மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 25 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

கவர்னரின் கடிதத்திற்கிணங்க சாம்சன் விடுதலை செய்யப்பட்டான். ஆனாலும் தங்கள் சமஸ்தானத்தின் நியாயத்தை விட்டுத்தர விரும்பாமல், திவான் மீண்டும் கவர்னருக்குக் கடிதம் எழுதினார்.

திருவிதாங்கூர் ரெசிடென்ட் ஹானிங்டன் தன் முன்னால் நிற்கும் சாம்சனைப் பார்த்தார். சாம்சன் திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் வேலை பார்க்கும் பிரிட்டிஷ் பிரஜை. மிளகு விற்பனைக் கிடங்கில் வேலை பார்க்கிறான். மூன்றாண்டுகளுக்கு முன் சாம்சன், சமஸ்தானத்தின் மிளகுக் கிடங்கிலிருந்து விற்பனையான மிளகு மூட்டைகளுக்குச் சரியான வரவுசெலவு கொடுக்கவில்லை. சமஸ்தானத்தின் ஊழியனாகச் சேரும்போதே தனக்கு ஊதியம் தேவையில்லை, தங்குமிடமும் உணவும் கொடுத்தால் போதும் என்று சொல்லி, வந்தவன். பிழைத்துக்கொள்வதற்காக ஊழியம் செய்ய விரும்புகிறான் என்றெண்ணி, சமஸ்தானத்தின் காரியக்காரன், சாம்சனைப் பணிக்குச் சேர்த்துக்கொண்டான். கிடங்கென்றாலே பெருச்சாளிகள் வந்துசேர்ந்துவிடும்தானே. சாம்சன் அந்தக் கிடங்கின் கொழுத்த பெருச்சாளியானான்.

மிளகை விற்பனைக்காகக் கிடங்குக்குக் கொண்டுவரும் விவசாயிகள் ஒவ்வொருமுறையும் தங்கள் மூட்டைகளின் எண்ணிக்கை குறைபடுவதை நினைத்துக் கவலை கொள்வார்கள். மாட்டுவண்டியில் ஏற்றும்போது இருபது மூட்டையாக இருப்பது, கிடங்கில் இறக்கி வைத்துக் கணக்குப் பார்த்தால் பதினெட்டாகவோ, பத்தொன்பதாகவோ இருக்கும். மூட்டைகளை விற்பனைக்கு அனுப்பும் கிடங்கின் குமாஸ்தா, நூறு மூட்டை, இருநூறு மூட்டை என்று ஏற்றும்போது, கட்டாயம் ஐந்து, பத்து குறைகிறதே என்று பயந்தான். சாம்சன் கவனமாக இரண்டு தரப்பிலும் மூட்டைகளைக் களவாடி, அவன் தனியாக வியாபாரம் செய்திருக்கிறான். கிடங்கின் ஐந்து வருஷ லாபத்தைவிட, இருமடங்கு அவன் வருமானம் பார்த்திருக்கிறான். கிடங்குக்கு வரும் மூட்டைகளை அவன் சொல்லி மறைத்து வைத்து, உதவி வந்த உள்ளூர் ஊழியன் ஒருவன், அபினி சாப்பிட இரண்டு அணா கேட்டபோது கொடுக்கவில்லை என்பதற்காக, சமஸ்தானத்தின் காரியக்காரனிடம் போய் விஷயத்தைச் சொல்லிவிட்டான். விசாரணையில், சாம்சன் லண்டனில் பெரிய பங்களா வாங்கும் அளவிற்குச் சம்பாதித்திருப்பது தெரியவந்தது.

நீரதிகாரம் - 25 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

திவான் ராமய்யங்கார், அவனைக் கைது செய்யச் சொல்லியிருந்தார். சமஸ்தானத்தின் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு அவனுக்கு இரண்டாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. அதில்தான் பிரச்னை வெடித்தது. மேன்மைதாங்கிய பிரிட்டிஷ் பேரரசியின் பிரஜைக்கு, பிரிட்டிஷ் சர்க்காரை அனுசரித்து நடந்துகொள்ளும் திருவிதாங்கூர் சமஸ்தானம் எப்படித் தண்டனை கொடுக்கலாம்? லண்டனில் இருக்கும் பிரிட்டிஷ் இந்திய அரசாங்கச் செயலர், மெட்ராஸ் கவர்னருக்குக் கடிதம் எழுதி, மெட்ராஸ் கவர்னர் உடனடியாகச் சிறைத் தண்டனையை ரத்து செய்து, சாம்சன் விடுதலை செய்யப்பட வேண்டுமென்று திவானுக்குக் கடிதம் அனுப்பினார். தங்களின் நிர்வாகத்திலும் பிரிட்டிஷ் சர்க்கார் தலையிடுகிறதே என்று திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குப் பேரதிர்ச்சி.

