மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 22 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

திருவிதாங்கூர் அரசருடன் நடந்த பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகள் பற்றி எனக்குத் தெரியாது. கடந்த ஆறு மாதங்களாக நடக்கும் சேதிகளைத்தான் நான் அறிவேன்

“மகாராஜா விசாகம் திருநாளின் பேரன்புக்குரிய தம்புராட்டியைச் சந்திக்க உனக்கு விருப்பமில்லையா கோட வர்மா?” பந்தள அரசர் ராஜசேகரா கேட்டார்.

தம்புராட்டி லெட்சுமி கொச்சம்மை பந்தளம் கொட்டாரத்துக்கு வந்திருக்கிறார் என்று சேடிப் பெண் சேதி சொல்லிய கணம், பூஞ்சாறு அரசர் கோட வர்மாவுக்குள் சங்கடம் எழுந்தது. அணை கட்டுவதற்கு இடம் கொடுப்பது தங்களின் கடமை என்று பந்தள அரசி அம்பாலிகா எடுத்துச் சொல்லிய பாங்கில் எல்லோரும் உறைந்திருந்த தருணத்தில், தம்புராட்டி லெட்சுமி கொச்சம்மையின் வருகை, நல்ல விருந்துண்டவருக்கு இறுதியில் கசப்பைக் கொடுப்பதைப்போல் விரும்பாத நிகழ்வாகியிருந்தது. பாகீரதி மட்டுமே அவள் அம்மையைக் காணும் அன்பில் விரைந்தோடினாள்.

“தம்புராட்டியைச் சந்தித்து என்ன பேசப் போகிறேன் தம்புரானே?”

“தம்புராட்டியின் நோக்கத்தில் கசடிருக்க வாய்ப்பில்லை. தம்புராட்டி எதையுமே சீர்தூக்கி ஆராய்பவர். தரவாட்டின் புகை எதுவும் அவரின் எண்ணத்தில் படிவதில்லை.”

இப்பதிலில் உடன்படுகிறாரா, மறுக்கிறாரா என்பதை வெளிக்காட்டாமல் கோட வர்மா இறுகிய முகத்துடன் அமர்ந்திருந்தார்.

நீரதிகாரம் - 22 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

பாகீரதி உள்ளே வந்தாள். அவள் முகத்தில் சட்டென்று கூடிவந்திருந்த பிரகாசத்தை வியப்புடன் பார்த்தார் கோட வர்மா.

“இந்தப் பெண்களுக்கு மட்டும் எண்ணெயும் திரியும் இல்லாமலேயே முகம் சுடர்விடும் வித்தை கைகூடிவிடுகிறது. அதுவும் அம்மாச்சிகளைப் பார்த்தால் அச்சுடரின் பொலிவை விவரிக்க முடியாது.”

“பூஞ்சாறு அரசர் சொல்வது உண்மைதான். மனம் குழம்பி இருக்கிற இந்த நேரத்தில் என்னுடைய அம்மாச்சி வந்ததும், மனசின் பாரமெல்லாம் காணாமல் போன உணர்வு.”

பாகீரதி ராஜசேகராவுக்குப் பதில் சொன்னாலும் அவள் தன் தம்புரானின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தாள். கோட வர்மாவோ பாகீரதியை நிமிர்ந்து பார்க்கவில்லை.

“என் அம்மாச்சியுடன் சில மணித்தியாலங்கள் நான் செலவிட வேண்டும். தம்புரான் காத்திருக்கிறீர்களா? என்னிடம் பேசிவிட்டு தம்புராட்டி தங்களையும் சந்தித்துப் பேச நினைக்கிறார்.”

பாகீரதி தன்னை நினைத்துக் கவலை கொள்வதை, அவள் குரல் உணர்த்தியதை உணர்ந்த கோட வர்மா, “நீ சென்று பேசிவிட்டு வா பாகீரதி. நான் பந்தளத்து அரசருடன் பேசிக்கொண்டிருக்கிறேன். தம்புராட்டிக்கு என் வணக்கத்தைச் சொல்லு” என்றார்.

பாகீரதி தயங்கினாள்.

“தங்களிடம்…” பாகீரதி முடிக்கும் முன்பே, ராஜசேகரா குறுக்கிட்டார்.

“கோட வர்மா, நம்மைத் தேடி நம் கொட்டாரம் வந்திருக்கும் தம்புராட்டியை வரவேற்று, உபசரிப்பதுதான் நடைமுறை. வந்திருப்பது தம்புராட்டி மட்டுமல்ல, உன் மனைவி பாகீரதியின் அம்மாச்சி. நாம் இருவருமே சென்று சந்திப்போம், வா” என்று சொல்லி, எழுந்து நின்றார். கோட வர்மா உடன் எழுந்து நின்றாலும், அவர் முகத்தில் இன்னும் தயக்கம் மண்டியிருந்தது.

பந்தள அரசர் ராஜசேகரா திருவிதாங்கூர் லெட்சுமி கொச்சம்மை இருந்த அறை நோக்கி நடந்தார்.

