மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 34 - 2ம் பாகம் - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

அடர்ந்த வனங்களும் இருபது ஆள் உயரத்திற்கு வளரும் விண்ணைத்தொடும் மரங்களும் மேல்மலையைப் பசுமைக்கோளமாக்குகின்றன.

நீரதிகாரம் - 34 - 2ம் பாகம் - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேலாக, நூற்றுக்கணக்கான தாள்களில் சேகரிக்கப்பட்ட குறிப்புகள், பல பருவங்களில் தொகுத்து எழுதப்பட்ட தரவுகள், அரசு இயந்திரத்தின் இரும்புக்கதவுகளைத் தட்ட பலமுறை அனுப்பப்பட்ட கோப்புகள், சாத்தியமே இல்லையென்று நிராகரித்த கவர்னர்கள், வைஸ்ராய்கள், கலெக்டர்கள், நம்பிக்கையின் சிறு வெளிச்சக் கீற்றுடன் கோப்புகளைச் சுமந்த இன்ஜினீயர்கள் எனச் சிவப்பு நாடாவினால் கட்டப்பட்ட கோப்புகளில் உயிர்பெறுவதும், கிடப்பில் போடப்படுவதுமாக இருந்தது பெரியாறு அணைத் திட்டம். 19-ம் நூற்றாண்டு மனிதகுலத்தின் மாபெரும் சாதனையாக நிலைத்து நிற்கப்போகிற திட்டத்தின் குத்தகை ஒப்பந்தம், 1886ஆம் வருஷம், அக்டோபர் மாதம் 29ஆம் தேதிய இன்று திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் திவான் வெம்பாக்கம் ராமய்யங்கார், மெட்ராஸ் பிரசிடென்சியின் சார்பில் திருவிதாங்கூர் ரெசிடென்ட் ஹானிங்டன் இருவரும் கையெழுத்திட அமலுக்கு வருகிறது.

கையெழுத்திடுபவர்கள் கையெழுத்திடும் தருணத்தில் என்ன நினைக்கிறார்களோ, ஆனால் அவர்களின் கைபிடித்து, ‘நீரைப் பயன்படுத்தத் தெரிந்துகொண்டது மனித நாகரிகமல்ல, எல்லைகளைக் கடந்து நீரைப் பங்கிட்டுக்கொள்வதே ஆகச் சிறந்த நாகரிகமென்று’ காலம் புது அத்தியாயத்தை எழுதிக்கொள்கிறது.

இயற்கையினால் கைவிடப்பட்ட நகரத்தை, மனித எத்தனத்தினால் நிலைநிறுத்தப்போகிற ஒப்பந்தம். சொந்த மண்ணை விட்டு அகதிகளாகக் கப்பலேறிச் செல்ல மாதக்கணக்கில் ராமேஸ்வரம், தூத்துக்குடி கடற்கரைகளின் உப்புக்காற்றில் காத்துக்கிடக்கும் பல லட்சம் மக்களின் தலையெழுத்தை மாற்றப் போகிற ஒப்பந்தம். வீணாய்ப் போவதை எடுத்து, தேவையின் தவிப்பில் இருப்பவருக்குக் கொடுக்கும் சமத்துவத்தின் முன்மாதிரி ஒப்பந்தம்.

நீரதிகாரம் - 34 - 2ம் பாகம் - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

ஊரே பஞ்சத்திலும் நோயிலும் செத்துவிழ, அணைக்கத் தந்தையும் பாலூட்டத் தாயும் இல்லாமல் காலம் அனாதையாக்கும் குழந்தைகளின் அழுகுரல் துடைக்கும் கையெழுத்து. சுருங்கச் சொல்லலாம் என்றால், மதுரை தன் புது வரலாற்றைத் தொடங்குகிறதென்ற அச்சாணியத்தின் கையெழுத்து. அரசர்களின் பரணி பாடிய போர்க்களங்களின் வெற்றிகளைக் கடந்து, மக்களின் அழுகுரல்களுக்குக் காது கொடுத்து மேல்மலை எழுதப்போகிற நீரதிகாரத்திற்கான ஈர ஓலைதான் அந்தக் கையெழுத்து.

பேரியாறு எனும் பெரியாறு நதி பிறப்பிடத்தாலும் பிரவாகத்தாலும் இரண்டு ராஜ்ஜியங்களுக்குச் சொந்தமானது. இரண்டு ராஜ்ஜியங்களில் ஒரு ராஜ்ஜியம் தண்ணீர் தேசம்: மற்றொன்று கண்ணீர் தேசம். கண்ணீருக்குக் காரணம் தண்ணீர். பிறப்பிடம் வறட்சியில் கிடக்க, பாய்ந்தோடும் தேசம் வளம் கொழிக்கிறது. இரண்டு ராஜ்ஜியங்களையும் ஊடறுத்துச் செல்லும் வானுயர்ந்த மேல்மலைதான் தண்ணீருக்கும் கண்ணீருக்கும் சாட்சி.

