மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 18 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சி சரித்திரம்

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

பொம்பளைய கவுக்கிறதுக்கு வாய் எப்போ எப்போன்னு நிக்கும். இனிப்பு வார்த்தையாக் கொட்டும்.

சுரங்கனாற்றில் மிதமான வெள்ளம் ஓடிக்கொண்டிருந்தது. வடகிழக்குப் பருவமழை வெள்ளம் தணிந்து ஆறு நிதானித்திருந்தது. கால்வாய்க்குள் நுழைந்தவுடன் ஒழுங்குக்கு வந்த நீரில் கால்களை அளைந்தபடி பேயத்தேவனும் பார்வதியும் உட்கார்ந்திருந்தனர். தூரத்தில் கலங்கல் விழும் இடத்தின் நீர்விழும் சத்தத்தில் பேசும் சொற்களைக் காற்று தாங்கிச் சென்றது. பார்வதியின் சோர்வுற்ற முகத்தைப் பார்த்த பேயத்தேவனும் சலசலத்தோடும் வெள்ளத்தையே பார்த்துக்கொண்டிருந்தான்.

புரண்டோடும் வெள்ளத்தில் முங்கியபடி வந்த முக்குளிப்பானொன்று, இவர்கள் அருகில் வந்து, தலையை உயர்த்திப் பார்த்து மீண்டும் முங்கியது. நீருக்குள் முங்குவதும், தலையை உயர்த்துவதுமாகத் துள்ளலுடன் இருந்தது.

நீரதிகாரம் - 18 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சி சரித்திரம்

பேயத்தேவனின் அருகில் ஆளுயர வேல்கம்பொன்று கிடந்தது. பேயத்தேவன் சுற்றிப் பார்த்தான். தூரத்தில் தெரிந்த மேடான மடுவுக்கு அப்பால் மாடுகளைப் பத்திவிட்டு, மரத்தடிகளில் குத்தங்காலிட்டு உட்கார்ந்து, தரைப்புல்லைக் கிளறித் தன் சோகத்தைப் புலம்பியோ, பாட்டாகவோ பாடிக்கொண்டிருப்பார்கள் கீதாரிகள். சிலர் மாடுகளைப் பத்திவிட்ட நாழியில் படுத்துத் தூங்குவார்கள். காதல் இணைகள் மறைவிடங்களுக்கு நகரும்.

பேயத்தேவன் பார்வதியை மாடு மேய்க்கும் சிறுமிகளுடன் அவ்வப்போது பார்த்திருக்கிறான். வேப்பெண்ணெய் வடியும் முகம், செம்பட்டை முடியுடன் அரைக்காப்படி உயரத்தில் செல்லும் பார்வதி, ஒருநாள் மாந்தளிரின் கரும்பச்சையும் சிவப்புமான பளபளப்பில் பொலிவுகூடித் தெரிந்தாள். குழந்தைமை மாறிவிடாத கண்களில், சுண்டி இழுக்கும் வசீகரம் வந்தமர்ந்து, பார்ப்பவரை ஈர்த்தாள்.

தினம் பார்க்கும் அம்மன்தான் என்றாலும் அலங்காரப்பூரணியாக, வீதியுலா வரும்போது மகாலெட்சுமி வியக்க வைப்பாள். பகல் முழுக்க பண்டாரத்தின் கைவிரல்கள் பின்னும் முடிச்சுகளில் சிறைப்படும் பூக்களின் அலங்காரத்தில் மலர்ச்சி சேர, புடவையின் மடிப்பைச் சீரமைத்து உடல் முழுக்க அணிகலன்களைப் பூட்டும்வரைகூட அவள் சாதாரண அம்மன்தான். அலங்காரம் முடித்து, அலங்கரித்த பல்லக்கில் அம்மனை ஏற்றி வைத்து, அவளைப் பிரார்த்தித்து, ஊர்கூடி அவள் பல்லக்கைத் தோள் தூக்கி வைத்தவுடன், அம்மனின் இதழ்க்கடையோரம் விகசிக்கத் தொடங்கும் கம்பீரப் புன்னகை, யாருடைய அலங்காரத்தில் கூடிவந்தது என்று அலங்கரித்தவர்கள் திகைப்பதுபோல், பார்வதியின் முகத்தில் இளமையின் செழுமை எந்தப்பொழுதில் கூடிவந்தது என்றறிய முடியவில்லை. இளமை இருவரையும் ஈர்க்க, காதலால் இருவரும் கசிந்துருகினார்கள்.

“இன்னும் எவ்வளவு நேரந்தான் ஓடுற தண்ணிய வெறிச்சிக்கிட்டு இருப்ப? எதுக்கு இப்ப மூஞ்சியத் தூக்கி வச்சிருக்க?”

“ஓடுற இந்தத் தண்ணிய நிறுத்துச் சொல்ல முடியுமா, இம்புட்டு இருக்குன்னு?”

“எவ்ளோ ஓடினா என்ன? நம்ம கால நனைக்கிற தண்ணிதான் நம்ம தண்ணி. அத அளந்து சொல்லலாமே?”

“நீ அளந்தாலும் அளப்ப. பெரிய தலைக்கட்டாச்சே?”

“பெரிய தலைக்கட்டுன்னு அண்ணாந்து பாத்து நடந்த ஆளத்தான் தண்ணில குப்புற கவுத்துட்டியே?”

