மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 32 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

சபரிமலை மகர விளக்கு அன்னைக்குப் பொன்னம்பலமேட்டில் தீபம் ஏற்றும் உரிமை அரையன் குலத்து மூத்த சாத்தனுக்குத்தான் இருக்கிறது.

நீரதிகாரம் - 32 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“அஞ்சுதெங்கு செல்வதாகக் கிளம்பிய நீங்கள் எப்படிக் கோட்டயம் வந்தீர்கள் தம்புரான்?”

பூஞ்சாறு அரசர் ராம கோட வர்மாவின் கேள்விக்குப் பதிலொன்றும் சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தார் பந்தள அரசர் ராஜசேகரா.

“மன்னான்களின் கோவில்மலைக்கும் பளியர்களின் பளியன்குடிக்கும் சென்றிருந்தேன். அணை கட்டுமிடத்தை மாற்றினால் மங்கலதேவி கண்ணகி கோவிலும், மன்னான்களின் காணியும் தப்பிக்கலாம். பளியன்குடியில் இப்படியொரு யோசனை வந்தவுடன் உங்களைப் பார்க்க நேராக அஞ்சுதெங்குதான் கிளம்பினேன். வரும் வழியிலேயே உங்களின் வீரர்கள் நீங்கள் கோட்டயம் வரச் சொன்ன சேதி சொன்னதால், நேராகக் கோட்டயம் வந்துவிட்டேன்.” பந்தள அரசர் பதிலொன்றும் சொல்லாததால் கோட வர்மாவே பேசினார்.

“நானும் திருவிதாங்கூர் மகாராஜாவைச் சந்திக்கச் சென்றவன்தான். நமக்குத்தான் நிரந்தரத் தலைவலியாக அரையன்கள் இருக்கிறான்களே?”

“அரையன்கள் இப்போது நம் எல்லைக்குள் வருவதே இல்லையே தம்புரான்? அவர்கள் வேதக்காரர்கள் பின்னால் போய் ஐம்பது வருஷத்துக்கும் மேல் ஆனதே!”

“தேவாலயத்திற்குப் பத்து அரையன்கள் போய் சிலுவையை மாட்டிக்கிட்டால் மேல்மலையின் அரையன்கள் எல்லாம் வேதத்திற்கு மாறிவிட்டார்கள் என்று அர்த்தமா? அவன் ரத்தத்தில் கலந்திருக்கிற மேல்மலையும் காடும் இரவோடு இரவாகக் காணாமல் போய்விடுமா? அவன் நெஞ்சில் சிலுவை கிடக்கிற இடத்தில் நம்ம சாஸ்தாதானே இருப்பார்? காடு மலை மேட்டில் அவன் அலைய, கிறிஸ்துவா வழித்துணையாக உடன் வருவார்? யானை மேலேயோ, புலி (சிறுத்தை), கடுவா (புலி) மேலேயோ உட்கார்ந்து கையில் வாளோடு நம்ம சாஸ்தா அவன் பின்னாடி போனாத்தானே, தெய்வத்துமேல் பாரத்தைச் சுமத்திட்டு, அவன் அச்சமில்லாமல் காட்டில் திரியலாம். பாதிரியார் சொன்னார், கிறிசாத்து சொன்னார்னு அவன் போய் மண்டியிட்டா, அவன் உள்ளே இருக்கிற மிருகம் மண்டியிடுமா? ஒவ்வொரு குடிக்கும் ஒரு தெய்வம் என்று யாரும் விதி வகுத்தா தெய்வத்தை உண்டாக்கினாங்க? எங்கெங்க வாழத் தொடங்கினார்களோ அந்த நிலத்தில் இருந்துதானே அவரவர்களுக்கான தெய்வம் முளைத்தெழுந்து வரும்? மேல்மலையில் வாழுகிறவனுக்குச் சாஸ்தாதான் தெய்வம். அவர்தான் இந்தக் காடுமேடெல்லாம் அறிந்த வேட்டைக்காரன். காவல்காரன். அடர்ந்த அந்தக் காட்டில் கிறிஸ்து என்ன செய்ய முடியும்?”

“பாதிரியார் கதையை விடுங்க தம்புரான். அவர் நடுக்காட்டில் பங்களாவும் கட்டிட்டார். தேவாலயமும் கட்டிட்டார். நம்ம சாஸ்தாவை சாத்தானாக்கிட்டார். மலையில் இருக்க அரையன்கள் பாதிப்பேரை வேதக்காரனாக்கிட்டார் அந்தப் பாதிரியார். இப்போ இந்தக் கோட்டயத்தில் அவங்களைக் குடி வைக்கிறேன் என்று சொல்லுறாராம். அரையன்களை மலையை விட்டு இறக்க, இவர் மலைமேல் ஏறிட்டார். நீங்க அஞ்சுதெங்கு போகாம கோட்டயம் வந்த காரணத்தைச் சொல்லுங்க.”