இந்து தேசமான திருவிதாங்கூர் சமஸ்தானமும் பிரிட்டிஷ் சர்க்காரின் மெட்ராஸ் பிரசிடென்சியின் தெற்கில் உள்ள மதுரை மாவட்டமும்தான் அவ்விரு ராஜ்ஜியங்கள். மதுரை மாவட்டம் ராஜ்ஜியத்தின் பகுதிதானே தவிர தனித்த ராஜ்ஜியமல்லவே என்ற சந்தேகம் எழலாம். பல்லாயிரம் ஆண்டுக்கால அதன் கலாச்சார, அரசியல் பின்புலத்தைக் கணக்கில் கொண்டு பெயருக்கு ராஜ்ஜியமென்றே சொல்லுவோம். வறட்சியால் வெடித்துக் கிடக்கும் மதுரை மண் தன் பழம்பெருமையில் குளிரட்டும். பழம்பெருமைகளின் நினைவுகளில்தானே மனிதர்களும் மண்ணும் குளிர்ந்துகிடக்கின்றன? கிழக்கு மேற்காக உள்ள இரண்டு ராஜ்ஜியங்களையும் வடக்கு தெற்காகப் பிரிக்கிறது மேல்மலை.

மேல்மலை, சயாத்ரி மலை எனப் பல பெயர் கொண்ட மேற்குத்தொடர்ச்சி மலை பம்பாய் பிரசிடென்சியின் தபதி நதிக்கரையில் தொடங்கி, மெட்ராஸ் பிரசிடென்சியின் தென்முனையான இந்தியப் பெருங்கடல் வரை ஆயிரம் மைல்களைத் தன் காலடியில் விரித்துப்போட்டு உட்கார்ந்திருக்கிறது. பருத்த முலை மட்டுமே மேனியென உருக்கொண்ட பாலூட்டும் நற்பிராயத்துப் பெண்போல் தழைத்திருக்கும் பிரபஞ்ச உயிர்க்கோளம். மேற்குக் கடற்கரைக்கு இணையாகப் பயணிக்கும் மேல்மலையின் உயர்ந்த குன்றுகள், அரபிக் கடலுக்குள் இறங்குவதற்குப் படிகள் வைத்ததுபோல் தோற்றம் கொண்டிருக்கின்றன.

அடர்ந்த வனங்களும் இருபது ஆள் உயரத்திற்கு வளரும் விண்ணைத்தொடும் மரங்களும் மேல்மலையைப் பசுமைக்கோளமாக்குகின்றன. தரையோடு படர்ந்திருக்கும் அரியவகைச் செடிகளும் புற்களும் வனத்தின் மண்ணைக் கதிரவன் தீண்டிவிடாமல் அரண் செய்கின்றன. யானைகளும் சிறுத்தைகளும் புலிகளும் கோலோச்சும் அதே காட்டில்தான் நூற்றுக்கும் மேலான பாலூட்டிகளும், ஐந்நூற்றுக்கும் அதிகமான பறவை இனங்களும், இன்னும் பிரிட்டிஷ் ஆராய்ச்சியாளர்களால் கண்டறியப்படாத பூச்சிகள், புல்வகைகள், பல்லாயிரம் அரிய வகை உயிரினங்களும் வாழ்கின்றன. சுருங்கச் சொல்லின், பிரபஞ்சம் தனக்கென, தான் சுதந்திரமாக வாழ்ந்து பார்த்துக்கொள்ளத் தன் கருப்பைக்குள் ஒளித்து வைத்துக்கொண்ட பரிசுத்த வனம்தான் மேல்மலை.

பெயரிடப்பட்ட, பெயரிடப்படாத ஆயிரமாயிரம் உயிரினங்கள் மேல்மலையில் உயிர் வாழ்கிறதென்றால் பிரதான காரணம், மேல்மலையின் தண்ணீர். திரும்பிய திசையெங்கும் ஓடைகளும் சிற்றோடைகளும் நதிகளும் புரண்டோட, பாறைகளில் பிறக்கும் நன்னீரின் பிரவாகம் வருஷம் முழுவதும் வற்றாமல் மலைக்குப் பசுமை சேர்க்கிறது.

மலையின் இரு பக்கமும் இரண்டு ராஜ்ஜியங்கள் என்றாலும், இரண்டின் அமைவிடத்தில் இருந்தே குணநலன்கள் வேறுபடுகின்றன. மேல்மலையின் கிழக்குத் திசையில் சரிந்திறங்கும் மதுரை மாவட்டத்தின் மலைகள் கோபம் வந்ததுபோல் ஆங்காங்கு உயர்ந்து திமிறி நிற்கும். மலையின் மேற்குத் திசையில் சரிந்திறங்கும் திருவிதாங்கூர் மென்னலை போல், லேசாக உயர்ந்தும் தழைந்தும் இறங்குகிறது. பணிந்து நடக்கும் பணியாள்போல் அமைந்துவிட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்குத் தென்மேற்கிலிருந்து வீசும் பருவக்காற்று பெரும் மழையைக் கொண்டு வருகிறது. 1500 அடி, 3000 அடி எனக் காற்றை மறித்து உயர்ந்து நிற்கும் மலைக்குன்றுகளைக் கொண்ட மதுரையோ, திருவிதாங்கூரில் மழையைப் பொழிந்துவிட்டு லேசாகிப் பறக்கும் மஞ்சு மூட்டத்தின் மென்குளிர்ச்சியையும் சிறு தூவலையும் எதிர்கொண்டு மழை மறைவுப் பிரதேசமாகி நிற்கிறது.