“ஒன் கவுரிதிக்கு என்னோட சகவாசம் கொறச்சல்னு நெனைக்கிறயா?”

“கூறுகெட்ட மூதி. அப்படியா சொன்னேன்? வெள்ளாமைக்காரன் எதுக்கு வானத்தைப் பாப்பான், மழைக்குத்தானே? எம் பொழப்புல மழையா நீ வந்த பிறகு, நானெதுக்கு வானத்தைப் பாக்கணும்?”

“பொம்பளைய கவுக்கிறதுக்கு வாய் எப்போ எப்போன்னு நிக்கும். இனிப்பு வார்த்தையாக் கொட்டும். சரி, நானு சொல்ல வந்தத சொல்லிர்றேன். பாளையத்துக்காரங்ககிட்ட வம்புக்குப் போவாதேன்னு அன்னைக்குச் சொன்னனா இல்லையா?”

“நானு ஒரு வம்புக்கும் போவலையே?”

“அந்த நாடாரோட ரெண்டு காளைங்களையும் பத்தீட்டீங்களாம். அவரு பெரியகுளத்துல போலீசுக்காரங்ககிட்ட சொல்லீட்டாராமே?”

“ஒனக்கெப்படித் தெரியும்?”

“ஆம்பளைங்க கள்ளவழிக்குப் போனாலும், காடுமேடு போனாலும், சோறு பொங்கற நெருப்போட பயத்துலயும் வெந்துக்கிட்டு இருக்கவதானே கள்ளவீட்டுப் பொம்பள?”

“ஆமாம், இவெ பெருசா பத்துப் புள்ள பெத்து அடுப்புல வெந்துக்கிட்டு இருக்கா?”

நீரதிகாரம் - 18 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சி சரித்திரம்

“பத்தில்ல... இருபது பெத்து வேகணும்னுதான் சொல்றேன். இந்தப் போலீசு வெவகாரமெல்லாம் வேணாம். அவெங்ககிட்ட வச்சுக்காதே! சொல்லிப்புட்டேன்.”

“ஒனக்கெதுக்கு அந்தக் கவலைல்லாம். விடு. சாப்பிட என்ன வச்சிருக்க?”

“பச்சரிசிப் புட்டும், அவிச்ச பனங்கிழங்கும் இருக்கு.”

“ஓகோ... குடு. உன்னைய நெனைச்சுக்கிறேன். அவிச்ச பனங்கிழங்கு இருக்கே...”

“புளிபோட்டுத் தேச்சி வெளக்கமாச் சொல்லப் போறியாக்கும். ஒன் லெட்சணம் தெரியாதா, எதை நெனைச்சு சொல்லுவேன்னு? கொடுக்கிறத வாங்கித்தின்னு, பொம்பளைய ஆராய்ச்சி பண்ணாம.” கணுக்காலுக்கு மேலிருந்த சேலையை இழுத்துப் பாதம் மறைத்துக்கொண்டு, முந்தானையில் இருந்து பச்சரிசிப் புட்டை எடுத்துக் கொடுக்க, பேயத்தேவன் கையில் வாங்கினான்.

“நேத்து மாடுங்களை மந்தையில் விட்டுட்டுப் பொழுது சாய உன் வீட்டுப் பக்கம் வந்தேன்.”

“வந்தியா, எப்போ?”

“பொழுது சாயன்னு சொன்னேனே?”

“ஓ, நான் சுந்தரத்தக்காவுக்குப் பேறுகாலம் பாக்கப் போயிருந்தேன், அப்ப வந்தியாக்கும்?”

“பேறுகாலம் பாக்க நீ போனியா?” பேயத்தேவன் அதிர்ந்தான்.

“எங்க அப்பத்தாதானே வயித்துப் புள்ளைய வெளிய இழுத்துப் போட்டு தொப்புள்கொடியை அறுத்துவிடுறவ. நான் அதுக்குக் கைத்தோதா இருப்பேன்.”

“புள்ளை பெத்துக்கிறவளுக போடுற கூச்சலைக் கேட்டு, உனக்குப் புள்ளை பெத்துக்கிற ஆசை போயிடப்போவுது.”

“எத்தன பெத்துக்கொடுக்கணும், சொல்லு.”

“உங்க வீட்டு நாய் பத்துக் குட்டி போட்டுக்கிட்டிருக்குதே? நா வர்றப்ப கிய்யா முய்யான்னு கூச்சல். அதும் ஆத்தா வேற உர் உர்ருனு ஒன் வீட்டுகிட்டே யாரும் கிட்ட வந்துடாம ரவுசு விட்டுக்கிட்டு இருந்துச்சி. எதுக்கு வம்புன்னு சத்தமில்லாம வந்துட்டன். எப்பவும் அந்த மாதிரி இருக்க மாட்டேன், சொல்லி வை.”

“நாய் வாயைக் கட்டத் தெரியாது பாரு ஒனக்கு.”

