கட்டுரைகள்
Published:Updated:

வகுப்புக்குள் வனம்

வகுப்புக்குள் வனம்
பிரீமியம் ஸ்டோரி
News
வகுப்புக்குள் வனம்

இயற்கை காப்போம் - 1

ரா.கெளசல்யா

‘‘சார், எனக்கு இந்தப் பறவையைத் தெரியும். சிங்காநல்லூர் குளத்தில் பார்த்திருக்கிறேன். பெலிக்கான்னு பெயர்’’ என்று அந்தச் சிறுவன் உற்சாகத்துடன் சொன்னதும் அனைவரும் கைதட்டினார்கள்.

வகுப்புக்குள் வனம்

கோயம்புத்தூர், மசக்காளி பாளையம் மாநகராட்சி நடுநிலைப் பள்ளியில், கானுயிர் புகைப்படக் கலைஞர் சுந்தர ராமன் நடத்திய நிகழ்ச்சி அது. வன உயிரினங்கள் மற்றும் பழங்குடியினர் பற்றி மாணவர்களிடம் பல்வேறு விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.

வகுப்புக்குள் வனம்

சொற்பொழிவு போல இல்லாமல், ஒவ்வொரு விஷயம் பற்றியும் மாணவர்களிடமே கேள்வியாகக் கேட்டு உரையாடி,அவர்கள் தெரிந்து வைத்திருக்கும் தகவல்களுடன் கூடுதல் விஷயங்களைச் சொன்னார். மாணவர்கள் ஆர்வமுடன் கேட்ட கேள்விகளுக்கும் பதில் சொன்னார்.

‘‘இருவாச்சி பறவை பற்றி கேள்விப்பட்டதுண்டா? அன்புக்கே உரித்தான பறவை. தன் இணை பறவை இறந்துவிட்டால் தானும் இறந்துவிடும். அலகுக்கு மேல் கொண்டை போன்றிருக்கும். 40 ஆண்டுகள் வாழக்கூடியவை உலகம் முழுவதும் 54 வகை இருவாச்சிகள் இருக்கின்றன. இது கேரளாவின் மாநிலப் பறவை.

வகுப்புக்குள் வனம்

ஒற்றை யானை ஏன் மனிதர்களைத் தாக்குகிறது தெரியுமா? அதற்கு மனிதனைக் கண்டால் பயம். ஒரு தற்காப்புக்காகவே அப்படிச் செய்கிறது. தன் முன்னோர்கள் வந்த பாதையை இரண்டு தலைமுறைக்குப் பிறகும் நினைவில் வைத்து வரும் ஞாபகசக்தி படைத்தவை. ஆனால், நாம் அந்தப் பாதைகளை எல்லாம் குடியிருப்புகள், தொழிற்சாலைகளாக மாற்றிவிட்டதால் மிகவும் கஷ்டப்படுகின்றன. நம் பாதுகாப்பு என்கிற பெயரில் அவற்றைக் கொடுமைப் படுத்துகிறோம். வனவிலங்குகளுக்கு நாம் சாப்பிடும் உணவுகளைத் தரவே கூடாது. அவற்றுக்கான உணவை அவையே பெறும் சூழலை உண்டாக்குவதே நல்லது’’

இப்படிப் பல தகவல்களைப் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்கள் அனைவரும், ‘பிளாஸ்டிக்கை உபயோகிக்க மாட்டோம் காடுகளை, உயிரினங்களைப் பாதுகாப்போம்’ என்ற உறுதிமொழியை எடுத்துக்கொண்டனர்.

வகுப்புக்குள் வனம்

‘‘நான் சிறுவயதில் பார்க்காமல் தவறவிட்ட உயிரினங்களை இன்றைய குழந்தைகள் பார்க்க வேண்டும். அவற்றைப் பற்றி அறிந்துகொள்ள வேண்டும் என்பதே என் நோக்கம். அதற்காக, இந்தியா முழுவதும் பயணம் செய்து அரிய வகை உயிரினங்களைப் புகைப்படங்களாகவும் ஆவணப் படங்களாகவும் எடுத்துவருகிறேன். பள்ளி மற்றும் கல்லூரிகளுக்குச் சென்று அவற்றைக் காட்சிப்படுத்துகிறேன். சவால்கள் நிறைந்த இந்த வாழ்க்கையில் இயற்கையும் பல்லுயிர்களுமே என்னை உற்சாகத்துடன் இயங்கவைக்கிறது’’ எனப் புன்னகைக்கிறார் சுந்தர ராமன்.