மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நாரதர் உலா: சிதைவுபடும் சிவாலயம்...

நாரதர் உலா
பிரீமியம் ஸ்டோரி
News
நாரதர் உலா

‘உண்மையைச் சொல்லி நன்மையைச் செய்தால் உலகம் உன்னிடம் மயங்கும்...’ என்று பாடியவாறே நுழைந்தார் நாரதர். வந்தவரை வரவேற்று அமரச் சொன்னோம்.

ழைக்கு இதமாகச் சூடான தேநீரை அளித்ததும் அதைப் பருகியவாறே தகவல்களைக் கொட்டத் தொடங்கினார் நாரதர்.

“சென்ற உலாவில் தஞ்சை - நீடாமங்கலம் சாலையில் அமைந்துள்ள அம்மாப்பேட்டை அருணாசலேஸ்வரர் ஆலய ராஜகோபுரத் திருப்பணிக்கு அறநிலையத்துறையே தடை விதித்திருக்கிறது. அதேபோல், அவ்வூருக்கு அருகிலுள்ள தீபாம்பாள்புரம் சிவாலயம், பூமியிலிருந்து எண்ணெய் எடுக்கும் நிறுவனம் ஒன்றின் செயல்பாடுகளால் சிதையும் அபாயத்தில் உள்ளது என்று தெரிவித்திருந்தோம் அல்லவா... அந்த ஊர்களுக்குத்தான் சென்றிருந்தோம்'' என்றவர், தொடர்ந்து பேசினார்.

நாரதர் உலா: சிதைவுபடும் சிவாலயம்...

``அம்மாப்பேட்டையில், வெண்ணாற்றின் தென்கரையில் அமைந்துள் ளது அருணாசலேஸ்வரர் ஆலயம். விக்கிரம சோழன் காலத்தில் அமைக்கப் பட்ட பஞ்சபூதத் தலங்களில் இந்த ஆலயம் அக்னித் தலமாக விளங்குகிறது. விக்கிரமாதித்தன் வழிபட்ட விக்கிர மாகாளியம்மன், வில்லேந்திய தனுர் முருகன், ஸ்ரீசக்கரத்துடன் கூடிய தர்மசம்வர்த்தினி அம்பிகை... என இந்த ஆலயத்தில் அருளும் தெய்வங்கள் அனைவரும் சாந்நித்தியமானவர்கள் என்கிறார்கள் பக்தர்கள்.

சிதிலம் அடைந்திருந்த இந்த ஆலயத்துக்கு 2005-ல் (செப்.15) கும்பாபிஷேகம் செய்திருக் கிறார்கள். முந்தைய காலத்தில் மூன்று நிலை களுடன் திகழ்ந்த ராஜகோபுரம் காலப்போக்கில் இடிந்து, கும்பாபிஷேகத்தின்போது முதல்நிலை வரை மட்டுமே எஞ்சிய நிலையில் கல்காரமாக இருந்துள்ளது. அப்போது இந்த ராஜகோபுரத்தைச் சீரமைக்க வசதியில்லாததால், கோயிலை மட்டும் ஓரளவு சீர்செய்து கும்பாபிஷேகம் செய்துள்ளார்கள் இந்த ஊர்மக்கள்.

தற்போது, மீண்டும் கும்பாபிஷேகப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அத்துடன், ராஜகோபுரத் தையும் சீர்செய்ய விரும்பி, அதன்பொருட்டு ஊர்ப் பெரியவர்கள் அறநிலையத்துறையினரிடம் அனுமதி வேண்டியுள்ளார்கள். அறநிலையத் துறையில், கீழ்க் கமிட்டியில் அனுமதி கொடுத் துள்ளார்கள். எனினும் `ஹெரிடேஜ் கமிட்டி' எனும் உயர்நிலைக்குழு ‘புதிதாக ராஜகோபுரம் கட்ட அனுமதியில்லை’ என்று மறுத்துள்ளது. 10.6.19 அன்று இந்தக் கமிட்டியைச் சென்னை அறநிலையத்துறை தலைமை அலுவலகத்தில் சந்தித்து திருக்கோபுரத் திருப்பணிக்கு அனுமதி கோரியுள்ளார்கள். ஆதிகால பழைய கோபுரத்தை நேரில் தரிசித்த 10 முதியவர்களையும் உடன் அழைத்துச் சென்று பேசவைத்திருக்கிறார்கள்.எனினும், அனுமதி கிடைக்கவில்லையாம்'' என்ற நாரதரிடம், ``என்ன காரணமாம்'' என்று கேட்டோம்.