“உன் வாயைக் கட்டட்டுமான்னு சொல்லு?” பேயத்தேவன் பார்வதியின் இரு இதழ்களையும் ஒன்று சேர்த்து, தன் இதழ்களுக்குள் மறைத்துக் கொண்டான். கால்களால் நீரை உதைத்துத் தள்ளிய பார்வதி, வானத்தில் தெரிந்த வெண்மேகத்தின் சிறு துண்டொன்றை உள்வாங்கி, கண்களை மூடிக்கொண்டாள். முத்தமிட்டுக்கொள்ளும்போது கண்கள் மூடிக்கொள்வது மூளையின் அனுமதியின்றி நடக்கும் அனிச்சைச் செயலா? சுவாசத்தின் நாடி பிடித்து இதயம் நுழைய கண்கள் குவிக்கும் கவனமோ? காரணம் எதுவென்றாலும், முத்தமிட்டுக்கொள்ளும் நான்கு இதழ்களும் இமை மூடிய நான்கு விழிகளும் காதல் உலகின் பேரெழில் சிற்பங்கள். நீரின் சலசலப்பில் ஆழ்கடலின் அமைதிக்குள் திளைத்தார்கள் இருவரும். பேயத்தேவன் கையிலிருந்த புட்டு நீரில் விழ, முக்குளிப்பான் அருகில் வந்து, அலகால் கொத்தியது.

பார்வதியும் பேயத்தேவனும் சுக்காங்கல்பட்டியின் மலையோரத்தில் மாடுகளை விட்டுவிட்டு, கண்மாய்க்கு வந்துவிடுவது இந்த இரண்டு மாதமாக வழக்கமாகிவிட்டது. இளம்பிராயத்திலிருந்து ஒரே ஊரில் ஒரே இடத்தில் வளர்ந்தவர்கள்தான் இருவரும். பார்வதி மேல்சட்டை போடாத வயதிலிருந்து பேயத்தேவன் அவளைப் பார்த்திருக்கிறான். குடுமியைக் கட்டத் தெரியாமல் அவிழ்த்துவிட்டுச் சிற்றிலில் சிறு துண்டுடன் ஆடு மாடுகளைப் பிடித்து விளையாடிய பருவம் முதல், பேயத்தேவனைப் பார்க்கிறாள் பார்வதி. எந்த வேளையில் அவனுக்காக உருகும் இதயம் அவளுக்கும், அவளுக்காக உருகும் இதயம் அவனுக்கும் பிறந்ததென்பதைச் சுரங்கனாறே அறியும். சித்தப்பா முங்கிலித் தேவனிடம் ஆடு மாடுகளை விட்டுவிட்டு, தோன்றும்போது மலையடிவாரத்திற்கு வருபவன், இரண்டு மாதங்களாக விடியும் முன்பே, வேல்கம்புடன் கிளம்பிவிடுகிறான். கையில் லாந்தருடன் இருட்டிலேயே மாடுகளை அவிழ்த்துவிட கொட்டகைக்கு வருபவனை, துள்ளிக்கொண்டு வேகம் காட்டும் செவலை மாடொன்று ‘எல்லாந் தெரியும் ராசா’ எனக் கேலியாகப் பார்க்கும்; உரசும் அதன் கொம்புகளைச் செல்லமாக ஒதுக்கிவிட்டு பேயத்தேவன், கயிற்றை அவிழ்த்துவிடுவான்.

இருவரின் மூடிய விழிகளுக்குள்ளிருந்து வெளியேறிய வெண்மேகம், மூச்சுத்திணறி விரைந்தது. வலது பாதத்தின் சுண்டு விரலை மீனொன்று கடிக்க, கால்களை உதறியபடி, பேயத்தேவனிடமிருந்து மீண்டாள் பார்வதி. சிறகடித்துக்கொண்டிருந்த பறவை நிலம் தாழ்ந்ததுபோல், இதயம் தித்தித்த இனிமையிலிருந்து விடுபட முடியாமல் பார்வதி தடுமாறினாள்.

தூரத்தில் சந்தனத்தேவன் வந்துகொண்டி ருப்பதைப் பார்த்து, பேயத்தேவனிடமிருந்து அவசரமாகப் பிரிந்தாள்.

போலீசு உடுப்புடன் வந்துகொண்டிருந்த சந்தனத்தேவனின் முகத்தைப் பார்த்தான் பேயத்தேவன். அவன் முகத்தில் மண்டியிருந்த குழப்பமும் அச்சமும் பார்த்துப் பேயத்தேவன் எழுந்து நின்றான்.

“என்ன சந்தனத்தேவா இம்புட்டுத் தூரம்? அதுவும் போலீசு உடுப்போட? இதையெதுக்கு ஊருக்குள்ள போட்டுக்கிட்டுத் திரியுறப்பூ? அசிங்கமாயிருக்குப்பா.”

“வேலையில இருந்தவென் அப்படியே ஓடியார்றேன்... சமாச்சாரம் தெரியுமா?”

பார்வதியை யோசனையுடன் திரும்பிப் பார்த்தான்.

“பரவாயில்லை, சொல்லு” என்றான் சந்தனத்தேவனின் தயக்கத்தைப் புரிந்துகொண்டவனாக.

“சிவசுப்பிரமணிய நாடாரோட ரெண்டு காளைங்களையும் காணோமாம்.”

“என்னது, முடிஞ்சா மாட அவுத்துப்பாருன்னு தமுக்குப் போடுவானுங்கன்னுதானே சொன்ன? அதுக்குள்ள எவென் மாடுங்கள பத்தினான்?”