கவர்னரின் கடிதத்திற்கிணங்க சாம்சன் விடுதலை செய்யப்பட்டான். ஆனாலும் தங்கள் சமஸ்தானத்தின் நியாயத்தை விட்டுத்தர விரும்பாமல், திவான் மீண்டும் கவர்னருக்குக் கடிதம் எழுதினார். அதில், சாம்சன் பிரிட்டிஷ் பிரஜையாக இருந்தாலும் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ஊழியன். எங்களின் சட்டதிட்டங்களுக்குக் கட்டுப்பட்டவன் என்று விளக்கம் சொல்லியிருந்தார். மெட்ராஸ் கவர்னர் திவானின் கடிதத்தை மெட்ராஸ் பிரசிடென்சியின் அட்வகேட் ஜெனரலுக்கு அனுப்பினார். அட்வகேட் ஜெனரல் வழக்கை முழுமையாகப் படித்துப் பார்த்து, மெட்ராஸ் கவர்னரின் உத்தரவு சட்டப்படி தவறென்று கடிதம் எழுதினார். எந்தத் தேசத்தில் வாழ்கிறோமோ அந்தத் தேசத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுத்தான் நடக்க வேண்டும். அவரவர் சொந்த தேசத்தின் சட்டதிட்டங்களை, குடியேறிய நாட்டில் எதிர்பார்க்கக் கூடாது என்று கருத்துச் சொன்னார். தன்னுடைய நண்பரும் சட்ட வல்லுநரும் சொன்ன கருத்தை அப்படியே ஏற்றுக்கொண்ட மெட்ராஸ் கவர்னர், சாம்சனுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை அங்கீகரிப்பதாகக் கடிதம் அனுப்பினார். சாம்சன் மீண்டும் கைது செய்யப்பட்டான்.

குற்றங்கள் செய்ய, நிர்வாக ஓட்டைகளைக் கண்டறிபவனுக்கு சட்டத்தின் ஓட்டைகளைக் கண்டறிவதும் சாத்தியம்தானே? கவர்னரின் மறு உத்தரவை ரத்து செய்யக்கோரி, சாம்சன் இந்தியாவின் வைஸ்ராய்க்குக் கடிதம் எழுதிவிட்டான். புதிய முடிவொன்றைச் சொல்லி, மெட்ராஸ் கவர்னருக்கு வைஸ்ராய் கடிதம் அனுப்பி, இப்போது ரெசிடென்ட்டிடம் நடவடிக்கைக்காக வந்திருக்கிறது.

“இருக்கும் வேலைகளில் உன்னைச் சிறையில் இருந்து விடுவிப்பதும், மீண்டும் கைது செய்வதுமாக... இரண்டு சர்க்காரும் உன்னைத் தொட்டுக் கடிதம் எழுதிக்கொள்வதே பெரிய வேலையாகிவிட்டது” என்றார் ஹானிங்டன்.

மூன்றாவது முறையாக விடுதலை செய்யப்பட இருப்பதில், சாம்சனின் உடல்மொழியில் பணிவில்லை. கழுத்து விடைத்து மேல் நோக்கிப் பார்த்தவாறு ஹானிங்டன் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தான்.

ஹானிங்டனுக்கு அடுத்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பேஷ்கர் திவான் ராமா ராவ் உட்கார்ந்திருந்தார். சமஸ்தானத்தின் வரி வசூல் வருவாய்களை நிர்வகிக்கும் ராமா ராவ், ராமய்யங்காரின் நிழல் போன்றவர். அய்யங்கார் அறியாமல் ஒரு வார்த்தையும் பேசிவிட மாட்டார். மெலிந்த தேகத்திற்கு, மேல் கோட் அநாவசியம் என்பதுபோல் அவர் உடலோடு ஒட்டாமல் தனித்து நின்றது. காதில் வைரக் கடுக்கண் மின்னியது. நெற்றியில் இட்டிருந்த நாமத்தின் நடுவில் சிறு சந்தனப் பொட்டு அவர் முகத்திற்குப் பொலிவைக் கொடுத்தது.

“உங்கள் திவான் மெட்ராஸ் பிரசிடென்சியில் இருந்து இன்னும் திரும்பவில்லையா? ரெசிடென்ட்டுக்குத் தெரியாமல் ரகசியங்கள் பெருகிவிட்டன மிஸ்டர் ராவ்?”

“யுவர் எக்ஸலென்ஸி... ரகசியமெதுவுமில்லை. திவான் அவர்கள் தன்னுடைய சொந்த வேலையாகத்தான் சென்றிருக்கிறார்.”

ஹானிங்டன் ராமா ராவைக் கூர்ந்து பார்த்தார்.

“பிரிட்டிஷ் சர்க்காரின் பார்வை அறியாமல் ஒரு அணுவும் அசையாது மிஸ்டர் ராவ். உங்கள் திவான் அரக்கோணம் சென்று ஹிஸ் எக்ஸலென்ஸி மெட்ராஸ் கவர்னரைச் சந்தித்துவிட்டு, இப்போது வேங்கடகிரி மகாராஜாவுடன் மெட்ராஸ் திரும்பிக் கொண்டி ருக்கிறார். அவர் ஏன் ஹிஸ் எக்ஸலென்ஸியைச் சந்திக்கச் சென்றார் என்பதும் எனக்குத் தெரியும்.”

