மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 26 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

குதிரையை விட்டுக் கீழிறங்கியவர், பளிங்குபோல் ஓடிக்கொண்டிருந்த நதிநீரில் இறங்கினார்.

பளியர் குடியில் மூப்பனுக்குக் காணிப் பட்டம் கட்டிய பூஞ்சாறு அரசர் கோட ராம வர்மா, அந்த இரவிலேயே புறப்பட்டார். குதிரைகள் இருட்டை ஊடுருவி விரைந்தன. காட்டுக்குள் காதுகளே கால்களை வழிநடத்துகின்றன. வீரர்களின் கவனம் காடு எழுப்பும் ஒலிகளில் இருந்தது.

“உங்கள் சம்பத்துகள் நீர்வழிப் போகும்…” சபரிமலை மேல்சாந்தி சொன்னது இருள் கவ்வியுள்ள இவ்வேளையில் அழுத்தத்துடன் கோட வர்மாவின் நினைவுகளில் எதிரொலித்தது.

முடிசூடிக்கொள்ளத் துண்டு நிலம் இல்லாமல் நிராதரவாய் நின்ற வேளையில், பிரபஞ்சத்தையே அள்ளித் தருவதுபோல் அணைத்துக்கொண்டது மேல்மலை. மதுரையில் துறந்த மணிமகுடத்தை, பூஞ்சாறு சமஸ்தானம்தான் மீண்டும் சூடி அணிசெய்தது.

சந்திரகுலத்து அரசர்கள் என்றாலும் எப்போதும் ஞாயிற்றின் ஆதிக்கத்தில் இருக்கும் மதுரை மண்ணிலிருந்து மேல்மலைக்கு வந்தபோது, மலையின் குளிர் மூதாதையர்களுக்குத் தாங்க முடியாததாக இருந்திருக்கும். ஆண்டிற்கொரு முறை வையையில் புதுப்புனல் பெருக்கெடுத்து வரும்போது, மன்னனே வெள்ளம் பார்க்க ஓடோடிச் செல்லும் ராஜ்ஜியத்தில் இருந்து, வருஷம் முழுக்க வெள்ளம் புரளும் பூஞ்சாற்று ராஜ்ஜியத்தில் எப்படிப் பொருந்திப்போனார்களோ?

போர்க்களத்தில் ஆயுதம் தாங்கி, எதிரியை வென்று இந்நிலம் அவர்களுக்குக் கிடைக்கவில்லை. அரசாண்ட ராஜ்ஜியத்தை துரோகிகளிடம் தூக்கிக் கொடுத்துவிட்டு வந்தபோது, மீனாட்சி அம்மை தம் பிள்ளைகளுக்குக் கொடுத்த பூமி. தனக்குப் பிறகும் நிலவும் சூரியனும் உள்ளவரை பூஞ்சாறு சமஸ்தானம் நிலைத்து நிற்க வேண்டும். சமஸ்தானத்தின் வம்சாவளி காலாகாலத்துக்கும் இந்தக் குடிகளைக் காக்க வேண்டும்.

நினைவுகளில் சுழன்ற கோட வர்மாவின் மனம் சாஸ்தா கோயிலுக்குப் போக விரும்பியது. சாஸ்தாவின் தாள் பணிந்தால் குழப்பமும் கவலையும் நிரம்பிய இருள் விலகுமென்று நினைத்தார். கீழ்வானம் சாம்பல் வண்ணம் கலையாத புலரியில் பம்பை நதியை வந்தடைந்தார்.

குதிரையை விட்டுக் கீழிறங்கியவர், பளிங்குபோல் ஓடிக்கொண்டிருந்த நதிநீரில் இறங்கினார். ஆடைகளைக் களையாமல், வீரர்கள் தயாராவதற்குள் கண்ணிமைக்கும் நேரத்திற்குள் நீருக்குள் இறங்கியவரைப் பார்த்துத் திகைத்து சுதாரித்த வீரர்கள், குதிரைகளை அங்கங்கு விட்டு அரசருடன் நதியில் இறங்கினார்கள். அதிக வெள்ளமோ, சுழலோ, பாறைகளோ இருக்கிறதா என்பதை விழியோட்டத்தில் ஆராய்ந்து அரசரின் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்தினர்.

“மீனாட்சித் தாயே, நீயே தொணை.” புலராத ஆகாயம் பார்த்து வணங்கிய கோட வர்மா, நீருக்குள் மூழ்கினார். வழிமறிக்கப்பட்ட நதி நீர் விலகி, கோட வர்மாவை அணைத்தபடி விரைந்தோடியது.

நதி நீராடலில் எத்தனை விதங்கள்? நீருடன் விளையாடுவதற்காகவே நீராடல், நீரின் வேகத்திற்கு உடலைக் கொடுத்து, முரட்டுக் குழந்தைபோல் ஆவேசமாகப் புறந்தள்ளிவிட்டு விரையும் நதிநீரின் குறும்பை ரசித்தல், நதிநீருடன் போட்டி போடும் ஒவ்வொரு முறையும் தோல்வியைத்தான் தழுவ நேரிடும். இயற்கையின் பேரதிசயத்தை எதிர்த்துத் தோற்பது பேருவகை. தோல்வி இனிப்பது நீர் விளையாட்டில்தான். கோட வர்மா, வெள்ளத்தை எதிர்த்தும், இணைந்து நீந்தியும் மனவெழுச்சியின் ஏற்ற இறக்கத்தை நீரிடம் தணித்தார்.