“கரச்சல் பண்ணணும்னுதான் முடிவுல இருக்காங்கப்பூ. என்னான்னு தெரியல, நம்ம ஊர்மேல கண்ணு வச்சிட்டானுங்க. மதுர கலெக்டர் ஆபீசுலயும் நம்ம கள்ள நாட்டப் பத்தி கசமுசான்னு பேச்சு இருக்காம். போலீசு சூப்பிரண்ட் ஆபீசுலயும் அலங்கல்மலங்கலா என்னமோ நடக்குது. ராத்திரி இளந்தாரிக ஸ்டேசன்லதான் தங்கணும்னு சொல்லப் போறானுங்களாம். அதைப் பின்னாடி பாப்போம். நானு சொல்ல வந்தது வேற. பெரியகுளம் சர்க்கிள் இப்போ பாளையத்துக்கு ஆள அனுப்பிவிட்டிருக்காரு. ஒன்னையும் உன் கூட்டாளிங்களையும் பெரியகுளம் வரச்சொல்றாங்க. வேற ஆள் வந்தா எப்டி நடந்துப்பானோ? அதான் நானே சேதி சொல்ல ஓடியாந்தேன். ஏப்பு, நம்ம ஊர்க்காரங்க யாரும் உனக்குத் தெரியாம மாடப் பத்தப் போயிருக்க மாட்டாங்களே?”

“எனக்கு மட்டுமா, களவுக்குப்போன காலு ஊர் திரும்புதுன்னா ஊர்ல இருக்க பொண்டு புள்ளைங்களுக்குக்கூடத் தெரியும். ஒரு ஆளு வெளிய போகலை.”

“சரி, கெளம்பு. நாம உடனே பெரியகுளம் போவணும்.”

“பெரியகுளமா? சொன்னவுடனே கெளம்ப முடியாது. நெறைய ஜோலி இருக்குல்ல?”

“உனக்கு என்ன ஜோலி இருக்குன்னு நீ ஒக்காந்திருக்க ஜோரப் பாத்தாலே தெரியுதுப்பு, கெளம்பு. போலீசு கூப்பிட்டுப் போவலைன்னா அதையே குத்தமாச் சொல்லிட்டுருப்பாங்க.”

பேயத்தேவன் பார்வதியைப் பார்த்தான். ‘இதுக்குத்தான் நான் சொல்றேன்’ என்பதுபோல் இருந்தது அவள் பார்வை.

“வெரசாக் கெளம்பு.”

“இருப்பா வர்றேன். எதுக்கும் நல்லப்பனைக்* கூட்டிக்கிடலாம். போய் அவர வண்டி கட்டச் சொல்லு. ஏய் சந்தனம்! என் அப்பனுக்குத் தெரிய வேணாம். நல்லப்பன்கிட்டயும் சொல்லிரு. நாம சர்க்கிளப் பாக்கப் போறோம்னு அவரு பாட்டுக்கு அவங்க அண்ணன்கிட்ட சொல்லி வைக்கப்போறாரு.”

“ஒன்னையக் கெடுக்கிறதே ஒன்னோட நல்லப்பன்னு உங்கப்பா சொல்லுறது சரிதான்.”

“நல்லப்பனா இருந்துக்கிட்டு அதைக்கூட செய்யலைன்னா, நல்லப்பனுக்கு என்னாதான் கவுரிதி இருக்கு, வாப்பூ.”

கிளம்பப் போன சந்தனத்தேவனைப் பார்த்து, “ஏப்பா, மாட்டையே பத்தலையே நம்ம ஊர்ப் பயலுக, நம்மை ஏன் கூப்ட்றாங்க? வேற எதுலயும் கோத்துவிடப் பாக்குறாங்களா?” என்றான்.

“சனி நம்ம பக்கம் பார்வையைத் திருப்பிடுச்சி. அதுவா திசை மார்ற வரைக்கும் ஒண்ணுஞ்செய்ய முடியாது, வெரசா வா சொல்லிட்டேன்.”

சந்தனத்தேவன் முன்னுக்குச் செல்ல, பேயத்தேவன் பார்வதியின் கையைப் பிடித்து ஆறுதலாய் அழுத்திவிட்டுக் கிளம்பினான்.

நீரதிகாரம் - 18 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சி சரித்திரம்

பெரியகுளம் பாலசுப்பிரமணியர் கோவிலுக்கும் வராக நதிக்கும் இடைப்பட்ட பனந்தோப்பிற்குள் இருந்த கல்லிருக்கையில் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் தர்மராஜ் அய்யர் யோசனையுடன் உட்கார்ந்திருந்தார். மாலை நேரமாக இருந்தாலும் காற்றில் வெம்மை இருந்தது. பத்தொன்பது வயதில் திருமங்கலம் சர்க்கிள் இன்ஸ்பெக்டர் வீட்டில் எடுபிடியாக இருந்தபோது, டிஸ்டிரிக்ட் சூப்பிரன்டென்டின் குழந்தைக்குத் தாய்ப்பால் ஏற்பாடு செய்து கொடுத்தார் தர்மராஜ். ஒருநாள் தர்மராஜ் செய்த புளிக்குழம்பைச் சாப்பிட்ட சூப்பிரன்டென்ட், “டேய்! இனிமே நீதான்டா எனக்குத் தவசுப்பிள்ளை” என்றார். அந்த நன்றிக்கடனுக்காக, சூப்பிரன்டென்ட் மாறுதலில் நெல்லூருக்குப் போகும்முன் தர்மராஜுக்கு போலீசு வேலை ஏற்பாடு செய்தார். போலீசாகச் சேர்ந்தபோது தர்மராஜாக இருந்தவர் எஸ்.ஐ ஆன பிறகு தர்மராஜ் அய்யர் என்று அறியப்பட்டார்.

