
விரைவில் ஆலயத் திருப்பணிகளைத் தொடங்கவுள்ளோம்
“இருக்குமிடத்தை விட்டு இல்லாத இடம் தேடி எங்கெங்கோ அலைகிறார் ஞானத்தங்கமே...” என்று பாடியபடியே வந்தார் நாரதர். மழையில் நனைந்து வந்தவருக்குக் குளிருக்கு இதமாய் சுக்கு காபி கொடுத்து உபசரித்தோம். பருகி முடித்தவர், நேரடியாகக் கும்பகோணம் விஷயத்துக்கு வந்தார்.
``கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் திருக்கோயிலின் கந்தகூபத் திருக்குளத்தில் ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆனால், `கோயில் நிர்வாகத்தின் அலட்சியத்தால் கடந்த எட்டு ஆண்டுகளாக அந்தத் திருவிழா நடைபெறவில்லை' என்று பக்தர்கள் புலம்பியது குறித்து சென்ற இதழில் தெரிவித்திருந்தோம். ஊர்ப் பொதுமக்களும் பக்தர்களும் எவ்வளவோ முயன்றும் இந்த ஆண்டும் (27.7.19) தெப்பத் திருவிழா நடைபெறவில்லை'' என்று வருத்தத்தோடு பகிர்ந்துகொண்ட நாரதர் தொடர்ந்து பேசினார்.

``காவிரி நீரையோ அல்லது நிலத்தடி நீரையோ எடுத்து கந்தகூபத் திருக் குளத்தை நிரப்பியிருக்கலாம். ஆனால், கோயில் நிர்வாகத் தரப்பில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்று குறைபட்டுக்கொள்கிறார்கள் பக்தர்கள்.
``ஆலய நிர்வாகத் தரப்பில் இதுகுறித்து விசாரித்தீரா?''
``ஆமாம்! ஆலயத்தின் செயல் அலுவலர் ரமேஷிடம் பேசினேன். `நான் இங்கு வருவதற்குமுன், அதாவது எட்டு ஆண்டுகளுக்குமுன் தெப்பத் திருவிழா நடத்தியிருக்கிறார்கள். அப்போதும் குளத்தில் போதிய நீர் இல்லாததால், நிலை தெப்பமாக விழாவை நடத்தியிருக்கிறார்கள். இப்போதும் வறட்சி நிலவுவதாலும், திருக்குளத்தில் நீர் நிரப்பினாலும் அது தேங்காமல் போக வாய்ப்புள்ளதாலும், இந்த ஆண்டும் தெப்பத்திருவிழா நடத்த முடியவில்லை.

விரைவில் ஆலயத் திருப்பணிகளைத் தொடங்கவுள்ளோம். அப்போது திருக் குளத்தை சரியாகச் செப்பனிட்டு நீர் நிரப்பி, அடுத்த ஆண்டு நிச்சயம் தெப்பத் திருவிழாவை நடத்தியே திருவோம்' என்று உறுதியளிக்கிறார் அவர்'' என்றார் நாரதர்.
``பக்தர்களின் எதிர்பார்ப்பு அடுத்த ஆண்டாவது நிறைவேறினால் சரி. ஆடி அமாவாசை வருகிறதே... சதுரகிரி யில் கூட்டம் அதிகம் திரளுமே! அங்கிருந்து ஏதேனும் தகவல் உண்டா?''