மேல்சாந்தி அன்று அசரீரிபோல் சொன்னதன் பொருளென்ன? தன்னுடைய சம்பத்துகள் நீரில் போகுமா? அல்லது மாபெரும் சம்பத்தாய் இருக்கின்ற இந்த நீரே தன்னை விட்டுப் போகுமா? பேரியாற்றைத் தம் சமஸ்தானத்திலிருந்து பிரித்தெடுக்க முடியுமா? மாமதுரையின் நீர் அணங்கான வையையை விட்டு, காலத்தின் சூழ்ச்சி எங்கள் மூதாதையரை வெளியேற்றிய வேளையில், உயிர் கொடுத்தது பேரியாறு அல்லவா?

கோட வர்மா, புரண்டோடும் நதியின் புனலை இரு கைகளில் அள்ளினார். நீர்வளமும் நிலவளமும் குன்றாத கடவுளின் தேசம். வருஷம் முழுக்கப் புரண்டோடும் நீர் கடலில் கலக்கிறது. கரைமீறிக் காட்டாறாய்ப் பெருகும் பேரியாற்றின் நீரில் கால்பங்கு போதுமாம், மாமதுரையின் மக்கள் உயிர் காக்க. இங்கு தினம் தினம் ஓடி வீணாய்ப் போகும் நீர், எம் மூதாதை மண்ணுக்குச் சென்றால் உயிர் காக்கும் அமிழ்தம் போலாகுமே?

கோட வர்மா ஓடும் நீரை மீண்டும் கைகளில் அள்ளினார். ‘இந்தக் கையளவு நீரின்றி எந்தக் குழந்தை தாகத்தில் உயிர் நீத்ததோ? இதோ, என்னுடல் நனைத்துப் புரண்டோடும் நீரின்றி எத்தனை பயிர்கள் கருகினவோ? நீர்தானே மனித குலத்தின் ஆதாரம்? நீர்தானே மனிதர்களை மாண்புடையவர்களாகப் பக்குவப்படுத்துகிறது? நீர்தானே மனிதனுக்கு உயிரும் உணவுமாய் இருக்கிறது? எம் பூர்வகுடிகள் நீரின்றி ஒவ்வொரு வருஷமும் பசியிலும் பஞ்சத்திலும் மாண்டு போக, இந்த மண்ணில் நீர் வீணாய் ஓடிக் கலக்கிறதே? மக்களே பட்டினியில் சாகக் கிடந்தபோது எம் அம்மைக்கு யார் பலி கொடுத்திருப்பார்கள்? அவள் ஆலயத் திருவிளக்குகள் இருளில் தவித்திருந்திருக்குமோ? தனக்குப் பூசை வேண்டும் என்பதைவிட தன் திருவுரு பார்த்துப் பரவசமாகி நிற்கும் பக்தர்களின் முகத்தைப் பார்த்து மகிழத்தானே அம்மை நினைத்திருப்பாள்? ராஜ்ஜியத்தின் குடிகள் வளமோடு இருக்கும் தேசத்தில்தானே தெய்வங்கள் வளமோடு இருக்கும்? எம் அம்மை வளமோடு இருக்க வேண்டுமே? அதற்கு மேல்மலையின் பேரியாற்றுத் தண்ணீர் மாமதுரைக்குச் செல்ல வேண்டும்.

நதிநீரில் மும்முறை மூழ்கியெழுந்த கோட வர்மா சபரிமலை சாஸ்தா கோயிலை நோக்கி ஈர ஆடையுடன் நடந்தார். வீரர்கள் பின்தொடர்ந்தனர். மேலெழுந்த அடிவானத்தின் செஞ்சிவப்பு விரட்ட, இளஞ்சாம்பல் நிற மேகங்களும் கோட வர்மாவைப் பின்தொடர்ந்தன. புள்ளினங்களின் குரல் மங்கி, விலங்குகளின் சத்தம் கூடியிருந்தது.

கோட வர்மா வந்திருக்கிற சேதி அறிந்த மேல்சாந்தியும் தந்திரிகளும் வரவேற்கத் தயாராகச் சன்னிதியின்முன் நின்றிருந்தனர். வாத்தியக்காரர்கள் வாத்தியங்களின் உள்ளுறையும் நாதங்களை மீட்டியெழுப்பினர்.

நனைந்த ஆடையிலிருந்து இறங்கிய நீர்த்துளிகள், பாதங்களில் வழிந்தோட முயல, ஈரக்கால்களைச் சேர்ந்திருந்த மணல்துகள்கள், நீர்த்துளிகள் வெளியேற அனுமதி மறுத்தன.

மேல்சாந்தி கொடுத்த மரியாதைகளை ஏற்றுக்கொண்ட கோட வர்மா, நேராக சாஸ்தாவின் முன்வந்து நின்றார்.

