மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 21 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம் - 21
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம் - 21

பல்லக்குத் தூக்கிகள் டோலிகளைக் கீழிறக்கிவிட்டு, குழந்தைகளைக் கையில் பிடித்தவாறு அந்தப் பெண்ணைச் சூழ்ந்தனர்.

நீரதிகாரம் - 21 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

”அசையாம நில்லுங்க” இருட்டிலிருந்து வெடித்தெழுந்தது ஒரு குரல்.

அனைவரும் சிறுத்தையைப் பார்த்து சர்வ நாடியும் ஒடுங்கியிருந்தார்கள். எடித்தின் அருகில் சிறுத்தையைப் பார்த்து, பென்னி குதிரையிலிருந்து மின்னலென இறங்கியிருந்தார். ஜார்ஜியானா ஒரு காலை டோலிக்கு வெளியில் போட்டிருந்தாள், குதிக்கும் எத்தனிப்பில்.

குரல் சிறுத்தைக்குப் பின்னாலிருந்து வருகிறதென்பதை உணர்ந்தாலும், பார்வை சிறுத்தையின் மேலிருந்து நகரவில்லை. ஜார்ஜியானாவுக்கு மூச்சு நின்றுவிட்ட பிரமை.

‘‘அடியெடுத்து வைக்காதீங்க. அசையாம அவங்கவங்க அப்படியே நில்லுங்க. அது பாட்டுக்கு அது வழியில போய்க்கிட்டே இருக்கும்” தீர்க்கமாகச் சொன்னது அதே குரல். ஒரு பெண்ணின் குரல்.

நீரதிகாரம் - 21 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

சிறுத்தையின் மின்னும் கண்கள் தன் முன்னால் இருப்பவர்களைக் கடந்து தொலைவில் பார்த்துக்கொண்டிருந்தன. ஒருவரையும் பொருட்படுத்தாத சிறுத்தை, பாதையிலிருந்து விலகி நடந்தது. அசையாமல் நின்ற தூளியில் இருந்த எடித், திடீரென்று குரலெடுத்து அழுதது. தன்னருகில் எழுந்த சத்தத்தில் லேசாகத் திரும்பிய சிறுத்தை, சின்ன உதாசீனத்தைக் காட்டிவிட்டு முன்னேறிச் சென்றது.

நின்ற இடத்திலேயே உறைந்திருந்தவர்கள், சிறுத்தை தங்களைக் கடக்கும்வரை மூச்சுவிட மறந்தனர். சிறுத்தை அருகிலிருந்த ஓடையொன்றைத் தாவிக் குதித்து, காட்டுக்குள் மறைந்தோடியது.

“எடித்..!” ஜார்ஜியானா டோலியிலிருந்து குதித்தோடினாள்.

குழந்தையை அள்ளியணைத்து முத்தமிட்ட அவளின் கண்களில் நீர் பெருகியது. எடித்தின் அழுகுரல் கேட்டவுடன் டோராவும் லூசியும் அழுதனர்.

குரல் வந்த திசைக்கு பென்னி விரைந்தார்.

வெண்ணிற அங்கியில் கையில் திருமறையுடன் கழுத்தில் சிலுவை கோத்த நீண்ட சங்கிலி தொங்க ஓர் இளம்பெண் நின்றுகொண்டிருந்தாள்.

“கன்னி மாதாவைப்போல் எங்களைக் காத்தருளிய தேவதையே” பென்னி இரு கை குவித்து வணங்கினார்.

எடித்தை அள்ளியணைத்த ஜார்ஜியானா பென்னி அருகில் ஓடிவந்தாள்.

“இந்த நடுக்காட்டுக்குள் எங்களைக் காத்த இறைத்தூதர் நீதானம்மா” குழந்தையுடன் வணங்கினாள்.

பல்லக்குத் தூக்கிகள் டோலிகளைக் கீழிறக்கிவிட்டு, குழந்தைகளைக் கையில் பிடித்தவாறு அந்தப் பெண்ணைச் சூழ்ந்தனர்.

“இந்த நடுக்காட்டில், இருட்டுவேளையில் எப்படி வந்தீங்க? நீங்க வரவில்லையென்றால் எங்க நிலையை நினைத்துப் பாக்கவே முடியலை. நீங்க யார்?” பென்னி கேட்டார்.

“என் பெயர் எஸ்தர்.”

பென்னி எஸ்தரைப் பார்த்த வியப்பிலிருந்து மீளாமலேயே கேட்டார், “நடுக்காட்டுல எப்படித் திடீர்னு வந்தீங்க?”

“திடீர்னா? நான் காலையில இருந்து உங்ககூடத்தானே வர்றேன். வட்டக்கானல்ல டீ எஸ்டேட்ல வேலைக்குப் போற ஜனங்ககூடத்தான் நானும் இருந்தேன்.”

நீரதிகாரம் - 21 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“எங்க கண்ணுலயே படலையே?”

