
கங்காதீஸ்வரர் கோயில்
`தெய்வம் இருப்பது எங்கே... அது இங்கே, வேறெங்கே...' என்று பாடியபடி நுழைந்தார் நாரதர். வந்தவரை வரவேற்று ஆசனமளித்து அமரச் சொன்னோம். சூடானத் தேநீரைப் பருகியவாறே சற்றே கண்மூடி அமர்ந்திருந்தார் கலகப்பிரியரான நாரதர்.
``ஸ்வாமி... எதைப்பற்றி ஆழ்ந்த சிந்தனை?'' என்று விசாரித்ததும், எப்போதும் சிரித்தபடி குறைகளைச் சுட்டிக்காட்டும் நாரதர் சோகத் துடன் ஒரு பெருமூச்சை விட்டார்.
``சென்ற உலாவில் பழைமையான சில ஆலயங்கள் பாழ்பட்டுக் கிடைப்பதைப் பற்றி பேசினோம் ஞாபகம் உள்ளதா?'' என்றார்.

``உள்ளது ஸ்வாமி'' என்றதும், “அப்போது விரைவில் தக்கோலத்துக்குச் செல்கிறேன். திருவூறல் கங்காதீஸ்வரர் கோயில் மட்டுமன்றி, அவ்வூரில் புனரமைப்புக்காகக் காத்திருக்கும் மற்ற கோயில்களின் நிலை குறித்தும் நேரில் அறிந்துவந்து விரிவாகப் பகிர்கிறேன் என்று சொன்னேன் நினைவிருக்கிறதா...'’ என்றார்.
``ஞாபகம் உள்ளது ஸ்வாமி... ஏன் இத்தனை சோகம், சொல்லுங்கள்'' என்றதும்... விரிவாகவே விளக்க ஆரம்பித்தார் நாரதர்:

``சென்ற வாரம் தக்கோலம் ஊருக்குச் சென்று முதலில் அங்குள்ள ஜலநாதீஸ்வரர் கோயிலை தரிசித்தோம். அந்த ஆலயம் நல்ல நிலையில் பரந்துவிரிந்து காணப்படுகிறது. வித்தியாசக் கோலத்தில் அருளும் தட்சிணாமூர்த்தி பகவானை யும் தரிசித்து மகிழ்ந்தோம். ஆனால், காலத்தால் இந்த ஆலயத்துக்கும் முற்பட்ட, புகழ்பெற்ற திருவூறல் கங்காதீஸ்வரர் ஆலயம்தான் நெஞ்சைப் பதறவைக்கும் நிலையில் உள்ளது. ஜலநாதீஸ்வரர் ஆலயத்துக்குப் பின்புறம் குடியிருப்புகளுக்கு நடுவே ஆள் அரவமின்றி காணப்படும் இந்த ஆலயத்தைப் பூட்டியே வைத்திருக்கிறார்கள். அங்கிருப்பவர்களிடம் யார் பூட்டி வைத்திருக்கிறார்கள், ஏன் பூட்டி வைத்திருக்கிறார்கள், யாரிடம் சாவி உள்ளது என்று கேட்டால் ஒரு பதிலும் இல்லை.
ஜலநாதீஸ்வரர் கோயில் அர்ச்சகரிடம் கேட்டால், கங்காதீஸ்வரர் கோயிலில் திருப்பணிகள் இன்னும் நடைபெறுவதால் கோயில் மூடிக் கிடக்கிறது என்கிறார். ஊரில் கேட்டால் எவருமே இதுபற்றி பேச மறுக்கிறார்கள். துணிச்சலான சில இளைஞர்கள் மட்டும், ‘இந்தக் கோயிலில் எந்தத் திருப்பணியும் நடைபெறவில்லை. எல்லா பணிகளும் நிறைவுபெற்றுவிட்டன. ஆனால் உள்ளூர் அரசியல் காரணமாக இந்த ஆலயம் பூட்டியேக் கிடக்கிறது.

