மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 36 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

கூடலூரில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் ஒரு வாரமாக மேல் மலையேறிக் கொண்டிருக் கிறார்கள். மலையேறித் திரும்பி வரும் ஒவ்வொருவர் கையிலும் காசு.

நீரதிகாரம் - 36 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“கைல அஞ்சு பத்து அணா கெடைச்சாப் போதும்…” விழிகள் கண்டடையும் வெளிச்சத்தில் முன்னேறிய ராசுமாயன் சொன்னான்.

“அஞ்சு பத்து அணாதானா இருக்கும்? பொதையல்னா பெரிய தங்கக் கொடத்துல மஞ்சத்துணிய வண்டு கட்டி வச்சிருப்பாங்கதானே?” உடன் வந்த ஒப்பிலியப்பன் கேட்டான்.

“அதெல்லாம் ராஜாக்கமார் காலத்துல. ராஜாக்கமாரெல்லாம் போயிட்டாங்களே…”

“போனா என்ன ராசு? ராஜாக்கமார் மறைச்சு வச்சதுதானே பொதையல்? நம்ம மாதிரி கஞ்சிக்குச் செத்த ஜனங்ககிட்டயா தங்கக் கொடத்துல காசு இருக்கும்? நம்ம வீட்டுக் கொடத்துல தண்ணியே இல்ல!”

“பேயத் தேவா… எனக்கு பயம்மா இருக்கு” என்றான் ஒப்பிலியப்பன்.

“பயந்து வந்தா அப்டியே துண்டை விரிச்சுப் படு. காலையில திரும்பிப் போறப்ப கூப்டுக்கிட்டுப் போறோம்.”

“அண்ணே, என்னைத் தனியா விட்றாதீங்க” சங்கிலி கூட்டத்தின் மையத்தில் கலந்தான்.

“எப்பா, நெசமாவே பொதையல் இருக்காமாடா? நம்மள மேல் மலையில இருக்க காட்டுச் சீவாத்துக்கிட்ட மாட்டிவிடணும்னு எவனாவது கிளப்பிவிட்டுருக்கப் போறானுங்க.”

“இல்லப்பு, உன் அப்பாதான் சொன்னாரே? ஒரு வாரமா தெனம் காட்டுக்குப் போறவங்க ஒவ்வொருத்தருக்குமே கை நெறைய துட்டு கிடைச்சுதாம். காலணா, அரையணா, எட்டணான்னு ஜனங்க வாயெல்லாம் பல்லாத் தெரிய எடுத்துக்கிட்டு வந்து காட்டுறாங்களாமே?”

“அதனாலதான் எனக்கு யோசனையா இருக்கு…” பேயத் தேவன் குரலில் சந்தேகம்.

கூடலூரில் இருந்து கூட்டம் கூட்டமாக மக்கள் ஒரு வாரமாக மேல் மலையேறிக் கொண்டிருக் கிறார்கள். மலையேறித் திரும்பி வரும் ஒவ்வொருவர் கையிலும் காசு. வியப்பு தாங்க முடியாமல் குழந்தை களைப்போல் ஒருவருக் கொருவர் காட்டினர். ஒரு நாணயம் கீழே கிடந்து யாருக்காவது அகப்பட்டது என்றால் பெரிய புதையல் கிடைத்த மாதிரி அன்று முழுக்க ஊரே பேசியது. காட்டுக்குள் சென்று வருபவர்கள் ஒவ்வொருத்தருக்கும் துட்டு கிடைக்கிறது என்ற செய்தி அனுமன் வால் நெருப்பு மாதிரி, சென்ற இடமெல்லாம் பற்றியது. ‘மேல் மலை காட்டுல பொதையல் கெடக்குதாம்’ காற்றுபோல் செய்தி கம்பம் வரை பரவியது. எல்லோர் விழிகளும் மேய்ச்சலுக்குக்கூட ஆடுமாடுகளை அனுப்பாத அடர்ந்த காட்டுப்பாதையைப் பின்தொடர்ந்தன.

கம்பம் – கூடலூர் வழியாக மேல் மலை ஏறித் திருவிதாங்கூர் செல்லும் பாதை வணிக முக்கியத்துவம் வாய்ந்தது. குதிரைகளிலும் வண்டிகளிலும் ஐந்து, பத்துப் பேரைத் துணைக்கு வைத்துக்கொண்டு, மிளகு, ஏலம், வெற்றிலை வாங்கி விற்கும் வணிகர்கள் அவ்வப்போது சென்று வரும் ரகசியப் பாதைகள் புதிதாகச் செல்பவர் கண்ணுக்குப் புலப்படாது. கூர்ந்து பார்த்தால் கூட்டு வண்டிகளின் சகடம் உருண்டு சென்ற தடமும், குதிரைகளின் குளம்புத் தடமும் தெரியும். வணிகப் பாதை மாயம் நிரம்பியது. அதன் தடத்தை, வணிகனால் மட்டுமே திறந்து உள்நுழைய முடியும். அவன் கடந்து சென்ற கணத்தில் பாதை எப்படி மறையுமென்பது ரகசியம்.