துயர ஓவியமொன்றின் பளீரிடும் விழிகளாய், எஸ்தரின் விழியிரண்டும் திகைத்து, பின் புதிர்ப் புன்னகை காட்டின.

“எல்லாம் முன்னாடி போயிட்டு இருக்கும்போது நீங்க மட்டும் எப்படித் திரும்ப வந்தீங்க?”

“என்னோட பைபிள் மழையில நனைஞ்சிடுச்சி. நாம ஒதுங்கியிருந்த பாறையில் ஈரம் காயட்டுமேன்னு ஓரமா பிரிச்சி வச்சிருந்தேன். மேஸ்திரி சத்தம் கொடுத்தவுடனே அப்படியே கிளம்பிட்டேன். கொஞ்ச தூரம் போனபிறகு ஞாபகம் வந்துச்சி. பைபிள் எடுக்கலைன்ன ஒடனே திரும்பிட்டேன். அப்பத்தான் உங்க முன்னாடி சிறுத்தை நின்னுக்கிட்டிருந்ததைப் பாத்தேன்.”

“நல்லவேளை நீங்க பைபிளைத் தேடி வந்தீங்க. அதுசரி, சிறுத்தையைப் பாத்து உங்களுக்கு பயம் வரலையா?”

“சிறுத்தையோ, புலியோ மனுஷங்களை அடிக்கவே அடிக்காது. பெரும்பாலும் நம்மள பொருட்டாக்கூட நினைக்காது.”

“சின்னப் பொண்ணு உனக்கென்னம்மா தெரியும்? சிறுத்தை இந்தக் கழுதப் பாதையில எத்தன பேர அடிச்சுக் கொன்னிருக்கு தெரியுமா? புலி மனுஷன் கழுத்தப் புடிச்சி இழுத்துக்கிட்டுப் போறத எத்தினி பேர் பார்த்துட்டு வந்து சொல்லியிருக்காங்க. அதனாலதான் இந்தக் கழுதப் பாதையில தனியாப் போகாம நாங்கல்லாம் கும்ப கும்பலாப் போறது” பல்லக்குத் தூக்கி ஒருத்தன் சொன்னான்.

“யாராவது புலி அடிச்சிது, சிறுத்த அடிச்சிதுன்னு சொன்னாங்கன்னா, பெரும்பாலும் அவங்க எங்கியாவது கேட்ட கதையா இருக்கும். சிறுத்தையும் புலியும் மனுஷங்களைக் கொல்லணும்னு நினைக்கறதே இல்லை. இப்பல்லாம் எல்லாக் காட்டுலயும் வெள்ளக்காரங்க துப்பாக்கியோட வேட்டையாடுறதுல அதுங்க மனுஷங்களப் பாத்தாலே ஒதுங்கிப் போயிடுதுங்க. குட்டியோட வர்ற சிறுத்தையோ புலியோ குட்டிக்கு ஏதும் ஆபத்து வந்துடுமோன்னு பயந்துபோய்த்தான் மனுசங்களைத் தாக்கும். நாய், பூனைக்குக்கூட அந்தக் கோபம் இருக்குமே! கோழி? குஞ்சைத் தூக்குனா எப்படிச் சீறிக்கிட்டு வரும்?” எஸ்தரின் குரலில் அனுபவம் தெரிந்தது.

“உனக்கெப்படி காடுபத்தி இவ்ளோ விஷயம் தெரியும்?” ஜார்ஜியானா வியப்பாய்க் கேட்டாள்.

“பசுமலையில் இருந்து எங்களோட திருச்சபையைச் சேர்ந்த பாதிரியாருங்க, அனுமந்தன்பட்டிக்குப் போவாங்க. அங்க ஒரு கோயில் கட்டுறாங்க. பெரும்பாலும் இந்த வழியாத்தான் போவாங்க. அவங்களுக்கு இந்த மலையைப் பத்தியும் காட்டப் பத்தியும் எல்லாந் தெரியும். அவங்கதான் சொல்வாங்க. காட்டுல நடக்கும்போது எந்த விலங்கு வந்தாலும் பயப்பட வேண்டியதில்லை. யானை வந்தா மட்டுந்தான் கவனமா ஒதுங்கிக்கிடணும்னு.”

“நீ தனியாவா போற? எங்க போற?” ஜார்ஜியானா.

“அனுமந்தன்பட்டிக்குப் போறேன்.”

“அனுமந்தன்பட்டியா?” ஜார்ஜியானாவுக்குள் உற்சாகமெழுந்தது.

“அங்க என்ன விஷயமாப் போறேன்னு தெரிஞ்சுக்கலாமா?”

எஸ்தர் நிமிர்ந்து ஜார்ஜியானாவைப் பார்த்தாள். அவளிடம் சொல்லலாமா என்ற தயக்கம் சில விநாடிகள் அவள் கண்களில் தோன்றி மறைந்தது.

“மேல்மலைக்குப் போகப்போகிறேன்… அங்கு பேரியாற்றில் அணை கட்டப் போறாங்களாம்.”