“சபரிமலை மகர விளக்கு அன்னைக்குப் பொன்னம்பலமேட்டில் தீபம் ஏற்றும் உரிமை அரையன் குலத்து மூத்த சாத்தனுக்குத்தான் இருக்கிறது. அவன் குடும்பமே வேதத்துக்குப் போய்விட்டது. மூப்பன் மட்டும் விடாப்பிடியாய் `சாத்தனைத் தவிர வேறு யாரையும் கும்பிட மாட்டேன், அடியவர்கள் எல்லாம் என் அய்யனை ஜோதி ரூபமாய்க் கும்பிட வருஷா வருஷம் நான்தான் தீபம் பொருத்தறவன். அந்தக் கையால் சிலுவையைத் தொட மாட்டேன்’னு உறுதியா நின்னிருக்கான். அவன் குடும்பத்து ஆள்களும் அவனைக் கட்டாயப்படுத்தாமல் இத்தனை வருஷம் இருந்திருக்கிறார்கள். புதிதாக வேதத்துக்குப் போனவர்கள் இருக்கிறார்களே, அவங்க சில பேர் மூத்த சாத்தனை இந்த வருஷம் தீபம் ஏத்தப் போகக் கூடாதுன்னு மறிச்சிருக்காங்க. ‘என் ஜீவனே போனாலும் பரவாயில்லை, நான் போய்த்தான் தீருவேன்’னு விடாப்பிடியா போயிருக்கான். பாவம், அந்தச் சாத்தனைத் தீயில் தள்ளி விட்டுட்டானுங்களாம் காணி பையன்கள்.”

நீரதிகாரம் - 32 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“ஐயோ, சாத்தனுக்கு ஒன்னும் ஆகலையே?”

“தீபம் ஏற்றி முடிக்கும்வரை நம் வீரர்கள் அந்தப் பகுதியில்தானே இருப்பார்கள்? அவர்கள் பார்த்து உடனே சாத்தனைத் தூக்கிக் காப்பாற்றி யிருக்கிறார்கள். முதுகிலும் காலிலும் மட்டும் தீக்காயங்கள். பச்சிலை மருந்து வைத்துக் கட்டி வைத்தியம் நடக்கிறது.”

“பாதிரியாருக்கு இவ்வளவு ஆக்ரோஷம் வருகிறதா?”

“பாதிரியார் இப்படிச் செய்ய மாட்டார். பாதிரியாரிடம் போதனை பெற்றவர்கள்தான் இந்தக் கொலைபாதகத்தைச் செய்யத் துணிந்தார்கள். புது தெய்வம் உடனிருக்கிறது என்ற ஆணவம்.”

பேச்சைத் தொடர முடியாமல் இருவருமே மௌனமானார்கள்.

“சபரிமலா கோவில் உங்கள் சமஸ்தானத்தின் ஆளுகையை விட்டுச் சென்றதில் இருந்து ஒவ்வொரு வருஷமும் வந்துகொண்டிருக்கிற சிக்கல்தானே தம்புரான்? உங்களிடம் சாஸ்தாவுக்கான திருவாபரணப் பெட்டியை வைத்துக்கொள்ளும் உரிமையை விட்டுவைத்திருக்கிறார்கள். அரையன்களிடம் பொன்னம்பலமேட்டில் மகர விளக்கு ஜோதியை ஏற்றும் வழக்கத்தை விட்டுவைத்திருக்கிறார்கள். திருவிதாங்கூர் சமஸ்தானம் இவ்வுரிமைகளைப் பறிக்கத்தான் தேவசம் போர்டையும் தாழமன் குடும்பத்துத் தந்திரிகளையும் தயார் செய்துகொண்டிருக்கிறது. அதற்கெல்லாம் தேவையே இல்லாமல், அரையன்களாக எல்லா உரிமையையும் விட்டுக்கொடுத்துவிட்டுப் போய்விடுவான்கள் போலிருக்கிறதே?”

“விட்டுக்கொடுக்க மாட்டான்கள். சிதைத்து விடுவான்கள். சாத்தனைத் தீயில் தள்ளிய பிறகு என்ன செய்தான்கள் தெரியுமா கோட வர்மா?”

“என்ன நடந்தது தம்புரான்?”

“சாஸ்தா கோவிலின் மேல் கல்லெறிந்திருக்கிறார்கள். மகர விளக்குப் பூஜை முடிந்த மூன்றாம் நாள் கோவிலின் கூரைக்கும் தீ வைத்திருக்கிறார்கள்.”

“அரையன்களா?”

“புதிதாக வேறு யார் அங்கு வர முடியும்? திருவிதாங்கூரைவிட பந்தள சமஸ்தானத்தின்மேல்தான் அவன்களுக்கு அதிக கோபமிருக்கக் கூடும்.”

கோட வர்மாவுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

“எதற்காகத் தம்புரான் சாத்தனின் கோவிலைச் சிதைக்கும் இந்தக் கொடுஞ்செயல்? நீங்களே உங்கள் சமஸ்தானத்தின் ஆளுகைக்குட்பட்ட இடங்களையெல்லாம் திருவிதாங்கூரிடம் தொலைத்துவிட்டு நின்றிருக்கிறீர்கள்.”