அகன்ற பெருவழிப் பாதைகளில் செல்ல முடியாத ரகசிய வர்த்தகம் எல்லாம், பாதையற்ற கரடுமுரடான மலைகளிலும், வனப்பாதைகளிலும்தான் செல்லும். அற்புத விளக்கைத் தேய்த்தால் வரும் மாயாவிபோல், அடர்ந்த காட்டில் பாதையைக் கண்டறிந்து சென்றுவிடுவார்கள் வணிகர்கள். பொருள்களோடு செல்லும்போதும், பொருளைக் காசாக்கித் திரும்பும்போதும் அவர்களின் முடிச்சுகள் அவிழாதவை. தானிய மணிகள் ஒன்றுகூட சிந்திவிடாமல் கட்டியனுப்பும் தொழிற்காரர்கள்தான் வணிகனிடம் இருப்பவர்கள். வழிச்செலவுக்கு தானியம் விற்று வரும் பணத்தில் இருந்து சல்லிக்காசு எடுக்க மாட்டார்கள். வர்த்தகர்களைப் பின்தொடர்ந்து சென்றால், சிறு தானியமோ, ஏலமோ, சிதறும் அணாவோ கிடைக்குமென்று, கூடலூர்க் காட்டில் மாடு மேய்த்துக்கொண்டிருக்கும் சிறுவர்கள் சென்றால் ஏமாந்து வருவார்கள்.

தங்களின் திரவியத்தைக் கண்ணும் கருத்துமாய்ப் பார்த்துக்கொள்ளும் வியாபாரிகள், மலையின் நன்னீர் அடைக்கப்பட்ட மூங்கில் குடுவைகளைச் சிறுவர்களிடமிருந்து வாங்கிக்கொள்வார்கள். இளம் மூங்கிலின் நடுத் தூரெடுத்து, காட்டுக் கருணைக் கிழங்கும் கானமிளகாயும் உப்பும் போட்டு வேக வைத்து, வெந்தவுடன் மூங்கிலை இரண்டாகப் பிளந்து, தேக்கு இலையில் அப்படியே சுடச் சுடக் கொட்டி, உள்ளங்கையும் நாவும் கொதிக்க கொதிக்க சாப்பிட்டுக்கொண்டிருந்தால் காடே மணக்கும். வெறும் மிளகாய், உப்பு, கிழங்கு சேர்ந்து மூங்கிலில் வேகும் உணவுக்கு வரும் ருசிக்கு ஒப்பீடு கிடையாது. சுடச் சுட நாவில் கரையும் கருணைக் கிழங்கும் பளிங்குபோன்ற ஓடை நீரின் ருசியும் சேர்ந்து தேவாமிர்தமாய் இனிக்கும். ஒரு மைல் தூரத்தில் செல்பவர்களின் நுகர்புலனையும் ஈர்க்கும். மடிநிறைய ரூபாய் நோட்டுகளையும் காசையும் கட்டி வைத்திருப்பவர்கள், சிறுவர்களிடமிருந்து தேக்கு இலையில் கிழங்கு வாங்கிச் சாப்பிட்டுக் கிளம்புவார்கள். அடுத்த பத்து மணி நேரத்திற்கு வயிற்றுக்கவலை இல்லை.

வணிகப் பாதையென்றாலும் இதுவரை காசோ, பணமோ, நகையோ கிடைக்காத காட்டில் கடந்த வாரம் முழுக்க, திசை பிரித்து ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற இடையர்களுக்குச் செப்புக்காசுகள் கிடைத்தன.

சுக்காங்கல்பட்டி ஊரே சிறகு முளைத்ததுபோல் கொண்டாட்டத்தில் மிதந்தது. காலணா கிடைத்தவர்கள் ஓரணா கிடைத்ததாகச் சொன்னார்கள். எட்டணா கிடைத்தவர்கள் ஐந்தாறு அணா காலடியிலேயே இருந்ததாகச் சொன்னார்கள். செப்புக்காசு கிடைத்தவர்களுக்குத் தங்கக்காசு கிடைத்ததாகப் பேச்சு பரவியது. வருஷம் முழுக்க விறகு வெட்டி தலைமேல் சுமந்து வந்து பிழைப்பவர்களுக்கு, கரும்பச்சை பரவி அழுக்கடைந்த காலணா, அரையணா தெய்வதரிசனமாகச் சிலிர்க்கச் செய்தது. நடுக்காட்டில் நின்றெரியும் சுளுந்து போல் சுக்காங்கல்பட்டியில் புதையல் செய்தி ஒவ்வொருவர் நாவிலும் நின்றெரிந்தது. குஞ்சு குளுவான்கள், விழியொளி இழந்தவர்கள், கையூன்றி நடப்பவர்கள், கிழிந்த பாயில் நாராய்க் கிடந்தவர்கள் எல்லாம் இரவு பகல் பார்க்காமல் மேல் மலையேறினார்கள்.

