
நான் அப்படி நினைக்கவில்லை மிஸ்டர் டெய்லர். அவருடைய அனுபவத்தில் இருந்து அவர் சில கருத்துகளை முன்வைக்கிறார். நம் பார்வையில் நாம் சில தொழில்நுட்பங்களை முன்வைக்கிறோம்.

சாளரத்தின் முன்னால் அமர்ந்து இரண்டு கால்களையும் எதிரில் இருந்த நாற்காலியின் மேல் வைத்திருந்த திருவிதாங்கூர் ரெசிடென்ட் ஹானிங்டனின் கண்களில் ஆழ்ந்த சிந்தனையின் அழுத்தம் கூடியிருந்தது. அருகில் தெரிந்த இலைகளைத் தவிர்த்துப் பார்வையை தூரத்தில் செலுத்தினார். அடர் கிளைகளுக்குள்ளே மறைந்திருக்கும் அழுத்தமான பசுமை நிற இலைகளுக்குள் பார்வை நுழைந்தது. வெயில் படாமல் தங்களை மறைத்துக்கொண்டு இந்த இலைகள் என்ன செய்கின்றன? சூரிய ஒளியைத் தவிர்க்க மறைந்துகொண்டனவா? மறைப்பைத் தாண்டி ஈர்க்கும் அளவிற்குச் சூரிய கிரணத்திற்குச் சக்தி கிடையாதோ? மரமென்பது வேர் என்றாலும், மரமென்பது இலைகளும் கிளைகளும் மட்டுமே எனப் புரிந்து வைத்துள்ள அவர் நினைவுகளைச் சாடினார்.
மரம் அபூர்வம். சின்ன விதையில் இருந்து முளைத்தெழும் பிரமாண்டம். மரத்தைப்போல் நிலைத்த பயன் பெருக்கும் உயிரி வேறுண்டா? காய்ப்பதும் பூப்பதும் இலை உதிர்வதும் மலர்வதும் எனச் சத்தமின்றித் தன்னைப் பருவங்களுக்கு ஒப்புக்கொடுக்கும் ஜீவன். ஹானிங்டனால் மரக்கிளையின் உள்சென்று இலை சுருண்டிருந்த சந்தன மரத்தில் சிக்கிய பார்வையை விலக்க முடியவில்லை. சுருண்டிருந்த இலை அவரை இழுத்து வளைத்து, பசுமையின் ரகசியப் புன்னகைக்குள் அழுத்தியது. தாவரவியல் படித்ததால், மரங்களை நேசிக்கும் குணம் வந்திருக்க முடியாது. குடும்பப் பெயரைச் சரிபார்த்துவிட்டு, காம்பை உடைத்துக் கீழே வீசும் தாவரவியலாளர்கள் ஏராளம். தாவரங்கள்மேல் காதல் இருப்பதால்தான் தான் தாவரவியல் படித்தோம் என்று நினைத்துக்கொண்டார் ஹானிங்டன். பசுமைதான் மனச் சோர்வை ஆற்றும் அரிய மருந்து. பசுமையிடம் சரணடைவதுதான் ஹானிங்டனுக்குப் பிடித்த பொழுதுபோக்கு.
தோட்டத்திற்குச் சென்று இலைகளைத் தொட்டுத் தடவிப் பார்க்கும் பரவசத்தைவிட, சாளரத்தின் வழியாக மரத்தைப் பார்க்கும் பரவசம்தான் ஹானிங்டனுக்குப் பிடிக்கும். மரங்களை அருகிருந்து பார்க்கும்போது மரத்தின் பேருருவமோ, விஸ்வரூபமோ உணர முடியாது. அதன் குளுமையை அனுபவிக்க முடிந்தாலும் மரமென்பதை பிரமாண்டமாய்ப் பார்க்கத்தான் பிடிக்கும் அவருக்கு. வேர்கள் கால்களாய்த் தாங்கி நிற்க, விரிந்து பரந்து மரம் நிற்கும் அழகைத் தூரத்தில் நின்றால்தான் ஆழ்ந்து ரசிக்க முடியும். உயரமான இடங்களில் நின்று பார்க்கும்போது மரத்தின் அழகு மேலும் கூடும். குடை விரித்ததுபோல் சீரான அரைவட்டத்தில் நிற்கும் மரங்கள், பூமிக்குள் வேர்கள் கீழிறங்கும் நேர்க்கோட்டிலேயே விண்ணோக்கி நீளும் கிளைகள், எந்த ஒழுங்குமற்று நீண்ட, குறுகிய கிளைகளுடைய மரங்கள் என்று மரங்கள் எப்படியிருந்தாலும் ஹானிங்டனுக்குப் பிடிக்கும்.