இல்லாத காரணங்களை விவரிக்க ராமா ராவ் விரும்பாததால் அமைதியாக இருந்தார்.

“நீங்கள் என்னை மீறி, கவர்னரைச் சந்தித்து என்ன சகாயம் கேட்டாலும், அவர் என்னை ஆலோசிக்காமல் உத்தரவிடுவார் என்று நம்புகிறீர்களா ராவ் சாகிப்?”

“உங்களை மீறி நாங்கள் சென்றால் அந்தக் காரியம் அபஜெயப்படும் என்பதறிவோமே யுவர் எக்ஸலென்ஸி?”

“பெரியாறு அணை விவகாரத்தில் உங்கள் விடாப்பிடித்தனங்களை நான் கவனித்துக் கொண்டுதானிருக்கிறேன். இருக்கட்டும். இப்போது உங்களை அழைத்த காரணத்தைச் சொல்கிறேன்.”

“காத்திருக்கிறேன் யுவர் எக்ஸலென்ஸி.”

“ஹிஸ் எக்ஸலென்ஸி இந்தியாவின் வைஸ்ராய், மெட்ராஸ் கவர்னரின் உத்தரவை மாற்றக்கோரி ஓர் உத்தரவை அனுப்பியுள்ளார். சாம்சனுக்குத் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் சட்டவிதிகளின்படி தண்டனை கொடுத்தது செல்லாது என்று சொல்லியுள்ளார்.”

“யுவர் எக்ஸலென்ஸி, ஏற்கெனவே திவான் எழுதிய கடிதத்திற்கு அட்வகேட் ஜெனரலின் ஆலோசனையின்படி சரியென்று ஹிஸ் எக்ஸலென்ஸி உத்தரவு அனுப்பியிருந்தாரே.”

“அனுப்பினார்தான். ஆனாலும்…”

“யுவர் எக்ஸலென்ஸிக்குத் தெரியும், திருவிதாங்கூர் பிரிட்டிஷ் சர்க்காருடன் இணைந்த பகுதியல்ல. உங்களின் மேலாண்மையை எப்போதும் நாங்கள் ஏற்றதில்லை. நாங்கள் சுயாதீனம் கொண்ட தேசம். குற்றவாளிகளுக்கு எங்கள் தேசத்தின் விதிமுறைகளுக்கேற்ப தண்டனை கொடுப்பதுதானே நடைமுறை? மீண்டும் மீண்டும் குற்றவாளிக்குச் சாதகமாக, பிரிட்டிஷ் சர்க்கார் தலையிட்டு உத்தரவுகளை மாற்றிக்கொண்டிருப்பது இருதரப்பு உறவையும் பாதிக்கும் நடவடிக்கையாக இருக்கிறது. குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதானே மனிதகுல நியதி யுவர் எக்ஸலென்ஸி?”

“அதிலென்ன சந்தேகம் ராவ் சாகிப்? திருவிதாங்கூரின் பிரஜை பிரிட்டிஷ் சர்க்காருக்கு உட்பட்ட பகுதியில் சென்று குற்றமிழைத்தால் பிரிட்டிஷ் சர்க்காரின் சட்டத்தின்படிதான் விசாரணை நடக்கும். தண்டனையும் கொடுப்பார்கள். இந்திய குற்றவியல் தண்டனைச் சட்டம் வந்த பிறகு எல்லாச் சமஸ்தானங்களும் கட்டுப்பட்டுத்தான் ஆக வேண்டும்.”

“குற்றம் குற்றம்தானே? தண்டனைகளில் மாற்றம் இருக்கலாம். நீங்கள் குற்றவாளியை விடுவிக்கச் சொல்வதில் என்ன நியாயம் இருக்க முடியும்?”

“வைஸ்ராய் மிகச் சாதுரியமாக உங்கள் சந்தேகங்களைத் தீர்த்திருக்கிறார். உங்கள் சமஸ்தானத்தில் உங்கள் சட்டங்களையே வைத்துக்கொள்ளலாம். தண்டனையும் உங்கள் சட்டப்படி இருக்கலாம். ஆனால் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பிரிட்டிஷ்காரராக இருக்கும்பட்சத்தில் விசாரிப்பவரும் பிரிட்டிஷ்காரராய் இருக்க வேண்டுமென்கிறார்.”

ராமா ராவின் முகம் சுருங்கியது.

“ஹிஸ் எக்ஸலென்ஸி சொல்வதன் பொருள்?”

“குற்றவாளி பிரிட்டிஷ்காரனாய் இருந்தால் விசாரிக்கும் உரிமை உங்களுக்கு இல்லை என்கிறார் வைஸ்ராய்.”

“உங்களிடம் நட்புறவு செய்துகொண்ட சமஸ்தானங்களின் நடைமுறைகளைப்போல் இருக்கிறது நீங்கள் சொல்வது.”