முதலில் யார் பேசத் தொடங்குவதென்ற தயக்கம் அறையெங்கும் ஊர்ந்தது. சந்தன நிறப் பட்டாடையில், வணங்கச் சொல்லும் கம்பீரத்துடன் லெட்சுமி கொச்சம்மை அமர்ந்திருந்தாள். அவளருகில் பாகீரதியும், பாகீரதியின் அருகில் அம்பாலிகாவும் அமர்ந்திருக்க, லெட்சுமி கொச்சம்மையின் வலப்புறமிருந்த ஆசனங்களில் பந்தள அரசரும் பூஞ்சாறு அரசரும் அமர்ந்திருந்தனர். பாதி அருந்தப்பட்டிருந்த பானங்கள் மீதமிருக்க, பேச்சுகளால் நிரம்ப வேண்டிக் காத்திருந்தன குவளைகள்.

“பேரியாற்றில் அணை கட்ட இருக்கும் விவரம் முழுவதுமறிந்த தம்புராட்டி, அந்த இடம் பூஞ்சாறு அரசருக்குச் சொந்தமான இடமென்று பிரிட்டிஷ் ரெசிடென்ட்டிடம் சொல்லியிருக்க வேண்டும்.” தாயைப் பார்த்த பரவசத்திலிருந்து மீண்டிருந்த பாகீரதி, பூஞ்சாறு அரசரின் மனவுளைச்சலைச் சொன்னாள்.

“திருவிதாங்கூர் அரசருடன் நடந்த பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகள் பற்றி எனக்குத் தெரியாது. கடந்த ஆறு மாதங்களாக நடக்கும் சேதிகளைத்தான் நான் அறிவேன்.”

“அப்போதாவது சொல்லியிருக்க வேண்டுமல்லவா? திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குக் கட்டுப்பட்ட சிற்றரசர்தானே என்ற அலட்சியம்தானே தம்புராட்டிக்கு?”

பாகீரதியை நிமிர்ந்து பார்த்த லெட்சுமி கொச்சம்மைக்கு மகளின் உணர்வுகள் புரிந்தன.

“கொச்சு மோளே! பல வருஷங்களாக நடந்துவரும் விவகாரம். அரசரின் திடீர் மறைவுக்குப் பின்னால்தான் எல்லாம் கேட்டறிந்தேன். ஏராளமான சிக்கல்கள். நான் உடனடியாகப் பந்தளம் கிளம்பி வந்ததற்கும் காரணம் இருக்கிறது. திவான் ராமய்யங்கார் கவர்னரைச் சந்திக்க மெட்ராஸ் பிரசிடென்சிக்குச் சென்றிருக்கிறார். அதற்குள் சமஸ்தானத்தின் ரெசிடென்ட் `இந்த மாதத்திற்குள் ஒப்பந்தம் கையெழுத்தாக வேண்டும், வேண்டிய ஏற்பாடுகளைச் செய்யுங்கள்’ என்று நினைவூட்டி அவர் உதவியாளர்களைத் தொடர்ந்து அனுப்பிக் கொண்டிருக்கிறார். ரெசிடென்டிடம் நாம் எந்தக் காரணங்களையும் சொல்லி, நீண்ட நாள்கள் தள்ளிப்போட முடியாது. கட்டப்போகும் அணை பற்றிய விவரங்களையும், அணை கட்டுமிடத்தையும் ஆய்வு செய்ய ராயல் இன்ஜினீயர்களை அனுப்பச் சொல்லிக் கேட்டிருக்கிறேன். திவான் கவர்னரைச் சந்தித்து என்ன முடிவோடு வருவார் என்று தெரியவில்லை. அதற்குள் நமக்கு நெருக்கடியைக் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ரெசிடென்ட் நேற்றுக் காலை அவரின் செயலாளரையே அனுப்பி வைத்துவிட்டார்.”

தம்புராட்டி பேசியதை நிறுத்தியதும், என்ன என்பதுபோல் அனைவரும் நிமிர்ந்து பார்த்தார்கள்.

“நம் சமஸ்தானத்தின் கோரிக்கைகளை உடனடியாக எழுத்துபூர்வமாகத் தரச்சொல்லிக் கேட்டனுப்பியிருக்கிறார்.”

“அரசர் விசாகம் திருநாள் ஜீவிதத்தில் இருக்கும்போதே விவாதித்ததுதானே?” ராஜசேகரா சந்தேகம் கேட்டார்.