“அரையன்களுடைய தெய்வத்தை நாம் களவாடிக்கொண்டதாக அவர்களுக்குக் கோபம். மலையிலும் காட்டிலும் வாழும் எங்கள் வனதேவதைதான் சாத்தன். எங்களின் அய்யன் அவர். அவர் எப்படிப் பந்தள ராஜாவுக்கு மகனாக முடியுமென்று பல தலைமுறைகளாகச் சிக்கல் தொடர்கிறது. வருஷத்திற்கொரு முறை இந்தச் சிக்கல் தலையெடுத்து, பின் தணிகிறது. அரையன்களும் மன்னான்களும் காணிகளும் நம் பாண்டிய அரச குடும்பத்தோடு மதுரையில் இருந்து வந்தவர்கள்தானே. நாடு இழந்து அலைந்து திரிந்த வேளையில், கிடைத்த இடத்தில் பாண்டிய அரச குடும்பத்தினர் குடியேறினார்கள். குலதெய்வம் மீனாட்சியை மட்டும்தான் நம் மூதாதையர் உடன் அழைத்து வந்தார்கள். மேல்மலையில் குடியேறியபோது அங்கிருந்த காணிகள் வணங்கிய தெய்வத்தையும் தங்கள் தெய்வங்களாக ஏற்றுக்கொண்டனர். அப்படித்தான் சாத்தன் நமக்குத் தெய்வமானது. சாத்தனை மலையாள வழக்கில் நாம் சாஸ்தாவாக்கிவிட்டோம். நாம் மலையாளத்திற்கு மாறிவிட்டோம். அரையன்கள் இன்னும் தமிழ் பேசுகிறார்கள். நம்முடைய சாஸ்தா அவர்களிடம் சாத்தனாகவே இருக்கிறார். அதனால் பந்தள சமஸ்தானம் என்றாலே அரையன்களுக்கு அவர்கள் தெய்வத்தை அபகரித்துக் கொண்டவர்களென்ற உள்புகைச்சல் உண்டு.”

சோழர்களுடனான தீராப் பகையாலும், தாயாதி சண்டைகளாலும் சொந்த மண்ணை விட்டு எழுநூறு, எண்ணூறு வருஷங்களுக்கு முன் இடம்பெயர்ந்த பாண்டிய அரச குடும்பத்தின் ஒரு பிரிவினர், சேர தேசத்திற்குச் சென்று, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் அடைக்கலமானார்கள். அங்கு அவர்கள் புதியதாக ஆட்சி அமைத்துத்தான் பூஞ்சாறு, பந்தள சமஸ்தானங்களின் சிற்றரசர்களானார்கள். பாண்டிய அரசனோடு குடிபெயர்ந்தவர்கள் அரசன் சென்ற இடங்களுக்கெல்லாம் அலைந்து திரிந்தனர். பாதுகாப்பான இடமென்று மேல்மலைகளிலும் காடுகளிலும் பாண்டியர்கள் அடைக்கலமான வேளையில் வெயில் தேசத்தில் இருந்து சென்ற மக்களுக்கு மலை வாழ்க்கை பழகவில்லை. ஆனால் அரையன்கள் மலை வாழ்க்கைக்கு எளிதாகப் பழகினார்கள். பாண்டிய அரசர்கள் மதுரையில் அரசாண்ட காலத்தில், அரசர்கள் விரும்பிச் சாப்பிடும் கொழுந்து வெற்றிலையையும், தேன், சந்தனம், அகில் உள்ளிட்ட மலைப்பொருள்களையும் மலையிலிருந்து கொண்டுவர அரையன்கள்தான் மேல்மலைக்குச் சென்று வந்தார்கள் என அரையன்கள் குடும்பத்தில் வழிவழியாகச் சொல்லிவருகிறார்கள். பாதையற்ற பாதைகளில் காட்டுயிர்கள் போல் அரையன்களால் எளிதில் காட்டுக்குள் ஊடுருவிட முடியும்.

நாட்டை விட்டு வந்த வேளையில் மேல்மலையின் தட்பவெப்பத்திற்குப் பொருந்திப்போக பாண்டிய குடிகள் தடுமாறியபோது, அரையன்கள் காட்டுக்குள் காற்றைப்போல் இயல்பாக நடைபயின்றார்கள். காட்டில் அரையன்களும் முதுவன்களும் மன்னான்களும் வருவதற்கு முன்பிருந்த காணிகள், மண்ணாலும் கல்லாலும் செய்திருந்த வேட்டை தெய்வத்தின் உருவத்தை ஆங்காங்கு வைத்து வழிபடுவதைப் புதிதாக வந்த அரையன்கள் பார்த்திருக்கிறார்கள். காட்டுக்குள் விலங்குகளிடமிருந்தும், விடம் நிரம்பிய பூச்சிகள், பாம்புகளிடமிருந்தும், கண்ணுக்குத் தெரியாத தீய சக்திகளிடமிருந்தும் தப்பி உயிர்வாழ வேண்டுமென்றால், வேட்டைக் கடவுளான அய்யன் துணையிருந்தால் மட்டுமே முடியுமென்று மலையின் பூர்வ குடிகள் சொன்னதை ஏற்றுக்கொண்டனர். தங்களின் குலதெய்வமான மீனாட்சியுடன் அய்யனையும் வணங்கினர்.