மேல்மலையின் இயல்பென்று பொதுவாக ஒன்றை வரையறுத்துச் சொல்லிவிடலாம். மேல்மலை தனக்குள் இருக்கும் சிறு பூச்சியையும் புல்லையும் உணவின்றிச் சாகக் கொடுக்காது. தாயின் ரத்தம் முலைக்காம்பிலிருந்து வெண்ணிற திரவமாகி, குழந்தைக்கு உயிர்த் திரவமாவதைப் போல், மேல்மலையின் பசுமையெல்லாம் நதியாகப் பெருகி உயிர்களைக் காக்கிறது. தக்காணம் முதல் தென்னிந்தியா வரையுள்ள மனித சமுத்திரத்தை மேல்மலையின் 124 நதிகளே வாழ்விக்கின்றன.

மலையிலிருந்து கிழக்கு நோக்கிப் பாய்ந்தோடும் கோதாவரி, கிருஷ்ணை, காவிரி, தாமிரபரணி நதிகளெல்லாம் வங்காள விரிகுடாவிற்குள் சங்கமமாகின்றன. மேற்கு நோக்கிப் பாய்ந்தோடும் பேரியாறு, முல்லை, கபினி, மணிமுத்தாறு நதிகளெல்லாம் அரபிக்கடலில் சங்கமமாகின்றன. உலகத்தின் வற்றாத ஜீவநதிகளெல்லாம் பனிமலைகளில் பிறப்பெடுப்பவை. மேற்கு மலைத் தொடர்ச்சி மட்டும்தான் பாறைகளில் ஊற்றெடுக்கும் வற்றாத நதிகளைப் பெற்றெடுக்கிறது. எட்டாயிரம் அடி உயர்ந்த குன்றுகளைக் கொண்ட மேல்மலையின் பாறைகளையும் அதன் பசும்போர்வையாய் விரியும் மரங்களையும் விலக்கிப் பார்த்தால், உள்ளே உறைந்திருக்கும் நீர்மலை. நீராலான மலை.

நீரதிகாரம் - 34 - 2ம் பாகம் - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

900 மைல் ஓடிக் கடலில் கலக்கும் தென்னிந்தியாவின் நீளமான கோதாவரி நதியும் மேல்மலையில் உற்பத்தியாகிறது. பக்கத்து ஊருக்குக்கூட அனுப்ப மாட்டேன் எனச் செல்லம் காட்டி, பெண்ணை வீட்டோடு வைத்திருக்கும் பெற்றோரைப்போல், புறப்பட்ட மாவட்டத்தின் எல்லையைத் தாண்டாமல், யானைகளின் கூட்டத்தில் விளையாடும் சிங்கத்தின் குருளைபோல் அழகு காட்டி, எழுபது மைல் மட்டுமே வளமாக ஓடி, கடலில் கலக்கும் தாமிரபரணியும் மேல்மலையில்தான் உற்பத்தியாகிறது. பாயும் வழியெங்கும் ஒவ்வொரு மிடறும் பயன்பாட்டுக்குத்தான் என்ற மானுட நலனை லட்சியமாகக் கொண்டது தாமிரபரணி.

மேல்மலையின் சிவகிரி மலையில் இருந்து ஊற்றெடுக்கிறது பேரியாறு. மேல்மலையின் வருஷநாட்டுப் பகுதியில் பிறக்கிறது வையை எனும் வைகை. வைகையின் நளினம் அதன் பிறப்பிடத்தின் அழகோடு இணைந்தே வந்திருக்கிறது. நீரலை அறிவோம். மலையின் குன்றுகள் அலை அலையாய் நிற்கும் பேரழகு கொண்ட மலையலைக் குன்றொன்றில்தான் வைகையின் பிறப்பிடம். ‘நெடியோன் மார்பில் ஆரம் போன்று பெருமலை விலங்கிய பேரியாற்றங்கரை’ எனப் பேரியாற்றையும், ‘வையை என்னும் பொய்யாக் குலக்கொடி, புலவர் நாவில் பொருந்திய பூங்கொடி’ என வைகையையும் சிலப்பதிகாரம் புகழ்கிறது.

பிறப்பிடம் ஒரே மலையென்றாலும் இரு நதிகளின் திசைகள் நேரெதிரானவை. பேரியாறு மேற்கு நோக்கி ஓடுகிறது. வைகை கிழக்கு நோக்கிப் பாய்கிறது. பேரியாறு காட்டாறு. வைகையோ கொடி நடையின் அழகில் துள்ளும் நதி. கோடையில் வைகையே தாகத்தில் தவிக்கும். அந்தர்வாகினியாய் ஓடும் நீரள்ளிப் பருக பூமிக்குள் புதையும். கோடையிலும் முப்பதடி அகலமும், இரண்டடி ஆழமுமாய் உற்சாகமாய் வெயில் தின்று நடைபோடும் பேரியாறு. பேரியாற்றின் பயணம் சவால்கள் நிறைந்தது. வைகையின் பயணம் அமைதியானது.