“திருவிதாங்கூர் அரசர் வைத்த கோரிக்கை களின் முழு விவரம் தெரியாது. திவான் ஒருவருக்குத்தான் தெரியும். திவான் கவர்னரைச் சந்தித்துவிட்டு இரண்டொரு நாளில் திருவிதாங்கூர் திரும்பிவிடுவார். அரசர் மூலம் திருநாளும் திருவிதாங்கூரில் இல்லை. அவர் அஞ்சுதெங்கு சென்றிருக்கிறார். அவருக்கும் சேதி அனுப்பியிருக்கிறேன். எனக்கு மிகவும் மனக்குழப்பம். பிரிட்டிஷ் சர்க்கார் நம்மை நெருக்குகிறதோ என்று. நூற்றைம்பது வருஷங்களுக்கு முன்பு மார்த்தாண்ட வர்மா, அவரைச் சூழ்ந்த எதிரிகளை நியாயமான வழியில் வீழ்த்தி, உருவாக்கின சமஸ்தானம் இது. நம்மைச் சுற்றியிருந்த சமஸ்தானங்களெல்லாம் ஐரோப்பியர்கள் வசம் சென்றுவிட்டன. திருவிதாங்கூர் சமஸ்தானத்தை நம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதே பெரும் சவாலாக இருக்கிற இந்தக் காலகட்டத்தில், அணை கட்டும் பிரச்சினையைக் காரணம் வைத்து, சமஸ்தானத்தை அபகரிக்க பிரிட்டிஷார் குறி வைக்கிறார்களோ என்ற அச்சம் உண்டாகிறது. பிரிட்டிஷாரைப் பகைக்கக் கூடாது என்பதற்காக நம்முடைய உரிமையையும் விட்டுவிடக்கூடாதே? அணை கட்டுகிறோம் என்று சொல்லிவிட்டு, பேரியாறே எங்களுக்குத்தான் சொந்தம் என்று உரிமை கொண்டாட ஆரம்பித்துவிட்டார்கள் என்றால்?”

“அணை கட்டப்போகும் இடமே பூஞ்சாற்றுக்குத்தானே சொந்தமானது? தம்புராட்டி வசதியாக அதை மறந்துவிட்டீர்களே?”

பாகீரதியின் குரலில் தெரிந்த கோபம் பார்த்து, தம்புராட்டி அதிர்ந்தார்.

“யாருடைய இடமென்பதைத் தீர்மானமாக உன்னால் சொல்ல முடியுமா பாகீரதி?”

“ஓ, தம்புராட்டிக்கு அப்படியொரு சந்தேகம் இருக்கிறதா?” கோட வர்மாவின் குரலில் எகத்தாளம் தெரிந்தது. அவரே பேச்சைத் தொடர்ந்தார்.

“மேல்மலையில் கால்படாத சமஸ்தானத்தின் அரசனல்ல நான். மேல்மலையின் ஒவ்வொரு குன்றும் என் கால்பட்டது. என் குதிரைகள் ஏறி இறங்காத சிறு குன்றும் மேல்மலையில் இல்லை. பூஞ்சாற்று சமஸ்தானத்தின் எல்லை எது என்பது அதன் அரசனான எனக்கு நன்கு தெரியும். மேல்மலையின் காற்றுக்கும் பொருள் சொல்ல முடியும் என்னால்.”

“ஜான் மன்றோ என்ற பிரிட்டிஷ்காரர் வாங்கிய தேயிலைத் தோட்டத்திற்கு மேலொப்பம் செய்தது திருவிதாங்கூர் அரசர்தான் தம்புராட்டி, மறந்துவிட்டீர்களா?” பூஞ்சாறு அரசர் சார்பாகப் பந்தள அரசர் பேசினார்.

“ஓ, பந்தள அரசருக்கும் கோபம் இருக்கிறதோ?”

“இல்லாமல்?... பந்தள அரசர் என்று சொல்லிக்கொள்ள இந்தக் கொட்டாரமும், சபரிமலை சாஸ்தாவுக்கான திருவாபரணப் பெட்டியும்தான் என்னிடம் மிஞ்சியிருக்கின்றன. ராஜ்ஜியம் முழுக்க திருவிதாங்கூர் பத்மநாபதாசர்கள் தங்கள்வசமாக்கிக் கொண்டார்களே!”

நேரடியான தாக்குதலுக்கு என்ன பதில் சொல்வதென்று லெட்சுமி கொச்சம்மை திகைத்தாள். ராஜ்ஜிய தந்திரங்கள் மகாராஜாக்களின் பிரஸ்தாபங்களே. பெண்களின் கொட்டாரத்திற்குச் சேதி வந்து சேர்வதற்குள், சேதியின் பரபரப்பு போய், பொலிவிழந்துவிடும். கேட்பதற்கே சுவாரசியம் குறைந்துவிடும்.

நீரதிகாரம் - 22 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“பூஞ்சாறு அரசர் தொடர்புடைய ஜான் மன்றோ விவகாரம் முடிந்துபோனது. பந்தளத்துப் பிரச்சினையும் ஆறிய கஞ்சிதான். திப்பு சுல்தானுடன் நடந்த போர்களில் பந்தளத்து அரசர் கொடுக்க வேண்டிய நிலுவைக்காக பந்தளத்தை திருவிதாங்கூர் சுவீகாரம் எடுத்துக்கொண்டது. இனி இதுபற்றிப் பேசினாலும் ஒன்றும் பலன் இல்லை. பேச வேண்டியது பேரியாற்று அணை விவகாரம்தான்” அம்பாலிகா தெளிவாகப் பேசினாள்.

“தம்புராட்டி மனம் வைத்தால், பந்தள ராஜ்ஜியம் மீண்டும் எங்கள் கைக்கே வரும்.”

“கட்ட வேண்டிய நிலுவையை எப்போது செலுத்துகிறீர்களோ, அப்போதே உங்கள் ராஜ்ஜியத்துக்கான உரிமை உங்களை வந்தடையும் பந்தள அரசே.”