“இந்த மேல்மலையினை அரசாளுபவன் நீ. நீயே மலையரசன். மலையும் காடும் நீரும் காற்றும் உன் ஆளுகையின் கீழிருக்கிறது. எம் அம்மையும் குடிகளும் நீரின்றித் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். மாமதுரையை உன் பேரியாறு குளிர்விக்க வேண்டும். வையை என்னும் குலக்கொடியை, பேரியாறு எனும் கட்டழகன் அணைத்து மகிழ்விக்க வேண்டும். என் அய்யனே, நீயே எமக்குத் துணை நின்று வழிகாட்ட வேண்டும்” மனமுருகி வேண்டிய கோட வர்மாவின் கண்களில் ஈரம் சேர்ந்தது. கண்ணீர், உலராத நதியின் ஈரக்கசிவெனத் தோற்றப்பிழை தந்தது.

சாஸ்தாவிடம் உள்ளம் ஆழ்ந்து வேண்டிக்கொண்ட பிறகு, திரு ஆராத்தி காண்பித்தார்கள். கண்களில் ஒற்றி வணங்கினார் கோட வர்மா. முன்மண்டபத்திற்கு நகர்ந்தவரிடம், அருகில் நின்றிருந்த வீரனொருவன் புடவை* ஒன்றை நீட்டினான். நீர்மையாகக் கரைத்த சந்தனத்தின் நிறத்தை ஒத்த வெண்பட்டுப் புடவையை வாங்கி, ஈர ஆடையின் மேலேயே இடுப்பில் கட்டினார்.

முன்மண்டபத்தின் தரையில் அமர்ந்தவர், மேல்சாந்தியை அமரச் சொன்னார். எதிரில் அமர்ந்த மேல்சாந்தி, ஆழ்ந்த சிந்தனையில் இருக்கும் பூஞ்சாறு அரசர் கோட வர்மாவைப் பார்த்தவாறு அமைதியாக இருந்தார். சூரியன் கீழ்வானத்தில் புறப்பட ஆயத்தமானான். கருஞ்சாம்பல் நிறத்தை விரட்டிய அடர் சிவப்பை, இப்போது இளம் மஞ்சள் நிறம் விரட்டியது.

“கருமேகம் சூழ்ந்த நிலவுபோல், சமஸ்தானம் தெளிவில்லாமல் இருக்கிறது போற்றியாரே. நிதர்சனமாகத் தெரிவது உண்மையாக இல்லை. மனம் குழம்பித் தவிக்கிறது. முன்னெப்போதும் இல்லாத அளவிற்குச் சூழல் தெளிவற்று இருக்கிறது.”

“கிரக நிலைகளில் ஏற்படும் மாற்றங்கள் மனிதர்களின் ஸ்திதியிலும் மாற்றங்களைக் காட்டும் தம்புரான். உங்கள் நட்சத்திரத்திற்குப் பலன் பார் த்தால் காரணம் விளங்கிவிடும்.”

நீண்டு விரிந்த தோகை தரையில் புரள, மயிலொன்று மண்டபத் திற்குள் நுழைந்தது. உட்கார்ந் திருப்பவர்களைச் சாய்ந்த பார்வையில் நோட்டம் விட்டு, என்ன புரிந்துகொண்டதோ, இரவு இலுப்பை விளக்கின் வெளிச்சத்தில் விழுந்து இறந்துகிடந்த பூச்சிகளைக் கொத்தியது. உடம்பு திரும்பி, கண் மூடித் திறக்கும் இடைவெளிக்குப் பிறகுதான் அதன் தோகை, உடல் திரும்பிய திசைக்குத் திரும்பியது.

“தம்புரானுக்குப் பிரசன்னம் கேட்க...”

“வேண்டாம் போற்றியாரே... என் கலக்கத்தை அதிகப்படுத்தும் எந்தச் செய்தியையும் நான் அறிந்துகொள்ளத் தயாராக இல்லை.”

தந்திரிகள் முகத்தில் அச்சம் கூடியது.

நீரதிகாரம் - 26 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“எனக்கு ஒன்றே ஒன்றுதான் தெரிய வேண்டும். மகாராஜா மூலம் திருநாளிடம் நேரில் பேசி காரியசித்தி பெற்று வரக்கூடிய நபர் யார்? மகாராஜாவுக்கு அணுக்கமானவர் யார்?”

தந்திரிகள் மேல்சாந்தியைப் பார்த்தனர்.

“காரியம் என்னவென்று சொன்னால் சித்தி செய்யக்கூடியவர் யாரென்று யோசிக்கலாம் தம்புரான்.”

மகாராஜா அமைதியாகத் தொலைவில் தெரிந்த மலைக்குன்றைப் பார்த்தார்.

“பேரியாற்று அணை பற்றி மகாராஜாவிடம் தெளிவுபெற வேண்டியுள்ளது. பிரிட்டிஷ் சர்க்கார் எப்படியும் மகாராஜாவிடம் ஒப்புதல் வாங்கிவிடும். மகாராஜா ஒப்பந்தத்தில் கையெழுத்திடும்முன், அவருக்குச் சில சேதிகளைத் தெளிவுபடுத்திவிட வேண்டும்.”