நீரதிகாரம் - 32 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

வியக்கத்தக்க இன்னொரு உண்மையையும் அரையன்கள் குடும்பத்தில் சொல்கிறார்கள். பாண்டிய ராஜ்ஜியமும் மேல்மலையும் இணையும் இடத்தில்தான் சபரிமலா கோவில் அமைந்திருக்கிறதாம். பாண்டிய ராஜ்ஜியத்தில் இருந்து அரையன்களின் மூதாதைகள் வெற்றிலைக்காகவும் நல்ல சந்தனத்திற்காகவும் வந்து சென்றதும் அதே பாதைதானாம். அதனால்தான் மதுரையையும் மேல்மலையையும் இணைக்கும் தெய்வமாகவே சாத்தனை நினைத்தனர். குலதெய்வம் மீனாட்சி வளத்தைக் கொடுப்பதாகவும், சாத்தன் தீயசக்திகளிலிருந்து தங்களைக் காப்பதாகவும் அவர்கள் நம்பிக்கை. சாத்தனின் பதினெட்டுப் படி என்பது, மேல்மலையில் உள்ள பதினெட்டுக் குன்றுகளைக் குறிக்கிறது என்கிறார்கள் அரையன்கள். பதினெட்டுக் குன்றுகளையும் காத்தருளும் அய்யப்பன், மேல்மலையின் கணவாய்களான ஆரியங்காவு, அச்சங்காவு, குளத்துப்புழா, சபரிமலை, எருமேலி ஆகிய ஐந்து இடங்களிலும் சாத்தன் எல்லைச்சாமியாக நின்று மலையைக் காக்கிறார். மலையின் ஆதி காணிகளின் தெய்வம், அரையன்களின் தெய்வமாகி, பின் பந்தள ராஜாவின் பிள்ளையாகி, இன்று திருவிதாங்கூரின் கட்டுப்பாட்டிற்குள் வந்திருக்கிறது.

‘‘உனக்கொன்று தெரியுமா கோட வர்மா? எருமைப்பாறையில் இருக்கிற அரையன்கள் இப்போதெல்லாம் அவர்களுடைய வீடுகளில் இறந்தவர்களை நினைத்துத் தீபம் ஏற்றுவதில்லை. இறந்தவர்களைப் புதைத்த இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் நடுகல்லுக்கும் தீபம் வைப்பதில்லை. நம் எல்லாரையும்விட குடும்பத்தில் இறந்துபோனவர்களை மலைக் காணிகள்தான் தவறாமல் கும்பிடுவார்கள். செத்துப்போன மூதாதைகள்தான் அவர்களுக்குச் சாமி. கிறிசாத்தில் சேர்ந்த பிறகு, எல்லாத்தையும் மறந்திடப் பார்க்கிறாங்க. கஞ்சி ஊத்துறோம், துணி கொடுக்கிறோம், படிக்க வைக்கிறோம்னு பாதிரிகள் சொல்லலாம். உன் தெய்வத்தையே உடுப்பு மாதிரி மாத்திட்டு, எங்களோட தெய்வத்தை ஏத்துக்கன்னு சொல்றாங்களே, அதென்ன நியாயம்னு தெரியலை. தெய்வம் கோவில் கர்ப்பகிரகத்தில் மட்டும் நிக்கிறதுன்னு நெனைச்சிக்கிட்டாங்களான்னு தெரியலை. தெய்வத்தை உதறிப் போட்டுட முடியுமா, இந்தப் பூமியில நம்மை நிலைநிறுத்தி வச்சிருக்கிற மாயச்சங்கிலியாச்சே அது? சீக்கிரம் புரிஞ்சிப்பானுங்க.” மனம் இழுத்துக்கொண்டு சென்ற திசைகளுக்கெல்லாம் சென்று அசந்து திரும்பிய பந்தள ராஜா ராஜசேகரா நினைவுகளில் இருந்து சொற்களை முன்பின்னாகப் பேசினார்.

“இரண்டு வருஷத்துல அரையன்களில் முந்நூறு பேருக்கு ஞானஸ்நானம் செய்திருக்காங்களாம். ஒரே ஒரு பாதிரி. அவரோட முயற்சிதான் இந்தக் காணி ஜனங்கள கிறிசாத்துல கொண்டு சேர்த்தது. நீங்க உங்களோட பிராயத்தில் இருந்து பார்த்திருப்பீங்களே தம்புரான்?”