அம்பாலிகாவும் ராஜசேகராவும் ஒருவரையொருவர் பார்த்தனர். ‘என்னைச் சாதாரணமாக எடைபோட்டுப் பேசிவிடாதீர்கள்’ என்ற எச்சரிக்கையை வெளிப்படுத்திவிட்ட பூரிப்பு லெட்சுமி கொச்சம்மையிடம் நிறைந்தது.

“சபரிமலை தேவஸ்தான உரிமையை மீண்டும் எங்களிடமே திரும்பக் கொடுங்கள். இரண்டே வருஷத்தில் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குக் கொடுக்க வேண்டிய நிலுவையைச் சக்கரம் பாக்கியின்றித் தருவோம்.” பாண்டிய வம்சாவளியில் வந்தவன், வெறும் சிற்றரசன்தானே எனக் கணக்குப் போட்டுவிடாதீர்கள் என்ற சுதாரிப்பு வந்தது ராஜசேகராவுக்கு.

பாகீரதி பயந்தாள். முடிந்துபோன பழைய பிரச்சினைகளையெல்லாம் ஒன்று சேர்த்துப் பேச்சை வளர்த்தால் இருக்கும் பிடிமானமும் போய்விடப்போகிறதே என்று பதறினாள்.

“தம்புராட்டி, எங்களைத் தேடி வந்த நோக்கம் சொல்லுங்கள். நாங்கள் பந்தளத்தில் இருக்கிறோம் என்ற சேதி எப்படியறிந்தீர்கள்?”

“பந்தள அரசரைச் சந்தித்துப் பேசிவிட்டுப் பூஞ்சாறு அரசரை அழைத்து வர வீரர்களை அனுப்பலாம் என்ற எண்ணத்துடன்தான் கிளம்பி வந்தேன். பந்தளத்தை நெருங்கும்போதே வீரர்கள் சொல்லிவிட்டார்கள், பூஞ்சாறு அரசரும் பாகீரதியும் பந்தளம் வந்திருக்கும் சேதியை.”

“தம்புராட்டி என்னைப் பார்க்க வந்த நோக்கம்?”

“திருவிதாங்கூர் அரசர் மூலம் திருநாள் அஞ்சுதெங்கு சென்றிருக்கிறார். திவானும் ஊரில் இல்லை. இந்த இடைவெளியைப் பயன்படுத்திக்கொண்டு, ரெசிடென்ட் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கோரிக்கைகளை எழுத்துபூர்வமாகக் கேட்டனுப்பியிருக்கிறார். மகாராஜா உடனே சமஸ்தானத்திற்கு வருவாரா என்பது ஐயம்தான். அவர் வடசேரி கார்த்தியாயினியைச் சந்திக்கச் சென்றிருக்கிறார்.”

“அவர்களிருவருக்கும் இன்னும் தொடர்பிருக்கிறதா?”

“இல்லாமல்? இளைய ராஜா, அரசராக முடிசூட்டிக்கொண்ட அன்றும் வந்திருந்தாள். அரசரும் எத்தனை நாள் தனித்திருக்க முடியும்? மூலம் திருநாளுக்கு மனைவி வேண்டு மென்பதைவிட, திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் அரசருக்குத் தம்புராட்டி அவசியம் வேண்டும்.”

“ஆமாம், தம்புராட்டி வந்தவுடன் உங்கள் சமஸ்தானத்தின் தர்பார் மண்டபத்தில் அழைத்து உட்கார வைக்கப்போகிறீர்களா? ஐரோப்பியத் தூதுவர்கள் வந்தாலும், மற்ற அரசர்கள், சிற்றரசர்கள் சந்திக்க வந்தாலும் அரசியின்றி அரசர் மட்டும் சந்திக்கும் வழக்கம்தானே உங்களிடம்? அரசரின் பிள்ளைகளுக்கு அவள் அம்மாச்சி, அவ்வளவுதான். வேறென்ன மரியாதை இருக்கிறது உங்கள் அரசிகளுக்கு? அரசரையே பிறர் முன்னால் அரசியால் நேருக்கு நேர் பார்க்கக்கூட முடியாது.”

பாகீரதியின் குரலில் சலிப்பும் வெறுப்பும் சேர்ந்திருந்தன.

“பூஞ்சாறு கொலுமண்டபத்தில் என் மகள் பாகீரதி, அரசருக்கு இணையாக அமர்கிறாள் என்பதில் மகிழ்கிறேன்.”

“என்ன உதவி, என்ன வேண்டும் என்பதை தம்புராட்டி வெளிப்படையாகச் சொல்ல வேண்டும்.”

“பந்தள அரசே, நீங்கள் உடனடியாக அஞ்சுதெங்கு செல்ல வேண்டும். அரசர் மூலம் திருநாளைச் சந்தித்து, சமஸ்தானத்தின் சார்பில் என்னென்ன கோரிக்கைகள் கொடுக்கலாமென்று பேசி அறிந்து வர வேண்டும்.”

“இதென்ன புது உத்தியாக இருக்கிறது? நான் உதவுவேன் எனத் தம்புராட்டிக்கு நம்பிக்கை வந்ததற்குக் காரணம்?”