``காரணம் வேடிக்கையானது என்கிறார்கள் ஊர்மக்கள். ‘இன்று காலையில், சிதைந்த நிலையில் இருக்கும் திருச்சி வெள்ளறை ஆலய ராஜகோபுரத் திருப்பணிக்கு அனுமதி மறுத்துள்ளோம். இந்த நிலையில் உங்களுக்கு அனுமதி அளித்தால், அவர்களுக்கும் அனுமதி அளிக்கவேண்டும். எனவே, கோயிலை மட்டும் புனரமைத்துக் கொள்ளுங்கள் என்கிறார்கள்' என ஆதங்கப் படுகிறார்கள் ஊர்மக்கள்.

நாரதர் உலா: சிதைவுபடும் சிவாலயம்...

ஆனால், 30.8.19 அன்று வெளியான நாளிதழ்களில் ‘அறநிலையத்துறை, திருச்சி வெள்ளறை ஆலய ராஜகோபுரத் திருப்பணிக்கு அனுமதி அளித்துச் சிறப்பு ஹோமமும் செய்துள்ளது’ என்று செய்தி வெளியாகியுள்ளதாம். ஆக, ‘அந்தக் கோயிலுக்கு அனுமதி வழங்கும்போது, எங்கள் ஊர் கோயிலுக்கு மட்டும் அனுமதி மறுப்பதேன்’ என்று இந்த ஊர் மக்கள் கேட்கிறார்கள்'' என்று கூறிமுடித்த நாரதர், அடுத்து தீபாம்பாள்புரம் பிரச்னையையும் பகிர்ந்துகொண்டார்.

``அம்மாபேட்டை அருகேயுள்ளது தீபாம்பாள் புரம். இங்குள்ள வன்மீகநாதர் சிவாலயம் சோழர்கள் காலத்தையது. பிற்காலத்தில் மராட்டிய மன்னர் வெங்கோஜியின் மனைவி தீபாம்பாயி இந்த ஆலயத்தைப் புனரமைப்பு செய்ததால், இந்த ஊர் தீபாம்பாள்புரமானது.

தற்போது, பூமியிலிருந்து எண்ணெய் எடுக்கும் மத்திய அரசு நிறுவனத்தின் அகழ்வுப்பணிகளால் ஏற்படும் அதிர்வின் காரணமாக இந்த ஆலயக் கட்டடம் கடும் சிதைவுக்குள்ளாகி வருகிறது என்று ஆதங்கப்படுகிறார்கள் உள்ளூர் பக்தர்கள்.

எண்ணற்ற சந்நிதிகளும் கீர்த்தியும் கொண்ட இந்த ஆலயம் தற்போது சிதிலமடைந்து வருகிறது. ராஜகோபுரத்துக்குமுன் இருந்த 16 கால் மண்டபம் முற்றிலும் இடிந்துவிட்டது. பிராகார மண்டபமும் மெள்ள மெள்ள சிதிலமுற்று வருகிறது. விநாயகர் சந்நிதி தொடங்கி மகாலட்சுமி சந்நிதி வரை ஆலயம் ஓர் அடி ஆழம் அளவுக்கு தரைதாழ்ந்து விட்டது. வடக்கே நெல்பத்தாயம், நடராஜர் சந்நிதி ஆகியவற்றின் நிலையும் அப்படியே! கோயிலுக்கு வடக்குப் பக்கத்தில் எண்ணெய் நிறுவனம் செயல்படுவதால், அங்கேதான் பாதிப்புகள் அதிகம் என்கிறார்கள். மொத்தத்தில், கருங்கல் கட்டுமானமான சுவாமி மற்றும் அம்பாள் சந்நிதிகள் தவிர, ஆலயத்தின் மற்ற பாகங்கள் சிதைந்துபோயுள்ளன என்றே சொல்லலாம்.

நாரதர் உலா: சிதைவுபடும் சிவாலயம்...

மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் மத்திய மற்றும் மாநில அரசுகள் எவ்வித நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லையாம். அறநிலையத்துறை தரப்பில், `இங்கு மண் அமைப்பு சரியாக இல்லாததால் இப்படி இடிபாடுகள் உண்டாகின்றன' என்கிறார்களாம். எண்ணெய் நிறுவனத்தின் தரப்பிலோ, ‘இங்கு எந்த பாதிப்பும் இல்லை’ என்று சொல்கிறார்களாம்.

`இங்கு மட்டுமல்ல, அருகிலிருக்கும் பூலோக நாதர் கோயில் மற்றும் அம்மாப்பேட்டை அருணாசலேஸ்வரர் கோயிலிலும் விரிசல்கள் உண்டாகியுள்ளன' என்கிறார்கள் இப்பகுதி மக்கள்'' என்ற நாரதர், ``இந்தப் பிரச்னைகளுக்கெல்லாம் நல்லதொரு தீர்வு கிடைக்க அந்த ஆண்டவன்தான் அருளவேண்டும். திக்கற்றவர்களுக்குத் தெய்வம்தானே துணை...'' என்றபடியே விடைபெற்றுக்கொண்டார்.

- உலா தொடரும்...