“பார்த்திருக்கேன் கோட வர்மா. மேல்மலையில் இருந்து பாண்டிய ராஜ்ஜியத்துக்கு வெற்றிலையும் தேனும் கொண்டு வந்தவங்க அரையன்கள். அவங்க போன பாதையை வணிகர்கள் கண்டுபிடிச்சுப் போனாங்க. வணிகர்களோட பாதையில் பாதிரியார்கள் நுழைஞ்சிட்டாங்க. காற்று நுழைய முடியாத இடத்திலும் காணிகளே வாழ முடியாத இடத்திலும் பாதிரிகளால் வாழ்ந்திட முடியும். அரையன்களை வேதத்துக்கு மாற்றிய பாதிரியாருடைய கதை தெரியும்தானே உனக்கு?”

“என்னுடைய அச்சன் காலத்தில் நடந்ததாகச் சொல்லிக் கேள்வி தம்புரான்.”

“நானும் இளம் பிராயத்தில் இருந்த நேரம்தான் அது. பழனிமலையில் இருந்து நிறைய ஏசுசபை பாதிரிகள் மேற்கு மலைத் தொடரைக் குறுக்கும் நெடுக்குமாக நடந்தே கடந்திருக்காங்க. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம். மரம் செடி கொடிகளை ஆராய்ச்சி செய்கிறேன் என்று மலைக்குள் தவமாய் தவம் கிடந்தார்கள் சிலர். மரத்துமேல் குடில் போட்டுக்கிட்டுக் காத்துக்கிடக்கிற வெள்ளைக்காரர்கள் காணிகளைத்தான் கூட வச்சிப்பாங்க. காட்டின் இண்டு இடுக்குகளுக்கெல்லாம் கூட்டிட்டுப் போறதோடு, மரம் செடி கொடிகளைப் பத்திச் சொல்வதற்குக் காணிகளை விட்டா யார் இருக்கா? பந்தளம் கொட்டாரத்திற்கு மேல்மலையில் இருந்து தேன், தினை, வரகு என்று விளைகிற பொருளையெல்லாம் கொண்டு வந்து கொடுக்கிற காணிகள் சொல்லுவாங்க, `தம்புரான், வெள்ளைக்கார துரைங்க மரத்துல கூடாரம் போட்டுத் தங்கியிருக்காங்க, நாங்கதான் கூடப் போனோம். பாதையெல்லாம் காட்டிக் கொடுத்தோம்’னு. காட்டில் முதலில் தொலைவது பாதைகள்தானே? அதனால் காணிகளை எப்போதுமே கூடவே வைத்துக்கொள்வார்களாம். மாதக்கணக்கில், வருஷக்கணக்கில்கூட ஐரோப்பியர்கள் தங்குவார்கள். ஒரு வெள்ளைக்கார அம்மா, காணிகளோட கல்யாணம், கருமாதி எப்படி நடக்குதுன்னு தெரிந்துகொள்வதற்காகவே ஒரு மாதம் வந்து தங்கினாங்களாம். ஆனால், வெள்ளை உடுப்போடு கையில் வேதப்புஸ்தகம் எடுத்துக்கொண்டு காணிகள் இருக்கிற குடிசைகள் பக்கத்தில் பாதிரிமார்கள் வந்தால் மட்டும், காணிகள் சண்டைக்கு வந்துவிடுவார்கள். ‘பேய், பிசாசையெல்லாம் எங்கமேல ஏவிவிட வந்திருக்கீங்களா?’ன்னு கத்திக்கிட்டே பாதிரிகளை விரட்டி விடுவாங்க. அதற்கும் பயப்படாம பாதிரியார்கள், அவர்களிடம் பேச்சுக் கொடுத்து, வேதத்தில் சேரச் சொன்னால் போதும், ‘சாத்தன் புலியையோ, கடுவாவையோ அனுப்பி எங்களையெல்லாம் கொல்லச் சொல்லி ஏவிவிட்டுடுவார், வெள்ளாமை நெலத்துக்குள்ள பெரியவரை இறக்கிவிட்டுடுவார்’னு சொல்லி, சாத்தனுக்கு பயப்படுவாங்க.”

“இப்பவும் சாஸ்தா அவங்களுக்குச் சக வேட்டைக்காரன்தானே? அவருடைய கோபத்துக்கு பயப்படுறது நியாயம்தானே?”

“எல்லா பயத்தையும் பழனிமலையிலிருந்து வந்த அந்தப் பாதிரி தெளிய வச்சிட்டார்.”

“ஆச்சரியம்தான். எங்கோ பிறந்து வளர்ந்து நாம் பேசுகிற மொழி தெரியாமல், மக்களின் நாடி பிடித்துவிடுகிறார்களோ?” கோட வர்மா வியந்தார்.

“வியப்புதான். அந்தப் பாதிரியார் அரையன்களிடம் ஒரு உத்திரவாதம் கேட்டிருக்கிறார். அவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் தான் செய்துவிட்டால், அரையன்கள் அவர் பேச்சைக் கேட்க வேண்டும், வேதத்திற்கு மாற வேண்டும் என்றார். அரையன்கள் ஒத்துக்கொண்டனர்.”