நீரதிகாரம் - 36 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

கையில் வீச்சரிவாள், குத்தீட்டி, அரிவாள், தீப்பந்தங்களுடன் இரவில் இளந்தாரிகள் மலையேறினார்கள். தங்களின் வீரதீரங்களை முறைப்பெண்கள் பேச வேண்டுமே என்ற ஆசை அவர்களை மேல் மலைக்கு விரட்டியது.

பேயத்தேவனும் அவன் கூட்டாளிகளும் இருள் கவியத் தொடங்கிய பொழுதில் மலை ஏறினார்கள். பகலில் சுரங்கனாத்து ஓடையருகே பார்த்த பார்வதி, மேல் மலைக்குப் போகக் கூடாது, அதுவும் ராத்திரியில் போகக் கூடாது என்று கண்களில் நீர் கோத்துக் கெஞ்சினாள். ‘நமக்குச் சோறும் தண்ணியும் கொடுக்கிற மலையைப் பார்த்து பயப்படுவாங்களா? போ பிள்ளை, காடு தெரியாதவனை நம்பி ஆடு மாடு எப்படி மலையேறும்?’ என்று கேட்டு, அவளின் பயம் போக்காமல் கிளம்பி வந்துவிட்டான்.

கூட்டாளிகளில் சங்கிலிதான் இளையவன். ஐப்பசியில்தான் பத்து முடிந்தது அவனுக்கு. நிரம்பத் துணிச்சலும் நிரம்ப பயமுமாக இருந்தான் சங்கிலி. புதையல் கிடைத்தால் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒவ்வொருவருக்கும் தனிப் பட்டியல் இருந்தது.

‘மலையடிவாரத்துல கரடாக் கெடக்கிற பூமிய வித்துட்டு, ஆத்தங்கரையோரத்துல காலூணி நிக்க ஒரு காணி பூமி வாங்கணும் பேயத்தேவா…” என்றான், கூட்டாளிகளில் கல்யாணம் முடித்திருந்த ஒப்பிலியத்தேவன்.

“என் ஆத்தாளுக்கு ஜக்கம்பட்டிக்குப் போய் நல்ல சீலை ஒண்ணு வாங்கணும்ப்பு. இதுவர ஆத்தா சீலையின் கிழிசலைத் தைச்ச நூல்ல புதுச் சீலையே நெஞ்சிருக்கலாம்” ராசுமாயன் சொன்னான்.

எல்லாரும் சிரித்தார்கள்.

“கிழிசலைத் தைக்கிறதுக்காவது நூல் வாங்குறீயே? பெரிய கிழிசலை மறைக்க சின்னக் கிழிசலை மேல இழுத்துவிட்டுக்கிற ஆத்தாளுகள நீ பாக்கலையா?” ஒப்பிலியப்பன் சொன்னான்.

“சுத்தி மலையும் மடுவுமாத்தான் இருக்கு. ஊர் கரம்பாப் போச்சு. என்ன பண்றது?” பின்னால் நடந்த ஒருவன் பதில் சொன்னான்.

“நம்ம ஊர்லதான் சண்டையா நடக்குமாம். மைசூரு ராஜா மலைக்கு இந்தப் பக்கம், திருவாங்கூர் ராஜா மலைக்கு அந்தப் பக்கமாம். வருஷம் முழுக்க சிப்பாய்ங்க ஊரைக் கொளுத்தறதும், பயிர் பச்சைங்களைக் கொளுத்தறதுமா ஊரே கலாபம்தானாம். பொழுது விடிஞ்சாதான் யார் யார் உசுரோட இருக்காங்கன்னே கணக்குத் தெரியுமாம். எங்க சிய்யான் அவங்க அய்யா சொன்னதாச் சொல்லும். உடம்பு கூச்சமத்து பாதையில நடந்துட முடியாதாம். பின்னாடி குதிரையில வர்றவன், யார் இன்னான்னு நிதானிக்கிறதுக்குள்ள கைல இருக்க வாளைத் தூக்கிடுவானாம். தலை தனியா, ஒடம்பு தனியா கண்முன்னாடி விழுமாம். மைசூர ஆண்ட துலுக்க ராஜாக்கமாருக நம்ம ஊரைக் கொஞ்ச நஞ்சமாவா அட்டூழியம் பண்ணியிருக்காங்க? வெள்ளக்காரங்ககிட்ட தோத்த பிறகுதான் இங்க இருந்த சிப்பாய் கூடாரத்தையே காலி பண்ணுனாங்களாம். அந்தப் பத்து வருசமும் பூமியில ஒரு தானிய தவசம் வெளையலையாம். துணிஞ்சு ஒருத்தர் ரெண்டுபேர் விதைச்சாலும், திடீர்னு சண்டை வந்துடுச்சின்னா, குதிரைங்களும் சிப்பாய்ங்களும் குறுக்கும் நெடுக்குமா ஓடி, பயிரை நாசம் பண்ணிடுவாங்களாம். அறுவடைக்குத் தயாரா இருக்குமாம் தானியங்க. விடிஞ்சு பாத்தா குதிரைங்க ஓடி, நிலமே பாழாக் கெடக்குமாம். பஞ்சம் சும்மாவா வந்துச்சி? இந்த மாதிரி பஞ்சமா பாதகங்களாலதானாம்.”