ஒருவருமே நெருங்க முடியாமல், ஊற்றிலிருந்தே மூர்க்கமும் ஆக்ரோஷமும் நிரம்பியது பேரியாறு. காடு, மலை, பள்ளத்தாக்கு, நெடிதுயர்ந்த குன்றுகள் எனக் கரடுமுரடான வழியைக் கடக்க வேண்டுமென்றால் பேரியாற்றின் மூர்க்கத்தால்தான் முடியும். 142 மைல் பாய்ந்தோடி வரும் பேரியாறு, குடிகள் நெருங்கி நின்று பார்க்கவும், நதிக்குள் நீராடவும், நீரெடுத்துப் பயிர் செய்யவும், படகு விடவும் எனப் பயன்படுவதே கடைசி 35 மைல்களுக்குள்தான். வைகையோ வழியெங்கும் காத்திருக்கும் குளங்களுக்கும் ஏரிகளுக்கும் கால்வாய்களுக்கும் வேண்டியதைக் கொடுத்து மென்னடை நடக்கும் பொறுப்புணர்வு மிக்கது.

சிவகிரி மலையில் தன் பயணத்தைத் தொடங்கும் பேரியாறு, அங்கிருந்து பத்து மைல் வடக்காக ஓடி, 2800 அடி உயரத்தில் முல்லையாற்றைத் தன்னுடன் சேர்த்துக் கொள்கிறது. பேரியாறும் முல்லையாறும் சேரும் முல்லைத் தவளத்திலிருந்து மேற்காகத் திரும்பி மீண்டும் பத்து மைல் ஓட்டம். மணற்படுகையும் பாறைகளும், மலையுச்சிகளும் பள்ளத்தாக்குகளும் இரண்டு நதிகளின் பிரவாகத்தில் பின்னுக்குச் செல்ல, வனத்திலிருந்து மூவாயிரம் அடி உயரத்தில் உள்ள பீர்மேட்டில் கீழிறங்குகிறது. அங்கே காத்திருக்கும் தொடுபுழா, கட்டப்பனை ஆறுகளையும் சேர்த்துக்கொண்டு, மேலும் கீழிறங்கி செருதோனி, சித்தாறுகளுடன் இணைகிறது. பின் மேற்கிலிருந்து வடக்கு வந்து, மீண்டும் மேற்குத் திரும்பிப் பெரும் பாறைகளுக்கு மத்தியில் ஓடி வரும் பேரியாறு, கரிமணலுக்கு வந்து சேர்ந்த பிறகே சமன் கொள்கிறது. பிறகுதான் நதியில் படகு விடவும், மரக்கட்டைகளை ஆலவாய்க்குக் கொண்டு செல்லவும் அனுமதிக்கிறது. பின் தேவியாற்றுடன் இணைந்து நேரியமங்கலத்தைக் கடந்து, அங்கிருந்து எட்டு மைல் ஓடி இடமலா ஆற்றுடன் கலக்கிறது. அங்கிருந்து மலையாற்றூர் வரை நானூறு அடி அகலத்தில் தன் பிரவாகத்தின் விஸ்வரூபம் காட்டுகிறது. மலையாற்றூரிலிருந்து 14 மைல்கள் கடந்த பிறகே ஆலவாயைச் சென்றடைகிறது. ஆலவாயில் இரண்டாகப் பிரியும் பேரியாறு, சிறு சிறு நீரோடைகளாகிக் கடலில் கலக்கிறது.

ஆர்ப்பாட்டமும் குதூகலமுமாகக் காடுமேடு பள்ளத்தாக்குகளில் ஓடிவரும் பேரியாறு, நூறடிக்குமேல் வளர்ந்த மரங்களைத் தொட்டு, பூச்சிகளை முகர்ந்து, மண்ணோடு மண்ணாய் இருக்கும் காட்டுயிர்களோடு குலவி, மனிதர்களின் கால்தடங்களற்ற காட்டு வழிகளிலெல்லாம் உலாவி, திருவிதாங்கூரின் சமஸ்தானத்திற்குள் நுழைந்து, புறப்பட்டது போலவே, அலுங்காமல் குலுங்காமல், சமவெளிக்குள் நெடுந்தொலைவு ஓடும் சலிப்பை ஏற்க விரும்பாமல் கடலுக்குள் பூரணமாய்ச் சங்கமிக்கிறது.