``இந்த வருடம் ஆடி அமாவாசை தரிசனத்துக்கு அங்கு ஏக கெடுபிடிகள் இருக்கும் என்றே தோன்றுகிறது. ஏற்கெனவே, வனப் பாதுகாப்பு - வனவிலங்கு பாதுகாப்பு என்ற பெயரில் கடுமையான கெடுபிடியைக் காட்டிவருகிறார்கள் வனத் துறையினர். அத்துடன், அன்னதானக்கூடங்கள் நடத்துவது குறித்த கட்டுப்பாடுகளாலும் பக்தர்கள் சிரமத்துக்கு ஆளாகி யிருக்கும் விஷயத்தையும் ஏற்கெனவே கூறியிருந்தேன். இந்த நிலையில், யார் யாரோ திடீர் உணவகங்கள் அமைத்திருக்கிறார்கள், மலையின்மீது! விசேஷ நாள்களில் கொள்ளை லாபம் பார்க்கிறார்களாம். `இதுபற்றி உரிய அதிகாரிகள் எவரும் கண்டுகொள்வதில்லை. ஆனால், பக்தர்கள் தரப்பிலான இலவச அன்னதானக் கூடங்களை மட்டும் முடக்கிவருகிறார்கள்' என்று ஆதங்கப்படுகிறார்கள் சதுரகிரி பக்தர்கள். இதுதொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கும் நடைபெற்று வருகிறது'' என்ற நாரதர் மேலும் தொடர்ந்தார்.
``மலைமீது குடிநீர் வசதியில்லை என்று கூறும் ஆலய நிர்வாகம், ஆயிரக்கணக்கான மக்கள் கூடும் இடத்தில் அதற்கான வசதிகளைச் செய்யவில்லை. நிறைய நீரூற்றுகள் கொண்ட மலையில் குடிநீர் வசதி செய்வது ஒரு விஷயமே இல்லை என்கிறார்கள் பக்தர்கள். `உரிய வசதிகளைச் செய்து தராமல், பக்தர்களிடம் மட்டும் கெடுபிடி காட்டுவது தவறான அணுகுமுறை' என்பது பக்தர்களின் ஆதங்கம். அதேபோல், `ஆலய கணக்கு வழக்குகள் மற்றும் நிர்வாக விஷயங்களிலும் ஏகப்பட்ட குளறுபடிகள்' எனப் புலம்பும் பக்தர்கள், `இந்த விஷயத்தில் தமிழக அரசின் மேலிடம் தலையிட்டு உரிய தீர்வு காணவேண்டும்' என்கிறார்கள்'' என்ற நாரதர் வேறு விஷயத்துக்குத் தாவினார்.
``கோவை அருகிலுள்ள பிரசித்தி பெற்ற திருத்தலம் - அவிநாசியப்பர் திருக்கோயில். இது, சுந்தரமூர்த்தி நாயனாரின் பாடல் பெற்ற தலங்களில் ஒன்று.

இங்குதான் `எற்றான் மறக்கேன்' என்று தொடங்கும் பதிகத்தைப் பாடி, முதலையால் மடிந்த பாலகன் ஒருவனை இறையருளால் உயிருடன் மீட்டுக்கொடுத்தார், சுந்தரர்.
இந்தத் தலத்தில், இப்படியான அற்புதம் நடைபெற்ற இடம், திருக்கோயிலுக்கு வெளியே பரந்து விரிந்த ஏரிப் பரப்பாகத் திகழ்கிறது. ஊர் மக்கள் அந்த ஏரியை `தாமரைக் குளம்' என்கிறார்கள்.
அதன் அருகிலேயே சுந்தரமூர்த்தி ஸ்வாமி ஆலயமும் திருமடமும் உள்ளன. ஆதிகாலத்தில் மிகச் சிறப்புடன் திகழ்ந்த அவை இரண்டும் தற்போது சிதிலமாகிக்கிடக்கின்றன. அதேபோல், சுமார் 120 ஏக்கர் பரப்பளவுடன் திகழ்ந்த ஏரி, இப்போது கவனிப்பார் இல்லாது புதர் மண்டி பாழ்பட்டுக் கிடக்கிறது.
தீர்த்தக்கரை படித்துறைகள், ஏரிக்குச் செல்லும் பாதைகளும் சீர்ப்படுத்தப்படவேண்டிய நிலையில் உள்ளன. இவை, சமூகவிரோதிகள் புழங்கும் இடங்களாக மாறிவிட்டன.
`சில காலத்துக்கு முன்புவரையிலும் திருத்தொண்டுகள் தீர்த்தவாரி வைபவங்கள் என சிறப்புடன் திகழ்ந்த தாமரைக் குளம் இப்போது கைவிடப்பட்ட நிலையில் திகழ்வது காலத்தின் கொடுமையே' என்கிறார், இத்தலம் குறித்து தகவல் சொன்ன நண்பர்'' என்று அங்கலாய்ப்புடன் முடித்த நாரதரிடம், ``நீர் நேரில் செல்லும் திட்டமுண்டா'' என்று கேட்டோம்.
``நிச்சயமாக. அவிநாசிக்குச் சென்று திரும்பியதும் கூடுதல் தகவலுடன் வருகிறேன்'' என்றபடியே விடை பெற்றுக் கொண்டார் நாரதர்.
- உலா தொடரும்...