“என்ன செய்யச் சொன்னார்களாம்?”

“காட்டில் இருக்கிற ஒவ்வொரு ஜீவராசியும் சாத்தனின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பவை. சாத்தனின் கட்டளைக்குக் கீழ்ப்படிபவை. பாதிரியார் ஒரே ஒரு ஜீவராசியையாவது அவருக்குக் கட்டுப்படச் செய்ய வேண்டும் என்றனர். பாதிரியார், ‘எந்த ஜீவராசி என்று நீங்களே சொல்லுங்கள்’ என்றார். அரையன்கள் வேட்டைக்குப் போகும்போது அவன்களின் கண்களாகவும் கால்களாகவும் இருப்பவை நாய்கள்தான். காட்டைத் தன் மோப்பத்திலேயே நினைவில் வைத்திருக்கும் வேட்டை நாய்களை வசக்குவது காட்டையே வசக்குவதற்குச் சமமென்று பாதிரியாரிடம், நாய்களைக் கட்டுப்படுத்துங்கள் என்றார்கள். பாதிரியார் ஒரே நாள் அவகாசம் கேட்டார். அடுத்த நாள், கண்களில் தீட்சண்யம் கூடிய வேட்டை நாய்கள் அணிவகுக்க பாதிரியார் அரையன் காணிக்கு வந்தார். திகைத்து நின்ற அரையன்கள் வேறு வழியின்றி, வேதத்தில் சேர்ந்தார்கள். ஒவ்வொரு கிராமமாகச் சென்று அப்படித்தான் அந்தப் பாதிரியார் இரண்டாயிரம் அரையன்களுக்கு மேல் வேதத்தில் சேர்த்துவிட்டார்.”

“திறமையென்று சொல்வதா, மந்திரம் மாயமென்று சொல்வதா தம்புரான்? பிரிட்டிஷ் சர்க்கார் ஒரு பக்கம் நம்மைத் தொந்தரவு செய்கிறது. இன்னொரு பக்கம் ஏசுசபை பாதிரிகள். நம்முடைய சமஸ்தானங்களின் நிம்மதி மொத்தமாய்க் குலைந்துபோனது. சபரிமலாவில் இப்போ என்ன நிலைமை தம்புரான்?”

“அஞ்சுதெங்குவில் மகாராஜா இருக்கிறாராம். திவான் மகாராஜாவைச் சந்தித்துப் பேசிய பிறகுதான் எந்த முடிவும் எடுக்கலாமென்று சொல்லியிருக்கிறாராம். திட்டமிட்டுத்தான் தீ வைக்கப்பட்டிருக்கிறது என்று நாமாக நினைத்துக்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம். காட்டில் தீப்பற்றுவது வாடிக்கைதான். விசாரணைக்குப் பிறகு எந்த முடிவும் எடுக்கலாம் என்று சொன்னாராம். திவானுக்கென்ன? தீப்பிடித்தாலும் உயிர், உடைமைகளுக்குச் சேதமில்லை என்று அறிக்கை தர வேண்டும். நமக்குத்தானே எரிகிறது. இன்று கூரையை எரித்தவன், நாளை தெய்வ மூர்த்தத்தை உடைக்க மாட்டான் என்று என்ன நிச்சயம்?”

“நிச்சயம் வாய்ப்பிருக்கிறது தம்புரான். அரையன்கள் செய்தார்களா, அரையன்கள் மேல் பழியைச் சுமத்தினார்களா என்று தெரியவில்லை. மலைக்குள் மற்றவர் வருவதை விரும்பாதவர்கள் இருக்கிறாங்கன்னு தெரியுது.”

பந்தள அரசரின் வீரன் உள்ளே வந்து, அரண்மனையின் காரியக்காரன் வந்திருக்கிற சேதியைச் சொல்லி, உத்தரவு பெற்றுச் சென்றான்.

“உன்னுடைய கேள்விக்கு விடை தெரியப் போகிறது. கொஞ்சம் பொறுத்திரு கோட வர்மா.”

“அப்படியா?” என்று கோட வர்மா கேட்டு முடிப்பதற்குள் பந்தள சமஸ்தானத்தின் காரியக்காரன் கிருஷ்ணன் தம்பி உள்ளே வந்தான். இரண்டு சமஸ்தானத்தின் அரசர்களுக்கும் மரியாதை செய்தபின், தான் சேகரித்து வந்திருந்த சேதிகளைச் சொல்வதற்கு அனுமதி கோரும் பாவனையுடன் பந்தள அரசன்முன் நின்றான்.

“சபரிமலாவில் இருந்து எப்போது திரும்பினீர்கள் கிருஷ்ணன் தம்பி?”

“நேராகத் தங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன் தம்புரான் அவர்களே.”

“என்ன நடந்ததென்று விசாரித்தீர்களா?”