பென்னியும் ஜார்ஜியானாவும் ஒருவரை ஒருவர் வியப்புடன் பார்த்தனர்.

“அணை கட்டத் தொடங்கிவிட்டார்களா?” பென்னி ஒன்றுமறியாதவர்போல் எஸ்தரிடம் கேட்டார்.

“தொடங்கப் போகிறார்களாம். பாவப்பட்டவர்களுக்கான இந்த நற்காரியத்திற்கு நிறைய தடைகள் இருக்காம். பாதிரிகள் பேசிக்கொண்டார்கள். ஆனால் அனுமந்தன்பட்டியில் அதற்கான வேலைகள் தொடங்கிவிட்டன. ஊழியம் செய்ய விருப்பமுள்ளவர்கள் செல்லலாம் என்றார்கள். அதனால்தான் கிளம்பி வந்திருக்கிறேன்.”

“நீங்க மட்டுமா?”

``இப்போதைக்கு எங்களுடைய திருச்சபையில் இருந்து நான் மட்டும் வருகிறேன். அனுமந்தன்பட்டியில் நிறைய பேர் இருப்பதாகப் பாதிரி சொன்னார்.”

``பப்பா, இருட்டா இருக்கு, எனக்கு பயந்து வருது” டோரா பாதி அழுகையில் சொன்னாள்.

“தொரை, ரொம்ப இருட்டிடுச்சி. பாதை மாறிட்டோம்னா காட்டுக்குள்ள சிக்கிடுவோம். கெளம்பலாம்.”

பல்லக்குத் தூக்கிகள் தயாராக, ஜார்ஜியானா எஸ்தரைப் பார்த்துத் தயங்கினாள்.

“நீ எப்படி வருவாய்?”

“நான் நடந்துடுவேன். நீங்க டோலியில வாங்க.”

“வேணாம். இருட்டா இருக்கு. நீ டோலியில ஏறிக்கோ. நான் பென்னிகூட குதிரையில வர்றேன்.”

எஸ்தர் மறுத்ததை ஜார்ஜியானா ஏற்கவில்லை. வேறு வழியில்லாமல் எஸ்தர் டோலியில் ஏறினாள்.

பென்னியும் ஜார்ஜியானாவும் பின்னால் வர, குழந்தைகளும் எஸ்தரும் இருந்த டோலிகள் முன்னால் சென்றன. பல்லக்குத் தூக்கிகளுக்கு முகம் அச்சத்தில் உறைந்திருந்தது. ‘முன்னால் போகிற ஆளோட கால ஒத்தி எடுக்கிற மாதிரி பின்னாடியே நடக்கணும்’ என்ற மேஸ்திரியின் கட்டுப்பாட்டை மீறிவிட்ட பயம் ஒரு பக்கம், சரியாகப் பாதையைப் பிடித்து, மலையை விட்டுக் கீழிறங்க வேண்டுமே என்ற கவலை இன்னொரு பக்கம். மேஸ்திரி கோபத்தில் என்ன அடி அடிக்கப் போகிறாரோ என்பதைவிட, இன்றைய கூலியும் கிடைக்காது என்ற வருத்தம் உள்ளே ஓடியது. இத்தனை சிந்தனைகள் அவர்களை அலைக்கழித்தாலும் கால்களின் சீரான ஓட்டத்தில் சிறு குலைவும் இல்லை.

ஜார்ஜியானாவுக்குள் சிறுத்தையைப் பார்த்த பதற்றம் இன்னும் குறையவில்லை. பென்னியின் மார்பில் சாய்ந்தவளுக்குச் சுற்றிலும் கவிழ்ந்துவிட்ட இருள் பேரச்சமாய் உறைந்தது.

“பாதை மாறாமக் கீழ போயிடுவோமா பென்னி?”

“பாதை பயணத்தைத் தீர்மானிக்குதா, பயணம் பாதையைத் தீர்மானிக்குதா?”

“ஓ நோ… உன்னோட தத்துவத்தையெல்லாம் இப்போ ஆராய முடியாது. எனக்கு இன்னுமே நடுக்கம் போகலை. எடித்கிட்ட சிறுத்தை நின்னதப் பார்த்ததும் உயிரே போச்சு.”

“எனக்கும் நடுங்கிடுச்சி. கடவுளின் கிருபை எஸ்தர், தேவவாக்குச் சொல்லி நம் முன்னால் வந்தாள்.”

“அணை கட்டற வேலைக்குப் போறேன்னு கிளம்பி வருதே இந்தப் பொண்ணு? பென்னி, யோசிச்சுப் பாரேன், அணை கட்ட அனுமதி வாங்கறதுக்காகக் கிளம்பிய நாமும், அணை கட்டற இடத்துல தேவ ஊழியம் பார்க்கப் போறதுக்காகக் கிளம்பிய எஸ்தரும் நடுக்காட்டில் சந்திச்சுக்கிறோம். காலம் எவ்வளவு சுவாரசியம் நிரம்பியதா இருக்கு பாரேன்.”