சற்று தூரத்தில் பனைமரமேறி ஒருவன் கையிலிருந்த கள்ளுப்பானையைப் பார்ப்பதும் இன்ஸ்பெக்டரைப் பார்ப்பதுமாக இருந்தான். பெரிய இடத்துத் திருட்டு, கொலை வழக்குகளை அய்யர் இங்கு வைத்துத்தான் விசாரிப்பார். விசாரணை நடக்கும் நாள்களில் பனை மரமேறிக்கு வருமானம் கூடுதலாகக் கிடைக்கும்.

சர்க்கிள் இன்ஸ்பெக்டர் முன் ஆறேழு இளவட்டப் பயல்கள் நின்றிருந்தார்கள். எல்லோருக்கும் பதினைந்தில் இருந்து இருபது வயதிற்குள்தான் இருக்கும். இடுப்பில் அழுக்கு வேட்டி. தலைப்பாகை கட்டியிருந்த துண்டையெடுத்து இடையில் கட்டியிருந்தார்கள்.

“எல்லாரும் ஒக்காருங்கடா, மதியத்துலயிருந்து எவ்ளோ நேரம் நின்னபடியே எம் மூஞ்சிய பாத்துக்கிட்டிப்ருப்பீங்க? இருட்டப் போகுது. சொல்லுங்கடா, ஒங்க ஊர்க்காரன் எவன்டா பெட்ரமாக்ஸ் கடக்காரர் வீட்டுல மாட்டப் பத்தினவன்?”

எதிரில் நின்றிருந்தவர்களின் உடல்கள் தெப்பலாக நனைந்திருந்தன.

“எஜமான்! எங்க ஊருதான்னு ருசுவாகலைங்க.” ஒருவன் தலையைச் சொறிந்தபடியே குனிந்துகொண்டு சொன்னான்.

“வாய மூடுடா. இந்த வேல பாக்குறதுக்கு கிழக்கத்திக்காரனாடா வருவான்? எனக்கு எல்லாத் தாக்கலும் வந்துருச்சு, நீங்களா எவன்னு சொல்லிட்டா பெட்ரமாக்ஸ் கடைக்காரர் தர்ற ஆயிரம் ரூபாய வாங்கித் தந்துர்றேன். மாட்ட மாட்டுக்காரர்கிட்ட திரும்ப ஒப்பிச்சிருங்க.”

“சாமி, யாரு களவாண்டாங்கன்னு நானு கண்டுபிடிச்சிருவேன்” பனையேறி இன்ஸ்பெக்டரின் உதவிக்கு வந்தான்.

“டேய்! கோட்டிக்காரப் பயலே. பானையக் கீழே வச்சுட்டு உட்காருடா.”

“இல்ல சாமி. நா சொல்லுறத கேட்டீங்கன்னா, கண்டுபிடிச்சிருவீங்க.”

“இவென் ஒரு கிறுக்கன். கேக்கலைனா என் தலைமேல பானையத் தூக்கிப் போட்டு ஒடைச்சாலும் ஒடைப்பான். தலையெழுத்து, சொல்லித் தொலைடா.”

“சிவசுப்பிரமணிய நாடார் மாடு காணாமப் போச்சு, சிவசுப்பிரமணிய நாடார் மாடு காணாமப்போச்சுன்னு, ஐந்நூறு தடவ சொல்லச் சொல்லுங்க. அவங்களே ஒத்துக்கிருவாங்க.”

இன்ஸ்பெக்டர் தலையில் அடித்துக் கொண்டார். பயல்கள் கீழே குனிந்துகொண்டு சிரித்தார்கள்.

உட்கார்ந்திருந்த ஒருவன் கூட்டத்திலிருந்து எழுந்தான். திமிலை நிமிர்த்தெழும் காளைபோல் அவனைப் பார்க்கவே அச்சமாக இருந்தது, சர்க்கிளுக்கு.

“டேய்! ஒக்கார்டா. பெரிய மனுஷங்க பேசயில எதுக்குடா எந்திரிக்கிற?”

“யாரு பெரிய மனுஷன் சாமி. இந்தப் பனையேறி பித்துக்குளியா?”

“டேய் ஆளாளுக்குக் கழுத்த நெரிக்கிறீங்களேடா.”

“அய்யா, எனக்கு இதுல கொஞ்சம் விஷயம் தெரியும்.” சொன்னவனை சர்க்கிள் இன்ஸ்பெக்டர் பார்த்தார். அவனது கண் ஜாடையைப் புரிந்துகொண்டார்.

“சரி சொல்லு. அதுக்கு முன்னாடி ஒம்பேரச் சொல்லு.”

“ஒப்பிலியத்தேவன்.”

“ஒம் அப்பன் பேரு”

“அம்மமுத்தம்பட்டி ராசுமாயன்.”

“சரி, பாலார்பட்டிக்கு எதுக்கு வந்தீங்க?”

“காட்டோரத்துல மாடு மேய்ச்சிக்கிட்டே பாலார்பட்டிக்குப் போவோம் சாமி.”

“கள்ளவழிக்குப் போறதுண்டா?”

“போனதேயில்லைன்னு பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன். பிராயத்துல போயிருக்கேன்.”

“பிராயத்துலன்னா, இப்போ என்ன ஏழு கழுத வயசாயிடுச்சா? ஆளப்பாரு, நீ உட்காரு. டேய்! சில்லுண்டு பயலே, நீ சொல்லுடா.”

