
2022-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என நான்கு கட்சிகள் மோதுகின்றன.

கர்நாடகா மாநிலம், மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் சிக்கண்ணா. இவர், தனது இளம்வயதில் அதே பகுதியைச் சேர்ந்த ஜெயம்மா என்பவரைக் காதலித்திருக்கிறார். ஆனால் ஜெயம்மாவின் பெற்றோர், அவரை வேறொருவருக்குத் திருமணம் செய்து கொடுத்துவிட்டார்கள். ஜெயம்மாவின் 30-வது வயதில் அவரின் கணவர் பிரிந்து சென்றுவிட்டார். ஜெயம்மாவின் மீதான காதலால், திருமணமே செய்துகொள்ளாமல் இருந்த சிக்கண்ணா, அவரின் கணவர் பிரிந்து சென்ற பின்னர், “இப்போதாவது நாம் திருமணம் செய்துகொள்ளலாமே?” என்று ஜெயம்மாவிடம் கேட்டிருக்கிறார். ஆனால், ஊர் மக்களின் பேச்சுக்கு பயந்து திருமணத்துக்கு மறுத்துவிட்டார் ஜெயம்மா. அதன் பிறகும் சிக்கண்ணா திருமணம் செய்துகொள்ளவில்லை. இப்போது சிக்கண்ணாவுக்கு வயது 65. ஜெயம்மாவுக்கு வயது 55. இப்போதும் சிக்கண்ணா தனது காதலில் உறுதியாக இருக்கவே... இருவரின் உறவினர்களும் கூடிப் பேசி, கடந்த வாரம் சிக்கண்ணாவுக்கும் ஜெயம்மாவுக்கும் திருமணம் செய்துவைத்திருக்கிறார்கள். கிட்டத்தட்ட 35 வருடங்களுக்கும் மேலாகக் காதலுக்காகக் காத்திருந்து, இந்த வயதில் காதலியைக் கரம் பிடித்திருக்கும் சிக்கண்ணாவும், அவரின் மனைவி ஜெயம்மாவும்தான் சமூக வலைதளங்களில் தற்போது டிரெண்டிங் ஜோடிகள்!


தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் 42 வயதான சிவலால். மூன்றடி மட்டுமே உயரம்கொண்ட சிவலாலுக்கு, மற்றவர்களைப்போலச் சாலையில் வாகனம் ஓட்ட வேண்டும் என்று ஆசை. சில மாதங்களுக்கு முன்னர், அமெரிக்காவில் மூன்றடி உயரம்கொண்ட ஒருவர் கார் ஓட்டும் காணொலியைப் பார்த்த இவர், எப்படியாவது கார் ஓட்டக் கற்றுக்கொள்ள வேண்டும் என்று வைராக்கியமாக முடிவெடுத்தார். தனியார் கார் பயிற்சிப் பள்ளியின் உதவியோடு மன உறுதியுடன் பயிற்சி மேற்கொண்டவர் சில மாதங்களிலேயே கார் ஓட்டக் கற்றுக்கொண்டு, லைசென்ஸ் டெஸ்ட்டிலும் பாஸாகிவிட்டார். இதையடுத்து, நாட்டிலேயே டிரைவிங் லைசன்ஸ் வாங்கிய உயரம் குறைந்த நபர் என்ற வகையில் லிம்காவின் சாதனையாளர் பட்டியலிலும் இடம்பெற்றிருக்கிறார் சிவலால். ஹைதராபாத்தைச் சேர்ந்த கார் வடிவமைப்பாளர் ஒருவர், சிவலாலுக்கு ஏற்றபடி காரில் சில மாற்றங்களைச் செய்துகொடுத்திருப்பதை அடுத்து சாலைகளில் சந்தோஷமாக கார் ஓட்டிவருகிறார் சிவலால்!