நீரதிகாரம் - 25 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“குற்றஞ்சாட்டப்படுகிற பிரிட்டிஷார்களை விசாரிப்பதற்கு, திருவிதாங்கூர் சமஸ்தானம் பிரிட்டிஷ் மேஜிஸ்ட்ரேட்டுகளைத்தான் நியமிக்க வேண்டும். இனி, அதில் நாம் கருத்துச் சொல்ல ஒன்றுமில்லை. வைஸ்ராயின் உத்தரவு.”

“சமஸ்தானங்களின் சுயாதீனத்தைக் குறைக்கும் முயற்சியல்லவா யுவர் எக்ஸலென்ஸி?”

“அப்படி முழுமையாகச் சொல்லிவிட முடியாது ராமா ராவ். திருவிதாங்கூர் சமஸ்தானம் கொடுத்த தண்டனையை நிராகரித்து, மெட்ராஸ் கவர்னர் உங்களுக்குக் கடிதம் எழுதியபோது, திவான் மறுத்து எழுதியதை அட்வகேட் ஜெனரலுடன் ஆலோசித்த பிறகு ஏற்றுக்கொண்டார்தானே? வைஸ்ராய் சொல்கிறார் என்றால் அதற்குக் காரணம், இந்திய அளவில், இங்கிலாந்துக் குடிகளைப் பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருக்கிறது. ஹர் எக்ஸலென்ஸி இங்கிலாந்துப் பேரரசிக்குப் பதில் சொல்ல வேண்டிய கடமை ஹிஸ் எக்ஸலென்ஸிக்கு இருக்கிறது. இப்போதும் அவர் உங்கள் சட்டப்படி தண்டனைகள் கொடுக்கலாமென்றுதானே சொல்கிறார்? ஏற்றுக்கொள்ளக்கூடிய உத்தரவுதானே?”

“யுவர் எக்ஸலென்ஸி, தண்டனை சட்டங் களாலேயே குற்றவாளிகளைத் தண்டித்துவிட முடியாது. குற்றத்தை எடுத்துச் சொல்பவர்களும், அதைக் கேட்டு நீதி வழங்குபவர்களாலும்தான் நீதியை நிலை நிறுத்த முடியும். இந்த சாம்சன் மூன்றாண்டுகளாக ஏமாற்றிய தொகை ஐந்து லட்சம் ரூபாய்க்குமேல். முதலில் ஹிஸ் எக்ஸலென்ஸி மெட்ராஸ் கவர்னர் இவனுடைய தண்டனையை ரத்து செய்ததால்தான் இவனுக்குத் துணிவு வந்து அடுத்தடுத்த முறையீடுகளுக்குச் சென்றான்.”

ஹானிங்டன் சாம்சனைப் பார்த்தார். திருவிதாங்கூர் பிரிட்டிஷ் ரெசிடென்டும் பேஷ்கர் திவானும் மெட்ராஸ் கவர்னரும், இந்திய வைஸ்ராயும் தன்னை முன்னிட்டுத்தான் இத்தனை சட்டக்கூறுகளை அலசி ஆராய்ந்தனர், இரண்டு சர்க்கார்களுக்கிடையிலான கசப்புணர்வு கூடுகிறது என்பதைப் பற்றிச் சிறிதும் பொருட்படுத்தாமல், சுவரில் ஊர்ந்த இரண்டு பல்லிகளைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

ஹானிங்டனுக்குக் கோபம் வந்தது.

“சாம்சன், நீ யார் முன்னால் நின்றிருக்கிறாய் என்பது மறந்துவிட்டதா? வைஸ்ராய் உன் கோரிக்கையை ஏற்றுக்கொண்டார் என்பதால், நீ உன்னை நியாயஸ்தனாக நினைத்து, ஏளனத்துடன் எங்கள் முன்னால் நிற்கிறாயா?”

சாம்சன் பதிலொன்றும் சொல்லாமல் அறையில் இருந்தவர்களை மேம்போக்காகப் பார்த்தான்.

நீண்ட நேரமாக வெளியில் இருக்கும் காவலர்களும் உதவியாளர்களும் அழைக்கப் படாததால், என்ன நடக்கிறது என்பதை அறிய, குருவாயி தேநீர்க் குவளைகளுடன் உள்ளே நுழைந்தாள்.

சாம்சன் நின்றுகொண்டிருக்கும் தோரணையைப் பார்த்தாள். சாம்சனை அவள் முன்பே அறிவாள். மகாராஜா விசாகம் திருநாளின் ஆனந்த விலாசத்திற்கு, தம்புராட்டிகளைப் பார்க்கச் சென்ற ஒன்றிரண்டு சந்தர்ப்பங்களில் இவனும் அவர்களைச் சந்திக்கக் காத்திருந்ததைப் பார்த்திருக்கிறாள். அவன் துணிச்சலாகக் குற்றம் செய்ததற்கான பின்புலம் புரிந்தது.

“உங்களுக்கான தேநீர் ஹனி…”

ஹானிங்டன் குருவாயி நீட்டிய குவளையைக் கையில் வாங்கினார்.

ராமா ராவ் தயங்கியபடி தேநீர்க் குவளையை எடுத்தார்.

“நீங்கள் தேநீர் அருந்துவதில்லையோ?” ஹானிங்டன் கேட்டார்.