“பேயத்தேவா, நம்மூர்ல வீடுங்களுக்கு வெறும் படப்பு வச்சி மூடுறாங்களே ஏன்னு தெரியுமா?”

“தெரியும் ராசு... அதுக்கும் ராஜாக்கமார் சண்டைதான் காரணமாம். சிப்பாய்ங்க எப்ப வேணா ஊருக்குள்ள பூந்து நெருப்பு வைப்பாங்களாம். குஞ்சு குளுவானுமா தூங்கிட்டிருக்கும்போது ராத்திரி நேரத்துலதான் நெருப்புப் பந்தத்தைக் கூரை மேல விசிறி அடிச்சிக்கிட்டுப் போவாங்களாம். சட்டுனு எழுந்து உசுரக் காப்பாத்திக்க வெளிய ஓடியாறதுக்குத்தான் வீடுகளுக்குக் கதவே வைக்கிறதில்லைன்னு பேசிப்பாங்க. கதவு வைக்க ஒருத்தருக்கும் கைக்காசு இல்லைன்றதும் நெசம்தான்.”

“நீ வெளியூர்க்காரன், ஒனக்கெப்படி அப்பு ஊர் விஷயம் இவ்ளோ தெரியுது?”

ஆண்டி கேட்டவுடன் பேயத்தேவனுக்குக் கோபம் பொங்கியது.

“இதே மண்ணுல பொறந்தியே, வா, நீயும் நானும் இந்தக் காடு முச்சூடும் நடப்போம். ஒரு இண்ட முள்ளு என் கால்ல குத்தாம நான் வெளிய வர்றேன். செந்தட்டி மேல பட்டு அரிப்புக் கெளம்பாம உன்னால வர முடியுமான்னு நீ சொல்லு. நயா பைசாவுக்குப் பேறாத பேச்சைப் பேசிக்கினு வந்துடுறானுங்க. எங்க பொறந்தா என்ன? நான் மொத மொத அடியெடுத்து வச்சு நடந்தது இந்த மண்ணுலதான். இதான் என் மண்ணு” பேயத்தேவனின் சொற்களின் தீ, குளிர்காற்றுக்கு வெம்மை சேர்த்தது.

“எப்பா, பொதையலு தேடி வந்த இடத்தில பொல்லாப்பை வளக்காதீங்க. வந்த காரியத்தைச் சூதானமாப் பாருங்க” ராசுமாயன் சொன்னவுடன் ஆண்டி அமைதியானான்.

“பெரிய மனுசன் சொல்லிட்டாருப்பா, எல்லாம் கேட்டு நடந்துக்கோங்க” கிண்டல் செய்தான் ஒப்பிலியப்பன்.

வீச்சரிவாளால் மண்டிக் கிடந்த சங்கம் முள் புதர்களை வெட்டி வீழ்த்தியபடி முன்னேறினான் ஒப்பிலியப்பன். கூர்மையான அவன் அரிவாளில் புதர்கள் மடங்கிச் சரிந்தன. ஒப்பிலியப்பன் வெட்டுவதற்கு முன்னால், நீண்ட குச்சியால் புதர்களை அசைத்து, பூச்சிபொட்டுகள் இருக்கிறதா என்று பார்க்க வேண்டிய வேலை பாண்டிக்கு. பாண்டியின் உருவ பருண்மைக்குப் பெரிய மரக்கிளையைத் தூக்கிப் புதர்களை அழிக்க முடியும். தொடை அளவுக்கு அவன் முழங்கால்கள் பருத்திருந்தன. வயதின் மூர்க்கத்தில் அசராமல் மலை ஏறியிருந்தான்.

“டேய் பாண்டி, வேகமாகக் குத்திடாதேடா. கதம்பம் கிளம்பிடுச்சின்னா, நம்ம எல்லார் கதையும் முடிஞ்சிது. நாலணாவுக்கு இனாமா உசுரக் கொடுத்துட வைக்காதே.”

“அண்ணா, கொட்டுத் தேனீ மாதிரிதான் கதம்பமும் மரத்துல கூடு கட்டும்னு எங்க அப்பத்தா சொல்லும்.”