“தம்புரான், அரை நாழிகைக்கு முன் நாம் பேசிக்கொண்டிருந்ததற்கு வலுச் சேர்ப்பதுபோலவே இருக்கிறது தம்புராட்டியின் வருகையும் கோரிக்கையும். எதிரிகள் இல்லாத நேரத்தில் நாம் நமக்குள்ளான கோபதாபங்களுடன் இருக்கலாம். ஆபத்தென்று வரும்போது அதையெல்லாம் ஒத்திவைத்துவிட வேண்டும். மறுப்பொன்றும் சொல்லாமல் நீங்கள் செல்ல வேண்டும்.” ராஜசேகரா மறுத்துவிடுவாரோ என்ற அச்சத்தில் அம்பாலிகா உடனே குறுக்கிட்டாள்.

“அக்காளைச் சந்திப்பதற்கு முன்பு தம்புராட்டி வந்திருந்தால் எங்கள் நிலைப்பாடே வேறாக இருந்திருக்கும்.”

`அப்படியா?’ என்பதுபோல் பாகீரதியைப் பார்த்தாள் லெட்சுமி கொச்சம்மை.

ராஜசேகரா பதிலொன்றும் சொல்லாமல் அமைதியாக யோசனையில் இருந்தார்.

“தம்புரான் அமைதியாக இருப்பதன் காரணம் புரியவில்லையே? நான் கட்டாயப்படுத்துவதாக நினைக்கிறீர்களா?”

“தம்புராட்டி கட்டாயப்படுத்தவும் உரிமை கொண்டவர்தான். கட்டாயப்படுத்தும் முறையை வைத்துதான் அதன் முகம் மாறும். இதில் நியாயமான கோரிக்கையே உள்ளடங்கியிருக்கிறது. திருவிதாங்கூரின் கோரிக்கையை உறுதி செய்வதோடு, பிரிட்டிஷ் சர்க்காருடன் பிரச்சினையின்றி பேரியாற்று அணை கட்டும் ஒப்பந்தம் பற்றிப் பேசி முடிக்கவே நினைக்கிறேன். அணை கட்ட வேண்டியது முக்கியம்.”

அம்பாலிகாவின் முகத்தில் நிம்மதி பரவியது.

“நானும் பூஞ்சாறு அரசருமே இணைந்து அஞ்சுதெங்குக் கோட்டைக்குச் செல்கிறோம். அவருக்கும் மன வேற்றுமை இல்லையென்பதைச் சொல்ல ஒரு வாய்ப்பு.”

“நான் மேல்மலைக்குச் செல்கிறேன்.”

“நீயும் உடன் வரலாமே கோட வர்மா?”

“மன்னிக்க வேண்டும் தம்புரான், ஏற்கெனவே திட்டமிட்ட பயணம்.”

“சரி, நான் மட்டும் இன்றே புறப்படுகிறேன்.”

“இப்போதே புறப்படலாம் அரசே.” அம்பாலிகாவின் வேகம் பார்த்து லெட்சுமி கொச்சம்மைக்கு ஆறுதலாக இருந்தது.

“பாதிரியாரைச் சந்தித்தேன். மகாராஜா மூலம் திருநாள் அஞ்சுதெங்குக் கோட்டைக்குச் சென்றிருக்கிறாராம். அவருடைய காதலியைச் சந்திக்கும் ஏற்பாடாம். இருவரின் உறவிலும் சிறு இடைவெளி இருக்கிறதாம். மூத்த மகாராஜா விசாகம் திருநாளின் திடீர் மறைவு, மூலம் திருநாளை நிலைகுலைய வைத்துவிட்டதாம். மன அமைதிக்காகத்தான் அஞ்சுதெங்கு சென்றிருக்கிறாராம். நாம் அங்கு சென்று சந்திக்க வேண்டுமா என்பதை யோசித்துக்கொள்ளச் சொன்னார்.”

பாதிரியாரைச் சந்தித்துவிட்டு வந்த பென்னி, ஜார்ஜியானாவிடம் சொன்னார்.

பயணக் களைப்பில் குழந்தைகள் மூன்றுமே உறங்கிக்கொண்டிருந்தன. ஜார்ஜியானா குளித்துத் தயாரானவுடன் களைப்பு நீங்கி, பூத்த புதுமலராக இருந்தாள்.

“நீ என்ன நினைக்கிறாய் ஜார்ஜி?”

“முயற்சியெடுப்பது என்று கிளம்பிவிட்டோம். தயக்கமே வேண்டாம் பென்னி. பாதிரியிடம் சொல்லிவிடுங்கள். நாம் அவசியம் சென்று பார்க்கலாம். குழம்பிக்கொண்டிருப்பதற்கு முயற்சி எடுப்பது எவ்வளவோ மேலானது.”

“அஞ்சுதெங்குக் கோட்டைக்கு நீயும் வருகிறாய்தானே? மகாராஜாவைச் சந்திப்பதில் உனக்கொன்றும் தயக்கமில்லையே?”

பென்னி கேட்பதன் காரணத்தை ஜார்ஜியானா அறிவாள்.