“பூஞ்சாற்று சமஸ்தானத்தின் இடத்திற்கு, திருவிதாங்கூர் மகாராஜா எப்படி ஒப்புதல் தர முடியும் தம்புரான்?”

“தர முயல்கிறார்களே? இப்போது பூஞ்சாற்று சமஸ்தானத்தின் உரிமை பறிபோகிறதே என்று கோபிப்பதைவிட, ஏசாத்துக் காணிகளும் மங்கலதேவி கண்ணகி கோவிலும் காப்பாற்றப்பட வேண்டும். எல்லாவற்றையும்விட எம் மூதாதை தேசத்தில், வையம் காக்கும் மீனாட்சி அம்மை நீரின்றித் தவிக்கிறாள். குடிகள் பஞ்சத்தில் செத்து மடிகின்றன. எல்லாம் எடுத்துச்சொல்ல வேண்டும்.”

“அம்மையின் காரியம். அம்மையின் தலைமைந்தன் நீங்கள். நீங்களே சென்றால்தான் காரியசித்தி ஆகும்.”

மேல்சாந்தி சொன்னதைக் கேட்டுக் கோட வர்மா அதிர்ந்தார். “நானா? நானெப்படி?”

“சமஸ்தானத்தில் பெண் கொண்டவர் நீங்கள். நீங்கள் செல்கிறீர்கள் என்றாலே காரியம் பாதி ஜெயம். புதிய மகாராஜா உங்களின் கருத்தை நிச்சயம் மதித்துக் கேட்பார்.”

கோட வர்மாவின் முகத்தில் சிந்தனை கூடியது.

“தயங்குவதற்கு ஒன்றுமில்லை தம்புரான். மகாராஜா அஞ்சுதெங்கு சென்றிருப்பதாகச் சேதி. ஆனந்த விலாசம் சென்று பார்ப்பதென்றால்கூட உங்களுக்குச் சங்கடம் இருக்கலாம். மகாராஜா தனித்திருக்கிற நேரத்தில் நீங்கள் விரும்புவதைச் சொல்ல முடியும்.”

பந்தள அரசர் ராஜசேகராவும் அஞ்சுதெங்கு கிளம்பிச் சென்றிருப்பது நினைவுக்கு வந்தது. ராஜசேகரா இருக்கிறார் என்ற எண்ணமே கோட வர்மாவுக்கு நம்பிக்கையளித்தது.

கோட வர்மா ‘கிளம்பலாம்’ என்று சொல்லும்முன், வீரர்கள் குதிரைகளைத் தயாராக்க விரைந்தார்கள்.

“தெய்வ காரியம் என்றாலும், மனுஷ எத்தனம் வேண்டும். மீனாட்சியும் இந்த சாஸ்தாவும் துணை இருப்பார்கள். சென்று வாருங்கள் தம்புரான்.”

அங்கிருந்து விடைபெற்ற கோட வர்மா, தங்கள் மேலேறிய வேகத்தினைப் புரிந்துகொண்ட குதிரையின் வேகம், சூரியன் புவியின்மேல் கதிர் பரப்பும் வேகத்தினை ஒத்திருந்தது.

கோட வர்மா அஞ்சுதெங்கு நோக்கி விரைந்தார்.

வேங்கடகிரி அரசர் ராஜகோபால யச்சேந்திர பகதூரும் திவான் ராமய்யங்காரும் மெட்ராஸ் பிரசிடென்சிக்குப் புறப்பட்டிருந்தார்கள். அரக்கோணம் ரயில் நிலையத்தைக் கடக்கும்வேளையில் யச்சேந்திர பகதூர் ரயில் நிலையத்தின் வாசலில் நின்றிருந்த ஜட்கா வண்டிகளைப் பார்த்தார். ரயிலில் வந்திறங்குபவர்கள் வாடகைக்கு அமர்த்திக் கொள்ளும் வண்டிகள் வரிசையாக நின்றிருந்தன.

லக்‌ஷ்மணனிடம் தன் கோச் வண்டியை நிறுத்தச் சொல்லிச் சொன்னார். வண்டி நின்றது. திவானின் கோச் அருகில் வரும்வரை காத்திருந்த அரசர் கீழே இறங்கினார்.

“திவான், நாம் அந்த ஜட்காவில் போகலாமா?”

திவானுக்கு மயக்கமே வந்தது. வேங்கடகிரி அரசரைச் சந்தித்தது தன்னுடைய துர்வேளையா, நன்முகூர்த்தமா தெரியவில்லையே? திவான் பதிலொன்றும் சொல்லாமல் நிற்பதைப் பார்த்த பகதூர், “போகலாம்தானே அய்யங்கார்?” என்றார்.

“மெட்ராஸ்வரை ஜட்காவில் செல்வதற்கு நாழியாகுமே?”