“அய்யா! எம்மாட்டக் களவு பண்ணிப் பாருங்கடா, ஆயிரம் ரூவா தர்றேன்னு பெட்ரமாக்ஸ்கார நாடார் சொல்லிப்புட்டாரு. பயலுக அத விளையாட்டா எடுக்காம வெனையா எடுத்துக்கிட்டானுங்களோ என்னமோ? பஞ்ச காலம் ஆச்சுங்களே?”

“ஒன்ன வெளக்கம் வெங்காயம் கேட்டனா?”

“நாட்டு நடப்ப சொன்னேன். போன அமாவாசையன்னைக்குச் சம்பவம் நடத்தணும்னு நெனச்சோம். மொத நா சாமி உத்தரவு கொடுக்கல. அடுத்த நா சாமி உத்தரவு கிடைச்சது. அன்னைக்கு சாமத்துல போனப்பதான் எங்களுக்குத் தெரிஞ்சுது, ஏற்கெனவே எவனோ கன்னம் வச்சிட்டான்னு. அதனால கம்ம ஒடுங்காம ஊருக்குத் திரும்பி வந்துட்டனுங்க. ஒருத்தனோட மனசோட்டத்த இன்னொருத்தன் கச்சிதமா முடிச்சிடுறான், அதான் எப்படின்னு தெரியலைங்கய்யா.”

‘களவுக்குக் காரணமானவர்களை ஒருவாரத்தில் கொண்டு வருகிறேன்’ என்று ஆய்வுக் கூட்டத்தில் டிஸ்ட்ரிக்ட் சூப்பிரன்டென்ட் தேவசகாயத்திடம் நெஞ்சை நிமிர்த்திச் சொன்னது தர்மராஜ் அய்யருக்கு நினைவுக்கு வந்தது. பத்து நாள்களாக விசாரணை நின்ற இடத்திலேயே இருக்கிறது. மாடு காணாகிவிட்டது. அடுத்த நாள் பெட்ரோமாக்ஸ்காரர் வீட்டிற்குள் எவனோ ஒரு துடுக்குக்காரப் பயல் கல்லைவிட்டு எறிந்திருக்கிறான். கல்லில் கட்டியிருந்த தாளில், ‘மாட்டத் தூக்கிட்டோம். ஆயிரம் ரூவாய பாலார்பட்டிக்குக் கொண்டு வா’ன்னு எழுதியிருந்த தாளோடு நேராக மதுரை எஸ்.பி. வீட்டிற்குப் போய்விட்டார் பெட்ரோமாக்ஸ் கடைக்காரர்.

எஸ்.பி-யிடம் என்ன பதில் சொல்வதென்று இன்ஸ்பெக்டருக்கு பயம் வந்தது. ‘வேறு ஊருக்கு மாத்திக்கிட்டுப் போயிடணும், இவனுங்க கரைச்சல் தாங்க முடியலை. பொழுது சாய்ந்து இருட்டத் தொடங்கிவிட்டது. இன்னும் இவன்களிடம் வார்த்தையைப் பிடுங்க முடியவில்லை.’ தர்மராஜ் அய்யருக்குக் கவலையாக இருந்தது.

“டேய், என்னையக் கிறுக்குப் பிடிக்க வைக்காதீங்கடா. நானு சொல்லக்கூடாதுன்னு பாக்குறேன். கூடிய சீக்கிரம் பூராப் பயலும் ராத்திரி முச்சூடும் போலீசு ஸ்டேசன்லதான்டா படுக்கப்போறீங்க. பேச்சுவார்த்தை பெரிய அளவுல ஓடிக்கிட்டு இருக்கு. சொல்லிப்புட்டேன். இந்தக் களவுக்கு நானு எஸ்.பி தொரைக்கு என்னடா சால்சாப்பு சொல்லுறது? தெரியும்ல ஒங்களுக்கு, நாடார் எஸ்.பி துரைக்குச் சொந்தகாரர்னு?”

“பண்ணாத குத்தத்துக்கு நாங்க என்ன ஜவாப் சொல்லுறது துரை” என்றான் ஒப்பிலியத்தேவன்.

“டேய்! நீ மூணு சாமிமேல சத்தியம் பண்ணுடா. நாங்க சம்பவம் நடத்தலைன்னு, விட்டுர்றேன்.”

“துரை! எங்கதுல சாமி பேர்ல சத்தியம் பண்ணுறது பழக்கம் இல்லை. எங்க பேச்சு ஒப்பலைன்னா எல்லாரையும் பாளையம் ஜெயில்ல தூக்கிப் போடுங்க.”

“வரட்டும், ஒங்க பெரிய தலைக்கட்டு பேயத்தேவன். எல்லாரையும் மொத்தமாத் தூக்கி உள்ளே போடுறேன்.”

“நாங்க உள்ள இருக்கும்போதும் வெளிய சம்பவம் நடக்கும். அப்போ எங்கள காரணம் சொல்ல மாட்டீங்க இல்ல?”

“கூடக் கூட வாய் பேசுறயாடா? கருக்காப்பல்லு ஒண்ணு விடாம ஒடச்சு எடுக்கிறேன் பாரு.”

லத்தியை ஓங்கினார் இன்ஸ்பெக்டர் தர்மராஜ்.