“சபரிமலா கோவிலில் நடந்தது விபத்தல்ல தம்புரான். சதிகாரர்கள் திட்டமிட்டுத்தான் தீயிட்டிருக்கிறார்கள். நம்முடைய வீரர்கள் பத்துப் பேர் உடன் வந்திருந்தார்கள் தம்புரான். அதனால் பல இடங்களில் விசாரித்தறிய முடிந்தது. நான் கோவில் மண்டபத்திற்குள் சென்று பார்த்தேன். முழுமையாய் எரிந்துபோகாமல் பாதி கருகிய நிலையில் ஆங்காங்கு கிடந்த நெய்யில் நனைக்கப்பட்ட துணிச் சுருணைகளைப் பார்த்தேன் தம்புரான். தீ வைப்பதற்குமுன் மண்டபத்தின் கூரையைக் கோடலியால் அடித்திருக்கிறார்கள். எரிந்து தொங்கும் சரங்களில் கோடலியின் கூர்மை பதிந்த அடையாளம் இருக்கிறது. எல்லாவற்றையும்விட முக்கியமான தடயமொன்று கிடைத்தது தம்புரான்.”

“என்ன தடயமென்று முதலில் சொல்” ராஜசேகரா பரபரத்தார்.

“கோவிலின் மேற்கூரையில் கூரிய நகத்தால் பிறாண்டிய அடையாளம் இருந்தது.”

“விலங்கின் நகப் பிறாண்டலா?”

நீரதிகாரம் - 32 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“ஆம் தம்புரான். முதலில் அப்படித்தான் நினைத்தேன், பிறகுதான் வீரர்கள் சொன்னார்கள், விலங்கின் நகப் பிறாண்டல் அல்ல, மலைப் பண்டாரத்தின் காலடித் தடமென்று.”

ராஜசேகரா அதிர்ந்தார்.

“மலைப் பண்டாரங்கள் காணிகள் நடமாடும் இடங்களுக்குள் வரமாட்டார்களே? மனித நடமாட்டம் இருப்பது தெரிந்தாலே போதும், மரத்தின் மேலேயே அணில்களைப்போல் சத்தமின்றித் தாவித் தாவி அடர் காட்டுக்குள் சென்றுவிடுவார்களே... அவர்கள் எப்படி?”

“அரையன்களை வைத்து, பண்டாரங்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். மலைப் பண்டாரங்களுக்குத்தான் அகன்ற பாதங்களும் கூர்மையான நகங்களும் இருக்கும். விலங்கின் பாதம்போலவே நமக்குத் தோற்றம் தரும். ஆனால் விரிந்து அகன்ற பண்டாரங்களின் பாதங்களைக் கூர்ந்து நோக்கினால் அடையாளம் கண்டுபிடித்துவிடலாம். சத்தமின்றிக் கூரைகளைப் பிய்த்தெறிவதற்காக அவர்களை அழைத்து வந்திருக்கிறார்கள். அவர்கள் பிரித்துக் கொண்டிருக்கும்போதே கீழிருந்து தீப்பந்தங்களைக் கொளுத்திப் போட்டவுடன் பண்டாரங்கள் பயந்துபோய் காட்டுக்குள் ஓடிவிட்டிருக்கிறார்கள்.”

“அரையன்கள்தான் இந்த துர்ச்செயலுக்குக் காரணமா?”

“இல்லை தம்புரான். அரையன்களையும் ஏதேதோ காரணம் சொல்லி அழைத்திருக்கிறார்கள். தங்களுடைய தெய்வத்தின் திருக்கோவிலைக் கொளுத்த அவர்கள் துணிய மாட்டார்கள்.”

“அப்படியெனில், யார்தான் இந்த அவச்செயலைச் செய்ததாம்?”

“மலைக்காணிகள் இல்லையென்பது உறுதியாகிவிட்டது தம்புரான். பின்னிருந்து இயக்கியது யாரென்பது இனிதான் தெரிய வரணும்.”

“பிறகெப்படி முக்கியத் தடயம் கிடைத்ததென்று சொன்னீர்கள்?”

கிருஷ்ணன் தம்பி தயக்கத்துடன் நின்றான்.

“என்ன யோசனை? வார்த்தைகள் வெளிவரத் தயங்கக் காரணம், அச்சமா? குழப்பமா? தெரியக்கூடாத உண்மை ஏதேனும் தெரிந்த அதிர்ச்சியா?” ராஜசேகராவுக்குக் கோபம் வந்தது.

“தம்புரான் மன்னிக்கணும். முழுமையாகத் துலக்கம் பெறாத சேதியைச் சொல்லிக் குழப்பம் உண்டாக்கக் கூடாதே என்ற தயக்கம்தான்.”

“சந்தேகம் உண்டாக்கிவிட்ட சேதியைத் துலக்கப்படுத்திக்கொள்வது நல்லது. துலக்கம் பெற எடுத்துக்கொள்ளும் காலம் சந்தேகத்தின் துர்பலனைத்தான் தரும்.”