“திவானுக்குத் தெரிந்தது இவ்வளவுதானா? ஜட்காவில் ஏறி உட்கார்ந்தவுடன் ஜட்காக்காரன் சவுக்கைச் சுழற்றினால் போதும், இந்தக் குதிரைகள் ஒரு மணி நேரத்தில் ஏழெட்டு மைல் போனபிறகுதான் மூச்சு வாங்கும். முரட்டு வகை போனி குதிரைகள். எப்பவும் பலகணிகளை* இழுத்துவிட்டு, அரசிகளைப்போல் பயணிக்கும் கோச் வண்டிகள் எனக்குப் பயணத்திற்குத் தோது படாது. நம் சமஸ்தானம் என்றால் தயங்கலாம், பார்க்கிறவர்களெல்லாம் மகாராஜா ஜட்காவில் வருகிறாரே என்று. இங்கு யார் நம்மை வேடிக்கை பார்க்கப்போகிறார்கள்? ஜட்காவில் போவது, பந்தயத்திற்குப் போவதுபோல் துடிப்பாக இருக்கும்.”

“மகாராஜா, என் வயதையும் உடல்நிலையையும் அனுசரித்து...”

“அய்யங்கார், ஒன்றும் ஆகாது வாருங்கள். நானிருக்கிறேன்.”

“மகாராஜா, பயணத்தில் தாமதம் நேர்ந்தால்?”

“உங்களுக்குத் தெரியாது, ஜட்கா வண்டிகளின் வேகம். தயங்காமல் போகலாம் வாருங்கள்.”

லக்‌ஷ்மணன் அதற்குள் இரண்டு ஜட்கா வண்டிக்காரனை அழைத்து வந்துவிட்டார்.

“மகாராஜா, ஜட்காக்காரனை மெட்ராஸுக்குக் கூப்பிட்டா, அவன் கேக்கிற கூலிக்குக் குதிரையே வாங்கிடலாம். ஒரு மணி நேரத்துக்கு ரெண்டு அணாவாம். மாச வாடகைக்கு எடுத்தா முப்பது ரூவா கொடுங்கன்னு சொல்றான்.”

மகாராஜா என்று லக்‌ஷ்மணன் அழைத்ததைக் கேட்ட ஜட்கா வண்டிக்காரர்கள் பரபரப்பானார்கள். பதற்றத்துடன் ஓடிவந்து மகாராஜாவைப் பார்த்துக் கும்பிட்டனர்.

“கும்பிடுறோம் ராஜா. பண்ணையார் யாரோ வந்திருக்காங்கன்னு நெனைச்சிக்கிட்டோம்.”

“மகாராஜான்னா, எந்த ஊர் மகாராஜான்னு தெரியுமாடே?” லக்‌ஷ்மணன் கேட்டார்.

“எந்தக் கோயிலா இருந்தா என்ன, சாமி சாமிதானே?” இருவரும் வணங்கியபடியே இருந்தனர்.

“மாச வாடகை முப்பது ரூபாய் கேட்கிறானே மகாராஜா?”

“முப்பது ரூபாய் வாங்கிப்போய் அவன் கோட்டையா கட்டப்போறான். ரெண்டு நாளைக்கு நல்ல சாப்பாடு சாப்பிடுவான்.”

“நல்ல சாப்பாடு சாப்பிட மனசு வராது இவனுங்களுக்கு. ஸ்பிரிட் கடைக்குப் போய் வரிசையில நிப்பானுங்க. இப்போதான் மெட்ராஸ் பிரசிடென்சியில ரெண்டாயிரத்து சொச்சம் பேர் இருந்தாப் போதும், ஒரு சாராயக் கடை வச்சிக்கிடலாம்னு அனுமதி கொடுத்திட்டாரே கவர்னர்? விக்கிறது சாராயம். ஆனா சாராயம் விக்கிறவன் மரியாதைக்குரியவனா இருக்கணுமாம். அந்த உத்தரவைப் பார்த்தீங்களா மகாராஜா?”

“கொடுக்கிறவன் மரியாதையா இருந்தா வாங்குறவனும் மரியாதையா இருப்பான்னு ஹிஸ் எக்ஸலென்ஸி கவர்னர் நினைச்சிருப்பார். நல்லதுதான் விடுங்க. கிளம்பலாமாப்பா? உன்னோட போனி ஒரு மணி நேரத்துக்கு எத்தனை மைல் போவும்?”

“நீங்க உக்காருங்க ராஜா. எத்தினி மைல் போணும்னு சொல்றீங்களோ அத்தினி மைல் போவச் சொல்றேன். ரெண்டு போனியும் எம் புள்ளைங்களாட்டம். சொன்னா சொன்னதுதான்.”

மகாராஜாவின் உடன் வந்த வீரர்கள் அவரின் கோச் வண்டியில் இருந்து அவருடைய பஞ்சு மெத்தைகளை ஜட்காவிற்கு மாற்றியிருந்தார்கள்.

“அய்யங்கார், நீங்க என்கூட வந்துடுங்க. லக்‌ஷ்மணன் இன்னொரு வண்டியில் வரட்டும்.” சொல்லியபடியே மகாராஜா உற்சாகமாக குதிரையோட்டியை ஒட்டி முன்பக்கம் கால்வைத்து ஏறி அமர்ந்தார். திவான் பின்பக்கம் அமர்ந்தார். திவானின் முகத்தில் கவலை கூடிச் சோர்வு வந்திருந்தது.