மேகமலையின் வருஷநாட்டுப் பகுதியில் பெருகும் வைகை, மேல்மலையின் சிற்றாறுகளுடன் சேர்ந்து, வளைந்து, நெளிந்து முப்பது மைல் ஓடிவந்தவுடன் அல்லிநகரத்தின் தென்திசையில் சுருளி நதியோடு இணைகிறது. சுருளியும் வைகையும் தேனி நதியைத் தங்களுடன் சேர்த்துக்கொண்டு, திருவிதாங்கூரையும் பழனிமலையையும் பிரிக்கும் போடிநாயக்கனூரை வந்தடைகின்றன. இங்குதான் சுருளி தன் பெயரிழந்து வைகையின் நீராகிறது. அங்கிருந்து வைகை, வட கிழக்காகத் திரும்பி, பழனி மலையின் வராக நதியையும் மஞ்சளாற்றையும் சேர்த்துக்கொண்டு மதுரைக்கு வடமேற்கில் எட்டே முக்கால் மைல் தூரமுள்ள சோழவந்தானை வந்தடைகிறது. அங்கிருந்து மாவட்டத்துக்குள் ஓடி ராமநாதபுரத்தின் ஆத்தங்கரை என்னுமிடத்தில் கடலோடு கலக்கிறது. கடலோடு கலத்தல் என்பது வருடாந்தர நிகழ்வல்ல. வைகை கடலோடு கலந்தால், அவ்வாண்டு மதுரையில் பெருமழை, சுபிட்சம் என்று பொருள்.

பருவ மழை சரியாகப் பெய்யும் வருஷங்களில் மட்டுமே வைகையில் வெள்ளம் புரண்டோடும். உழுதுபோட்ட நிலங்களெல்லாம் வைகைக்காகக் காத்து நிற்க, மதுரையின் அரசர்கள் வெட்டி வைத்திருக்கும் கண்மாய்களுக்கும் வாய்க்கால்களுக்கும் தன் நீரின் ஒரு சொட்டும் மீதமின்றிப் பங்கிட்டுக் கொடுக்கும். பத்தாண்டுகளுக்கு ஒரு முறையோ, இரு முறையோ பருவகாலத்தின் மாற்றத்தில் தீவிர மழை பெய்யும்போது மட்டும் வங்கக் கடலையும் நலன் விசாரித்து வரச் செல்லும்.

மேற்கு மலைத் தொடரின் தென்பகுதியில், ஒழுங்கற்ற முக்கோணமாய் அமைந்திருக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானம் 7091 சதுர மைல் பரப்பளவு கொண்டது. 7091 சதுர மைல் பரப்பளவில் 2380 சதுர மைல் நதிகள் சூழ்ந்த அதிர்ஷ்ட பூமி. சின்னஞ்சிறிய அந்த ராஜ்ஜியத்தில் பாய்ந்தோடும் 44 நதிகளில் 41 நதிகள் மேல்மலையில்தான் உற்பத்தியாகின்றன.

புதுக்கோட்டை சமஸ்தானத்தைப்போல் ஆறுமடங்கு பெரிய, மதுரையைப் போல் ஐந்தில் நான்கு பங்குடைய திருவிதாங்கூர், கலைஞர்களின் கனவு தேசம், காடு, கழிமுகங்கள், துறைமுகங்கள், குளம், குடா, தடாகம் என இயற்கையின் கபடமற்ற பேரழகு நிறைந்த பூமி. தமிழகத்தை ஆண்ட மூவேந்தர்களில் முதல்வர்களும் மூத்தவர்களுமான சேரர்களின் தேசம். சேரல் என்றாலே சேர்தல். மலைத் தொடர்கள் ஒன்றுடன் ஒன்று சேர்ந்திருக்கும் பகுதியை ஆண்ட சேர அரசர்களின் தேசம். சேரர்களின் கொடிவழி முடிந்து, குலசேகர ஆழ்வார் கொடிவழியினர் தொடங்கி, 18ஆம் நூற்றாண்டுக்குப் பிறகு மார்த்தாண்ட வர்மாவின் கொடிவழியில் வந்தவர்களின் சமஸ்தானமானது திருவிதாங்கூர். பத்மநாபபுரம் கடவுளுக்குத் தங்கள் நாட்டை ஒப்படைத்து, முடி துறந்ததோடு, தங்களை பத்மநாபதாசனாக்கிக்கொண்ட அரசர்களின் தேசம். கடவுள் ஓய்வெடுக்க வந்து, நிரந்தரமாகத் தங்கிவிட்டது போன்ற இயற்கையின் ஆசிபெற்ற சௌந்தர்ய பூமி. திரும்பிய பக்கமெல்லாம் பசுமை. பத்து மைலுக்குள் கடலோ காடோ, மலையோ நம்மை எதிர்கொண்டு அழைக்கும்.

கர்ம பூமி, சேரம், மலபார், பரசுராம க்ஷேத்திரம் என திருவிதாங்கூருக்குக் கால ஓட்டத்தில் பல நாமங்கள். மலையும் ஆலமும் (கடலும்) என்ற பொருள்கொண்ட மலையாளமே அதற்குப் பொருத்தமான பெயர். கடலுக்கும் மலைக்கும் இடைப்பட்ட மூங்கில் தேசம். செல்வத்தின் கடவுள் வாழும்,  வாழும் கோடு என்ற பெயரே திருவிதாங்கூராகி, ஐரோப்பியர்களால் ட்ரவேன்றமாக்கப்பட்டது. கடலில் இருந்து பரசுராமர் உருவாக்கிய தேசமென்று திருவிதாங்கூர் பெருமைப்பட்டுக்கொண்டாலும், மேற்கு மலைதான் கற்பாறைகளால் ஆன பூமியைக் கடவுளின் தேசமாக்குகிறது.