ஜார்ஜியானாவுக்கு இந்திய அரசர்களை நேரில் சந்திப்பதில் விருப்பம் இல்லாததோடு அச்சமும் இருந்தது. ஒருமுறை விடுமுறைக்காக பென்னியுடன் பணிபுரிந்த ராயல் இன்ஜினீயர் ஜேக்கப், அவரின் மனைவி ஜூலி, ஜார்ஜியானா எல்லாரும் சேர்ந்து புனே சென்றிருந்தார்கள். பென்னி புனே பகுதியில் வெகு பிரபலம். பென்னியின் தந்தையும் அவருடைய சகோதரரும் சில்லியன்வாலா போரில் ஒன்றாக மரணித்ததில், பிரிட்டிஷ் அரசாங்கம் அவர்கள் குடும்பத்திற்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தது. போரில் உயிர்நீத்த தியாகிகள் குடும்பம் என்பதில் தனித்த மரியாதையும் இருந்தது.

பென்னி தன் குடும்பத்துடன் தன்னுடைய வீட்டில் தங்கிக்கொள்ள, நண்பர் குடும்பத்தினருக்கு அந்தப் பகுதி அரசரின் விருந்தினர் மாளிகையில் தங்குவதற்கு ஏற்பாடு செய்திருந்தார். அவர் பெரிய சமஸ்தானபதி. பிரிட்டிஷ் ராணுவத்தில் கௌரவ ராணுவ கர்னல் பதவி அவருக்குத் தரப்பட்டிருந்தது. ஒன்பது குண்டு முழங்கக் கொடுக்கப்படும் வரவேற்புக்குத் தகுதியானவர் என்ற மரியாதையை பிரிட்டிஷ் அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனாலும் தனக்குப் பதினொரு குண்டு மரியாதை வேண்டுமென்று வைஸ்ராய்க்குத் தொடர்ந்து கடிதம் கொடுத்துக் கொண்டிருந்தார். அவருடைய மாளிகையே அவரின் செல்வச் செழிப்பைச் சொல்லும். தினம் அவரின் மாளிகையில் நடைபெறும் இரவு விருந்தும் கேளிக்கையும் பிரபலம். பென்னி கேளிக்கைகளில் விருப்பம் கொண்டவரல்ல என்பதால், அவர் ஒருபோதும் சென்றதில்லை.

ராயல் இன்ஜினீயர் ஜேக்கப் விருந்தினர் மாளிகையில் தங்கியிருந்த வேளையில் நடந்த இரவுக் கேளிக்கையில் அவரும் அவர் மனைவியும் கலந்துகொண்டனர். விருந்தினர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து நலம் விசாரித்துக் கொண்டிருந்த மகாராஜா, ஜூலியின் அருகில் வந்திருக்கிறார். “மேம் சாகிபாவுக்கு எங்க ஊர் பிடிக்குதா?” என்றொரு சம்பிரதாயமான கேள்வியைக் கேட்டுப் பேச்சைத் தொடங்கியிருக்கிறார்.

ஜூலி மரியாதை நிமித்தமாக அவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, விலையுயர்ந்த நகையொன்றை அரசர், ஜூலியின் கழுத்தில் அணிவித்திருக்கிறார். அணிவிக்கும்போது அரசரின் கை அவளது கழுத்திலும் மார்பிலும் அழுத்தியதைச் சாதாரணமாக நினைக்க முடியவில்லை. பதறிய ஜூலி எழுந்து நின்றதைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு அவளது கையைப் பிடித்து, “சும்மா உட்காருங்க” என்று நாற்காலியில் அமர வைத்தார்.

“நகை எப்படியிருக்கிறது? பிடித்திருக்கிறதா? நாளை வேறொன்று தருகிறேன். நீங்கள் இங்கு தங்கும் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு நகை உண்டு” என்று சொல்லி, கண்ணடித்துச் சிரித்திருக்கிறார்.

அந்தப் பெண் இந்திய அரசர்களின் நடவடிக்கைகளைப் பற்றிக் கேள்விப்பட்டி ருந்தாலும், தன்னிடம் இப்படி நடந்து கொண்டதைப் பார்த்து அதிர்ந்தாள்.

‘`மகாராஜா சாகிப், உங்கள் அன்பிற்கு நன்றி. உங்கள் பரிசளிப்பின் நோக்கம் என்னவென்று என்னால் யூகிக்க முடிகிறது. நான் வேறு மேசைக்குச் செல்ல விரும்புகிறேன், வழிவிடுகிறீர்களா?” என்றாள்.

``லேடி ஜூலி, என் அன்பைக் காட்டவே நகை கொடுத்தேன். இது சாதாரண நகையில்லை. என் மூதாதையர்கள் போட்டிருந்த எங்கள் குடும்பத்தின் பூர்வீக நகை. உங்களையும் எங்கள் வீட்டுப் பெண்போல நினைப்பதால் தந்தேன். உங்கள் கணவரிடம் நான் சொல்லிக் கொள்கிறேன். நான்கு குழந்தைகள் பெற்றும் வடிவாக இருக்கிறீர்கள். உங்களின் கழுத்து மச்சத்திற்குக் கீழ் சரியாக இந்தக் கழுத்துச் சங்கிலி உட்கார்ந்திருக்கிறது” என்றார்.