ராமா ராவ் இல்லையென்று சொல்லாமல், அருந்துவதில்லை என்பதை முகபாவனையில் வெளிப்படுத்தினார்.

“தேநீரின் இடத்தைக் காபி எடுத்துக் கொள்கிறதே? சமஸ்தானத்தின் விருந்துகளில் இப்போதெல்லாம் காபி பிரதானமாக இருப்பதை அறிகிறேன்.”

“அப்படியெல்லாம் இல்லை யுவர் எக்ஸலென்ஸி…” ராமா ராவ் தேநீரை அருந்தத் தொடங்கினார்.

“இந்தச் சாத்தான் இழுத்துவிட்டதுதானா மூன்று வருஷ கடிதப் போக்குவரத்தும், இரண்டு சர்க்காருக்கிடையிலான சட்டப் பிரச்சினைகளும்?” குருவாயி கோபத்துடன் கேட்டாள்.

சாம்சன் சட்டென்று வெளியில் போக முனைந்தான். மரியாதைக்குறைவான அவனுடைய செயலைப் பார்த்து, ஹானிங்ட னுக்குக் கோபம் வந்தது. அருகில் இருந்த வெண்கல மணியை அடித்தார். வெளியில் இருந்த காவலாளி உள்ளே வந்தான்.

“இவனைக் கைது செய்து சிறையில் அடையுங்கள்.”

சாம்சன் அதிர்ச்சியுடன் திரும்பிப் பார்த்தான்.

“திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் குற்றம் செய்தால்தானே இரண்டு சர்க்கார் பிரச்சினை? பிரிட்டிஷ் ரெசிடென்ட்டின் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, ரெசிடென்ட் முன்னால் மரியாதைக்குறைவாய் நடந்துகொண்டாய் என நானே உன்னைச் சிறையில் அடைக்க உத்தரவிடுகிறேன். என் உத்தரவில் மெட்ராஸ் கவர்னரும் தலையிட மாட்டார். வைஸ்ராயும் தலையிட மாட்டார். குற்றம் செய்த உணர்வு சிறிதுமின்றி, திமிராக நீ உள்ளே நுழையும்போதே உன்மீதான இரக்கம் எனக்குப் போய்விட்டது.”

காவலாளி அதற்குள் சாம்சனின் கையை மடக்கிப் பின்னால் சேர்த்துப் பிணைத்து, துப்பாக்கியுடன் வெளியேறினான்.

“ஸ்கவுன்ட்ரல்… திவான் இவனுக்காகக் கொடுத்த தண்டனைதான் சரியான தண்டனை. அடுத்து ஒரு வழக்கு போட்டு, இவனை வெளியில் விடக்கூடாது.”

ஹானிங்டனுக்குக் கோபம் குறையவில்லை.

“ராவ் சாகிப், நீங்கள் கிளம்பலாம். திருவிதாங்கூரோ, பிரிட்டிஷ் சர்க்காரோ, நியாயம் எதன் பக்கம் இருக்கிறதோ அதன் பக்கம்தான் நான் இருப்பேன். உங்கள் திவான் வந்ததும் உடனடியாக என்னைச் சந்திக்கச் சொல்லுங்கள்.”

நெஞ்சுக்குழி வரை வந்த சொற்கள் உள்ளே அழுந்த, ராமா ராவ் விடைபெற்றார்.

“நான் ஊதியம் பெறும் பிரிட்டிஷ் சர்க்காரின் உத்தரவையே, எனக்கு நியாயமில்லை என்று தோன்றினால் மறுக்கத் தயங்க மாட்டேன். உங்கள் சமஸ்தானத்திற்கும் அதே நிலைதான். எந்த நிலைக்கும் போகத் தயங்க மாட்டேன். ஐயாம் மேன் ஆப் எக்ஸ்ட்ரீம்ஸ். புரிந்து நடந்துகொள்ளுங்கள். பெரியாறு அணை குறித்து உங்கள் கோரிக்கைகளை எழுத்துபூர்வமாக இன்னும் இரண்டு நாளில், என்னுடைய அலுவலகத்தில் சேர்க்க வேண்டும்.”

சத்தமாகச் சொல்லிய ஹானிங்டனுக்கு மீண்டும் ஒருமுறை வணக்கம் சொல்லி வெளியேறினார் ராமா ராவ்.

மரப்படிகளில் தம் தம் என்று பெருஞ்சத்தம் எழ, ரெசிடென்ட் ஹானிங்டன் மாடியேறினார். அறைக்குள் நுழைந்தவர் ஓங்கிக் கதவை அறைந்தார். சத்தமின்றி மூடிக்கொள்ளும் கதவு, தாக்குதலுக்கு உள்ளானதைப்போல் திகைத்தது.

