அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
சந்திரபாபு நாயுடு, ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் விலைவாசி உயர்வு, வரி அதிகரிப்பு என மக்கள் அவதிப் படுகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ‘அண்ணா கேன்டீன்’களை மூடிவிட்டனர்.

குஜராத்தின் `காட்மதர்’!

மும்முனைப் போட்டி நிலவும் குஜராத் தேர்தல் களத்தில், குடியானா தொகுதியில் போட்டியிடும் காந்தல் ஜடேஜா, `என் தாயின் பெயர் போதும் நான் வெற்றிபெற’ என நம்பிக்கையுடன் சொல்கிறார். 1986 வரை சாதாரணப் பெண்மணியாக இருந்து பின்னர், தன் கணவனின் கொலைக்குப் பழிவாங்கி டானாக மாறிய ‘சந்தோக்பென் ஜடேஜா’தான் காந்தலின் தாய். இவர்மீது 14 கொலை வழக்குகள் உட்பட 500 கிரிமினல் வழக்குகள் இருந்ததாகச் சொல்லப்படுகிறது. இவரது வாழ்க்கையில் நடந்த சம்பவங்களைத் தழுவித்தான், 1999-ல் வெளியான பாலிவுட் திரைப்படமான `காட்மதர்’ எடுக்கப்பட்டது. 2011-ம் ஆண்டு சந்தோக்பென் உயிரிழந்துவிட்டாலும், அவருடைய செல்வாக்கு தனக்கு வெற்றி தேடித்தரும் என்று நம்புகிறார் காந்தல். எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்களோ, `காந்தல் மக்களை மிரட்டி வாக்கு சேகரிக்கிறார்’ என்ற குற்றச்சாட்டை முன்வைத்துவருகின்றனர்.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

`நான் ராமன்; சந்திரபாபு ராவணன்!’

ஆந்திராவில், சரிந்துகிடக்கும் `தெலுங்கு தேசம் கட்சி’யின் செல்வாக்கைத் தூக்கிப் பிடிக்க, மக்களைச் சந்திக்கும் வேலைகளில் இறங்கியிருக்கிறார் அந்தக் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடு. ``ஆந்திராவில் விலைவாசி உயர்வு, வரி அதிகரிப்பு என மக்கள் அவதிப் படுகின்றனர். அரசியல் காழ்ப்புணர்ச்சியால் ‘அண்ணா கேன்டீன்’களை மூடிவிட்டனர். ஆனால், தமிழ்நாட்டில் ஆட்சி மாறினாலும் ‘அம்மா உணவகங்கள்’ செயல்படுகின்றன. 2024 சட்டமன்றத் தேர்தலில், மீண்டும் வெற்றிபெற்று முதல்வராவேன். இல்லையென்றால், அரசியலிலிருந்து விலகிவிடுவேன்’’ என்று ஊசிவெடிகளைப் போகிற இடங்களெல்லாம் வீசிச் செல்கிறார் சந்திரபாபு. இதற்கு பதிலளிக்கும்விதமாக, ``கடின உழைப்பு, அர்ப்பணிப்பு மூலம் முதலமைச்சரானவர்களை `என்.டி.ஆர்.’, `எம்.ஜி.ஆர்’ என்பார்கள். துரோகம் செய்து ஆட்சிக்கு வருபவர்களை `சந்திரபாபு’ என்பார்கள். நான் என்.டி.ஆர், எம்.ஜி.ஆர்-போல ஆட்சிக்கு வந்தவன். சந்திரபாபு, தனது சொந்த மாமா ராமாராவுக்கு துரோகம் செய்து ஆட்சிக்கு வந்தவர். இதனால்தான் மக்கள் என்னை `ராமன்’ என்றும், சந்திரபாபுவை `ராவணன்’ என்றும் அழைக்கின்றனர்’’ என்று பதிலடி கொடுத்திருக்கிறார் ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

பா.ஜ.க Vs பா.ஜ.க!

கர்நாடகா - மகாராஷ்டிரா எல்லையிலுள்ள பெல்காம் பகுதியிலுள்ள பெரும்பாலான மக்கள் மராத்தி மொழி பேசுபவர்கள். 1956-ம் ஆண்டு மாநில மறுசீரமைப்புச் சட்டத்தின்கீழ் இந்தப் பகுதி கர்நாடகாவுடன் இணைக்கப்பட்டது. அப்போதிருந்தே, `பெல்காமை ஒட்டியுள்ள சில கிராமங்களை மகாராஷ்டிராவுடன் இணைக்க வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. அதேபோல, `மகாராஷ்டிராவிலுள்ள சோலாப்பூர் உள்ளிட்ட கன்னடம் பேசும் மக்கள் அதிகமாக வாழும் கிராமங்களைக் கர்நாடகாவுடன் சேர்க்க வேண்டும்’ என்ற கோரிக்கையும் இருந்துவருகிறது. தற்போது இந்த எல்லை விவகாரம் சூடுபிடிக்க, இரண்டு மாநிலங்களிலும் ஆட்சியிலிருக்கும் பா.ஜ.க தலைவர்களும் காரசாரமாக மோதிக்கொள்கிறார்கள். மகாராஷ்டிராவின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், ``மகாராஷ்டிராவின் எந்தக் கிராமமும் கர்நாடகாவுடன் இணைக்கப்படாது. அந்தக் கேள்விக்கே இங்கு இடமில்லை’’ என்று முஷ்டி முறுக்குகிறார். இதற்கு, ``பட்னாவிஸின் பேச்சு ஆத்திரமூட்டுகிறது. அவரது கனவு ஒருபோதும் பலிக்காது’’ என்று கடுமை காட்டியிருக்கிறார் கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை. பிரச்னையை உச்ச நீதிமன்றத்துக்குக் கொண்டு சென்று முடிவை எட்ட இரு மாநில அரசுகளும் தீவிரம் காட்டிவருகின்றன.