“சாகிப், நான் இந்தத் தேசத்தில் பிறந்து வளர்ந்தவள். உங்களைப் போன்றவர்களின் நோக்கம் என்னவாக இருக்கும் என்பதைக் கேள்விப்பட்டிருக்கிறேன். இப்போது நானே நேரில் பார்த்துத் தெரிந்துகொண்டேன். என் கணவர் நன்றாகச் சம்பாதிக்கிறார். ராணுவ இன்ஜினீயர், பொதுப் பணித்துறையில் வேலை பார்க்கிறார். தன் துறையில் பல சிறப்புகளைப் பெற்றவர். உங்களுக்கு ஒன்றைச் சொல்ல வேண்டும். அவர் ராணுவத்தில் உங்களைவிட கீழ் நிலையில் பிரிவெட் கர்னலாகத்தான் இருக்கிறார். ஆனாலும் கர்னலாக இருக்கும் உங்களுக்கு வழங்கப்படும் சம்பளத்தைவிட ஐந்து மடங்கு அதிகம் வாங்குவார். ஐரோப்பியப் பெண்களென்றால் பணத்தையும் நகையையும் காட்டி, நீங்கள் கூப்பிட்டவுடன் வந்துவிடுவார்கள் என்று தவறாகப் புரிந்துவைத்திருக்கிறீர்கள் சாகிப். இப்போது நினைத்தாலும் என்னால், இந்த இரவு விருந்துக்கு வந்திருக்கிற அனைவர் முன்பும் உங்களை அவமானப்படுத்த முடியும்.”

மகாராஜாவின் முகம் வெளிறியது. ஜூலி கழற்றிக் கொடுத்த நகையை வாங்கிப் பையில் போட்டுக்கொண்டு நகர்ந்தார்.

ஐரோப்பியப் பெண்களென்றாலே ஒழுக்க வரையறைக்குள் இல்லாதவர்கள் என்ற ஆழமான புரிதல் இந்திய ஆண்களுக்கு இருப்பதை ஜூலியின் அனுபவத்திலிருந்தும் பென்னி கேட்டறிந்த அனுபவங்களிலிருந்தும் ஜார்ஜியானா அறிந்திருக்கிறாள்.

“ஜார்ஜி, திருவிதாங்கூர் மகாராஜா மூலம் திருநாள், தன் சமஸ்தானத்து மக்கள் தவறாக நினைத்துக்கொள்வார்களே என்ற அச்சத்தில் தன் காதலைக்கூட மறைத்து வைத்திருக்கிறார். மென்மையான மனசுக்காரராகத்தான் இருக்க வேண்டும்.”

“எனக்கொன்றும் தயக்கமில்லை பென்னி. நீங்கள்தான் என்னுடன் இருக்கிறீர்களே? அரசரைவிட அவருடைய காதலியை முதலில் சந்தித்தால் என்ன?”

“இருவரும் ஓரிடத்தில்தான் இருக்கிறார்கள். சூழல் எப்படி அமைகிறதென்று அங்கு சென்று பார்ப்போம்.’’

“மகாராஜா காதலியுடன் இருக்கும்போது, அணை கட்டும் திட்டம் பற்றிப் பேசச் செல்கிறோம். நம் நிலையை நினைத்தால் எனக்கே புதிராக இருக்கிறது.”

“பலநேரங்களில் நாம் வரையறுத்துக்கொள்ளும் இலக்குகளே நம் தோளில் அமர்ந்து நம் சுமையாகிவிடும். நமக்கு நேர்ந்திருப்பது அதுதான். வேறு வழியில்லை. நாம் ஏற்றுக்கொண்ட காரியம். செய்து முடிப்போம்.”

நீரதிகாரம் - 22 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“நிச்சயம் பென்னி. உன்னுடைய இலக்கு உன் சொந்த வாழ்க்கைக்கானது அல்ல என்பதில் ஆறுதல் கொள்வோம். மக்களின் துயர் துடைக்கும் நம் நோக்கத்திற்கு இறைவனின் கிருபை நிச்சயம் கிடைக்கும்.”

“கார்த்தியாயினி நாகர்கோவிலில் பிறந்து வளர்ந்தவராம். நன்றாக ஓவியம் வரையக் கூடியவராம். மதுரா டிஸ்டிரிக்ட்டில் பஞ்சம் வந்தபோது திருநெல்வேலிப் பகுதிகளுக்கும் மக்கள் குடும்பம் குடும்பமாகப் பஞ்சம் பிழைக்கச் சென்றிருக்கிறார்கள். மதுரைப் பகுதி ஜனங்கள் கஞ்சிக்கே வழியில்லாமல் காட்டுச் செடிகளைப் பறித்துத் தின்பதையும் மலாயா, பர்மா என்று கூட்டம் கூட்டமாகப் பிழைக்கப் போவதையும் கேள்விப்பட்டிருக்கிறாராம். எலும்புக்கூடுகள் போலக் குழந்தைகளையும் பால்வற்றிப்போன மார்புகளுடன் உள்ள பெண்களையும் படமாக வரைந்து வைத்திருக்கிறாராம். அவருக்குப் பஞ்சத்தின் துயரம் புரியும். ஜார்ஜி, இன்னொரு புதிரையும் கவனித்தாயா?”