மேல்கோட்டைக் கழற்றி, விசிறி எறிந்தார். கழுத்தை நெறித்த மேல் பொத்தானை விடுவித்து, சட்டையைத் தளர்த்தினார். சாளரத்தின் முன்னால் இருந்த நாற்காலியில் அமர்ந்து கால்கள் இரண்டையும் எதிரில் இருந்த குட்டை மேசையின்மேல் வைத்தார். கோபம் வந்தால் தலை கனத்துத் தெறிக்கிறதா, தலை கனத்துத் தெறிப்பதால் கோபம் வருகிறதா என்று தெரியவில்லை.

‘அப்பாவி விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திருட்டுப் பயல், என் முன்னால் என்ன தெனாவட்டாக நிற்கிறான்! பிரிட்டிஷ் பேரரசியின் பிரஜை என்று பிரிட்டிஷ் சர்க்கார் சில நேரங்களில் கண்மூடித்தனமாகச் செயல்படும். மெட்ராஸ் பிரசிடென்சியில் இருப்பவர்களெல்லாம் பிரிட்டிஷ் பேரரசியின் பிரஜைகள் இல்லையா? ஐந்து லட்சம் ரூபாயைச் சிறுகச் சிறுக ஏமாற்றிச் சேர்த்த குற்றவாளிக்கு நியாயம் வழங்க, எத்தனை கடிதங்கள், எத்தனை அரசாணைகள், எத்தனை சட்ட ஆலோசனைகள். சர்க்கார் என்றாலே முட்டாள்தனமானதுதானா? தாது வருஷ பஞ்சத்தில் இறந்த மெட்ராஸ் பிரசிடென்சியின் பிரஜைகளுக்கு வைஸ்ராய் என்ன நியாயத்தை வழங்கிவிட்டார்?’ ஹானிங்டனுக்கு மனம் குமைந்தது. அதிகரித்த நாடித் துடிப்பை மட்டுப்படுத்துவதுபோல், இரண்டு கைகள் பின்னிருந்து அவரின் தோள்களைத் தழுவின.

குருவாயியின் கைகளில் இருந்த சில்லிப்பைக் கண்மூடி அனுபவித்தார் ஹானிங்டன்.

“டியர்… எனக்குப் பாங்கு வேணும்.”

கட்டுப்படுத்த முடியாத உணர்வெழுச்சியில் ஹானிங்டன் வழக்கமான மது பானங்களைத் தவிர்த்து, பாங்கு கேட்பார். போதை இலைகளைக் கொதிக்க வைத்து, சாமியார் ஒருவர் கொண்டுவந்து கொடுத்துவிட்டுச் செல்லும் பானம். ஐரோப்பியர்கள் உள்ளூர் போதைகளை வியந்து பார்ப்பார்களே தவிர, பருக மாட்டார்கள். ‘சிவ பானம், சிவ பானம்’ எனச் சொல்லி, காசிக்குப் போய்ப் பழகி வந்திருந்த சாமியார் ஒருவர் பழக்கிவிட்டது. ஹானிங்டன் இப்போதெல்லாம் அடிக்கடி பாங்கு கேட்பதை எண்ணினாள்.

மணியடித்து உதவியாளனை அழைத்தாள். பாங்கு எடுத்து வரச் சொன்னாள்.

“நீங்கள் இவ்வளவு உணர்ச்சிவசப்பட வேண்டியதில்லை ஹனி.”

“நமக்கு இதயமும் மனச்சாட்சியும் இருக்கிறது என்பதை வேறெப்படி அறிய முடியும்?”

“வயது கூடிக்கொண்டு போகிறது. மனத்தின் இளமைக்கு உடல் ஒத்துழைக்க வேண்டும். இரண்டும் சரியான வேகத்தில் இல்லையென்றால், உடலுக்குத்தான் பாதிப்பு. உங்கள் கை நடுங்குகிறது பாருங்கள். எதற்கு இந்த அளவிற்குக் கோபம்?”

ஹானிங்டன் சாளரத்திற்கு வெளியில் பார்வையை ஓடவிட்டார்.

“நீ மலபாரில் பிறந்து வளர்ந்தவள். உங்களுக்கெல்லாம் நிறமென்றாலே பச்சை. வாசமென்றாலே தாவர வாசம். கால் பூமியில் பட்டாலே மழை ஈரத்தின் குளிர்ச்சிதான். பச்சையமே இல்லாமல், காய்ந்து குச்சி குச்சியாக நிற்கும் ஊரை உன்னால் கற்பனை செய்ய முடியுமா குருவாயி? பூமியைத் தோண்டித் தின்ன கிழங்குகளோ வேர்களோ இல்லாத நிலத்தை மக்கள் அகழ்ந்து பார்த்து, ஏமாற்றத்தில் அதே மண்ணில் மயங்கி விழுந்து, செத்துக் கிடந்ததை நீ பார்த்திருக்கிறாயா? உன்னால் நினைத்துப் பார்க்கவே முடியாது.”

குருவாயி உதவியாளன் கொண்டுவந்த பாங்கை, கண்ணாடிக் குவளையில் ஊற்றிக் கொடுத்தாள்.

கையில் வாங்கிய ஹானிங்டன் இரு மிடறுகளை வேகமாக அருந்தினார். தொண்டை கமறியதில் மூன்றாவது மிடறைத் தள்ளிப் போட்டார். உதவியாளன் வெளியேற, குருவாயி, ஹானிங்டனின் எதிரில் இருந்த குட்டை மேசையில் உட்கார்ந்தாள்.