“ஒன் அப்பத்தா என்னைக்கு மலையேறியிருக்கு? வாய்க்கு வந்ததைச் சொல்லியிருக்கும். மண்ணை உருட்டி உருட்டி, கதம்பம் எங்க வேணா கூடு கட்டிடும். வண்டுதானேடா அது? பாறை, மடுவு, மரம், செடி, கொடி, புதரு, பாறைப் பெளவு, இண்டு இடுக்கு ஒண்ணு விடாது. சின்ன உருளைக் கல்லு மாதிரி அம்சமா கூடு கட்டும். உனக்குக் காட்டுறேன் பாரு.”

“கொட்டுமா அண்ணே? கொட்டுன இடம் வலிக்குமா?”

“வலிக்கும்தான். ஆனா வலி தெரியுறதுக்கு முன்னாடி நீ போய்ச் சேந்துடுவ.” ஆண்டி சொன்னான்.

“வாயைக் கழுவுடா. பச்சைப் பிள்ளையை என்ன சொல்லுற?” பேயத்தேவன் சிடுசிடுத்தான்.

கையில் சுளுந்துக் குச்சியைக் கொளுத்தி வைத்துக்கொண்டு முன்னேறினார்கள்.

“மலைமேல எங்கடா கெடைச்சதாம் பொதையலு?”

“ஆளுக்கொரு இடம் சொல்றாங்கடா. எனக்குத் தெரியும். டீ எஸ்டேட்டுக்குப் போற வழியிலயும், கண்ணகி கோயில் இருக்க கல்லேறி பக்கமும்தான் இருக்கும்னு எனக்குத் தோணுது. அஞ்சாறு வருஷம் முன்னாடிக்கூட ஏதோ ஒரு ராஜா படம் போட்ட செப்புக்காசு கிடைச்சுதுன்னு பேசிக்கிட்டாங்களே?” பேயத் தேவன் சொல்வது சரிதான் என்பதுபோல் கூட்டம் அமைதியாக நடந்தது.

ஆறாம் சாமம் முடிந்து, ஏழாம் சாமத்தில் நுழைந்த பொழுதில் காட்டை இருள் தழுவியிருந்தது. காட்டின் பேரொலியான பறவைகள் மரங்களடைந்ததால், காடு நிசப்தத்தில் ஆழ்ந்திருந்தது. மான்களும் செந்நாய்களும் காட்டின் விளிம்புக்கு நகர்ந்திருந்தன. காட்டின் பசுமையே ஒளியாகப் பரவி நின்றது திரும்பும் பக்கமெல்லாம். சருகுகள் உரசிக்கொள்ளும் சிறு சப்தம்கூடத் தெளிவாகக் கேட்ட காட்டின் நிசப்தத்தினை ஊடுருவி, புதையல் தேடிச் சென்றார்கள் பேயத்தேவனும் கூட்டாளிகளும். தூரத்தில் கேட்ட யானையின் பிளிறல் சத்தத்துக்கு, உறக்கத்தில் இருந்த மென்மிருகங்களின் உடல் அதிர்ந்ததுபோல் இவர்களின் உடலும் அதிர்ந்தது. இரவில் மாமிசபட்சிகளின் நடமாட்டம் அதிகம் என்று அறிந்தவர்களின் நடையில் எச்சரிக்கை தெரிந்தது.

“இதுக்குப் பேரே கதம்ப வனம்னு எங்க அய்யா சொல்வாரு. அந்தக் காலத்துல கதம்பம் கொட்டியே நாலஞ்சு பேர் செத்திருக்காங்கலாம். பாம்பு கடிச்சாகூட காநாழி அரைநாழி உசுரு தங்குமாம். கதம்பம் கொட்டினா அப்பவே ஆள் சுருண்டுடுவானாம்.”

“வண்டு கடிச்சி செத்திருக்க மாட்டாங்க பாண்டி, வண்டு கடிச்சிடுச்சேன்னு பயத்துல மாரடைச்சி செத்திருப்பானுங்க...” என்ற பேயத் தேவன்,

“சங்கிலி, பயமாயிருக்காடா உனக்கு? அண்ணன் இருக்கேன், அசராம நடைய எட்டிப் போடு” என்றான்.

“க்கும், எட்டி எங்க போடுறது?” ஆண்டி அலுத்துக்கொண்டான்.

“மொடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படற கதையா இருக்கே? இவனை ஏன்டா கூப்பிட்டுக்கிட்டு வந்தீங்க? மூட்டைப்பூச்சிய மடியில கட்டின மாதிரி.”

“ஏதோ நீ சொல்லித்தான் எல்லாம் வர்றோம்ங்ற மாதிரியே பேசாதே பேயத்தேவா… எங்களுக்கும் வரத் தெரியும். நட…”

எந்தப் பேச்சை எடுத்தாலும் ஆண்டியுடன் முட்டி நிற்பதை உணர்ந்த பேயத்தேவன், பேச்சை நிறுத்தினான்.

