
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் 1986-ம் ஆண்டு ரகுநந்தன் சிங் என்பவருக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது.
ஆமாம், இங்கே யார் முதல்வர்?
ஆம் ஆத்மியின் பகவந்த் சிங், பஞ்சாப் தேர்தல் பரப்புரையில் `300 யூனிட் இலவச மின்சாரம்’ என்று பிரசாரம் செய்தது செம ஹிட். ஆனால், அதுவே இப்போது ஆம் ஆத்மிக்கு சிக்கலாகியிருக்கிறது. முதல்வர் பகவந்த் சிங், மின்துறை அமைச்சர் ஹர்பஜன் சிங் இருவரும் இல்லாமல், அரவிந்த் கெஜ்ரிவால் மின்துறை அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தியிருப்பது பஞ்சாப்பில் பற்றிக்கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் இந்த விவகாரத்தைப் பெரிய அளவில் சர்ச்சையாக்கி வருகிறார்கள். காங்கிரஸின் சித்து, `டெல்லி தனது ரிமோட் கன்ட்ரோல் ஆட்சியை வெளிப்படுத்தியுள்ளது’ என்கிறார். முன்னாள் முதல்வர் அமரீந்தர் சிங், ``அச்சப்பட்டது நடந்துவிட்டது. பகவந்த் ஒரு ரப்பர் ஸ்டாம்ப்தான்!” என்றிருக்கிறார். எனினும், ஆம் ஆத்மியின் லால்ஜித் சிங் புல்லர் ``கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் என்ற முறையில், அரசு அதிகாரிகளைச் சந்தித்ததில் தவறில்லை. இதில் கண்டிக்க எதுவும் இல்லை” என்று பதில் கூறியுள்ளார்!

இப்படியும் ஒரு பரோல் வாழ்க்கையா?!
உத்தரப்பிரதேச மாநிலம், ஹத்ராஸ் மாவட்டத்தில் 1986-ம் ஆண்டு ரகுநந்தன் சிங் என்பவருக்கு, பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டது. இந்த வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் ரகுநந்தன் சிங் மேல்முறையீடு செய்து, 1989-ல் பரோலில் வெளிவந்தார். வந்தவர், தனது சொத்துகளை விற்றுவிட்டுத் தலைமறைவானார். அவரைக் காவல்துறை பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டிருந்தது. அவர் இறந்துவிட்டதாகவே கிராம மக்கள் கருதினர். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, குடும்பத்தோடு வாழ்ந்துவந்திருக்கிறார். 33 ஆண்டுகளுக்குப் பின்னர் அவரைக் கைதுசெய்திருக்கிறது காவல்துறை. 56 வயது ரகுநந்தனின் எதிர்காலம் என்னவென்பது நீதிமன்றத்தின் கையிலிருக்கிறது!
மம்தாவுடன் முரண்பட்ட மஹுவா மொய்த்ரா!
மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டத்தில் 14 வயது பள்ளிச் சிறுமி ஒருவர் கடந்த ஏப்ரல் 4-ம் தேதி இரவு, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்துத் தலைவர் மகன் பிறந்தநாள் பார்ட்டியில், பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகவும், மறுநாள் அவர் உடல்நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாகவும், அச்சிறுமியின் தந்தை புகாரளித்திருந்தார். சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டிருக்கலாம் என்று செய்திகள் வெளியாகின. ``சிறுமி வன்கொடுமை செய்யப்பட்டாரா, கர்ப்பமாக இருந்தாரா என ஊடகம் விசாரித்தனவா? இது காதல் விவகாரம் என்று நான் கேள்விப்பட்டேன். ஓர் ஆணும் பெண்ணும் காதலிப்பதைத் தடுப்பது எனது வேலையில்லை” என்ற மம்தா பானர்ஜியின் கருத்து பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் எம்.பி மஹுவா மொய்த்ரா, ``குற்றம்சாட்டப்படுகிறவர் மேஜர். அவர் மைனர் ஒருவருடன் உடலுறவு வைத்திருந்தால், அது சட்டப்படி பாலியல் வன்கொடுமையே. அதன்படி அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படும். குற்றவாளிக்கு தண்டனை கிடைக்க, கட்சி நடவடிக்கை எடுக்கும்” என்றிருக்கிறார். கட்சியின் தலைவர் மம்தா பானர்ஜியின் கருத்துக்கு முரணான கருத்தை மஹுவா மொய்த்ரா தெரிவித்திருப்பது, இந்த விவகாரத்தில் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது!