நடப்பு
Published:Updated:

கேள்வி பதில் : வீட்டுக் கடன்... ஃப்ளோட்டிங் Vs ஃபிக்ஸட் ரேட் - எதைத் தேர்வு செய்வது?

கேள்வி பதில்
பிரீமியம் ஸ்டோரி
News
கேள்வி பதில்

பங்குச் சந்தை முதலீட்டில் 12% வருமானம் கிடைக்கும் என்பதற்கு எந்த வகையிலும் உத்தரவாதம் கிடையாது!

ஒன்பது சதவிகித வட்டியில் தங்க நகையை அடமானம் வைத்து அந்தத் தொகையை பங்குச் சந்தையில் முதலீடு செய்து 12% வருமானம் ஈட்ட நினைக்கும் என் திட்டம் சரியா?

கலாதேவி, திருவாரூர்.

கேள்வி பதில் : வீட்டுக் கடன்... ஃப்ளோட்டிங் Vs ஃபிக்ஸட் ரேட் - எதைத் தேர்வு செய்வது?

“எக்காரணம் கொண்டும் கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்யக் கூடாது. உபரிப் பணத்தை மட்டுமே வைத்து பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வேண்டும். கடன் வாங்கி முதலீடு செய்யும்போது, அதற்கு செல்லும் வட்டி ஓர் இழப்பு; கூடவே பங்குச் சந்தை இறங்கிவிட்டால், அது ஒரு கூடுதல் இழப்பு. பங்குச் சந்தை முதலீட்டில் 12% வருமானம் கிடைக்கும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. எனவே, இந்த முயற்சி வேண்டாம்.”

தற்போதைய நிலையில், வீட்டுக் கடனுக்கு மாறுபடும் வட்டி அல்லது நிலையான வட்டி - இந்த இரண்டில் எதைத் தேர்வு செய்வது?

- ஆர்.சிவராமன், சென்னை - 56

கேள்வி பதில் : வீட்டுக் கடன்... ஃப்ளோட்டிங் Vs ஃபிக்ஸட் ரேட் - எதைத் தேர்வு செய்வது?

“தற்போதைய நிலையில் பெரும்பாலான வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் மாறுபடும் வட்டி விகிதத்தில்தான் (ஃப்ளோட்டிங் ரேட்) வீட்டுக் கடனை அளிக்கின்றன. ஓரிரு வங்கிகள்தான் நிலையான வட்டியில் வீட்டுக் கடன் தருகின்றன. அதுவும் நிலையான வட்டி என்பது முழுக் கடன் காலத்துக்கும் கிடையாது. இரண்டு அல்லது மூன்று அல்லது ஐந்து வருடங்களுக்குத்தான் நிலையான வட்டியில் கடன் தருகின்றன. அதன்பிறகு, அப்போதுள்ள ஃப்ளோட்டிங் விகிதம் அமல்படுத்தப்படும். எனவே, நிலையான வட்டியைத் தேர்வு செய்யும் போது, விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நன்கு படித்து, புரிந்து அதன் பிறகு தேர்வு செய்யவும்.

கேள்வி பதில் : வீட்டுக் கடன்... ஃப்ளோட்டிங் Vs ஃபிக்ஸட் ரேட் - எதைத் தேர்வு செய்வது?

தற்போதைய நிலையில் வட்டி குறைவாக இருக்கிறது. மேலும், வட்டி இன்னும் குறைய வாய்ப்புள்ளதால், ஃப்ளோட்டிங் விகிதமே நல்லது. ஃப்ளோட்டிங் விகிதத்தைவிட ஃபிக்ஸட் விகிதம் 1% - 2% அதிகமாக இருக்கும். மேலும், குறிப்பிட்ட கட்டணத்தைச் செலுத்தி, ஃப்ளோட்டிங் விகிதத்திலிருந்து ஃபிக்ஸட் விகிதத்துக்கும், ஃபிக்ஸட் விகிதத்திலிருந்து ஃப்ளோட்டிங் விகிதத்துக்கும் மாற்றிக் கொள்ளவும் முடியும்.”

வாடகைப் பிரச்னை தொடர்பாக வழக்கு தொடர, வாடகை ஒப்பந்தம் செய்திருப்பது அவசியமா?

செ.கார்த்திகா, சென்னை – 1

கேள்வி பதில் : வீட்டுக் கடன்... ஃப்ளோட்டிங் Vs ஃபிக்ஸட் ரேட் - எதைத் தேர்வு செய்வது?