சாளரத்தில் இருந்து பார்க்கும்போது, தன் பார்வையின் கோணத்தைச் சட்டமிட்டுக்கொண்ட நிறைவு. நீள்செவ்வகத்தில் அடைபடும் மரத்தின் பிம்பங்கள் வியப்பைத் தரும். இதற்காகவே ஹானிங்டன் சாளரத்தின் முன் அமர்ந்து மணிக்கணக்காக மரங்களை வேடிக்கை பார்ப்பார். பிரபஞ்சத்தின் பிரதியாய் விரியும் காட்சியின் சலனமாய்ச் சிறகடித்து வந்தமரும் சிட்டுக் குருவி, பச்சைக் கிளி, மைனா, புறா, ஊரும் எறும்பு, வண்டுகள், பூச்சிகள் என ஒரு மரம் போதும் ஆயுளுக்கும், வெறுமனே பார்த்துக்கொண்டிருக்கலாம்.
அறைக்குள் சத்தமில்லை, உதவியாளர்களுக்கான அழைப்பில்லையென்றாலே ஹானிங்டன் சாளரத்தின் முன் அமர்ந்துவிட்டார் என்றறிவாள் குருவாயி. பல நேரங்களில் அவரின் தனிமைக்குள் நுழைவதற்கு விரும்ப மாட்டாள். அவரின் சரிபாதியல்லவா தான்? தானும் அவரின் தனிமைக்குள்தானே இருக்க வேண்டுமென்று தோன்றும் கணங்களில் சத்தமின்றி அறைக்கதவைத் திறந்து அவரின் அருகமர்ந்துகொள்வாள். ஹானிங்டன் எப்போது தன்னைக் கவனித்தார் என்று தனித்தறிய முடியாது. ஏதோ ஒரு கணத்திற்குள் குருவாயியின் அண்மையை உணர்ந்து ஹானிங்டன் பேசத் தொடங்கினால் குருவாயியும் பேசத் தொடங்குவாள். தான் இல்லாத நேரங்களிலும், தான் இருப்பதாக நினைத்துப் பேசியிருப்பாரோ என்று எண்ணுவாள். நிச்சயம் நடந்திருக்கும். ஹானிங்டனின் உள்ளங்கை சூடுபோல்தான் அவளிருப்பு. எப்போதும் உடனிருக்கும்.

“நீண்ட நேரமா அசையாமல் இயற்கைக்குள் ஆழ்ந்துவிட்டீர்களா ஹனி?”
“யெஸ் டியர். இயற்கை அழகிற்குள் மறைந்திருக்கும் ஆபத்திற்குள் இருந்து தன்னைத் தற்காத்துக்கொள்ளத்தான், காடுகளை விட்டு மனிதன் வெளியேறினானோ? இயற்கையின் மற்ற உயிரினங்களோடு ஒப்பிடும்போது, மனிதர்கள் மட்டுமே பலவீனமான தற்காப்பு கொண்டவர்கள். இயற்கையிடமிருந்து மனிதர்கள் விலக எண்ணுவதற்குக் காரணமே அவர்களுடைய பலவீனம் தரும் அச்சவுணர்வுதான். மனிதர்கள் ஏன் வீடுகளைக் கட்டினார்கள், யோசித்துப் பார்? சூரியனிடமிருந்தும் மழையிடமிருந்தும் தற்காத்துக்கொள்வது மனிதர்களுக்கொன்றும் பெரிய விஷயமில்லை. பாறைக் குகைகளும் மரப்பொந்துகளும் போதும். அச்சமுண்டாக்கும் இயற்கையின் மற்ற ஜீவராசிகளிடமிருந்து தற்காத்துக்கொள்ளத்தான் மனிதர்கள் வீடுகளைக் கட்டினார்கள். தம் இருப்பிடத்தையொட்டி தமக்குப் பணிந்து நடக்கும், தன்னால் வசக்கிவிட முடிந்த உயிரினங்களை மட்டும் அருகில் வைத்துக்கொண்டார்கள். இயற்கையின் உருவாக்கத்தில் இருந்து தம்மை விடுவித்துக்கொண்ட முதல் உயிரினம் மனிதர்கள்தானோ? யோசிக்க யோசிக்க அப்படித்தான் தோன்றுகிறது. மனிதர்களின் ஆறறிவுதான் அவர்களின் பலவீனத்தை மறைத்து வைத்திருக்கிறது. இயற்கையுடன் சமர் புரிவதே வாழ்க்கையாகக் கொண்டால்தான் இயற்கையின் இருப்பிடத்திற்குள் வாழ முடியும்.