மகாராஜாவைக் கும்பிட்டுவிட்டு, குதிரைக்காரன் வண்டியில் ஏறி உட்கார்ந்தான். மங்கிய குரலில் சொன்னானா என்று தெரியவில்லை, சத்தமின்றி வெளிப்பட்ட அவன் உத்தரவுக்குக் காற்றெனப் பாய்ந்தன குதிரைகள். சரளைக் கற்களை நிரவி, கரும்புப் பிசின் போடப்பட்டிருந்த பாதையில் ஜட்காவின் சக்கரங்கள் நழுவியோடின.

“யாத்திரிகர்களுக்கு மெட்ராஸ் பிரசிடென்சியும் வடாற்காடு மாவட்டமும்தான் ரொம்ப உறுதுணை. சக்கரம் வெண்ணெயில் நழுவி ஓடுற மாதிரி ஓடுது பாரும். என்னுடைய சமஸ்தானத்தில் சரளை பாவின பாதைதான். சீக்கிரம் மெட்டல் ரோடு போடணும். அரக்கோணத்துக்கும் காட்பாடிக்கும் தண்டவாளம் போட்டதிலிருந்தே யாத்திரிகர் பாட்டைகளும் சீராயிடுச்சு. திருவிதாங்கூர்ல எப்படி இருக்கு அய்யங்கார்?”

“திருவிதாங்கூர்ல மாதவ ராவ் திவானா இருக்கும்போதே மராமத்து டிப்பார்ட்மென்ட் மூலம் இந்தக் காரியங்களைல்லாம் ஆரம்பிச்சுட்டார்.”

“ஓ... உங்க நண்பர். கேள்விப்பட்டீங்களா, மாதவ ராவும் பூனா காங்கிரஸுக்குப் போறாராம், ரிட்டயர்டு ஆகி ஓய்வா இருக்கிறதால நிறைய போக்குவரத்தா இருக்கார். ஆளுங்கள அவர்தான் சேர்த்துக்கிட்டிருக்கிறாராம்.”

“எனக்கும் கடிதம் எழுதியிருந்தார் மகாராஜா.”

நகரத்தைக் கடந்தவுடன் பசுமை கூடி, காற்றில் பச்சை வாசம் வந்தது. வெயில் உச்சி இறங்கும் வேளை என்பதால் வயல்களில் ஆங்காங்கு வேலை செய்துகொண்டிருந்தனர். வயல்களுக்குப் பாய்ந்த கிணற்று நீர் சொற்களைக் கொண்டுசென்றதால், தூரத்தில் ஒலித்த ஏற்றப்பாட்டின் இசை மட்டும் இவர்களுக்குக் கேட்டது.

“பஞ்ச காலத்துக்குப் பிறகு, கிணறு எடுக்க பிரிட்டிஷ் சர்க்கார் இப்போ கடன் கொடுக்குது. அதோ தெரியுது பாருங்க, பெரிய கிணறு, அதெல்லாம் ரெண்டு வருஷம் முன்பு எடுத்ததுதான். விவசாயிங்க இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்காங்க. அதிலயும் மூணு வருஷம் முன்னாடி வடாற்காடு மாவட்டம் மட்டும் மழையில்லாமப் போயிடுச்சி. வந்தவாசி, போளூர், வாலாஜாபேட்டை இந்த மூணு தாலுகாவும் மொத்தமா வறட்சிதான். ஏற்கெனவே அந்த ஊரெல்லாம் பயிர் பச்சையைப் பார்க்கிறது அபூர்வம். இதுல மழை அப்பப்போ ஏமாத்திடுது.”

“மகாராஜாவுக்கு இந்தப் பகுதி எல்லாமே பழக்கமோ?”

“நான்தான் சொன்னேனே அய்யங்கார்... என் கால் ஒரு இடத்துல தறிக்காது.”

“என்னோட சொந்த மாவட்டம். என்னைவிடக் கூடுதலா தெரிஞ்சு வச்சிருக்கிறீங்களேன்னு ஆச்சரியமா இருக்கு.”

“புதுசு புதுசா நாலு ஊரையும் ஜனங்களையும் பார்த்தாத்தான் எனக்குத் திருப்தி. சாப்பாடும் வகை வகையாய் இருக்கணும். அந்தந்த ஊர்ல கிடைக்கிற எல்லாம் சாப்பிடணும்.”

“உங்க வாழ்க்கையே புதுமாதிரியா இருக்கு மகாராஜா. எனக்கு வாழ்க்கை பூரா சர்க்கார் உத்தியோகம். அப்பப்போ வர்ற புது அதிகாரிக்குச் சேவகம். இப்போ திருவிதாங்கூர் மகாராஜாவுக்குச் சேவகம். படிக்கிறதும், பெருமாளைச் சேவிக்கிறதும் ரொம்பப் பிரியம். அதுக்கும் நேரத்தைக் கண்டுபிடிக்க முடியலை.”

“திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு நீங்கதானே அச்சாணி அய்யங்கார். உங்களைப் பத்திக் கேள்விப்பட்டுக்கிட்டேதான் இருக்கேன். மராமத்து டிப்பார்ட்மென்ட்ல வருமானமே நீங்க போன பிறகுதானே?”