“அண்மையில் சென்னை நீதிமன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு ஒன்றின் அடிப்படையில் வாடகை தொடர்பாக வழக்கு தொடர, வாடகை ஒப்பந்தம் அவசியமில்லை. அந்தத் தீர்ப்பில், வாடகை தொடர்பான வழக்கு தொடுக்க, வீட்டின் உரிமையாளருக்கும் வாடகைக்குக் குடியிருப்பவருக்கும் இடையே பதிவு செய்யப்பட ஒப்பந்தம் தேவையில்லை. இதைக் காரணம் காட்டி, வாடகை தொடர்பான வழக்குகளை விசாரிக்கும், சிறுவழக்குகள் நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்யக் கூடாது. இந்த உத்தரவை உயர் நீதிமன்றப் பதிவகம், வாடகை தொடர்பான அனைத்து நீதிமன்றங்களுக்கும் தெரிவிக்க வேண்டும் என நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் தீர்ப்பில் கூறியுள்ளார். அதன் அடிப்படையில் பார்க்கும்போது, வாடகை பிரச்னை தொடர்பாக வழக்கு தொடர, வாடகை ஒப்பந்தம் செய்திருப்பது அவசியமில்லை.”

வரிச் சேமிப்புக்கான மியூச்சுவல் ஃபண்டான ஃப்ராங்க்ளின் இந்தியா டாக்ஸ்ஷீல்ட் ஃபண்டில் விநியோகஸ்தர் ஒருவர் முதலீடு செய்யச் சொல்கிறார். நண்பர் ஒருவர் ஃப்ராங்க்ளின் டெம்பிள்டன் இந்தியா மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனம் சிக்கலில் இருக்கிறது. அதில் முதலீடு செய்யாதே என்கிறார். அது சரியா?

அ.முத்துகிருஷ்ணன், திசையன்விளை

கேள்வி பதில் : வீட்டுக் கடன்... ஃப்ளோட்டிங் Vs ஃபிக்ஸட் ரேட் - எதைத் தேர்வு செய்வது?

“வரிச் சேமிப்புக்கான முதலீட்டுத் திட்டங்களுக்குள் மியூச்சுவல் ஃபண்டில் இ.எல்.எஸ்.எஸ். ஃபண்டில் முதலீடு செய்வது சிறப்பானது. ஆனால், அதற்கு உகந்த மியூச்சுவல் ஃபண்ட் ஃப்ராங்க்ளின் ஃபண்ட் இல்லை. அதற்குக் காரணம், இந்த ஃபண்டானது ஒரு மிகச் சுமாரான ஃபண்ட். இதற்கு அந்த நிறுவனத்தின் தற்போதைய நிலவரம் காரணம் இல்லை. அதற்கு மாற்றாக, நீங்கள் ஆக்ஸிஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் லாங் டேர்ம் ஈக்விட்டி ஃபண்டில் முதலீடு செய்யலாம்.”

நான் அமெரிக்காவில் ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன். இங்கிருந்து இந்தியாவில் உள்ள சொத்துகள் குறித்து உயில் எழுதி வைக்க இயலுமா ?

கேள்வி பதில் : வீட்டுக் கடன்... ஃப்ளோட்டிங் Vs ஃபிக்ஸட் ரேட் - எதைத் தேர்வு செய்வது?

“நீங்கள் அமெரிக்காவிலிருந்தே இந்தியாவில் உள்ள சொத்துகளுக்கு, நீங்கள் விரும்பியபடி உயில் எழுதலாம். நீங்கள் செய்ய வேண்டியது அங்கு உங்களுக்குத் தெரிந்த மொழியில் உயில் எழுதி, அதை அங்குள்ள இரண்டு சாட்சிகள் முன்னிலையில் கையொப்பம் செய்து, அந்த நாட்டின் தூதரக அதிகாரியிடம் ஓர் ஒப்பம் பெற்று அல்லது அங்குள்ள நோட்டரி முன்பாக அட்டெஸ்ட் பெறப்பட்டு, அந்த ஆவணத்தை இங்குள்ள உயில்வழிப் பயனாளிக்கு அனுப்பி வைத்து, அந்த உயிலை உங்கள் காலத்துக்குப் பிறகு, நடைமுறைபடுத்த வழிவகை செய்யலாம்.

இந்தியாவில் அந்த ஆவணத்தைப் பதிவு செய்ய வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை.”

கேள்விகளை அனுப்புபவர்கள் தங்கள் செல்போன் எண்ணையும் குறிப்பிடவும்.

அனுப்ப வேண்டிய முகவரி: கேள்வி-பதில் பகுதி, நாணயம் விகடன், 757, அண்ணாசாலை, சென்னை-2. navdesk@vikatan.com