
அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஆள் சேர்ப்பது ராணுவத்தை பலவீனப்படுத்தும். பிரதமர் பதவி நிரந்தரமல்ல; என்றாவது ஒருநாள் அந்தப் பதவியிலிருந்து விலகவேண்டியிருக்கும் என்பதை மோடி புரிந்துகொள்ள வேண்டும்
`கலகத் தலைவன்’ சத்ய பால் மாலிக்!
பெரும்பாலான ஆளுநர்கள், மாநில முதல்வர்களுடன் மல்லுக்கட்டிக்கொண்டிருக்க, தனி ஓர் ஆளுநர் மட்டும் மத்திய அரசுக்குச் சவால்விட்டுக்கொண்டிருக்கிறார். மேகாலயா ஆளுநர் சத்ய பால் மாலிக்தான் அவர். புதிய வேளாண் சட்டங்கள், அக்னிபாத் திட்டம், கோவா பா.ஜ.க அரசின் ஊழல்கள் எனப் பல்வேறு விவகாரங்களில் பா.ஜ.க அரசுக்கும், பிரதமர் மோடிக்கும் எதிராக நின்றவர் மாலிக். தற்போது மீண்டும் மோடியைச் சீண்டியிருக்கிறார். ராஜஸ்தான் பல்கலைக்கழக நிகழ்ச்சி ஒன்றில் பேசியவர்,

``அக்னிபாத் திட்டத்தின் மூலம் ஆள் சேர்ப்பது ராணுவத்தை பலவீனப்படுத்தும். பிரதமர் பதவி நிரந்தரமல்ல; என்றாவது ஒருநாள் அந்தப் பதவியிலிருந்து விலகவேண்டியிருக்கும் என்பதை மோடி புரிந்துகொள்ள வேண்டும். இனி நாட்டில் பல போராட்டங்கள் வெடிக்கும். விவசாயிகள் போராட்டம் விரைவில் தொடங்கும். இளைஞர்கள் இயக்கமும் தொடங்கும்’’ என்று பேசி மீண்டும் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்.

`தத்தா’வா... `குத்தா’வா..?
மேற்கு வங்க மாநிலம், பங்குரா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீகந்தி குமார் தத்தா. ரேஷன் கார்டில் தவறாக அச்சிடப்பட்ட தனது பெயரை மாற்றுவதற்காக இரண்டு முறை விண்ணப்பித்திருக்கிறார் ஸ்ரீகந்தி. அந்த இரண்டு முறையும் தவறு திருத்தப்படாமலேயே இருந்திருக்கிறது. இதையடுத்து, மூன்றாவது முறை விண்ணப்பித்தபோது, `ஸ்ரீகந்தி குமார் தத்தா’ என்பதற்கு பதிலாக, `ஸ்ரீகந்தி குமார் குத்தா’ என மாற்றியிருக்கின்றனர். இந்தியில் `குத்தா’ என்ற சொல்லுக்கு `நாய்’ என்று அர்த்தம். இதனால் கோபமடைந்த ஸ்ரீகந்தி, அந்தப் பகுதியின் வட்டார வளர்ச்சித்துறை அலுவலர் காரில் வந்தபோது, அவரை மறித்து வித்தியாசமான வகையில் முறையிட்டார். இது தொடர்பான புகார் மனுவை அந்த அதிகாரியிடம் கொடுத்து, சுமார் 45 நொடிகள் நாய்போலக் குரைத்து கவனம் ஈர்த்தார். முதலில் ஒன்றும் புரியாமல் விழித்த அந்த அதிகாரி, புகார் மனுவைப் பார்த்த பிறகு, சரிசெய்து தருவதாகக் கூறினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகப் பரவிவருகிறது. ``மூன்று முறை தவறைத் திருத்த விண்ணப்பித்து வெறுத்துவிட்டேன். அதனால்தான் நாய்போலக் குரைத்து கோரிக்கைவைத்தேன். என்னைப்போல எளிய மக்கள் பிழைப்பை விட்டுவிட்டு வந்து எத்தனை முறைதான் அலைவது?’’ என்று கேள்வியெழுப்பியிருக்கிறார் ஸ்ரீகந்தி.