“யெஸ். எங்கெங்கோ யார் யாரோ இந்த நிமிஷம் என்னென்னவோ காரியங்களைச் செய்துகிட்டிருப்பாங்க. ஆனா அதுல ஏதோ ஒண்ணு நம்மகூட சம்பந்தப்படுதே? கோடிக்கணக்கான கருமுட்டையில ஏதோ ஒரு கருமுட்டையில் உயிரணு சேர்ந்து குழந்தை உருவாகிற விந்தைதான்.”

“பென்னி, அதுக்குள்ள அணை கட்டுற முஸ்தீபெல்லாம் ஆரம்பிச்சாச்சா?”

“ஆமாம். மதுரை கலெக்டர் முழுசா அந்த வேலையை ஆரம்பிச்சுட்டாரே? எப்படின்னாலும் ஒப்பந்தம் கையெழுத்தாயிடும்னு நம்புறாங்க. எல்லா சாத்விக முறைகளையும் கம்பெனி கையாளும். கடைசியில் தன்னோட அதிகாரத்தைக் கையிலெடுத்துடும்.”

“அப்டியா... அவ்ளோ உறுதியாச் சொல்றேன்னா இவ்வளவு ஏன் வருத்தப்பட்டாய்? நாமும் ஏன் இப்போ முயற்சி செய்யணும்?”

“பிரிட்டிஷ் அரசாங்கம் நேர்மையான வழியில் ஒப்பந்தம் செய்யணும்னு நானும் ரெசிடெண்டும் நினைக்கிறோம். இரண்டு அரசாங்கங்கள் சம்பந்தப்பட்ட விஷயம். 999 வருஷ ஒப்பந்தம். எதிர்காலத்தில் அரசியல் சூழல்கள் மாறலாம். எல்லாக் காலத்திற்கும் பொருந்திப் போகக்கூடியது மனித மனம் உணரும் நியாயமும் அறமும் மட்டும்தான். அந்தந்தக் காலத்தின் அரசியல் தந்திரங்கள் காலாவதியாகிவிடும்.”

“சரிதான் பென்னி. இரண்டுதரப்பும் மனப்பூர்வமாக ஏற்க வேண்டும். நாம் அதற்கு முயற்சி செய்வோம்.”

மழையின் குளுமையும் இருளும் அடர்ந்திருக்க, பல்லக்குத் தூக்கிகளின் சீரான காலடி யோசைகள் பறவையொன்றின் அகவலோசைபோல் ஒலித்தது.

சப்பரபவனி தேரோட்ட விழாவினை எதிர்கொள்ள அனுமந்தன்பட்டி தேவாலயம் தயாராகிக்கொண்டிருந்தது. மார்கழியின் இனிமையான பனி படர்ந்து, ஊரே குளிர்ந்திருந்தது. யேசுவின் திருத்தூதர் புனித சவேரியாரின் பிறந்த நாள் விழாவிற்காக ஊரே அசாதாரணப் பொலிவுடன் இருந்தது.

இரவு முழுக்க ஓரிடத்திலும் நிற்காமல் விடிய விடிய பயணம் செய்து அனுமந்தன்பட்டி வந்தடைந்தார்கள். கும்பக்கரையில் இருந்து குதிரை வண்டிப் பயணம். ஜார்ஜியானா இரண்டு குழந்தைகளைத் தன் மடியிலும் மார்பிலும் அணைத்துக் கொண்டிருந்தாள். எஸ்தரின் தோளில் அடைக்கலமாகியிருந்தாள் டோரா. குதிரையில் வந்த பென்னியின் மேல்கோட்டு பனி ஈரத்தில் நனைந்து மின்னியது. ஒன்றரை நாள் நீடித்த கடும்பயணத்தின் களைப்பைப் பொருட்படுத்தாது திருவிதாங்கூரிலிருந்து வந்திருந்த சிரியன் பாதிரியாரைப் பார்க்கச் சென்றார் பென்னி.

புல்வெளிக்குள் இருந்த பாறை ஒன்றிலிருந்து மனவேடன் ராஜா ஏறிவந்துகொண்டிருந்தான். அவன் இடுப்பில் காட்டுக் கோழியை வைத்திருந்தான்.

“டேய், இங்க இருக்கேன்” என்றாள் மரத்தின் மீதிருந்த தேவந்தி.

“என்னடா காட்டுக்கோழியை இடுப்புல வச்சிருக்க? அது பொட்டையா, சேவலா?” என்றாள்.

கண்களைச் சுருக்கிப் பார்த்த மனவேடன், “அது பொச்சை நோண்டிப் பாத்துத் தெரிஞ்சுக்க, என்னைய ஏன் கேக்குற? என்னோட மான்குட்டி எங்க?”

”கீழ கட்டி வச்சிருக்கேன்.”