“உணர்ந்துகொண்டேன் தம்புரான். சபரிமலா கோவிலைச் சிதைப்பது கலகக்காரர்களின் நோக்கமல்லவாம்.”

“பிறகு... பொன்னம்பல மேட்டைக் கைப்பற்றும் திட்டமா?”

“பேரியாறு அணை கட்டும் திட்டத்தைத் தடுத்து நிறுத்தும் திட்டமாம்.”

“என்னது?” ஒரே நேரத்தில் அதிர்ச்சிக் குரல்களை எழுப்பினர் ராஜசேகராவும் கோட வர்மாவும்.

“ஆம் தம்புரான். அடர்ந்த காட்டுக்குள் செல்ல பிரிட்டிஷ் சர்க்கார் தடை செய்து மூன்று வருஷங்கள் ஆகிவிட்டன. வனத்தைப் பாதுகாக்க சர்க்கார் கொண்டு வந்துள்ள சட்டத்தினால், மேல்மலையின் காடுகளுக்குச் சென்று மரம் வெட்டியும், காட்டில் கிடைக்கும் சந்தனம், அகில் போன்ற விலையுயர்ந்த பொருள்களையும் விற்றுப் பிழைத்து வந்தவர்களுக்குப் பெரும் தடையாகிவிட்டது. கிறிஸ்துவப் பாதிரியார்களிடம் வர்த்தகர்கள்போல் அறிமுகமாகியவர்கள், மலைக்காணிகளைப் போல் காட்டுக்குள் ஊடுருவி வேண்டியதைப் பெற்று வருகிறார்கள். மரங்களை வெட்டிக் காயவிட்டுத் தானாக விழுந்ததைப்போல் காணிகளிடம் சொல்லி, காய்ந்து கிடக்கும் மரக்கட்டைகளைக் கீழே கொண்டுவந்து கொடுக்கச் சொல்வது, கஞ்சா இலைகளை மூட்டைகளாக்கித் தூக்கி வரச் செய்வது என்று அவர்கள் காணிகளுடன் காணிகளாகச் சேர்ந்து சுதந்திரமாகத் தொழில் செய்கிறார்களாம். மலைக் காணிகளை ஏமாற்றுவது மிக எளிது. போதையேற்றும் பட்டைச் சாராயத்தைப் பழக்கிவிட்டார்கள். மலை அரையன்கள் மட்டுமல்ல, நிர்வாணமாகத் திரிகிற மலைப்பண்டாரங்களும் இந்த போதைக்கு அடிமை. பண்டாரங்கள் விலைகூடிய தந்தங்களைக் கொண்டுவந்து கொடுத்துவிட்டு சாராயக் குடுவைகளை வாங்கிச் செல்கிறார்களாம். காணிகளை வசக்கித் தொழில் செய்துகொண்டிருந்தவர்களுக்கு அணை கட்டப்போகும் செய்தி பெரும் அதிர்ச்சியாக இருந்திருக்கும். பொதுவாக மனிதர்கள் நடமாட்டம் இல்லாமல் இருக்கும்வரைதான் அவர்களுக்குத் தொந்தரவில்லை. அணை கட்டப்பட்டால், மக்கள் வருவார்கள், குடியிருப்புகள் வரும், பாதைகள் உருவாகும், கட்டி முடிக்கும் காலம் வரை காட்டுக்குள் தங்களால் தொழில் செய்ய முடியாதென்று எண்ணித்தான் கோவிலுக்குத் தீ வைத்திருக்கிறார்கள்.”

“அணை கட்டுவதைத் தடுப்பதற்கும், கோவிலின் கூரைக்குத் தீ வைப்பதற்கும் என்ன தொடர்பு?” புரிபடாமல் கேள்வி எழுப்பினார் ராஜசேகரா.

“உங்களுக்குப் புரிபடவில்லையா தம்புரான்? சாஸ்தா கோவிலின் கூரை எரிவது துர்நிமித்தம். மேல்மலைக்கும் கோவிலுக்கும் பெரும் ஆபத்து வரப்போகுது என்பதற்கான எச்சரிக்கை என்று தந்திரிகள் நினைக்கக் கூடும். அந்த ஆபத்து அணை கட்டுவதுதான் என்று சேதி பரவச் செய்வார்கள். தீநிமித்தங்களைக் களைந்து குடிகளைக் காப்பவர்தான் சாஸ்தா. அந்தச் சாஸ்தாவின் கோவிலையே தீயிட்டுத் தீநிமித்தமென்று திட்டமிட்டுப் பரப்புபவர்கள் எவ்வளவு திறமைசாலிகளாக இருப்பார்கள்?” கோட வர்மா வியந்தார்.

கோட வர்மா சொல்லி முடித்ததும், ‘தெய்வங்களின் திருவிளையாடல்கள் முடிந்து, தெய்வங்களை வைத்துத் திருவிளையாடல்கள் நடக்கிற காலம் வந்துவிட்டதே’ என்று பந்தள அரசர் ராஜசேகரா வருந்தினார்.

- பாயும்