“பயலுகமேல கைவைக்கக் கூடாது சாமி…”

குரல் கேட்டுத் திரும்பினார். பேயத்தேவன் நின்றிருந்தான். பின்னால் அவன் சித்தப்பன் முங்கிலித் தேவனும் போலீசுக்காரன் சந்தனத்தேவனும் நின்றிருந்தனர். சந்தனத்தேவன் இன்ஸ்பெக்டருக்கு சல்யூட் வைத்தான். அவனை உதாசீனப்படுத்திய தர்மராஜ் அய்யர் பேயத்தேவனைப் பார்த்தார்.

“கைவச்சா என்னா பண்ணுவ பேயத்தேவா?”

“குத்தஞ் செய்யாதப்ப ஏன் துரை அடிக்கணும்.”

“ஒங்கிட்ட அனுமதி வாங்கிட்டு இனிமே அடிக்கிறேன். போலீசு ஸ்டேசன் என்ன, ஐம்பது குடிசையை வச்சிக்கிட்டு நீ நாட்டாம பண்ற ஊருன்னு நெனைச்சிக்கிட்டியா?”

“துரை! மாடு எங்க இருக்குன்னு அரை நாள்ல நான் சொல்லிடுவேன். அப்பவாவது நாங்க செய்யலைன்னு நம்பறீங்களா?” என்றான் பேயத்தேவன்.

அப்போது இரண்டு கூட்டு வண்டிகள் வந்து நின்றன. தபதபவென்று ஆட்கள் வரும் காலடிச் சத்தம் கேட்டது. பெட்ரோமாக்ஸ் விளக்குகளை ஏந்திப் பிடித்தபடி இருவர் முன்னும் பின்னும் நடந்து வர, தூரத்தில் இரண்டு மூன்று பேர் நிற்க, நடுவில் வந்த மனிதரைப் பார்த்து, இன்ஸ்பெக்டர் பதறினார்.

‘ஐயோ, நாடார் நேரா வந்துட்டாரே, என்ன ஆகப்போதோ இன்னிக்கு?’ இன்ஸ்பெக்டருக்குத் திகில் கூடியது.

“வாங்க நாடார்… பனஞ்சாலைக்கே வந்துட்டீங்க? ஒக்காரச் சொல்லக்கூட நாற்காலி ஒண்ணுமில்ல” அய்யர் சுற்றும்முற்றும் பார்த்தார்.

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம் அய்யரே. நான் கேச வாப்பசு வாங்கிக்கிர்றேன். அதைச் சொல்லத்தான் வந்தேன்.”

“என்ன?” இன்ஸ்பெக்டருக்கு நம்ப முடியவில்லை.

“நான் பந்தயம் போட்டேன். தோத்துட்டேன் அய்யரே.”

“என்னது, பந்தயமா? அப்போ மாடுக?”

“வீட்டுக்கு வந்துருச்சு அய்யரே.”

“பணம் எங்க குடுத்தீங்க?”

“அதல்லாம் விட்டுடுங்க. நாள பின்னைக்கு நாங்க தாயா பிள்ளையா பாத்துக்கிறணும். இத அப்பிடியே விட்டுடுங்க.”

“எஸ்.பி கேப்பாரே.”

“நானு மதுரதான் கிளம்பிக்கிட்டிருக்கேன். அவர்கிட்ட நேரா பாத்துச் சொல்லிடறேன்.”

வந்ததும் கிளம்பியதும் தெரியாமல் சிவசுப்பிரமணியம் கிளம்பினார்.

‘அப்பாடா…’ என்று ஆசுவாசப்பட்ட தர்மராஜ் அய்யர், “சரி கிளம்புங்கடா” என்றார்.

“டேய் பனையேறிக்கு ஏதாவது கொடுங்கடா. கள்ளுப் பானைய வச்சுக்கிட்டு நிக்கிறான் பாரு.” பனையேறி மண்ணைக் காலால் பறித்து, கள்ளுப் பானையை அசையாமல் வைத்தான்.

“தொர, நா ஒரு ரோசனை இவங்களுக்குச் சொல்லுறேன். இன்னைக்கு யாவாரம் ஆகாதுன்னு எனக்குத் தெரிஞ்சுபோச்சு. இவங்க எனக்கு ஒதவல. அவங்களுக்கு நா ஒதவுறேன்” என்றான் பனையேறி.

கோட்டிக்காரப் பயலுடன் விவகாரம் வேண்டாம் என நினைத்த சர்க்கிள், “சொல்லுடா” என்றார்.

“மாடு, மாடுன்னு பேசுனப்ப எனக்குத் திடீருன்னு ரோசன வந்துச்சு. அன்னிக்கு மதுர கலெக்டரு சொன்னாருன்னு சொன்னீங்களே?”

“என்னடே சொன்னாருன்னு சொன்னேன்?”

“கூடலூருக்குமேல காட்ட அழிக்க ஆள் வேணும்னு?”

“உன்னைக் கிறுக்குன்னு சொல்றானுங்க. எவ்ளோ வெவரமா பேசுற? நானே யோசிக்கலை, சொல்லு.”

போலீசு ஸ்டேஷன் விவகாரம் பெரும்பாலும் பனஞ்சாலையில் நடப்பதில் பனையேறிக்கு எல்லா விஷயமும் தெரியும்

“இந்தப் பேயத்தேவன் இருக்காருல்ல, இவருக்குக் காட்டுக்குள்ள மாடு மேய்க்கிற மாதிரி ஏற்பாடு செஞ்சுருங்க. மாடு பழுக்கிடும்*. வேற எங்கேயும் மாடு களவாடப் போக வேணாம். இவரு மந்தையிலேயே களவாடிக்கிறலாம்.”

