Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நேஷனல் ஹாட் பிட்ஸ்

தீப் சித்து... உண்மையிலேயே யாருப்பா நீ?

மகாராஷ்டிரா மாநிலம், நாக்பூரில் யவத்மால் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில், ஐந்து வயதுக்கு உட்பட்ட 12 குழந்தைகளுக்கு சொட்டு மருந்துக்கு பதிலாக, கிருமிநாசினி வழங்கப்பட்ட விவகாரம் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அவர்களில் ஒரு குழந்தைக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதால், 12 குழந்தைகளும் யவத்மால் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்கள். இந்தப் பரபரப்பு அடங்குவதற்குள், யவத்மால் அரசு மருத்துவக் கல்லுரி மருத்துவமனையில் நோயாளிகள் இருந்த வார்டுகளுக்குள் இரண்டு நாய்கள் இரவு நேரத்தில் நுழைந்து உலாவந்த வீடியோ காட்சிகள் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. #பீதிய கிளப்புறாங்களே!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டம், கொத்தூர் கிராமத்தின் விவசாய நிலத்தில், அடையாளம் தெரியாத சடலம் ஒன்று இருப்பதாக மக்கள் போலீஸாருக்குத் தகவல் தெரிவித்தார்கள். தகவலறிந்து அங்கு வந்த பெண் எஸ்.ஐ-யான சிரிஷா, சடலத்தை மீட்க நடவடிக்கை மேற்கொண்டார். ஆனால், சடலத்தைத் தூக்க அந்தக் கிராமத்தைச் சேர்ந்த யாரும் முன்வரவில்லை. கடைசியில் ஓரிருவர் மட்டும் உதவிக்கு வர, சடலத்தை ஸ்ட்ரெச்சரில்வைத்து தோளில் சுமந்தபடியே இரண்டு கிலோமீட்டர் தூரம் கொண்டுவந்தார் சிரிஷா. இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிய நிலையில், காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் அவருக்குப் பாராட்டு தெரிவித்துவருகிறார்கள். #சிங்கப்பெண்!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

பீகார் காவல்துறை, சர்ச்சைக்குரிய சுற்றறிக்கை ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில், ‘போராட்டங்கள், தர்ணாவில் ஈடுபடுவது, சாலைகளை மறிப்பது உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபட்டால் அரசாங்க வேலை, துப்பாக்கி உரிமம், பாஸ்போர்ட் போன்றவற்றைப் பெற முடியாது. எந்தவிதமான அரசாங்க ஒப்பந்தம் பெறுவதற்கும் இது தடையாக இருக்கும்’ எனவும் எச்சரித்துள்ளது. இது குறித்து பீகார் டி.ஜி.பி-யான எஸ்.கே.சிங்கால் பிறப்பித்த உத்தரவில், ‘‘வன்முறையாக மாறக்கூடிய ஒரு போராட்டத்தில் யாராவது பங்கேற்றால், காவல்துறையினர் அவரது நடத்தைச் சான்றிதழ் அல்லது எழுத்து சான்றிதழில் இதைக் குறிப்பிடலாம்’’ என்று தெரிவித்துள்ளார். #அடக்குமுறை!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

குடியரசு தினத்தன்று, வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாய சங்கங்கள் நடத்திய டிராக்டர்கள் பேரணியின்போது, செங்கோட்டையில் சீக்கிய மதக்கொடி ஏற்றப்பட்டதற்கு பஞ்சாபி நடிகரும், பாடகருமான தீப் சித்துதான் காரணம் என்று விவசாயச் சங்கங்கள் குற்றம்சாட்டின. போராட்டத்தை திசைதிருப்பி, காலிஸ்தான் இயக்கத்தை அவர் ஆதரித்ததாகவும் குற்றம்சாட்டப்பட்டது. ‘தீப் சித்து பா.ஜ.க ஆள்’ என்று சொன்ன எதிர்க்கட்சிகள், மோடியுடன் சேர்ந்து அவர் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் வெளியிட்டன. இந்தநிலையில், வன்முறை தொடர்பாக விசாரித்துவரும் டெல்லி போலீஸ், ‘தீப் சித்து பற்றி தகவல் அளித்தால் ரூ.1 லட்சம் பரிசு’ என அறிவித்துள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுள்ள ஜக்பீர் சிங், பூட்டா சிங், சுக்தேவ் சிங், மற்றும் இக்பால் சிங் குறித்த தகவல்களை அளிப்போருக்கு ரூ.50,000 பரிசு அளிப்பதாகவும் டெல்லி போலீஸ் அறிவித்திருக்கிறது. # தீப் சித்து... உண்மையிலேயே யாருப்பா நீ?