
கோவாவில் பிப்ரவரி 14-ம் தேதி அன்று, சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது.
1948-ம் ஆண்டு நாதுராம் கோட்சே, மகாத்மா காந்தியைக் கொன்றதற்கான காரணத்தை விளக்கி, சிறப்பு நீதிமன்றத்தில் அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்தார். அந்த அறிக்கையின் அடிப்படையில், `Why I Killed Gandhi’ என்ற தலைப்பில் படம் ஒன்றை இயக்கியிருக்கிறார் இயக்குநர் அசோக் தியாகி. கோட்சேவாக, அமோல் கோல்ஹே நடித்திருக்கும் இப்படம், ஜனவரி 30-ம் தேதி வெளியாகவிருக்கிறது. ``தேசத் தந்தையான மகாத்மா காந்தியைக் கொலை செய்தவரை ஹீரோவாகச் சித்திரிப்பதை ஏற்க முடியாது. இந்தப் படத்தைத் தடைசெய்ய வேண்டும்’’ என நாடு முழுவதும் எதிர்ப்புகள் வலுக்கத் தொடங்கியிருக்கின்றன. ``நாதுராம் கோட்சேவை ஹீரோவாகச் சித்திரித்துள்ள இப்படம் வெளியானால், நாட்டு மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்குவதுடன், பல பிரச்னைகளுக்கும் வழிவகுக்கும். எனவே, இந்தப் படத்தைத் தடைசெய்ய வேண்டும்’’ என `அனைத்திந்திய திரைத்துறை தொழிலாளர்கள் சங்கம்’ பிரதமர் மோடிக்குக் கடிதம் எழுதியிருக்கிறது!

பீகார் மாநிலம், ஹரடியா கிராமத்தில் பா.ஜ.க தலைவரும், அம்மாநில அமைச்சருமான நாராயண் பிரசாத்துக்குச் சொந்தமான இடத்தில், சிறுவர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். இதைக் கண்டு ஆத்திரமடைந்த அமைச்சரின் மகன் பப்லு குமார், சிறுவர்களைத் தன் நண்பர்களோடு இணைந்து தாக்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் சிறுவர்களை அங்கிருந்து விரட்ட, துப்பாக்கியை எடுத்து வானத்தை நோக்கிச் சுட்டதாகவும் சொல்லப்படுகிறது. இந்தச் சம்பவமறிந்து அங்கே வந்த கிராம மக்கள், அமைச்சர் மகனையும், அவருடன் வந்தவர்களையும் சரமாரியாகத் தாக்கியிருக்கின்றனர். அமைச்சரின் காரையும் சேதப்படுத்தியிருக்கின்றனர். இது குறித்து நாராயண் பிரசாத், ``எனது நிலத்தைக் கிராம மக்கள் அபகரிக்க முயன்றனர். அதைத் தடுக்கவே என் மகன் உரிமம் பெற்ற துப்பாக்கியுடன் அங்கு சென்றார். என் மகனை கிராம மக்கள் தாக்கியிருக்கின்றனர். வாகனத்தையும் சேதப்படுத்திவிட்டனர்’’ என்றிருக்கிறார். எதிர்க்கட்சியான ராஷ்டிரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த சக்தி சிங், ``கிரிக்கெட் விளையாடும் குழந்தைகளைத் தாக்க அமைச்சரின் மகனுக்கு யார் உரிமை கொடுத்தது? சட்டத்தை இயற்றுபவர்களே சட்டத்தை மீறுகின்றனர்’’ என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்!

கோவாவில் பிப்ரவரி 14-ம் தேதி அன்று, சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவிருக்கிறது. அங்கு 40 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட காங்கிரஸ் கட்சி, தனது வேட்பாளர்களிடம் ``தேர்தலில் வெற்றிபெற்றால், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு வேறெந்தக் கட்சிக்கும் தாவிச் செல்ல மாட்டோம்’’ என்று மகாலெட்சுமி கோயிலிலும், தேவாலயம் ஒன்றிலும் வைத்து சத்தியம் வாங்கியிருக்கிறது. கடந்த தேர்தலில் 17 தொகுதிகளில் வெற்றிபெற்று, அதிக இடங்களைக் கைப்பற்றிய கட்சியாக இருந்த காங்கிரஸிலிருந்து, கடந்த ஐந்து ஆண்டுகளில் 15 எம்.எல்.ஏ-க்கள் வேறு கட்சிகளுக்குத் தாவிவிட்டனர். இந்த முறை அப்படி எதுவும் நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்காகவே வேட்பாளர்களிடம் சத்தியம் பெற்றிருக்கிறது அந்தக் கட்சி!