மேல்மலை உலகத்தில் இருக்கும் அரிய இயற்கை வாழ்விடங்களில் பிரதானமானது. மனிதர்கள் உள்நுழைந்துவிடாத காடு. அதற்குள் சென்று பென்னி அணை கட்டிவிடுவாரா என்று நான் அஞ்சுகிறேன். அவரின் பாதுகாப்பு குறித்த அச்சம் தலைதூக்குகிறது. ஜார்ஜியானா அருமையான பெண். மூன்று சின்னஞ்சிறு குழந்தைகள். எல்லாம் யோசித்தேன். மனம் எங்கெங்கோ பயணம் செய்கிறது.”
ஹானிங்டனின் கவலை குருவாயிக்கும் பற்றியது.
“மேல்மலைக்கு நாம் இருவரும் சென்று வந்த பயணம் நினைவில் இருக்கிறதா? பாதுகாப்பு வீரர்கள் உடன் வந்த பிறகும் நம்மால் மலையின் சின்னஞ்சிறிய குன்றுகள் இரண்டு மூன்றைக் கடக்க முடியவில்லை. குளிரும், பெரிய பெரிய கொசுக்களும் பூச்சிகளும், ஒருநாள் தாக்குப் பிடிக்க முடியவில்லை நம்மால். மூவாயிரம் அடி உயரத்தில் அடர்ந்த காட்டுக்குள் பென்னி, ஆயிரக்கணக்கான கூலிகளை வைத்து எப்படி வேலை செய்து, அணை கட்டி முடிப்பார் என்று யோசிக்கவே தலை சுற்றுகிறது.”
“யெஸ் ஹனி. ஒப்பந்தம் கையெழுத்தான அன்று பென்னிக்கும் இப்படியொரு அச்சம் பிறந்திருக்கும். அதனால்தான் யாருமே உடன் வர வேண்டாமென்று சொல்லி, தன்னந்தனியாக மலையேறிவிட்டு வந்தார்.”

“வியப்புதான். குதிரையையும் விட்டுவிட்டுச் சென்று வந்தாராம். குதிரையால் பாதையில்லாத இடங்களில் நடக்க முடியவில்லை. குன்றுகளை ஏறுவதற்குத் தடுமாறியதாம். மலையேறுவதற்குக் கழுதைதான் சிறந்த விலங்கு. மாடுகூட சுமையுடன் ஏற முடியாமல் மூச்சிரைக்கும்.”
“பென்னிக்கு உங்களைப்போல் வயது கூடவில்லை. பென்னியின் உடல் காட்டின் கடுமையைத் தாங்கும். கவலை கொள்ளாதீர்கள்.”
“எனக்கு வயதாகிவிட்டது என்கிறாய். மகிழ்ச்சி. வயதாகிறது என்று சுட்டிக்காட்டுவது மனிதனுக்கு மரணம் நெருங்கிவிட்டது என்று சொல்வதாகத்தானே பொருள்?”
“நோ ஹனி. இதென்ன இப்படி யோசிக்கிறீங்க. உங்க பிரச்சினையே இதுதான். எதில் சட்டென்று உடைந்துபோவீர்கள் என்று புரிந்துகொள்ள முடியாது. உங்கள் நிழல்போலவே இருக்கிறேன். நான் எந்த அர்த்தத்தில் சொல்கிறேன் என்று புரிந்துகொள்ளாமல் காயப்படுத்துவீர்கள்.”
குருவாயி கண்கலங்கினாள்.