“பஞ்ச கமிஷன் வரும்போது நான் அவர்களுடன் சென்றிருக்கிறேன். மனிதர்களை ஏற்றிக்கொண்டு வரும் வண்டிகளைவிட, தானியங்களை ஏற்றிச்செல்லும் வண்டிகளுக்குப் பின்னால் மக்கள் ஒருவரை ஒருவர் பின்னுக்குத் தள்ளிவிட்டு ஓடியதைப் பார்த்திருக்கிறேன். மூட்டைகளை நகங்களாலேயே கிழித்து ஓட்டை போடுவார்கள். சிதறும் கைப்பிடி தானியங்களுக்கு, பல மண்டைகள் முட்டி மோதி உடையும். சர்க்கார் ஆள் வருகிற பல்லக்கு என்றோ, கோச் வண்டி என்றோ தெரிந்தால் போதும், அய்யா கஞ்சி, கஞ்சி என்று கையேந்தி ஓடிவந்த ஜனங்களை நான் பார்த்திருக்கிறேன். நாள் முழுக்க எறும்புப் புற்றுகளுக்குள் கைவிட்டுத் தோண்டி, கிடைக்கும் ஒருபிடி தானியத்திற்காகப் பெண்கள் அடித்துக்கொண்டு சண்டையிட்டதை நான் பார்த்திருக்கிறேன். அவர்களெல்லாம் பிரிட்டிஷ் பேரரசியின் பிரஜைகளான நேரத்தில்தான் பிச்சைக்காரர்களாகவும் ஆனார்கள். விவசாயியும் பிச்சை எடுத்தான். விவசாயக் கூலியும் பிச்சை எடுத்தான். அவர்களைப் பிச்சையெடுக்க வைத்தது பிரிட்டிஷ் சர்க்காரும், ஐரோப்பிய வர்த்தகர்களும்தான்.”

“இப்போதான் நிலைமை சீர்ப்பட்டு வருகிறதே ஹனி. அதையே நினைத்து ஏன் மனம் தளர்ந்து போகிறீர்கள்?”

“என்ன சீர்பட்டிருக்கிறது? மக்கள் தொகை கூடியதால் நிலைமை சீர்பட்டுவிட்டது என்று அர்த்தமா? பிள்ளை பெற்றுக்கொள்வதற்கு, நாடு சுபிட்சமாக இருக்க வேண்டுமா என்ன? அதொரு விபத்துதானே?”

மூன்றாவது மிடறைப் பருகும்போது ஹானிங்டனுக்கு நடுக்கம் குறைந்து, குரல் சீராகியிருந்தது.

“ஆங்காங்கே கஞ்சி முகாம்கள் அமைத்திருக்கிறார்கள். குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவருக்கும் வேலை செய்தால் கூலி, இல்லையென்றால் கஞ்சி என்று சர்க்கார் மக்களைப் பார்த்துக்கொள்கிறதே ஹனி?”

“குருவாயி, எனக்கு சமாதானம் சொல்கிறாயா? ஒவ்வொரு இடத்திலும் என்ன நடக்குமென்று எனக்கு நன்றாகத் தெரியும். பஞ்ச காலத்திலும் சோறும் நெய்யும் சாப்பிட்டவர்களைப் பத்தி நம் கவலை இல்லை. ஐந்து குழி, நாலு வேலின்னு நிலம் வச்சிருந்தவங்ககூட, ஒரு சொட்டுத் தண்ணியில்லாம, முகாம்ல ஒரு நாளைக்கு வேலை செஞ்சா, ஒன்றரைப் பவுண்டு* கூலி வாங்கினதை நான் பாத்திருக்கேன். ஒவ்வொரு நாளும் அவன் அந்தத் தானியத்தைக் கையில வாங்கும்போது, தன்னோட நிலத்துல, அறுவடை செஞ்சு தூற்றி, பறவைங்களுக்கு மிச்சம் விட்டுட்டு வர்ற தானியத்துல ஒரு பிடிகூட இல்லையேன்னு நினைச்சிருப்பான். பஞ்சம் வந்துதான், பசிதான் பெரிய கடவுள்னு எல்லாருக்கும் புரிய வச்சது.”

“உண்மைதானே? பசி இல்லைன்னா மனித குலத்தோட இயக்கமே இல்லையே?”

“யெஸ் டியர். எல்லாமே ஆட்சியாளர்களோட தவறுதான். சுதேசி ராஜாக்கள் ஏரி, குளம், கால்வாய்களை வெட்டுனாங்க. பருவத்துக்கு ஏற்ற விவசாயம் செஞ்சாங்க. இப்போ லண்டனிலும் பிரான்சிலும் எது நல்ல விலைக்குப் போகுமோ அதைத்தான் விவசாயம் செய்யணும், அதைத்தான் தயாரிக்கணும்னு பிரிட்டிஷ் சர்க்கார் சொல்லுது. திருவிதாங்கூரை நெதர்லாந்தாகவும், மெட்ராஸ் பிரசிடென்சியைப் பிரான்சாகவும் மாத்தணும்னா முடியுமா? சரியா அது?”

