சமூகம்
அலசல்
Published:Updated:

நேஷனல் ஹாட் பிட்ஸ்

நேஷனல் ஹாட் பிட்ஸ்
பிரீமியம் ஸ்டோரி
News
நேஷனல் ஹாட் பிட்ஸ்

கேரளாவிலிருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் அரபிக் கடலிலிருக்கும் லட்சத்தீவில், புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன.

நேஷனல் ஹாட் பிட்ஸ்

முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுக்கு எதிராக, கர்நாடகா பா.ஜ.க-வுக்குள் கலகம் வெடித்துள்ளது. கர்நாடகாவில் கடந்த ஆண்டு கொரோனா பெருந்தொற்று பரவத் தொடங்கியதிலிருந்து, ‘எடியூரப்பா முதல்வர் பதவியிலிருந்து இறங்கும் நேரம் வந்துவிட்டது. புதிய தலைமைக்கு அவர் வழிவிட வேண்டும்’ என்ற பிரசாரம் அங்கு ஆரம்பித்துவிட்டது. அது, அரசியல் வட்டாரத்தில் விவாதப்பொருளாக மாறியது. இந்தநிலையில், கர்நாடகா சுற்றுலாத்துறை அமைச்சர் சி.பி.யோகீஸ்வராவும், பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் பலரும் கடந்த மே மாதம் டெல்லியில் மேலிடத் தலைவர்களைச் சந்தித்து, ‘எடியூரப்பா ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டது. கொரோனாவைக் கட்டுப்படுத்த எடியூரப்பா தவறிவிட்டார்’ என்று புகார்களை அடுக்கினர். இந்த விவகாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், இது குறித்து பொதுவெளியில் கருத்து தெரிவித்த எடியூரப்பா, ‘முதல்வர் பதவியில் நானே தொடர்வேன். எனக்கு மாற்றாக இங்கு யாரும் கிடையாது’ என்றார். மேலும், ‘கட்சித் தலைமை சொன்னால், பதவி விலகத் தயார்’ என்றார் அவர். #உலைவைக்கும் உள்ளடி வேலைகள்!

கே.சுரேந்திரன், கே.சுந்தர
கே.சுரேந்திரன், கே.சுந்தர

கேரள மாநில பா.ஜ.க தலைவர் கே.சுரேந்திரன், 2016-ம் ஆண்டில் மஞ்சேஸ்வரம் தொகுதியில் போட்டியிட்டார். அங்கு, காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் அப்துல் ரஸாக்கிடம் 89 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். அதே தொகுதியில் போட்டியிட்ட பி.எஸ்.பி வேட்பாளர் கே.சுந்தர, 467 வாக்குகள் பெற்றிருந்தார். பெயர் ஒற்றுமையால் கே.சுரேந்திரனுக்குக் கிடைக்க வேண்டிய ஓட்டு கே.சுந்தர-வுக்குக் கிடைத்ததாகவும், அதனால்தான் தான் தோல்வியடைந்ததாகவும் கே.சுரேந்திரன் கருதினார். இந்தநிலையில், நடந்து முடிந்த 2021 சட்டசபைத் தேர்தலில் கே.சுரேந்திரன் அதே மஞ்சேஸ்வரம் மற்றும் கோணி ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட்டார். மஞ்சேஸ்வரம் தொகுதியில் எப்படியும் வென்றுவிடுவோம் என நம்பினார். ஆனால், கடந்த தேர்தலைப் போலவே இந்தத் தேர்தலிலும், கே.சுந்தர மனுத்தாக்கல் செய்திருந்தார். கே.சுந்தரவின் வீட்டுக்குச் சென்ற பா.ஜ.க நிர்வாகிகள், தேர்தலில் போட்டியிடக் கூடாது எனவும், அதற்காக 15 லட்சம் ரூபாயும் ஒரு ஸ்மார்ட்போனும் கொடுப்பதாகவும் பேரம் பேசி முடித்திருக்கிறார்கள். அதற்கு கே.சுந்தர சம்மதிக்கவே, முதற்கட்டமாக இரண்டரை லட்சம் ரூபாயும் ஒரு ஸ்மார்ட்போனும் கொடுத்திருக்கிறார்கள். இந்தநிலையில், போட்டியிட்ட இரண்டு தொகுதிகளிலும் சுரேந்திரன் தோற்றுப்போகவே, பி.எஸ்.பி வேட்பாளர் சுந்தரவுக்குக் கொடுக்க வேண்டிய மீதிப் பணத்தைக் கொடுக்கவில்லையாம். இந்த விவகாரத்தைச் செய்தியாளர்கள் முன்னிலையில் கே.சுந்தர போட்டுடைக்க... கேரள அரசியல் பரபரக்கிறது! #15 லட்சம்... எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!

நேஷனல் ஹாட் பிட்ஸ்

அரபிக் கடலுக்குள் அமைந்திருக்கும் குளிர்ச்சியான லட்சத்தீவு, அங்குள்ள மக்களின் போராட்டத்தால் கனன்று கிடக்கிறது. கேரளாவிலிருந்து சுமார் 300 கி.மீ தொலைவில் அரபிக் கடலிலிருக்கும் லட்சத்தீவில், புதிய சட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. `வெளியாட்கள் யாரும் அங்கு நிலம் வாங்க முடியாது’ என்று தற்போது இருக்கும் சட்டத்தை மாற்றுவது உட்பட, கொண்டுவரப்படும் சட்டங்களை லட்சத்தீவு மக்கள் கடுமையாக எதிர்க்கிறார்கள். லட்சத்தீவு நிர்வாகியாக மோடி அரசால் நியமிக்கப்பட்டிருக்கும் பா.ஜ.க-வைச் சேர்ந்த குஜராத் முன்னாள் உள்துறை அமைச்சரான பிரபுல் கோடா படேல் மேற்கொள்ளும் நடவடிக்கைகளால், போராட்ட பூமியாக லட்சத்தீவு மாறியிருக்கிறது. ஜூன் 5-ம் தேதி 12 மணி நேரப் போராட்டம் நடைபெற்றது. ஒவ்வொரு வீட்டின் முன்பாகவும் பதாகைகளை ஏந்தியவாறு குடும்பம் குடும்பமாக மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். சிலர், கடல்நீருக்குள் மூழ்கியபடி, கண்டன போஸ்டர்களைக் காண்பித்தவாறு போராட்டம் செய்தனர். போராட்டம் தொடர்ந்து தீவிரமடைகிறது. #கலகம் பிறந்தால் நியாயம் பிறக்கும்!