“டேய் கிறுக்கா, மாட்ட களவாடவாடா இந்த ரோசனை? எடுத்துக் கொடுத்ததோடு பேசாம இரு.” சிடுசிடுத்த அய்யர், பேயத்தேவனை அருகில் அழைத்தார்.

“யப்பா பேயத்தேவா, ஒன்கிட்ட மாடு கன்னு இருக்குதானே?”

“இருக்குய்யா. ஏழெட்டு மாடு, மூணு கன்னுக்குட்டி, ஒரு பொலி காள.”

“ஆடுக?”

“வெள்ளாடும் செம்மறியுமா ஒரு கெடை இருக்குங்க அய்யரே.”

“மேய்ச்சலுக்கு எங்க போற?”

“கம்பத்துக்காரனுக்கு மேய்ச்சக் காட்டுக்கா பஞ்சம் சாமி? சுத்தி இருக்குதே காடும் மலையும்?”

“இனிமேல்லாம் காட்டுக்குள்ள எல்லாரும் போ முடியாதுவே. பாரஸ்ட்காரங்க ரூல் போட்டாங்க. அவங்க சொல்ற எடத்துலதான் மாடு மேயணும்.”

நீரதிகாரம் - 18 - பெரியாறு அணை உருவான நெகிழ்ச்சி சரித்திரம்

“இதென்ன அய்யரே புதுக்கதை? புல்லுல வாயை வச்சிட்டு, நான் மேயலாங்களா எஜமான்னு மாடு கேக்குமா?”

கிறுக்கன் சத்தம் போட்டுச் சிரித்தான்.

“டேய் எகத்தாளமா பேசுற? பாரஸ்ட்டுக்காரன் மாட்ட புடிச்சான்னா அபராதம்தான். அபராதம் கட்டியே உசிரு போயிரும்.”

“அதனால துரை?”

“காட்டுக்குள்ள மாடு மேய்க்க அனுமதி வாங்கணும்.”

“அனுமதின்னா துரை?”

“மாடுங்களுக்குப் புட்டத்துல காய்ச்சுன இரும்புல அச்சு அடிச்சிருப்பாங்கள்ல, சர்க்கார் முத்திரை?”

“ஐயய்யோ, அதெல்லாம் வேணாம். பாவம் வாயில்லா ஜீவனுங்க. புடிக்கிற அன்னிக்கு அபராதம் கட்டிக்கிறேன்.”

“டேய்! சர்க்கார் உத்யோகஸ்தன் புடிச்சுப் பழகிட்டான்னா, தோணுற நேரம் பூராம் வந்துருவான். ஒண்ணும் யோசிக்காத.”

“ஒரே பேச்சா வேணாம் அய்யரே.”

அய்யருக்குக் கோபம் வந்தது.

“அப்போ ஒண்ணு செய். ஒரு தாளுல கைநாட்டு வச்சுக்கொடு.”

“எதுக்குத் துரை?”

“நீதான் பெத்த புள்ளைங்களுக்குச் சூடு போடற மாதிரி மாட்டுக்கு முத்திரை போட வேணாம்னு சொல்ற இல்லை? அதுக்குத்தான்.”

“கைநாட்டு வெச்சா?”

“கைநாட்டு வெச்சா காட்டுல எத்தன ஆடு மாடுகளை வேணா மேய்க்க விடலாம். எந்தக் காட்டுக்குள்ளயும் உன்னைப் பாக்குற சர்க்கார் உத்யோகஸ்தன் கவர்ன்மென்ட் ஆளுன்னு கம்ம ஒடுங்காம போயிருவான்.”

“புரியலை அய்யரே?”

“பாரஸ்ட்காரன்கிட்ட கையெழுத்து வாங்கித் தந்துர்றேன். ஆனா பேயத்தேவா, பத்து நாளு வீட்ட விட்டுப் போக முடியாது.”

“ஏதாவது புரியற மாதிரி சொல்லுங்க. இல்ல நாங்க கெளம்புறோம்.”

“இரு அப்பு. ரொம்பல்லாம் வலிக்காது. காய்ச்சின இரும்புல தோள் பட்டயில அமுத்துவாய்ங்க. புண்ணு ஆற பத்து நாளாகும். அதுக்குத்தான் சொன்னேன்.”

“காய்ச்சின இரும்பா?” பேயத்தேவன் கத்தினான்.

“ஆமாம்ப்பு. மாட்டுக்கு முத்திரை வேணாம்னா மனுசனுக்குப் போடச் சொல்லிடுச்சே பிரிட்டிஷ் சர்க்காரு. ஒவ்வொரு மாடா புடிச்சி போடறதுக்கு, ஒரு ஆளுக்கு முத்திரை போட்டு, அவன்கூட எத்தன மாடுன்னாலும் அனுப்பலாம்னு சொல்லிட்டாங்க. காய்ச்சின இரும்பு மேல பட்டா என்ன? மாடுன்னாலும் மனுசன்னாலும் சர்க்கார் முத்திரை இருந்தா எட்டு ஊரும் விட்டெறிக்கும்ல. சொல்லு, முத்திரை உனக்கா, ஒம் மாட்டுங்களுக்கா?”

பேயத்தேவன் முகம் வெளுத்து நின்றான்.

பனையேறி கிறுக்கன் கள்ளுப்பானையைத் தூக்கிப்போட்டு உடைத்தான்.

- பாயும்