“வாஸ்தவமான கேள்விதான். ஆனா அதுதானே நடக்குது?”

“பஞ்சம் வர்றதுக்கும் வெள்ளம் வர்றதுக்கும் அதான் காரணம். இந்தத் தேசம் முழுக்க நம்மால காப்பாத்த முடியாது. ஆனா என்னால முடிஞ்ச வரைக்கும் மதுரா டிஸ்ட்ரிக்கைக் காப்பாத்திடணும். வருஷத்துல பாதி மாசம் வறண்டுபோற வைகையில ஆண்டு முழுக்கத் தண்ணி ஓடணும். அதுக்குத்தான் வழி செய்யணும்.”

“வைகையில வருஷம் முழுக்கத் தண்ணி போனா, குடும்பம் குடும்பமா மண்டபத்துல ஜனங்க கள்ளத்தோணிக்குக் காத்திருக்கிற சோகக் காட்சி இல்லாமப்போகும்.”

“ஆமாம். கட்டாயம் ஜனங்க வெளியேற மாட்டாங்க.”

“புதிய மகாராஜாவும் திவானும் இன்னும் எதற்குத் தள்ளிப் போடுறாங்கன்னு தெரியலையே.”

“மகாராஜாவை விடுவோம். திவான், மெட்ராஸ் பிரசிடென்சியின் பஞ்சத்தைப் பார்த்தவர். அவருக்குத் தெரிய வேணாமா?”

“அவரால் சொல்லத்தானே முடியும் ஹனி? முடிவெடுப்பது மகாராஜா அல்லவா?”

ஹானிங்டன் சிரித்தார்.

“இந்தச் சமஸ்தானத்தைப் பற்றி அறியாதவளா நீ? சிறுபிள்ளைக்கு வேடிக்கைகாட்டப் பொய் சொல்லுவதைப்போல் சொல்லுகிறாய்? திவான்கள்தான் இங்கு கர்த்தாக்கள். அவர்கள்தான் ஆக்கலும் அழித்தலும். திவான் ராமய்யங்கார் நினைத்திருந்தால் விசாகம் திருநாளிடமே அனுமதி வாங்கியிருக்க முடியும்.”

மீண்டும் ஹானிங்டனின் நாடித் துடிப்பு அதிகரிப்பது, முகத்தில் கூடும் செம்மையில் தெரிந்தது.

“பருகியவரை போதும் ஹனி, சாப்பிடலாம் வாருங்கள்.”

“இன்னொரு பஞ்சம் வந்தால் மெட்ராஸ் பிரசிடென்சி தாங்காது. இப்போதே குடும்பத்தில் மிஞ்சியிருப்பவர்கள் இரண்டு மூன்று பேர்தான்.”

“பென்னியை அனுப்பியிருக்கிறீர்களே, அவர் நல்ல முடிவுடன்தான் வருவார். கவலை வேண்டாம்.”

குருவாயி சொன்னதும் ஹானிங்டன் உற்சாகமானார்.

“குருவாயி, பென்னி தன் குடும்பத்துடன் அஞ்சு தெங்கு வந்திருக்கிறார். மகாராஜா மூலம் திருநாள் அங்குதான் இருக்கிறார். மகாராஜாவிடம் முடிவு தெரிந்துகொண்டுதான் வர வேண்டுமென்று விடாப்பிடியுடன் காத்தி ருக்கிறார் பென்னி. நாம் ஒன்று செய்யலாமா?”

ஹானிங்டனின் திடீர் மகிழ்ச்சிக்குக் காரணம் புரியாத குருவாயி கேள்விக்குறியுடன் அவரைப் பார்த்தாள்.

“உடனே கிளம்பலாம், நீயும் என்னுடன் வா.”

“எதற்கென்று கேட்கலாமா? தவறொன்றும் இல்லையே?”

“திவான் வரும்வரை ஏன் காத்திருக்க வேண்டும்? நானே மகாராஜாவைச் சந்திக்கிறேன்.”

குருவாயி அதிர்ந்தாள்.

“நீங்கள் திருவிதாங்கூரின் ரெசிடென்ட். நீங்கள் சென்று மகாராஜாவை..?”

“விதிகள் நாம் உருவாக்கிக்கொண்டவைதானே? நற்காரியங்களுக்கு விதிகளைச் சற்று விலக்கிக் கொள்ளலாம். மதுரா டிஸ்ட்ரிக்ட் மக்களின் வாழ்க்கையைவிட, ரெசிடென்ட் பதவியின் மரியாதையைக் காப்பாற்றுவது முக்கியமல்ல. என் மரியாதை என் பதவியில் இல்லை. உடனே புறப்படலாம் குருவாயி.”

அடுத்த நிமிடம் ஹானிங்டனின் குதிரை டாமினேஷன் புறப்படத் தயாராக வாசலில் வந்து நின்றது.

- பாயும்