30 ஆண்டுகளுக்கு முன்பு வரை தக்கோலம் என்றாலே... நந்தியெம் பெருமான் திருவாயில் ஊறி வழியும் நீர், திருக்குளத்தை அடைந்து அது கொசஸ்தலை ஆற்றில் கலக்கும் அதிசயம் நிகழும் இந்த கங்காதீஸ்வர் கோயில்தான் நினைவுக்கு வரும். இப்போது நீண்டகாலமாக ஆலயம் மூடப்பட்டு நந்தியின் திருவாயில் நீர் பெருகுவதும் தூர்க்கப்பட்டுவிட்டது. அறநிலையத்துறை உயர் அதிகாரிகள் உத்தரவிட்டும் இந்த ஆலயத்தைத் திறக்க மறுப்பது ஏன் என்று தெரியவில்லை' எனக் கொந்தளிக்கிறார்கள்.
அதுமட்டுமா, 20 ஆண்டுகளுக்கு முன்னால் சிவராத்திரி, கார்த்திகை தீபவிழா போன்ற நாள் களில் தக்கோலத்தைச் சுற்றியுள்ள ஏழு சிவாலயங் களுக்குச் சென்று அன்பர்கள் தரிசிப்பது வழக்கமாக இருந்ததாம். இப்போது ஜலநாதீஸ்வரர், சோமநாதர், மாம்பழ நாதர் கோயில்கள் மட்டுமே ஓரளவுக்கு தரிசிக்கும் நிலையில் உள்ளன. மற்ற கோயில்களான யமனேஸ்வரர், வாலீஸ்வரர், தேனீஸ்வரர் ஆகிய ஆலயங்களின் நிலை மோசமாக உள்ளது.
ஆற்றுக்கு நடுவே உள்ள வாலீஸ்வரர் கோயில் தொல்பொருள் ஆய்வுத்துறைக்கு உட்பட்டுக் கிடப்பதால் ஆள் அரவமின்றி உள்ளது. தேனீஸ்வரர் கோயில், தனி நபர்களின் ஆக்கிரமிப்பில் உள்ளது. யமனேஸ்வரர் கோயிலோ கவனிப்பாரின்றி சமூக விரோதிகளின் கூடாரமாகத் திகழ்கிறது.கங்காதீஸ்வரர் கோயிலோ காரணமேயின்றி பூட்டப் பட்டுள்ளது. இது கோயிலுக்கு மட்டுமில்லை, ஊருக் கும் நல்லதில்லை என்கிறார்கள் அங்குள்ளோர். `இந்த ஆலயங்களை மேம்படுத்தி வைத்தால் ஆன்மிக தலமாகவும் சுற்றுலா தலமாகவும் சிறந்து விளங்கும். ஆனால், அறநிலையத்துறையும், தொல்லியல் துறையும் செய்ய மறுப்பது ஏனோ' என்று வேதனை தெரிவித்தார்கள் ஊர் பெரியவர்கள்'' என்ற நாரதர் மேலும் தொடர்ந்தார்.

``இதுகுறித்து அறநிலையத்துறையில் விசாரித்தால், `கங்காதீஸ்வரர் கோயிலில் ஏறக்குறைய எல்லா பணிகளும் முடிந்துவிட்டன. ஆனால், வெளிப் பிராகாரத்தில் தரையில் கற்கள் பதிக்கவேண்டி யுள்ளது. அரசு ஒதுக்கிய நிதி மற்ற பணிகளுக்குச் சரியாக இருந்தது. இந்தப் பணிக்கு தனியார் நன்கொடையாளர்களைத் தேடிவருகிறோம். வேலைகள் முடிந்ததும் விரைவில் கும்பாபிஷேகம் நடக்கும். அதேபோல், மற்ற ஆலயங்களும் நிதி மற்றும் சட்ட சிக்கல்களால் திருப்பணிகள் தேங்கியுள்ளன. அந்தப் பிரச்னைகளும் விரைவில் சரிசெய்யப்படும்' என்றார்கள்'' என்ற நாரதர், புறப்படத் தயாரானார்.
``தஞ்சை- நீடாமங்கலம் சாலையில் அமைந்துள்ள அம்மாபேட்டை அருணாசலேஸ்வரர் ஆலய ராஜ கோபுரத் திருப்பணிக்கு அறநிலையத் துறையே தடை விதிக்கிறதாம். அதேபோல், அவ்வூருக்கு அருகிலுள்ள தீபாம்பாள்புரம் சிவாலயம், பூமியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனத்தின் செயல்பாடுகளால் சிதைந்து போயுள்ளது என்று தகவல் வந்துள்ளது. சகலத்தையும் விசாரித்து விட்டு வந்து சொல்கிறேன்'' என்றபடியே விடைபெற்றார்.
- உலா தொடரும்...