நாடே அதிரும்படியான சம்பவம் நாகாலாந்து மாநிலத்தில் நடந்திருக்கிறது. நாகாலாந்தின் ஒடிங் கிராமத்தில், பிரிவினைவாதக் கிளர்ச்சியாளர்கள் ஊடுருவியிருப்பதாக, பாதுகாப்புப் படையினருக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. இதையடுத்து, டிசம்பர் 4-ம் தேதி இரவு டிரு - ஒடிங் சாலையில் சென்றுகொண்டிருந்த வாகனத்தில் கிளர்ச்சியாளர்கள் இருப்பதாகச் சந்தேகித்த பாதுகாப்புப் படையினர், அந்த வாகனத்தின்மீது சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் சம்பவ இடத்திலேயே எட்டுப் பேர் பலியானார்கள். அதன் பிறகே, கொல்லப்பட்டவர்கள் நிலக்கரிச் சுரங்கத்தில் பணிபுரிந்த அப்பாவித் தொழிலாளர்கள் என்று தெரியவந்திருக்கிறது. பாதுகாப்புப் படையினரின் இந்த அலட்சியத்தால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், பாதுகாப்புப் படையினர்மீது தாக்குதல் நடத்த, அப்போது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் மேலும் ஐந்து பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர். 11 பேர் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிவருகின்றனர். இந்த மோதலில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்தவர் ஒருவரும் உயிரிழந்திருக்கிறார். இந்தச் சம்பவம் நாடு முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், இதற்கு வருத்தம் தெரிவித்த ராணுவம், இது குறித்து நீதி விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது. உயிரிழந்த மக்களின் குடும்பங்களுக்கு 5 லட்சம் ரூபாயை இழப்பீடாக அறிவித்திருக்கிறது நாகாலாந்து அரசு. பாதுகாப்புப் படையினர்மீது வழக்கு பதிவுசெய்த நாகாலாந்து காவல்துறை, `பயங்கரவாதிகளை அடையாளம் காண்பதில் ஏற்பட்ட தவறு காரணமாகத்தான் இந்தத் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதா?’ என்ற கோணத்தில் விசாரணையைத் தொடங்கியிருக்கிறது. ``வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக இது போன்ற சம்பவங்கள் நடப்பது சட்டம், ஒழுங்கு சீர்குலைந்திருப்பதையே காட்டுகிறது. தேசியப் பாதுகாப்பையும் இந்தச் சம்பவம் கேள்விக்குறியாக்கியிருக்கிறது’’ என்று மோடி அரசைக் குற்றம்சாட்டியிருக்கிறது காங்கிரஸ்.

2022-ம் ஆண்டு தொடக்கத்தில் நடைபெறவிருக்கும் உத்தரப்பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க., சமாஜ்வாடி, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் என நான்கு கட்சிகள் மோதுகின்றன. இந்த நிலையில், அகிலேஷ் யாதவின் பிரசார வாகனத்தில், வல்லபாய் படேல், அம்பேத்கர் உள்ளிட்ட தலைவர்களின் புகைப்படங்களோடு, முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாமின் புகைப்படமும் இடம்பெற்றிருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. ``சமாஜ்வாடியின் இஸ்லாமிய முகமான அஸாம் கான் சிறையிலிருப்பதால், இஸ்லாமிய வாக்குகளைக் கவரவே அப்துல் கலாமைச் சம்பந்தமேயில்லாமல் பயன்படுத்திக்கொள்கிறார்’’ என்று அகிலேஷ் மீது குற்றம்சாட்டுகின்றன எதிர்க்கட்சிகள். ``அகிலேஷின் தந்தை முலாயம் சிங் யாதவ்தான், 2002-ல் முதன்முதலாக அப்துல் கலாமின் பெயரை ஜனாதிபதி பதவிக்குப் பரிந்துரைத்தார். அதனால்தான் அவரது படத்தைப் பயன்படுத்துகிறோம்’’ என்று சமாளிக்கிறது சமாஜ்வாடி.