“என்ன பென்னி?”

“மகாராஜா மூலம் திருநாளைச் சந்திக்க அஞ்சுதெங்கு செல்கிறோம். அஞ்சுதெங்குக் கோட்டையைத்தான் பிரிட்டிஷாரிடமிருந்து மகாராஜா கேட்டுக்கொண்டிருக்கிறார். அஞ்சுதெங்குக் கோட்டை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு மிகவும் நெருக்கமானது. ராசியானது என்று நினைப்பார்கள். இந்தியா வுக்குள் வர்த்தகம் செய்ய கடற்கரையோரம் அமைதியான இடமொன்றைத் தேடி அஞ்சுதெங்குக் கோட்டையிலிருந்து கிளம்பிப் போன கோகன் பிரபுதான் மெட்ராஸ் செயின்ட் ஜார்ஜ் கோட்டை உள்ள பகுதியை மானியமாக வாங்கினார். அதனால் மெட்ராஸ் கோட்டைக்குச் சமமாக அஞ்சுதெங்குக் கோட்டையை நம் கம்பெனியும் அரசியும் நினைக்கிறார்கள். அஞ்சுதெங்குக் கோட்டையைத் தர முடியாது என்றவுடன் தலைச்சேரிக் கோட்டையைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்.”

“இவ்வளவு எதிர்நிலைகள் நிரம்பிய சூழலில் முயற்சி செய்வதே அந்தக் காரிய சித்திக்கான உத்வேகமாகப் பார்க்கிறேன் பென்னி.”

“தட்ஸ் குட். இதான் என் ஜார்ஜி.”

ஜார்ஜியானாவை அணைத்துக்கொண்டார் பென்னி.

“புரிதல் கொண்ட வாழ்க்கைத்துணை எவ்வளவு பலம்?” பென்னியின் குரல் நெகிழ்ந்தது.

ஜார்ஜியானா பென்னியின் கை கோத்துக் கொண்டாள்.

“இன்னொரு முரணும் இருக்கு ஜார்ஜி?”

“இன்னும் என்ன?”

“அஞ்சுதெங்குடன் பாதிரிக்கு என்ன தொடர்பென்று தெரியுமா?”

ஜார்ஜியானா கேள்விக்குறியுடன் பார்த்தாள்.

“கம்பெனி தன் வியாபாரத்தைத் தக்க வைக்க அஞ்சுதெங்குவைக் கொடுக்க மறுக்கிறது. கம்பெனி வர்த்தகத்திற்குச் சமமாக ஏசு சபை பாதிரிகள் மிளகு, ஏலம், கிராம்பு வர்த்தகம் செய்கிறார்கள். அந்தவகையில்தான் பாதிரிகளுக்குச் சமஸ்தானத்து மகாராஜாக்களும் மகாராணிகளும் நெருக்கமாக இருக்கிறார்கள். அதுவும் அனுமந்தன்பட்டி, வெற்றிலை வர்த்தகத்திற்குப் பெயர்போனது. பாதிரிகள் மக்களைக் கிறிஸ்துவ நெறிக்குக் கொண்டு வருவதோடு வர்த்தகமும் செய்து வருகிறார்கள். நான் சந்தித்த பாதிரி உப்பு வர்த்தகம் செய்பவர். வர்த்தக விஷயமாய் அஞ்சுதெங்கு முதல் அனுமந்தன்பட்டி வரை சென்று வருகிறவர். மகாராஜாவின் காதலியைப் பழக்கி வைத்திருக்கிறார். உப்பு வணிகம் கம்பெனியின் ஏகபோக உரிமை. கம்பெனியின் மோனோ பொலியை மீறி வர்த்தகம் செய்பவர்கள் நமக்கு உதவுகிறார்கள் என்று தெரிந்தால், என்மேல் தனியாக ஒரு விசாரணை நடத்தினாலும் நடத்துவார்கள்.”

“என்னது, விசாரணையா?”

``அரசாங்க காரியத்தில் அனுமதியின்றி நாம் ஈடுபடுவதும், பிறரை ஈடுபடச் செய்வதும் தவறுதானே?”

“தெரிந்துமா செய்கிறாய் பென்னி?”

“விசாரணை வருவதற்குள், அணை கட்ட ஒப்பந்தத்தில் கையொப்பம் வாங்கிவிடலாம் ஜார்ஜி.”

``பாதிரியாரை எப்படிச் சம்மதிக்க வைத்தாய்?”

“எல்லாம் தெரிந்துகொண்டால் என்ன சுவாரசியம் இருக்கும்?” பென்னியின் குரலில் கேலி தெரிந்தது.

“இன்று மாலையே பயணம் தொடங்கலாம்தானே லெப்டினென்ட் கர்னல் பென்னி?”

இருவரும் திரும்பிப் பார்க்க, பாதிரியார் நின்றுகொண்டிருந்தார்.

-பாயும்