“ஏய், பைத்தியக்கார அக்கா. ‘மானுக்குப் பிராயம் வந்துடுச்சி... கட்டிப் போடாதே’ன்னு சொன்னா கேக்காம, கட்டி வச்சிருக்க. வந்து அவுத்து விடு. கீழ விழுந்து சாகப் போற. மரத்து மேல ஏர்ற வயசா ஒனக்கு. கீழ எறங்கு, இல்ல அப்டியே மரத்துல இருந்து தள்ளி விட்டுடுவேன்.”

“அதைச் செய்யுடா என் ஆசை ராசா. பேரைப் பாரு… மனவேட ராசா.”

“பேரு வச்ச எங்க அப்பன் ஆத்தாள கேளு. பேர் பிடிக்கலைன்னா கூப்பிடாதே.”

‘`ஆமாம். இவரு பெரிய புவனேந்திர (பூஞ்சாறு) ராசா? மூஞ்சியைப் பாரு. கஞ்சிக்கு இல்லாத பய.”

“அதனாலதானே நீ போடுற உப்பில்லாத கஞ்சியக் குடிச்சிக்கிட்டு கெடக்கேன். அப்டியே நீ மரத்துல உக்காந்துக்கினு இரு. நான் கோழிமலைக்குக் கெளம்புறேன்.”

“டேய்... டேய்... நீயும் ராசாதான்டா. கோயில் மலை ராசா. உங்கப்பன் யாரு? நாற்பத்துரெண்டு காணிக்கும் உடையான். வனராஜா. இந்த மன்னான் குடிங்களோட எசமான். அவரோட அறுபது வயசுல பொறந்த கடைக்குட்டியில்ல… நீயும் புவனேந்திர ராசா மாதிரிதான்டா. அவர் தூரத்துல மீனாட்சி ஆத்தங்கரையில இருக்கார். நீ பக்கத்துல பேரியாத்தங்கரையில இருக்க. தூரத்துல இருக்கிறவங்களைவிட பக்கத்துல இருக்கிற நீங்கதான்டா முக்கியம். வா... வா... நான் கீழ எறங்கிர்றேன். இனிமே மரத்துல ஏறல. மனவேட ராசா சொல்லிட்டீங்க. இந்த தந்திரி கேட்டுத்தானே ஆகணும்.”

நீரதிகாரம் - 21 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

மனவேடன் ராஜாவுக்கு இந்தக் கொல்லம் வருஷத்தோடு 12 வயது முடிந்தது. உடையான் ராஜமன்னானின் கடைசி மகன். ராஜமன்னானின் 42 காணிகளுக்கும் குறுக்கும் நெடுக்குமாக ஓடிப்போய் வருவான். மேல்மலையையும் காட்டையும் பேரியாற்றையும் ஓடைகளையும் அவன் காலடிகள் காட்டு விலங்கின் லாகவத்துடன் கடந்தபடி இருக்கும்.

மாதத்தில் முக்கால்வாசி நாள், மங்கலதேவி கண்ணகி கோயிலில் தேவந்திக்கு உதவியாக இருப்பான். கோயிலைக் கூட்டிப் பெருக்குவது, மானைத் துரத்தி விளையாடுவது, கோயிலுக்கு வெளியே இருக்கும் சுனையிலிருந்து தண்ணீர் எடுத்து விக்கிரகங்களைச் சுத்தம் செய்வது, தேவந்தியிடம் கதை கேட்பது, செல்லச் சண்டை போடுவது என்று அவன் நேரம் கழியும். எப்பொழுதாவது அவனுக்கு அவன் அம்மாவின் நினைவு வரும். அதை தேவந்தி கண்டுபிடித்துவிடுவாள்.

“என்ன மனவேட ராசா, ஒன் ஆத்தா நெனைப்பு வந்திடுச்சி போல. ஆளு சொணங்கிட்டீங்களே?”

“இல்லக்கா” என்பான்.

ஆனாலும் தேக்கம் இலையில் கம்மஞ்சோற்றைக் கட்டிக்கொடுத்து, கோயில்மலைக்குச் சென்றுவரச் சொல்லி அனுப்பிவிடுவாள்.

மரத்தில் இருந்து கீழே இறங்கிய தேவந்தி, “ராசா, உன்ன எங்க தேடிப் பிடிக்கிறதோன்னு நெனைச்சிக்கிட்டு இருந்தேன். சரியா நீ பௌர்ணமிக்கு மொத நாளு வந்துட்ட. நெறைய வேலை இருக்குடா. மஞ்சக்கிழங்குகளைப் பறிக்கணும். சோளக் கருது கொஞ்சம் அறுத்துக்கோ. வாழைத் தாரு பழுத்தது, ஒத பருவத்துல இருக்க மாங்காயைப் பறிக்கணும்.”

“எதுக்கு எல்லாரும் பளியன் குடிக்கு வந்திருக்கோம்? உடையானும் வந்திருக்காரு?”