கிழக்கு மேற்காக அமைந்த மாமதுரை, ஒழுங்கற்ற நீள்சதுர வடிவிலான நகரம். இரண்டாயிரம் வருஷங்களுக்கு மேலாக இலக்கியத்திலும் வரலாற்றிலும் விதந்தோதப்பட்டுக் கொண்டிருக்கும் புராதன நகரம். மதுரையின் ஒவ்வொரு வீதியின் கதை கேட்கச் சென்றாலும், குறைந்தது ஆயிரமாண்டுகள் காலச்சக்கரத்தின் பின்னிழுத்துச் செல்லும் மூதாய் நகரம். ஆட்சியாளர்களின் வெற்றி தோல்விகள் எழுதப்பட்ட ரத்த நாளங்கள் பூமியின் ரேகை களாய்ப் புதைந்திருக்க, மீனாட்சியின் அருளாட்சியில் வாழ்வின் மேன்மையைப் பேசி வரும் நகரம்.

மெட்ராஸ் பிரசிடென்சியில் மதுரா டிஸ்ட்ரிக்ட்டாய் அறியப் படும் மாமதுரை, பாண்டியப் பேரரசின் தலைநகராய் இருந்த வரலாறு, மீனாட்சி ஆலயத்தின் வவ்வால்களின் சிறகடிப்பிற்குள் புதைந்து கிடக்கிறது. சங்க காலப் பாண்டிய அரசர்கள் தொடங்கி நாயக்கர்கள் முடிய தனித்த ராஜ்ஜியமாக இருந்த மதுரை, பிரிட்டிஷார் ஆட்சிக் காலத்தில் ராஜ்ஜியத்தின் தென்பகுதி நகரங்களில் ஒன்றானது. வர்த்தகமும், வர்த்தகத்திற்குத் தேவையான கடலும் இருந்த மெட்ராஸ், ராஜ்ஜியத் தலைநகராகியதில், மதுரை அதிகார பீடம் தகர்ந்து பழம்பெருமை பேசும் மரபான நகரமாய் நினைவுகளின் சேகரமானது.

பழைய பண்பாட்டின் ருசி மாறாத இரண்டு ராஜ்ஜியங் களையும் உயர் ந்தோங்கிய மேல்மலை பிரித்து வைத்தாலும், இரக்கத்தின் கணவாய்களை ஆங்காங்கு திறந்தும் வைத்திருந்தது. மேல்மலையின் கணவாய் வழியாகத் திருவிதாங்கூரும் மெட்ராஸ் பிரசிடென்சியும் உறவின் பிணைப்பில் இருந்தன.

மெட்ராஸ் பிரசிடென்சியின் செங்கோட்டை வழியாக மேல்மலை ஏறினால், 1200 அடி உயரத்தில் உள்ள ஆரியங்காவு கணவாய் வழியாகத் திருவிதாங்கூரின் கொல்லத்திற்குச் செல்லலாம். மேல்மலை குடிகளைக் காக்கிறது. குடிகளைக் காக்கும் மலையைத் தெய்வம் காக்கிறது. தெய்வங்கள் காவல் காக்கும் இடங்கள்தான் காவு. அகஸ்தியர் வாழ்ந்ததாக நம்பப்படும் மேல்மலையின் ஐந்து கணவாய்களைத் தெய்வம் காப்பதாகத் திருவிதாங்கூர் குடிகள் நம்புகிறார்கள். காக்கும் தெய்வத்தைக் குடிகள் காக்க வேண்டுமே?

செங்கோட்டையிலிருந்து 1500 அடி உயரமுள்ள அச்சன்கோவில் கணவாய் வழியாக வந்தால் திருவிதாங்கூரின் கோன்னியை வந்தடையலாம். வழியில் ஒன்பது நீரோடைகளைக் கடக்க வேண்டும். செங்கோட்டை, கோன்னி, பந்தளம், மாவேலிக்கரை வழியாகத் திருவிதாங்கூருக்குள் இறங்கலாம். மேல்மலையின் சிவகிரி கணவாய், மனிதர்கள் ஏறுவது கடினமென்றாலும், காட்டை அறிந்த மக்கள் கடந்துகொண்டுதானிருக்கிறார்கள். போடிநாயக்கனூர் கணவாய் திருவிதாங்கூரைக் கோதமங்கலத்துடன் இணைக்கிறது. தொடுபுழாவோடு தேவாரம் இணைக்க, மதுரையைத் திருவிதாங்கூருடன் இணைப்பது கம்பம் கணவாய். கம்பம் கணவாய் வர்த்தகர்களுக்கு ஏதுவான வழி. கூடலூர் கணவாய் கம்பத்துடன் காஞ்சிராப்பள்ளியை இணைக்கிறது.