ஒப்பிலியப்பனும் நண்பர்களும் வீச்சரிவாளால் புதர்களை இழுத்துத் தள்ளிவிட்டு பாதை உண்டாக்கினார்கள். அடர்ந்த காட்டுக்குள் நீர் குடித்துச் செழித்திருந்த புதர்களின்மேல் படர்ந்திருந்த கொடிகள் எளிதில் மண்ணின் பிணைப்பை விட்டுவிட மறுத்தன. கொடிகளை இழுத்துப் போட்டுவிட்டு, பாதையில் படர்ந்து நின்ற மரக்கிளைகளை வெட்டி வீழ்த்தி முன்னேறினார்கள்.

தலை தட்டுவதுபோல் தொங்கிய கிளையைப் பிடித்திழுத்தான் பாண்டி. இலைகளுக்குப் பதில், கைகளில் காய்ந்த மண் பட்டு உதிர்ந்தது.

“டேய், கதம்பத்தோட கூட்டைத் தொட்டுட்டேன். கிளம்பிடப் போகுது, அப்டியே படுங்கடா...” கூச்சலிட்டான் பாண்டி.

ஆளாளுக்கு இருந்த இடத்திலேயே தரையுடன் படுத்தார்கள்.

நல்லவேளை, ஒரு வண்டும் வெளியே வரவில்லை. பேயத்தேவன் மட்டும் துணிந்து முன்னேறினான். கதம்ப வண்டின் கூட்டின் அருகில் சென்றான். சத்தமெழுப்பிய சங்கிலியை, சைகை செய்து அமைதிப்படுத்தினான்.

கூட்டுக்குள் எத்தனை வண்டிருக்கும் என்று சிறு வெளிச்சம் காட்டி எண்ணிப் பார்த்தான். சின்னச் சின்னத் துளைகளிட்டு உள்ளே சென்றபின், வண்டு வழியை அடைத்துவிடும். வண்டு பூசி மெழுகிய தடம், சற்றே மேலெழும்பித் தெரியும். அதிலிருந்து வண்டின் எண்ணிக்கையைக் கணக்கிட்டுக்கொண்டு பின்னால் வந்தான்.

கையோடு வைத்திருந்த சுளுந்துக் குச்சிகளையெடுத்து, ஏற்கெனவே எரிந்து கொண்டிருந்த தீப்பந்தத்தில் காட்டினான் பேயத் தேவன். காட்டிய வேகத்தில் பற்றிய குச்சிகளின் நெருப்பில், அவ்விடமே, இருள் காட்டுக்குள் தீப்பந்தமாய் ஒளிர்ந்தது. பாண்டி அருகில் வந்தான்.

“பேயத்தேவா, என்ன செய்யற? எதுனாலும் சொல்லிட்டுச் செய்.”

“எத்தனை வண்டு இருக்கோ, அத்தனை இடத்திலும் ஒரே சமயத்தில நெருப்பை வைக்கணும். ஒரு வண்டு தப்பிச்சாக்கூட போதும், நம்ம எல்லாரையும் கொட்டிடும்” என்று சொல்லிவிட்டு, நெருப்புப் பந்தங்களை ஆளுக்கொன்றாகக் கொடுத்து, கூட்டின் அருகில் வரச் சொன்னான். ஆளுக்கு இரண்டு மூன்றாக வைத்திருந்த தீப்பந்தங்களைக் கதம்ப வண்டின் கூட்டில் நுழைத்தார்கள். கூட்டுக்குள் இருந்த வண்டுகளின் இறகுகள் கருகி, வண்டுகள் வெளியில் பறக்க முயன்று சுருண்டு விழுந்தன.

“வா, வா, மக்கா சாவு. இல்லைனா எங்களை எப்படிக் கொட்டியிருப்ப?” என்று சங்கிலி இறந்து விழுந்த வண்டுகளை ஓரிடத்தில் குவித்தான். ஒன்றுவிடாமல் கருகின என்று உறுதிப்படுத்திக்கொண்டு, எல்லோரும் ஆசுவாசப்பட்டு உட்கார்ந்தார்கள்.

பேயத்தேவன் இருட்டை ஊடுருவிப் பார்த்தான். ஒரு நாழிகை நடை தூரத்திற்குள்தான் பாதை சீராகியிருந்தது. பைத்தியக்காரத்தனமான வேலையோ? ஆளுயரத்திற்கு வளர்ந்த போதைப் புற்கள், அடர்ந்து விரிந்த இண்டம் புதர்கள், சங்கம் முள் புதர்கள், பெயர் தெரியாத நூற்றுக்கணக்கான செடிகொடிகள் மண்டிக்கிடக்கும் இந்தக் காட்டில் புதையல் இருந்தால்கூட எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? கீழே முட்டிக்கால் உயரத்திற்குச் செடிகொடிகள் உரசி நிற்கின்றன. சுண்டு விரல் நுனி அளவு இருக்கும் செப்புக் காசா கண்ணில் படும்? யார் கிளப்பிவிட்ட கதையாக இருக்கும்? குழப்பமாக இருந்தது பேயத்தேவனுக்கு.