“பளியன்குடி உடையானும், அடுத்து உடையானாக வேண்டிய அவரோட மூத்த மகனும் அடுத்தடுத்து ஏதோ ஒரு சீக்கு வந்து செத்துட்டாங்க. இரண்டாவது மகனுக்குக் காணிப் பட்டம் குடுக்க நம்ம உடையானை வேண்டிக் கேட்டுக்கிட்டாங்க. உடையானும் ஒத்துக்கிட்டார். அத்தோட 42 காணிங்களையும் வரச்சொல்லி, ஒரு பூஜை பண்ணிடலாம்னு சொல்லிட்டார். காலங்காலமா இருக்க இந்தக் காணிங்களுக்கும் கண்ணகி அம்மைக்கும் பேரியாத்துக்கும் ஒரு ஆபத்தும் வந்துடக்கூடாது. இதான் என் வேண்டுதல்” சொல்லும்போதே தேவந்தியின் குரல் உடைந்தது.

அக்காவின் குரல் உடைந்து அழுவது போலிருந்தவுடன் மனவேடன் ராஜா பேச்சை மாற்றினான்.

“முத்தியம்மாவும் கண்ணகி அம்மையும் இருக்கறப்போ நமக்கென்ன கவலை? நீ பயப்படாதேக்கா. என்கிட்ட வில்லும் அம்பும் இருக்கு. யார் வந்தாலும் அடிச்சி விரட்டிடுவேன். மொதல்ல இந்த மானை அவுத்து விடு. அதுக்குப் பிராயம் வந்துருச்சி.”

“கெடாதானேடா, கெடக்கட்டும். இன்னைக்குப் பூஜை முடிச்சிட்டு அவுத்து விட்டுர்றேன். இல்லைனா நான் கெளம்புறப்போ அது எங்க இருக்குன்னு தேடிக்கிட்டுக் கெடக்கணும்” என்றவள் கை நீட்டினாள். இடுப்பில் கட்டியிருந்த காட்டுக் கோழியை மனவேடன் கொடுத்தான். அதன் குதப் பகுதிக்குள் கைவிட்டுப் பார்த்த தேவந்தி, “டேய், இது பொட்டடா, விட்டுடுவோம்” என்றாள்.

‘`கொஞ்ச நாள் இருக்கட்டும்.”

“காட்டுக்குள்ள இருக்கிற சேவல் பூரா வந்துடும். அப்புறம் அதைத்தேடி நரிங்க வரும். தூங்க முடியாது நம்மால.”

‘`சரி. ரெண்டையும் நாளைக்கு விட்டுடுவோம்” என்றான் மனவேடன் ராஜா.

பளியர்குடியின் மலையடிவாரத்தில் உடையான் ராஜ மன்னான் பாறைமீது உட்கார்ந்திருந்தார். பாறையில் நான்குபேர் படுத்துருளும் அளவு இடமிருந்தாலும், அவரைத் தவிர்த்து யாரும் அமரவில்லை. உடையான் ராஜமன்னான் வயது தளர்வையும் கடந்து ராஜதோற்றத்தில் கம்பீரமாக இருந்தார். தலையில் இளம் மூங்கிலால் ஆன கிரீடத்தை அணிந்திருந்தார். நாற்பத்திரண்டு மலைக்கிராமங்களின் காணிகளும் எதிரில் நின்றிருந்தார்கள். குப்பான் காணி, பூஜைக்கான ஏற்பாடுகளை ஒழுங்கு செய்துவிட்டு எல்லாம் தயார் என்பதாக நின்றிருந்தான்.

“எண்ணூறு கடவுள்களும் குடியிருக்கிற புனிதமான இந்த மலையின் அதிபதியான பெருங்கடவுளை வணங்குவோம். எண்திசைக்கும் காவலாய் நின்று நம்மைக் காக்கும் எண்திசைக் கடவுள்களுக்கும் நம்முடைய நன்றியைத் தெரிவிப்போம்.”

ராஜமன்னான் பெருத்த குரலில் சொன்னவுடன், கூடியிருந்த நாற்பத்திரண்டு காணிகளும் சேர்ந்து நின்று வணங்கினர்.

நான்காள் உயரம் வளர்ந்திருந்த ஈட்டி மரத்தின்கீழ், முத்தியம்மையின் உருவம் வைத்திருந்தார்கள். பட்டாடையில் அம்மனை அலங்கரித்துக் காட்டு இலைகளையும் பூக்களையும் சூடியிருந்தார்கள். முத்தியம்மையின் பிரதிமையை வருஷத்திற்கு ஒருமுறையோ இரண்டு முறையோதான் வெளியில் எடுப்பார்கள். அறுவடை நாள் முடிந்து தானிய தவசம் வைத்து, கடவுளுக்கு நன்றி சொல்லும் நாளன்றும், ஊரில் நோய் நொடி வந்து அடுத்தடுத்து துர்மரணங்கள் நேரும் காலங்களிலும்தான் பிரதிமையை வெளியில் எடுத்து வருவார்கள்.