“மகாராஜா என்னைப் புகழ்ச்சி செய்ய விரும்புறீங்க.”

“உண்மையைத்தான் சொல்றேன் திவான்.”

இருவரும் வழிக்காட்சிகளைப் பார்த்தனர்.

“பஞ்சக் காலத்துல கஞ்சித் தொட்டி வச்சப்ப, நிவாரணக் கமிட்டியில நானும் இருந்தேன் மகாராஜா. இந்தப் பாதையில பார்த்தீங்கன்னா, கஞ்சி, கஞ்சின்னு பெருங்கூட்டமா ஜனங்களோட அழுகுரலும் கூச்சலுமா இருக்கும். அங்கங்கே செத்துக் கிடந்த ஆடு மாடுங்கள பார்த்தாலே உயிர் போகும். கால்நடைங்க கோகுலத்துக் கண்ணனோட அம்சமாச்சே. எல்லாம் சீரழிஞ்சிடுச்சி. ஒரு லட்சம் மாடுங்க இந்த மாவட்டத்துல மட்டும் செத்திருக்கும்னு சொல்றாங்க.”

“சர்க்கார் கணக்கு உங்களுக்குத் தெரியாதா அய்யங்கார்? லட்சத்துக்கு மேல இருக்கும். எல்லா வீட்டு மாட்டுக் கொட்டகையும் அஞ்சாறு வருஷமா காலியாதான் இருந்தது. ஒரு வீட்லயும் மாடு கன்னுக கிடையாது. இப்போத்தான் வெளியூர் சந்தைங்களுக்குப் போய் ஒன்னு ரெண்டு மாடு கன்னுகள விவசாயிங்க வாங்கிட்டு வந்திருக்காங்க. காய்ஞ்சாலும் பேய்ஞ்சாலும் வெள்ளாமை செய்யறவன் தலைமேலதானே விடியும்?”

“சரியாச் சொன்னீங்க மகாராஜா. தாது வருஷ பஞ்சத்துல வேற தொழில் செஞ்சவங்ககூட குடும்பத்துக்கு ஒருத்தரு ரெண்டு பேர அள்ளிக் கொடுத்திட்டுப் பிழைச்சிக்கிட்டாங்க. கூண்டோடு போனது விவசாயிங்கதான். மண்ணையும் தண்ணியையும் நம்பி இருக்கிறவங்க அவங்கதானே?”

“அதனாலதான் அய்யங்கார் நானே உங்ககூட கிளம்பி வர்றேன். மதுரை மாவட்டத்துல ஜனத்தொகையே அஞ்சுல ஒரு பங்கு குறைஞ்சுபோச்சாம். பஞ்சத்துல செத்தவங்க ஒரு பக்கம்னா, குழந்தை குட்டியோட ஊர விட்டுப் போனவங்க பாதி. அந்த ஜனங்க என்ன பாவம் பண்ணுனாங்க. சொந்த ஊர விட்டுப் போகணும்னா, வேரோட மரத்தைப் பிடுங்கிற மாதிரிதானே? அப்படிப் பிடிங்கி நட்டா, எத்தன மரம் பிழைக்கும்னு யாருக்குத் தெரியும்?”

நீரதிகாரம் - 26 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

திவான் அமைதியாக கவனித்தார்.

“பனங்கள் விக்கிறவனுக்குக்கூட வருஷம் முழுக்க வருமானம் வருது. வெத்திலை பாக்கு வித்து, ஓகோன்னு எத்தனை பேர் இருக்காங்க தெரியுமா? ஓராளுக்கு ஒரு நாளைக்கு ஆறு பைசா இருந்தா ஜாம் ஜாம்னு இருக்கலாம். அந்த ஆறு பைசா இல்லாமத்தான் விவசாயிங்க சாகுறாங்க. நாம இப்போ பனப்பாக்கம் வழியா போறோம். இன்னும் கொஞ்சம் தெற்கால போனம்னா காவேரிப்பாக்கம் போய்ப் போகலாம். பாலாற்று அணைக்கட்டு கட்டி முப்பது வருஷமாச்சு. மைசூர்ல மழை பேய்ஞ்சா பாலாத்துல தண்ணி வரும். வர்ற தண்ணி அணையில தேங்கும். ஆறு மாசத்துக்குப் பஞ்சம் இருக்காது. பேரியாறு அப்படியில்ல. வருஷம் முழுக்க தண்ணி வத்தறதே இல்லை. பேரியாத்துத் தண்ணிய வைகையோட சேர்த்துட்டா, மதுரை ஜனங்க எப்பவுமே பயிர் பச்சையைப் பார்க்கலாம். இதுக்கு நீங்க முயற்சி செய்ங்க திவான். மாதவ ராவ் காலத்துல திருவிதாங்கூருக்குப் பல நல்லது நடந்திருக்கு. உங்க காலத்துல உங்க தலைமுறைக்குப் பேர் சொல்ற மாதிரி நீங்க இந்த ஒப்பந்தத்துல கையெழுத்து வாங்க ஏற்பாடு செய்ங்க.”

“மகாராஜாவுக்குத் தெரியாதது ஒன்னுமில்ல. நான் வெறும் அம்புதானே?”