நீரதிகாரம் - 36 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

எதிரில் ஈட்டி மரத்தில் உட்கார்ந்திருந்த மந்தியொன்று திடீரெனக் கூச்சலிட்டது. இருளில் மின்னிய மின்மினிகளையும் பூச்சிகளையும் விரட்டிக்கொண்டிருந்த கூரான் (மான் வகை) மிரண்டு நின்றது. கூரான் இரவில் பூச்சிகளைப் பிடிக்க உலாவுவதைப் பலமுறை பார்த்திருக்கிறான் பேயத்தேவன்.

“பச்ச கும்மாச்சி மலைக்கு இன்னும் எவ்ளோ தூரம் நடக்கணும் பேயத்தேவா?” ஒப்பிலியப்பன் கேட்டதும், “அங்கதான் பொதையல் இருக்கா?” என்று எதிர்க்கேள்வி கேட்டான்.

“சொல்லுப்பா, இன்னிக்குப் போவ முடியுமா? இல்லை, அடிவாரம் திரும்பிடலாமான்னு யோசிக்கிறேன்.”

“வந்த வழியில நீ திரும்ப முடியாது ஒப்பிலி. நாம வெட்டிப்போட்ட புதர்ல இருந்த முள்ளுங்களே கீழ விழுந்து கிடக்கும். ஒவ்வொண்ணும் விரற்கடை பெருசு இருக்கும். காலுல ஏறுச்சுன்னா, சீழ் வச்சிடும்.”

“ஆமாம்ப்பா, மொதல்ல அதெல்லாம் கொளுத்திவிடணும்” என்றான் பாண்டி.

இரவாடிப் பறவையான கூகையின் குரல், பெரும் அலறலாகக் கேட்டது. சங்கிலி பயந்தான்.

“அப்போ பச்ச கும்மாச்சிக்குப் போயிடலாமா? அங்க சின்னதா ஒரு ஓடையும் படல் படலா பாறையும் இருக்கும். போய்ப் படுத்துட்டம்னா விடிஞ்சுகூடத் தேடலாம்.”

“நடப்போம். எப்போ போறமோ அதான் நேரம். காட்டுல நேரம் சொல்ல முடியுமா என்ன? கெளம்புங்கப்பா, போலாம்.”

பேயத்தேவன் சொன்னவுடன், ஒவ்வொருத்தராக எழுந்தனர்.

“வெரசா நடங்கடா…” சொல்லிவிட்டு முன்னால் நடந்தான் பேயத்தேவன்.

பத்துத் தப்படி நடந்திருக்க மாட்டான். நாசியைச் சுருக்கி, காற்றின் துணையோடு ஏதோ யூகிக்கப் பார்த்தான்.

“என்னப்பா?”

‘அமைதி’ என்பதுபோல் சைகை காட்டினான்.

பேயத்தேவன் காற்றில் வரும் வாடையில் இருந்து விலங்குகளின் நடமாட்டம் அறிவான். கடுவாவும் (புலி), கரடியும் எளிதாகக் கண்டறிய முடியும். கடுவா அரை மைல் தூரத்தில் வரும்போதே தெரிந்துவிடும்.

கூட்டம் நடுங்கியது.

காற்றில் முகத்தைக் காட்டி, உறுதிப்படுத்திக்கொள்ள கொஞ்சம் தாமதித்தான். வாடையை உறுதிப்படுத்திக்கொண்டபின், “பக்கத்துல கடுவா இருக்கு. நாம இருக்க இந்தப் பாதை வழியாத்தான் போகப்போகுது” என்றான்.

“கடுவாவா?” சங்கிலி அலறினான்.

ராசுமாயன் சங்கிலியின் வாயைப் பொத்தினான்.

“கடுவா நம்மள ஒண்ணும் செய்யாது. பயப்படாத. மனுசங்க இருந்தாலே அது ஒதுங்கிப் போவத்தான் பாக்கும். நாம சத்தம் கொடுக்காம ஒதுங்கி நின்னாப் போதும்” என்றான் பேயத் தேவன்.

“சின்னச் சின்ன ஜீவராசிக கடுவா வந்ததைத் தெரிஞ்சிகிடுச்சிங்க. அதுங்களுக்கும் தெரியும், கடுவா நடமாட்டம். லேசா சலசலப்பு கேக்குது பாருங்க” சொல்லிய பேயத்தேவன், அருகில் இருந்த பெரிய ஈட்டி மரத்திற்குப் பின்னால் எல்லோரையும் ஒதுங்கி இருக்கச் சொன்னான்.

“கடுவா போயிடுச்சான்னு எப்படித் தெரியும்?”