மண்ணைக் குழைத்து மூதாதையர் வடித்திருந்த முத்தியம்மையை அதன்பின் பச்சைக் கசவில் (பட்டு) சுருட்டி, காட்டுக்குள் நான்கு முக்கிய காணிகள் மட்டும் அறியும் ஒரு மரப்பொந்துக்குள் மறைத்து வைத்துவிடுவார்கள். முத்தியம்மைக்குத் தினம் பூஜைகளும் வழிபாடும் கிடையாது. காணி ஜனங்களுக்குப் பிரச்சினை எனும் நிலையில்தான் முத்தியம்மை வெளியில் வருவாள்.

தேவந்தி வந்து சென்ற பிறகு, ராஜமன்னானும் யோசித்தபடி இருந்தார். பேரியாற்றின் போக்கைத் திசை திருப்புவதும் அங்கு அணை கட்டுவதும் தங்கள் குடிகளின் அழிவு என்பது மட்டும் உறுதியாகத் தெரிந்தது அவருக்கு. அடுத்த அமாவாசைக்கு நேர்ச்சையென்று நாற்பத்திரண்டு காணிகளுக்கும் சேதி சொல்லிவிட்டார். பிறகு, ஏசாத்து காணிகளின் கீழ்மலையில் இருக்கும் பளியர் காணியில் உடையானுக்குக் காணிப் பட்டம் கொடுப்பதற்காக முழுநிலவு நாளில் பூஜையை வைத்துக்கொள்ளச் சொன்னார். ராஜமன்னான் இன்னொரு இனத்தின் உடையானுக்குக் காணிப் பட்டம் சூட்டுவது இதுவே முதல்முறை.

நாற்பத்திரண்டு காணிகளிலும் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அவரவர்கள் முடிந்த தானிய தவசங்களையும் காலணா, அரையணா துட்டுகளையும் கொடுத்தனுப்பியிருக்க, காணிகள் ராஜமன்னானோடு பளியன் குடியில் கூடியிருந்தார்கள். தேவந்தியும் பெண்களோடு அமர்ந்திருந்தாள்.

கோரைப் புற்களைக் கொளுத்தி நெருப்பும் வெளிச்சமும் உண்டாக்கியிருந்தார்கள். மார்கழியின் முழு நிலவு பனிபோர்த்திக்கொண்டதில், கோரைப் புற்களின் வெளிச்சம் பளீரென்று இருந்தது. அடர்ந்த காட்டின் இருளும் பனியும் போட்டிபோட்டு வெளிச்சத்தை விரட்டப் போராடின.

பாறைக்குக் கீழே பளியர் பெண்கள் கைகூப்பியபடி நின்று கொண்டிருந்தனர். மாராப்பு போட்டிருந்த இளம்பெண்களின் சேலைகளை முதுபெண்டிர் தளர்த்திவிட்டனர்.

பாறையில் அமர்ந்தபடி தன்னைச் சுற்றி நிற்பவர்களை ஒவ்வொருவராக நிதானமாகப் பார்த்த தேவன் ராஜமன்னான், “காணிப் பதவியை ஏத்துக்கிறட்டுமா இந்த நாயன் பளியன்?’’ என்று கேட்டார்.

தேவன் ராஜமன்னானின் குரல் எல்லோரையும் சேர்ந்தடைந் திருக்காது என்று நினைத்த அமைச்சர் வெள்ளையன், “யப்பா, உடையான் ராஜமன்னார் கேட்கிறார். இந்தா நிக்கிற நாயன் பளியனுக்குக் காணிப் பதவியைக் கொடுத்துடலாமான்னு.”

“உடன்படுறோம்” கூடியிருந்தவர்கள் ஒருமித்த குரலில் சொன்னார்கள்.

“பளியன்குடியின் மூப்பன் நாயன் இனிமே பளியன்குடியின் உடையானாக இருப்பான். நம்மைச் சுத்தியிருக்கிற எண்ணூறு தெய்வங்களையும் எண் திசைகளையும் காவக்காக்கிற சாமிங்களையும் பொதுவா வச்சி, அவங்க சார்பா இந்த வனராஜா இதைச் சொல்றேன். பளியன் குடி ஜனங்க இனிமே மூப்பன் நாயனுடைய வாக்குக்குக் கட்டுப்பட்டு நடக்கணும்.”

பளியன் குடி ஜனங்கள் இரு கை குவித்து உடையானைப் பார்த்து வணங்கி நின்றனர். நாயன், ராஜமன்னான் முன் மண்டியிட்டு அமர்ந்தான்.

உடையான் தன்னருகில் நின்றிருந்த ஒரு காணியை நோக்கிக் கை நீட்டினார்.

பளியன் குடியின் நாயன், ஒரு மர ஈட்டியை ராஜமன்னானிடம் நீட்டினான். கறுப்பு நிறத்தில் நான்கடி இருந்த கம்பின் முனையில் கூரிய ஈட்டி செருகியிருந்தது. கம்பைத் தடவிப் பார்த்த ராஜமன்னான், “என்ன குளுமை, கருங்காலிதானே?” என்றார்.

“இல்ல உடையான்.”