மேல்மலையின் வடபகுதி தாயின் கையை உதறிவிட்டுத் தனித்து நிற்கும் குழந்தைபோல் ஆங்காங்கு சிறு குன்றுகளாகப் பிரிந்து நின்றாலும் இடைக்கொடியைப் பிடித்திழுத்துத் தன்னருகில் குழந்தையை வைத்துக்கொண்டிருக்கும் தாயைப் போல் மலையின் அடிவாரம் விலகுவதே இல்லை.

மழை மேகம் சுமக்கும் காற்றுக்கு எதிர்த் திசையில் அமைந்து, வருஷம் தவறாமல் வறட்சியையும் பஞ்சத்தையும் தாங்குகிறது மதுரை. மழையாலும் வறட்சியாலும் தன் மண்ணின் குடிகளை அகதியாக்கிக் கொண்டிருக்கும் இருள் காலத்தின் சோகத்தில் தத்தளிக்கிறது மதுரை மண். கோடையிலும் பெருக்கெடுக்கும் வெள்ளம் சூழ்ந்த நதிகளைக் கொண்டது திருவிதாங்கூர். பஞ்சத்தில் மதுரையின் மக்கள் செத்துவிழும் போது, திருவிதாங்கூர் வெள்ள மீட்பு செய்துகொண்டிருக்கும். ஒரு தாயின் இரு பிள்ளைகளுக்கு நேர்ந்த பாகுபாடான வாழ்வைப் போக்கக் காலம் கனிகிறது. பிரிட்டிஷ் இந்தியாவின் இன்ஜினீயர்கள் இயற்கையின் அசமன்பாட்டை, தங்களின் தொழில்நுட்பமும் விடாப்பிடியான நல்லெண்ணமும் கொண்டு சமன்செய்ய முயன்றார்கள். ராமநாதபுரம் அரசர் முத்துராமலிங்க சேதுபதியின் திவான் முத்திருளப்ப பிள்ளையின் கனவாக இருந்த திட்டம், தொண்ணூறு ஆண்டுகள் கழித்து, பெரியாறு அணையாய் உருப்பெற்றிருக்கிறது.

மதுரை கலெக்டர் பாரீஷ் தொடங்கி, ராயல் இன்ஜினீயர் ஸ்மித் வரை அணைக்கான முயற்சி எடுத்தவர்கள் எண்ணிக்கை அதிகம். காலம் பேரியாற்றில் அணை கட்டும் வாய்ப்பை பென்னி குக்கிற்கு வழங்கி ஆசீர்வதிக்கிறது. பேரியாறு எனும் காட்டாற்றை அடக்க, சாத்தியமற்றதைச் சாத்தியமாக்கும் ஆங்லோ சாக்ஸன் மரபில் வந்த விடாப்பிடி மனிதரான பென்னி குக் நியமிக்கப்பட்டது மதுரையின் நல்லூழ்.

பொதிகை மலை, நீல மலை, ஆனைமுடி, ஏலமலை, பழனிமலை என மேல்மலையின் மலைக்குன்றுகள், குற்றாலம், அகஸ்தியர், வெள்ளியருவி, சுருளி அருவி, அடர்ந்த சோலைக் காடுகள், ஆயிரக்கணக்கான மூலிகைகள், அரிய விலங்குகள், தாவரங்கள், நுண்ணுயிர்கள் என மேல்மலை நம் வரமென்றாலும், வனங்களையும் ஆறுகளையும் மலைகளையும் துறந்து நான்கு சுவர்களுக்குள் வாழப் பழகிவிட்ட மனித ராசிக்கு வனம் பெரும் அச்சுறுத்தல்.

நீரதிகாரம் - 34 - 2ம் பாகம் - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

விலங்குகளின் தாக்குதல், விஷப்பூச்சிகள், ஒவ்வாமை உண்டாக்கும் தாவரங்கள், மலைக் குடிகள் என வனத்திற்குள் அச்சப்பட நூறு காரணங்கள். சராசரி மனிதர்கள் அச்சப்பட நூறு காரணங்கள் சொன்னாலும், மேல் மலைக்குச் செல்ல ஒரே ஒரு காரணத்தை மட்டும் இலக்காக வரித்து பென்னி தயாராகிறார். பேரியாற்றின் நீர் மதுரைக்கு வர வேண்டும். அதற்கு மேற்கு நோக்கி ஓடும் நதியின் போக்கை, கிழக்கு நோக்கித் திருப்ப வேண்டும். கோடையிலும்கூட முப்பதடி அகலத்தில் ஓடும் பேரியாற்றைத் தடுத்து நிறுத்தி, அணை கட்டி, மலையைக் குடைந்து, சுரங்கம் அமைத்து பேரியாற்றின் தண்ணீரை மதுரைக்குக் கொண்டு வர, மாவீரனைப்போல் தயாராகிறார் பென்னி.

காடு மனிதர்களுக்குப் பொழுதுபோக்கவும் வேடிக்கை பார்க்கவும் உகந்த இடம். தேங்கும் நீரில் கூட்டமாய் நீர்ப் பருகும் யானைகளை, தேன் கூட்டைவிட அழகாகக் கூடு கட்டி வைத்திருக்கும் கதம்ப வண்டுகளை ரசிக்கலாம். வானளாவ நின்று காற்றையும் மேகத்தையும் விதவிதமான ஒலிகளையும் உள்வாங்கலாம். இருட்டுவதற்குள் வனத்திலிருந்து வெளியேறி விடவே நாகரிக சமுதாயம் விரும்பும்.