“இலக்கை வென்றெடுப்பது அம்புதானே?”

“இலக்கை அம்பு தீர்மானிக்க முடியாதே மகாராஜா?”

“வில்லின் பலம் அம்பில்தான் இருக்கு அய்யங்கார். மதுரை மீனாட்சி நம்ம அழகனோட சகோதரி. எந்தச் சகோதரனாவது சகோதரியின் கண்ணீரைப் பார்த்துக்கிட்டு இருப்பானா? பிறந்த வீட்டோட பலத்தை நம்பித்தானே பெண்கள் புகுந்த வீட்டுக்கு நம்பிக்கையோட போறாங்க. கல்யாணம் செய்துகொடுத்த பெண் கண்ணீர் மல்க நின்றால், அவளோட புகுந்த வீட்டை மட்டும் பாதிக்காது. பிறந்த வீட்டைத்தான் முதல்ல பாதிக்கும். அவள் மனசு பிறந்த வீட்டு ஆளுங்களத்தான் நெனைக்கும். கஷ்டத்துல என்னன்னு கேட்க அண்ணன் வரலையே, அப்பா வரலையே, பெத்த தாய் வரலையேன்னு பரிதவிச்சுப் போவா. மீனாட்சிக்குப் பச்சை உடுத்துறாங்களே எதுக்குன்னு நினைக்கிறீங்க திவான்? பச்சைன்னாலே வளம். செல்வம். விளைஞ்சு நிக்கிற நிலத்தோட நிறம். அதோ பாருங்க, அதுமாதிரி கட்டாந்தரையா, தரிசா கெடக்குறதுக்கா பூமி? தளதளன்னு வளந்து நின்னு, பூ வச்சு, கதிர் தள்ளி, விளைஞ்சு நிக்கிற கதிர் இருந்தாத்தான் நிலத்துக்கு அழகு. அந்த அழகுதான் பசுமை. மீனாட்சி ஆள்கிற மண் எப்பவும் பசுமையா இருக்கணும் திவான். உங்களுக்கு மெட்ராஸுக்குப் போனவுடனே கடிதம் வாங்கிக் கொடுப்பேன். அது உங்க திருப்திக்கு. பிரிட்டிஷ்காரங்களை அணை கட்டுறதுலயும் கட்டடம் கட்டுறதுலயும் குறை சொல்ல முடியாது. எந்தத் திட்டத்தையும் ஆராயாம ஒப்புதல் கொடுக்க மாட்டாங்க. நீங்க நேரா மகாராஜாவைப் பார்க்குறீங்க. கையோட ஒப்பந்தத்துல கையெழுத்து வாங்குறீங்க. கடல்ல வீணாப் போற தண்ணிய என்ன செய்யப் போறீங்க? பாதிநாள் உங்க தேசம் வெள்ளக்காடாத்தானே இருக்கு? பத்மநாபரே வெள்ளத்துக்கு பயந்துதானே சயனகோலத்துல படுத்துட்டார்.”

திவானுக்கும் மகாராஜா சொல்வது சரியென்று தோன்றியது. அவரின் வார்த்தையில் இருந்த உண்மை, மனசுக்குள் இருந்த பாரத்தை உடைத்து வெளியேற்றுவது போலிருந்தது.

“பஞ்சம் கத்துக்கொடுத்த பாடத்தில் இப்போதான் பிரிட்டிஷ் சர்க்காருக்கு மக்கள்மேல கருணை வந்திருக்கு. சுதேசி எதிரிங்கள அழிச்சுட்டதால இப்போதான் அவங்கள ஆட்சியாளரா நினைக்க ஆரம்பிச்சிருச்சு. ஜனங்களுக்கு நல்லது செய்யணும்னு நினைக்கிறாங்க.”

திவான் சந்தேகமாய் மகாராஜாவைப் பார்த்தார்.

“பிரிட்டிஷ் சர்க்காரோட முதல் அனுதாபியான வேங்கடகிரி மகாராஜாவா இப்படிப் பேசுறேன்னு பாக்கிறீங்களா அய்யங்கார்?”

திவான் ஆமாமென்பதைப் போல் பார்த்தார்.

“அனுதாபியாக இருப்பது அரசியல் சூழலின் கட்டாயம். வேங்கடகிரி அரசர்கள் வீர மறவர்களாய், பிரதிநிதிகளாய் உடன் நிற்க விஜயநகர அரசர்கள் அரசாண்ட தேசமல்லவா மதுரை? மதுரைக் குடிகள் எம் அரசனின் குடிகள். எங்களின் குடிகள். குடிநலன் கருதா அரசன் என்ன அரசன்? நீங்கள் விரைந்து திருவிதாங்கூர் செல்ல வேண்டும் என்பதே என் அன்பான உத்தரவு.”

“உத்தரவு மகாராஜா” என்ற திவான், நெற்கதிரின் அருகிலமர்ந்திருந்த நாரை ஒன்றைப் பார்த்தார்.

“நீராலானது இவ்வுலகு…” மனத்திற்குள் நெகிழ்ச்சியுடன் சொல்லிக்கொண்டார்.

- பாயும்