“என்னடா சொல்ற? நெறம் ரொம்பக் கறுப்பாயிருக்கு? கருங்காலி இல்லைன்றே? தண்ணிக்குள்ள ரொம்ப நாள் கெடந்து கறுப்பாயிட்ட தேக்குல செஞ்சதா?”

“இல்ல உடையான்.”

‘`யோவ் அரியான். நீதான் கூட்டத்துல வயசாளி. சொல்லுடா, இது எதுல செஞ்சதுன்னு.”

ராஜமன்னான் கொடுத்த கறுப்பு ஈட்டியை வாங்கித் தடவிப் பார்த்த அரியான் என்ன நினைத்தானோ, மோந்து பார்த்தான். “ஓ இதுவா?” என்றான் அரியான்.

“யோவ் அரியான், நான் ஐம்பது வருசமா காணியா இருக்கிறவன். எனக்குத் தெரியாத காட்டு ரகசியம் ஒண்ணுமில்ல, அது கருங்காலிதானே? பெருசா மோந்து பாத்துக்கிட்டு இருக்க?” என்றார்.

ராஜமன்னானை மறுத்துச் சொல்ல வேண்டுமா என்று அரியான் தயங்கினான்.

“என்னய்யா அரியான்? பட்டம் கட்டணும். சீக்கிரம் சொல்லு.”

“உடையான், இது இடி விழுந்த சந்தன மரத்துல செஞ்சது.”

உடையானுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“உடையானே தடுமாறுறாரே? குச்சி ஊனுற வயசுல புள்ளைய பெத்துட்டாரு. ஆனா இந்தக் காட்டுலயே கெடக்குற மரம் என்ன மரம்னு சொல்லத் தெரியலையே?”

பளியர் வீட்டுப் பெண்கள் வாய்விட்டுச் சிரித்தார்கள்.

“யாருடி அது பொம்பள சிறுக்கி அங்க கிக்கிப் பிக்கின்னு சிரிக்கிறது?”

உடையானுக்குக் கோபம் வந்தது. வயது கூடியதில் தடுமாற்றம் வருகிறது என்பது புரிந்தாலும், காணிகள் முன்னால், அதுவும் பளியர் குடி பெண்கள் முன்னால் தான் சுதாரிப்பாக இல்லாமல்போனதை நினைத்துச் சங்கடப்பட்டார். தன் பலவீனம் வெளிப்பட்ட கோபம் அவர் வார்த்தையில் வெடித்தது.

“உடையான், சிறுக்கின்னுல்லாம் பேசாதீங்க. எங்களுக்கும் வலிய கோவம் வரும் பாத்துக்கிடுங்க” ஓர் இளம்பெண் பதில் பேசினாள்.

“யாருடி அவ சிறுக்கி, உடையானை எதுத்துப் பதில் பேசுறது?”

குப்பான் சீறினான்.

“குப்பான் காணி… ரொம்பத் துள்ளாதே. உங்க ராஜமன்னானைவிட நாங்க முந்தி வந்தவங்க. இந்த மலையிலயே பூர்வ குடிக. அதனால எங்க ஊர்ல அடக்கிப் பேசுங்க. வயசாளிங்கிற பேர்ல கூடக் குறையப் பேசக்கூடாது. சிறுக்கியாம்ல சிறுக்கி. என்ன தைரியத்துல பளிய வீட்டுப் பொட்டச்சிங்கிறாரு.”

தன் மரியாதையுடன் உடையானின் மரியாதையையும் இளம்பெண் காயப்படுத்தியதாக நினைத்த குப்பான், “உடையான் பேரைச் சொல்லிக் கூப்பிட்டதும் இல்லாம மட்டு மரியாதை இல்லாம அவர கேலியும் கிண்டலும் செய்றீங்க? அதுவும் நேத்துப் பொறந்த பொம்பள சிறுக்கிங்க.”

நிலைமை விபரீதமாவதை உணர்ந்தாள் தேவந்தி.

“ஆசயி (அழகி), பேசாம இருக்க மாட்டீயா?” எனக் கேலி பேசிய பெண்ணை அடக்கிவிட்டு, உடையானைப் பார்த்துப் பேசினாள்.

“உடையான், நாம வந்த காரியமென்ன? நான் நெருப்பு மேல நிக்கிற மாதிரி இருக்கேன். அதுக்கு ஒரு வழியப் பாருங்க.”

உடையானும் ஆசுவாசப்பட்டார்.

“ஈட்டியைக் கொடுப்பா.”

அரியானிடமிருந்து ஈட்டியை வாங்கி, எழுந்து நின்ற உடையான், எண்திசை பார்த்து உயர்த்திய ஈட்டியுடன் வணங்கினார். இரு கைகளையும் உயர்த்தி முத்தியம்மையையும் வணங்கி, ஈட்டியை மூப்பன் நாயனிடம் கொடுக்கப் போனார்.

அப்போது புழுதியைக் கிளப்பிய குதிரைகளின் குளம்போசை மேலெழ, வந்து நின்றது பூஞ்சாறு அரசரின் சாரட் வண்டி.