இனி மேல்மலையில் தனக்கு எத்தனை சூரியோதயங்களோ, எத்தனை பௌர்ணமிகளோ, எத்தனை பருவங்களோ, எத்தனை வெள்ளமோ எனத் தீர்மானிக்க முடியாமல் வனம்புகத் தயாராகிறார் பென்னி.

வருஷத்தில் ஏப்ரல் முதல் ஜூன் வரை மூன்று மாதங்கள் காட்டுக்குள் அந்நிய மனிதர்கள் வசிக்க முடியாது. காய்ச்சலும் மலேரியாவும் அதிகம் தாக்கும் காலங்கள். ஜூலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மழை எப்போது பெய்யும், வெள்ளம் எவ்வளவு பெருக்கெடுக்கும் என்று தோராயமாக அனுமானிக்கலாம். ஆனால் தடுத்து நிறுத்தி அணை கட்டும் வேலை செய்ய முடியாது. ஜனவரி முதல் மார்ச் வரை மட்டுமே இயல்பான பருவநிலை நிலவும். அம்மாதங்களில் பகலும் இரவும் செய்யும் வேலையை அடுத்து வரப்போகிற வெள்ளம் என்ன செய்யுமென்று சொல்ல முடியாது.

மூவாயிரம் அடி உயரத்தில் கட்டப்போகிற அணைக்குக் கீழிருந்துதான் உணவு முதல் இரும்பாலான கட்டுமானப் பொருள்கள், சுண்ணாம்பு, சுர்க்கி, செங்கல் என ஒவ்வொன்றும் மேலேற்ற வேண்டும். பாதைகள் கிடையாது. ஐந்து கணவாய்களிலும் தெய்வங்கள் காவலிருக்க, மனிதர்கள் வாழ முடியாத அடர் வனத்தில் மக்களை வாழ வைக்கும் தெய்வமாக மேல்மலைக்குச் செல்கிறார் பென்னி. இயற்கையும் காலமும் முன்வைக்கும் சவால்களை மானுட மேன்மைக்காக எதிர்கொள்பவர்களும் தெய்வங்கள்தானே?

மங்கலதேவி கண்ணகியையும், சபரிமலை சாஸ்தாவையும் வணங்க மலையேறும் மக்களுக்கு மத்தியில், அர்ஜுனன் கங்கையைக் கொண்டு வரச் சென்றதுபோல் செல்கிறார் பென்னி குக். மாமதுரையை வளமாக்கப் பேரியாற்றைக் கொண்டுவர அடர்ந்த வனத்தில் பென்னி மேற்கொள்ளவிருக்கும் தவம்.

ஒப்பந்தம் கையெழுத்தான இந்த நன்னாளில் பென்னி மலை ஏறுகிறார். இயற்கையால் அள்ளிக் கொடுக்க முடியும். தேவைக்கேற்ப, நாள், நேரம் பார்த்து, பகிர்ந்து கொடுக்க முடியாது. பேரியாற்றின் அபரிமிதமான தண்ணீரின் பத்திலொரு பகுதியைத் திசை திருப்பும் சவாலை ஏற்க, பொய்யாக் குலக்கொடி வையை எனும் புலவனின் கூற்று பொய்த்துவிடாமல், வையைக்கு உயிர் கொடுக்க,

பண்பாட்டின் செழித்த வரலாற்றைக் கொண்ட வைகை நதி நாகரிகம், எலும்பும் தோலுமான மக்களுடன் மண்ணானது என வரலாறு தன்னைத் திருத்தி எழுதிக்கொள்ளாமல் காக்க,

பேரியாறு வெறும் காட்டாறு எனும் நதியின் அவப்பெயர் திருத்தி, பேரியாற்று நாகரிகமென்னும் புதிய அத்தியாயத்தைத் தொடங்கி வைக்க,

மீனாட்சியின் அண்ணனாகப் புராணங்கள் சொல்லும் அழகரின் அம்சமான திருவிதாங்கூரின் அனந்தசயனன் எனும் பத்மநாபசாமி, வறட்சியில் வாடும் தங்கையின் தேசத்திற்குப் பிறந்த வீட்டுச் சீதனமாய் பேரியாற்றுத் தண்ணீரை அனுப்பி வைக்க, பென்னி மேல்மலை ஏறுகிறார்.

நீர் உருவாக்கியவைதான் மனித நாகரிகங்கள். நீரின்றி அழிந்துவிடாது, வைகைக்குள் பேரியாற்றை இணைத்து வைகை - பேரியாற்று நதி நாகரிகத்தின் புத்தம் புது அத்தியாயத்தின் முதல் எழுத்தை, குமுளியின் மலைப் பாதையில் காலடி எடுத்து வைக்கும் இந்தக் கணத்தில் எழுதத் தொடங்குகிறார் பென்னி குக்.

- பாயும்