சந்தை நிபுணர்

“பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்துக்கு நடப்பு நிதியாண்டின் முதலாம் காலாண்டு முடிவில் வட்டி வருமானம் மிகவும் வலுவாக இருப்பது தெரிகிறது. இதேபோல, இரண்டாவது காலாண்டிலும் நல்ல வருமானத்தை எதிர்பார்க்கலாம். எனினும், தற்போது வரி விகிதங்களைக் குறைத்துள்ள அறிவிப்புகளை வைத்துப்பார்க்கையில், உங்கள் வசமுள்ள பங்குகளில் 50 சதவிகிதத்தை விற்று லாபமீட்டிவிட்டு, மீதமுள்ள 50% பங்குகளை மட்டும் கைவசம் வைத்திருப்பது நல்லது.”

வி.எஸ்.சரண்சுந்தர், வி.எஸ்.சுரேஷ்
வி.எஸ்.சரண்சுந்தர், வி.எஸ்.சுரேஷ்

எங்களுடைய மைனர் வயதுக் குழந்தைகளின் பெயரில் வங்கி வைப்புக் கணக்கு தொடங்கி அதில் டெபாசிட் செய்துவருகிறோம். அதற்கு டி.டி.எஸ் பிடித்தம் செய்கிறார்கள். குழந்தைகளுக்கு மைனர் பான் கார்டுகள் உள்ளன. நானோ அல்லது என் கணவரோ வரிக் கணக்குத் தாக்கலில் டி.டி.எஸ் ரீஃபண்டை க்ளெய்ம் செய்யமுடியுமா?

செல்வகுமார், திருநெல்வேலி வி.எஸ்.சரண்சுந்தர், சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்

“பெற்றோர்களில் யாருக்கு அதிக வருமானம் உள்ளதோ, அவர்களின் வருமான வரிக் கணக்கில்தான் மைனர் குழந்தைகளின் வைப்பு நிதி வருமானம் சேரும். பெற்றோர் விவாகரத்து பெற்றவர்களாக இருந்தால், அவர்களில் யார் பொறுப்பில் குழந்தைகள் வளர்கிறார்களோ அவர்களின் வருமான வரிக் கணக்கில் இந்த வருமானம் சேரும். வருமான வரிச்சட்டம் 80U பிரிவில் குறிப்பிட்டுள்ளபடி, குழந்தைக்கு ஏதேனும் உடல்நலக் குறைபாடு இருந்தால், பெற்றோரின் வருமான வரிக் கணக்கில் குழந்தையின் வருமானத்தைக் காட்ட முடியாது.

எஸ்.ஸ்ரீதரன்
எஸ்.ஸ்ரீதரன்

குழந்தைகளுக்கு பான் கார்டு இருப்பதால், டி.டி.எஸ் பிடித்தத்துக்கு அதைப் பயன்படுத்தாமல், தனது பான் கார்டு எண்ணைப் பயன்படுத்த வலியுறுத்துவதற்கு, வருமான வரிச்சட்டம் 37BA (1) பிரிவின்படி, பெற்றோர் தரப்பில் வங்கிக்கணக்கு உள்ள வங்கிக்கு டிக்ளரேஷன் விண்ணப்பம் தர வேண்டும். அப்படிச் செய்தால், டி.டி.எஸ் ரீஃபண்ட் பெறமுடியும். மேலும், குழந்தைகளின் வைப்பு நிதி முதலீட்டிலிருந்து கிடைக்கும் வருமானம் அல்லது ரூ.1,500 இவற்றில் எது குறைவோ, அதற்கு வரிச்சலுகைப் பெறமுடியும்.”

டாடா மேஜிக் வாகனத்தை வாடகைக்கு வாங்கி ஓட்டிவருகிறேன். அந்த வாகனத்துக்கு இன்ஷூரன்ஸ் முறைப்படி இருக்கிறதா என்று தெரியவில்லை. விபத்து காரணமாக எனக்குப் பாதிப்பு ஏற்பட்டால், இன்ஷூரன்ஸ் க்ளெய்ம் செய்ய வாய்ப்புண்டா?

முத்துராஜ், சென்னை வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்

“பொதுவாக, வணிகப் பயன்பாட்டு வாகனத்துக்கான இன்ஷூரன்ஸில் ஓட்டுநருக்கும் கவரேஜ் இருக்கும். எனவே, அதன்படி க்ளெய்ம் செய்ய முடியும். மோட்டார் வாகனச் சட்டப்படி எந்தவொரு மோட்டார் வாகனமும் இன்ஷூரன்ஸ் இல்லாமல் சாலையில் ஓடக்கூடாது. ஆர்.சி புக், இன்ஷூரன்ஸ் கார்டு, பெர்மிட், ஓட்டுநர் உரிமத்தின் நகல் போன்றவற்றை மோட்டார் வாகனங்களில் கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும் என்றும் காவல்துறையோ, போக்கு வரத்துத்துறையோ மேற்படி ஆவணங்களைக் கேட்கும்போது அவர்களுக்குக் காட்ட வேண்டும் என்றும் விதிமுறை உள்ளது. எனவே, உங்கள் வாகன உரிமையாளரிடம் கேட்டு மேற்படி ஆவணங்களின் நகல்களை வாகனத்திலேயே வைத்துக்கொள்ள வேண்டியது உங்கள் பொறுப்பாகும்.”

50 வயதான என்னால் மாதந்தோறும் 20,000 ரூபாய் முதலீடு செய்ய முடியும். எனது 55 வயதில் ஓய்வு பெறவுள்ளேன். ஏற்கெனவே மியூச்சுவல் ஃபண்டில் 20 லட்சம் முதலீடு செய்துள்ளேன். அஞ்சலகச் சேமிப்பு மற்றும் வைப்புநிதியிலும்கூட முதலீடு செய்துள்ளேன். பங்குச்சந்தை தவிர்த்து வேறெந்தத் திட்டத்தில் முதலீடு செய்வதென ஆலோசனை கூறவும்.

சண்முகம், மதுரை எஸ்.ஸ்ரீதரன், நிதி ஆலோசகர்

“தாங்கள் மியூச்சுவல் ஃபண்ட், அஞ்சலகச் சேமிப்பு மற்றும் வைப்பு நிதியில் முதலீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளீர்கள். அனைத்துத் திட்டங்களிலும் ஏற்கெனவே முதலீடு செய்துள்ளதால், தற்போது கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வது நல்லது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம்... 
வீட்டுக்கடனுக்கு 
மானியம் பெறுவது எப்படி?

இது பங்குச்சந்தை சார்ந்தில்லாமல் கடன் பத்திரத்தில் முதலீடு செய்வதால் அதிக வருமானத்தைக் கொடுக்காவிட்டாலும், சற்றுப் பாதுகாப்பான முதலீடு ஆகும். மேலும், தற்போதைய சூழ்நிலையில், கார்ப்பரேட் ஃபண்ட், லோ டியூரேஷன் மற்றும் அல்ட்ரா டியூரேஷன் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.”

கேள்விகளை அனுப்புகிறவர்கள்

தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. nav@vikatan.com