அரசியல்
Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

மம்தா
பிரீமியம் ஸ்டோரி
News
மம்தா

NH பிட்ஸ்

விவசாயிகளால் யூரியாவுக்கு அடுத்தபடியாக அதிக அளவில் பயிர்களுக்குப் பயன்படுத்தப்படுவது, டி.ஏ.பி எனப்படும் டை அமோனியம் பாஸ்பேட் உரம். 50 கிலோ எடை கொண்ட டி.ஏ.பி உர மூட்டை ரூ.1,200-க்கு விற்கப்பட்டுவந்தது. அது, தற்போது ரூ.1,900- ஆக திடீரென்று உயர்த்தப்பட்டுள்ளது. அதேபோல காம்ப்ளக்ஸ் 15:15 உரம் ரூ.1,150-லிருந்து ரூ.1,650 ஆகவும், காம்ப்ளக்ஸ் 20:20 உரம் ரூ.1,000-லிருந்து ரூ.1,350 ஆகவும் திடீரென உயர்த்தப்பட்டுள்ளன. இதனால், விவசாயத்துக்கான செலவு அதிகரிக்கும் என்று விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விவசாயிகள் போராடிவரும் நிலையில், திடீரென உரத்தின் விலை உயர்த்தப்பட்டிருப்பது விவசாயிகளை அதிர்ச்சியடையச் செய்திருக்கிறது. டெல்லியில் போராடிக்கொண்டிருக்கும் விவசாயிகள் சங்கத்தினர், இது குறித்தும் தங்கள் எதிர்ப்பைக் காட்ட முடிவுசெய்திருக்கிறார்கள். #பட்ட காலிலேயே...

மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலின் 4-ம் கட்ட வாக்குப்பதிவின்போது, கூச்பிஹார் மாவட்டத்தின் சிதால்குச்சி தொகுதியில் வன்முறைச் சம்பவங்கள் நிகழ்ந்தன. அப்போது, சி.ஆர்.பி.எஃப் படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்தனர். “தேர்தலைச் சீர்குலைக்கும் நோக்கில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் உத்தரவின்பேரில்தான் இது நடந்துள்ளது” என்று மம்தாவும், “பாதுகாப்புப் படையினர்மீது, தனது திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினரை ஏவி, தாக்குதல் நடத்த மம்தா தூண்டினார்” என்று அமித் ஷாவும் குற்றம்சாட்டிக்கொண்டிருக்கின்றனர். பிரசாரத்தின்போதே “வாக்குப்பதிவு நாளன்று, மக்கள் பல குழுக்களாகப் பிரிந்து, ஒரு குழுவினர் பாதுகாப்புப் படையினரை முற்றுகையிட வேண்டும்’ என்று கூச்பிஹாரில் மம்தா பானர்ஜி பேசியிருந்ததையும் பா.ஜ.க-வினர் குறிப்பிடுகிறார்கள். இன்னும் நான்கு கட்டத் தேர்தல் பாக்கியுள்ள சூழலில், அச்சத்துடன் இருக்கிறார்கள் மேற்கு வங்க மக்கள். #வன்முறை தீர்வல்ல...

ஜம்மு - காஷ்மீரில் நடைபெற்ற என்கவுன்ட்டர் சம்பவங்களில், 16 வயதுச் சிறுவன் உட்பட ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். ஜம்மு - காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்ட பிறகு, அங்கு பயங்கரவாத நடவடிக்கைகள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. இந்தநிலையில், சோபியான் மற்றும் அனந்த்நாக் மாவட்டங்களில், ஏப்ரல் 10-ம் தேதி முதல் பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பதுங்கியிருந்த பயங்கரவாதிகளுக்கும், பாதுகாப்புப் படையினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அதில், ஐந்து பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். அவர்கள் லஷ்கர்-இ-தொய்பா மற்றும் அல்ஃபதர் என்ற பயங்கரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர்களில் 16 வயதுடைய ஒரு சிறுவனும் அடக்கம். பயங்கரவாத இயக்கத்தில் புதிதாக இணைந்த அந்தச் சிறுவனை சரணடைய வைப்பதற்குப் பல முயற்சிகளை மேற்கொண்டதாகவும், உடனிருந்த பயங்கரவாதிகள் அவனைச் சரணடைய அனுமதிக்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். #வேண்டாம் தீவிரவாதம்!

உத்தரப்பிரதேச மாநிலம், உன்னாவ் தொகுதியின் பா.ஜ.க எம்.எல்.ஏ-வாக இருந்தவர் குல்தீப் செங்கார். இவர், அந்தத் தொகுதியைச் சேர்ந்த ஒரு சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சிறைத் தண்டனை பெற்றார். இந்தச் சம்பவத்தால், பா.ஜ.க-விலிருந்து அவர் விலக்கப்பட்டார். இந்தநிலையில் அதே உன்னாவில், ஏப்ரல் 26 அன்று நடைபெறவிருக்கும் மாவட்டப் பஞ்சாயத்துத் தேர்தலில் போட்டியிட, குல்தீப் செங்காரின் மனைவி சங்கீதா செங்காருக்கு பா.ஜ.க சீட் வழங்க முடிவு செய்தது. சங்கீதா, 2016-ம் ஆண்டு மாவட்டப் பஞ்சாயத்துத் தேர்தலில் வெற்றிபெற்றவர் என்பதால், இந்தமுறையும் சீட் வழங்க பா.ஜ.க-வின் மாநில அளவிலான கமிட்டி ஒப்புதல் வழங்கியது. செய்திகள் கசிந்ததில் ஆங்காங்கே எதிர்ப்புகள் கிளம்ப, குற்றவாளியின் மனைவிக்கு சீட் வழங்கினால், எதிர்க்கட்சியினரின் கடும் விமர்சனத்துக்கு ஆளாக நேரிடும் என்ற அச்சத்தில், பா.ஜ.க தனது முடிவை மாற்றிவிட்டது. #விடாது குற்றம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில், சி.ஆர்.பி.எஃப் உள்ளிட்ட பாதுகாப்புப் படைகளைச் சேர்ந்த 24 பேர் கொல்லப்பட்ட சம்பவத்துக்குப் பிறகு, “மாவோயிஸ்ட்களுக்குத் தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். அதைத் தொடர்ந்து, சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) கட்சியின் கிழக்கு பிராந்தியப் பிரிவின் செய்தித் தொடர்பாளர் சங்கெட் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “போர் போன்ற சூழலுக்கு மக்களைத் தள்ளுகிறார்கள். மண்ணின் மைந்தர்களைக் குறிவைத்துத் தாக்குகிறார்கள்” என்று மத்திய பா.ஜ.க அரசை அவர் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், பாதுகாப்புப் படையினரால் மாவோயிஸ்ட்கள் கொல்லப்படுவதைக் கண்டித்து ஏப்ரல் 26-ம் தேதி, பாரத் பந்த் நடத்த சி.பி.ஐ (மாவோயிஸ்ட்) அழைப்பு விடுத்துள்ளது. #அமைதி திரும்பட்டும்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்
நேஷனல் ஹாட் பிட்ஸ்
நேஷனல் ஹாட் பிட்ஸ்
நேஷனல் ஹாட் பிட்ஸ்
நேஷனல் ஹாட் பிட்ஸ்