அலசல்
Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

உத்தவ் தாக்கரே
பிரீமியம் ஸ்டோரி
News
உத்தவ் தாக்கரே

இந்தியாவிலேயே கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. மே மாதத்தில் மட்டும் கொரோனாவால் 25,000-க்கும் அதிகமானோர் அங்கு உயிரிழந்திருக்கிறார்கள்

நேஷனல் ஹாட் பிட்ஸ்

அஸ்ஸாம் மாநிலம் ஹோஜாய் மாவட்ட அரசு மருத்துவமனையில், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நபர் ஒருவர் கடந்த வாரம் உயிரிழந்தார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபரின் உறவினர்கள் அங்கிருந்த மருத்துவர் சியுஜ் குமார் சேனாதிபதியைக் கடுமையாகத் தாக்கினார்கள். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, இந்திய மருத்துவக் கழகம் வெளியிட்ட அறிக்கையில், ‘‘தங்களது உயிரையும் பொருட்படுத்தாது, உறவினர்களை மறந்து, இரவு பகல் பாராமல் உழைத்துவருகிற மருத்துவர்கள்மீது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்படும் தாக்குதல்கள் வேதனையளிக்கிறது. அஸ்ஸாம் மருத்துவரைத் தாக்கிய சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்மீது மத்திய, மாநில அரசுகள் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்திருக்கிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக 20-க்கும் மேற்பட்டோரைக் கைதுசெய்து விசாரணை நடத்திவருகிறது அஸ்ஸாம் காவல்துறை. #காக்கும் மருத்துவர்களைத் தாக்கலாமா?

உத்தவ் தாக்கரே
உத்தவ் தாக்கரே

இந்தியாவிலேயே கொரோனாவின் கோரத் தாண்டவத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலம் மகாராஷ்டிரா. மே மாதத்தில் மட்டும் கொரோனாவால் 25,000-க்கும் அதிகமானோர் அங்கு உயிரிழந்திருக்கிறார்கள். முழு ஊரடங்கால் மகாராஷ்டிராவில் கொரோனா படிப்படியாகக் குறைந்துவரும் வேளையில், ‘‘கொரோனாவை முற்றிலும் ஒழிக்கும் கிராமங்களுக்குப் பரிசுகள் வழங்கப்படும். ஒவ்வொரு வருவாய் மண்டலத்திலும் மூன்று கிராமங்கள் இதற்காகத் தேர்வு செய்யப்படும். முதல் பரிசாக ரூ.50 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.25 லட்சமும், மூன்றாவது பரிசாக ரூ.15 லட்சமும் வழங்கப்படும்’’ என்று ஓர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் அந்த மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே. மகாராஷ்டிராவில் மொத்தம் ஆறு வருவாய் மண்டலங்கள் இருக்கின்றன. `கொரோனா இல்லாத கிராமம்’ என்ற பெயரிலான இந்தத் திட்டத்துக்கு ரூ.5.4 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. #கொரோனாப் பரிசு!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஆட்சிக்கு வருவதற்கு முன்பாகவே மதுக்கடைகளுக்கு எதிராகத் தீவிரப் போராட்டங்களை மேற்கொண்டவர். அவர் ஆட்சிக்கு வந்தவுடன் அறிவிக்கப்பட்ட நவரத்னா திட்டங்களில் மதுவிலக்கும் ஒன்று. இரண்டு ஆண்டுகள் ஆட்சி முடிவடைந்திருக்கும் நிலையில், மே 31-ம் தேதியன்று ‘‘இரண்டு ஆண்டுகளில் நான் கொடுத்த 94.5% வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டேன்’’ என்று மிக நீண்ட பட்டியலை வெளியிட்டுப் பெருமிதம் கொண்டார் ஜெகன். இதற்குப் பலரும் பாராட்டு தெரிவித்து வந்த நிலையில், ஆந்திராவில் `பூரண மது விலக்கு அமலுக்கு வரப்போவதில்லை’ என்ற அறிவிப்பை வெளியிட்டு அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். ``பூரண மதுவிலக்கு என்பதிலிருந்து ‘கட்டுப்பாடுகளுடன் விற்பனை’ என்ற முடிவுக்கு அரசு வந்திருக்கிறது. மது எனும் அரக்கனிடமிருந்து குடும்பங்களைக் காப்பாற்றக் குறிப்பிட்ட கால அளவில் மிக அதிகக் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்படும்’’ என்றும் ஜெகன் தெரிவித்திருக்கிறார், ஆந்திர அரசின் இந்த முடிவுக்குச் சமூகச் செயற்பாட்டாளர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறார்கள். #வீட்டுக்கு நாட்டுக்கு உயிருக்குக் கேடு!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டத்திலுள்ள சிறிய கிராமம் நூர்பூர். அங்கு வசித்துவரும் தலித்கள் அனைவரும் தங்களது வீட்டின் முன்பகுதியில், ‘‘எங்கள் வீடு விற்பனைக்கு’’ என்று எழுதிவைத்துப் பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார்கள். நூர்பூர் கிராமத்தில், 125 தலித் குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 1,000 மக்கள் வசித்துவருகின்றனர். அதே கிராமத்தில் சுமார் 800 இஸ்லாமியக் குடும்பங்களும் வசித்துவருகின்றன. திருமண நிகழ்வுகளின்போது, இஸ்லாமியர்கள் அதிகம் வாழும் பகுதி வழியாகவே ஊர்வலம் செல்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் தலித் மக்கள். இரவில் மட்டுமே நடந்துவந்த திருமண ஊர்வலங்கள், கடந்த ஆறு ஆண்டுகளாகப் பகலிலும் நடைபெற்றுவருகின்றன. கடந்த மே 25-ம் தேதி நடந்த ஒரு திருமண நிகழ்வின்போது, இருதரப்பினருக்குமிடையே பெரும் மோதல் ஏற்பட்டதையடுத்து, நூர்பூர் கிராமத்திலிருக்கும் வீடுகளை விற்றுவிட்டு அங்கிருந்து வெளியேறிவிடலாம் என்ற முடிவுக்கு வந்திருக்கின்றனர் தலித் மக்கள். இந்தச் சம்பவத்தை அறிந்தவுடன் அலிகர் பா.ஜ.க எம்.பி சதீஷ் கௌதமும், பா.ஜ.க எம்.எல்.ஏ அனுப் வால்மீகியும் அங்கு வசிக்கும் தலித் மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்திருக்கின்றனர். #கவலைப்படாதீங்க மக்களே!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஜம்மு காஷ்மீர் பா.ஜ.க தலைவரும் கவுன்சிலருமான ராகேஷ் பண்டிதா, ஜூன் 2-ம் தேதியன்று இரவு, தன் நண்பரின் வீட்டுக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு மறைந்திருந்த மூன்று தீவிரவாதிகள் ராகேஷின் காரில் சரமாரியாகத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த ராகேஷ் பண்டிதா, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். அவருடன் பயணம் செய்த நண்பரின் மகள், பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். ‘`ராகேஷுக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கியிருந்தோம். இந்தச் சம்பவம் நடந்தபோது தனது சொந்த கிராமத்துக்குச் செல்வதால் பாதுகாப்பு தேவையில்லை என்று கூறியிருந்தார் ராகேஷ்’’ என்று ஜம்மு காஷ்மீர் காவல்துறையினர் விளக்கமளித்திருக்கிறார்கள். தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்துக்குக் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். ஜம்மு காஷ்மீரில், கடந்த ஆண்டில் மட்டும் ஐந்து பா.ஜ.க தலைவர்கள், தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டிருக்கிறார்கள். #கண்டனங்கள்!