“நீ பாக்கத்தானே போற?” எனச் சொல்லி, பயந்த சங்கிலியின் தலையை ஆதரவாகக் கோதிவிட்டான் ஒப்பிலியப்பன்.

மூச்சடக்கி, ஒவ்வொருத்தரும் மரத்திற்குப் பின்னால் நின்றனர். இலைகளின் சலசலப்பு, வண்டுகளின் ரீங்காரம், குரங்குகளின் கமறல், பறவைகளின் கீச்சொலி எனக் காட்டின் ஒலிகள் கலவையாய் நிறைந்திருந்தன.

“கடுவா நாத்தம் அடிக்குமா?”

“ஆமா, கப்புனு மூக்கை அடைக்கிற கவுச்சி நாத்தம் வரும். அடிச்சிப் போட்ட காட்டெருமையை ஒரு வாரம் வச்சித் தின்னுமே? அழுகிப்போன மாமிச நாத்தம்தான் கடுவா நாத்தம்.”

“உனக்கெப்படி அண்ணே தெரியும் இதெல்லாம்? யார் சொல்லிக் குடுத்தா?”

“காட்டுல யாரும் சொல்லிக் கொடுத்துத் தெரிஞ்சுக்க முடியாதுடா. காட்டைத் தெரிஞ்சுக்கணும்னா, நாமளும் ஒரு ஜீவராசி மாதிரி காட்டைச் சுத்தணும். அப்பத்தான் கொஞ்சமாவது புரிஞ்சிக்க முடியும்.”

பேசிக்கொண்டே இருந்த பேயத்தேவன், “கடுவா வந்துடுச்சி கிட்ட” என்றான்.

வயதான கடுவா அல்ல. நல்ல பிராயத்தில் நீண்ட முதுகும் பளபளக்கும் ரோமமும் மின்னும் வண்ணமுமாக கடுவா கம்பீர அடியெடுத்து வைத்தது. காடென்பதே நான்தான் என்ற அதிகாரம் எடுத்து வைத்த ஒவ்வொரு அடியிலும் தெரிந்தது. நீண்ட பற்கள் தெரிய வாய் பிளந்து மூடி அடியெடுத்து வைத்தது கடுவா.

“ஒரு பயலும் மூச்சுவிடக் கூடாது, சாக்கிரதை” பேயத்தேவன் மெதுவாக எச்சரித்தான்.

தங்களைக் கடக்கும் கடுவாவை விழி இமைக்காமல் பார்த்தனர். வியப்பும் மிரட்சியுமாகப் பார்த்துக்கொண்டிருந்தவர்கள் திசை நோக்கித் திரும்பிப் பார்த்தது. மறைந்து நின்றிருந்தாலும் மூச்சு நின்ற பிரமையில் ஆழ்ந்தனர். தீக்கங்குபோல் இருட்டில் சுடர்ந்த கடுவாவின் விழிகளை நேருக்கு நேராகப் பார்த்தவர்களுக்கு வயிற்றில் நெருப்பு வைத்ததுபோல் சுளீரென்ற வலி பரவியது.

இவர்கள் மறைந்திருந்த மரத்தைப் பார்த்த கடுவா, தன் பாதையிலேயே நிதானமாக நடந்து கடந்தது. கடுவாவின் நாற்றம் நாசியில் இருந்து மறையும்வரை, பேயத்தேவன் ஒருவரையும் அசைய விடவில்லை.

“உசுரு பயம்ன்னா என்னான்னு கடுவா கண்ணப் பாக்கும்போதுதான் தெரிஞ்சது” உடல் நடுக்கத்துடன் சொன்னான் ராசுமாயன்.

“பொதையல் கெடைக்குதோ இல்லையோ, எல்லாரும் உசுரோட ஊர் போய்ச் சேரணும். கெளம்புங்க. கல்லேறி பாறைக்குப் போலாம்.”

புதர்களை வெட்டிச் சாய்த்தார்கள். தீ காட்டுக்குள் பரவாமல் காற்றுக்கு எதிர்த்திசை பார்த்து போதைப் புல்களைக் கொளுத்திவிட்டு முன்னேறினார்கள்.

எட்டாம் சாமம் முடிவதற்கு முன்னால், கல்லேறிக்கு இரண்டு கல் நடைதூரத்திற்குச் சென்றவர்கள் அதிர்ந்து நின்றார்கள்.

சுக்காங்கல்பட்டியே காட்டுக்குள் இருந்தது. ஆளுக்கொரு வீச்சரிவாளும், கத்தியும் கம்புமாக எதிர்ப்படும் புதர்களையும் செடிகொடிகளையும் வெட்டிச் சாய்த்திருந்தனர்.

தரையில் உட்கார்ந்து அடர்ந்திருந்த புற்களைக் கிளறி, குழந்தைகளும் புதையலைத் தேடிக்கொண்டிருந்தார்கள்.

- பாயும்