“ஓ... இதென்ன கண்கலங்கும் வழக்கம்? வயதாகிறது என்ற சொல்லை இளமையானவர்கள் கேட்டால் என்ன நினைப்பார்கள் என்று எனக்குச் சொல்லத் தெரியவில்லை. வயதானவர்கள் கேட்டால் உடனே பத்து வயது கூடிய முதுமையை உணர்வார்கள் என்பதில் சந்தேகமில்லை.”
“சாரி ஹனி...” என்றாள் குருவாயி.
“நத்திங். இட்ஸ் ஓகே.”
“அந்நியோன்யம் என்பதற்குள் நுழைந்துவிடும் இடைவெளி ஆச்சரியம்தான். இருவருக்கு இடையிலான புரிதலின் எல்லைகள் அவ்வப்போது மாறித்தான் போகின்றன” அழுகையைக் கட்டுப்படுத்திக்கொண்டு பேசினாள் குருவாயி.
“நானே சோர்வில் இருக்கும்போது, உன் பங்குக்கு நீயும் சோர்வைக் கூட்டாதே.”
இருவருக்கும் இடையில் கனத்த மௌனம். தோட்டத்தை நிறைத்த குயிலின் துயர் ததும்பும் குரல், சாளரத்தில் விளிம்பில் அமர்ந்து மெல்ல அறைக்குள்ளும் நுழைந்தது. குயிலின் குரல் ஹானிங்டனை நெகிழ்த்தியது. உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்தே வலது கையை நீட்டி, குருவாயியை இழுத்து அணைத்தார். அவள் நெற்றியில் முத்தமிட்டு, உருண்ட கண்கள், மேடிட்ட கன்னம் என மெல்லக் கீழிறிங்கி உதட்டில் நிலைகொண்டார். அழுகையைத் தணிக்கக் கிடைக்கும் முத்தத்தின் இனிமைக்குத் தனிச் சுவை. அவ்வேளை முத்தமென்பதற்குச் சமாதானம் என்று பொருள். நேரமழிந்து இருவரும் ஒன்று கலந்தார்கள்.
குருவாயிக்கு உள்ளுணர்வு உணர்த்திய நொடியில் ஹானிங்டனிடம் இருந்து பிரிந்தாள். அவள் இருக்கையில் உட்கார்ந்த கணம், ஹானிங்டனின் செயலர் கதவை மெதுவாகத் தட்டிவிட்டு உள்நுழைந்தார்.
“யுவர் எக்ஸலென்ஸி...” அறையின் இதமான இருளில் செயலர் ஹானிங்டனைத் தேடினார். சாளரத்தின் ஒளியில் அவரைக் கண்டடைந்தவுடன் பார்வை அங்கே நின்றது.
“யெஸ்...”
“திவான் ராமய்யங்கார் வந்திருக்கிறார்.”
“வரச் சொல்லியிருந்தீங்களா ஹனி?”
“யெஸ் டியர். கையொப்பமிட்ட ஒப்பந்தத்தை மகாராஜாவின் பார்வைக்குப் பிறகு, இப்போது கொண்டு வந்திருப்பார். மீண்டுமொரு முறை வாசித்து, மெட்ராஸ் கவர்னருக்கு ஒரு பிரதியும், சமஸ்தானத்திற்கு ஒரு பிரதியும், நம் அலுவலகத்திற்கு ஒரு பிரதியும் எடுக்க வேண்டும். மூலப் பத்திரத்தைத் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.”
“அவருக்குக் காப்பி கொடுத்துவிட்டு, காத்திருக்கச் சொல்லுங்கள். ஹிஸ் எக்ஸலென்ஸி வந்துவிடுவார்.”
செயலர் வெளியேறியவுடன் ஹானிங்டன் மீண்டும் மரத்தைப் பார்த்தார். இளவெயில் முற்றும் பொழுதில் தனியாகப் பறந்து திரிந்து சிட்டுக் குருவியொன்று வந்தமர்ந்தது. ஹானிங்டனுக்கு உற்சாகமாக இருந்தது. பறவைகளைப் போல் மென்மை ததும்பும் உயிரினம் உண்டோ? பார்க்கும் பறவையெல்லாம் மகிழ்ச்சியின் குறியீடுகள் அன்றோ? பறவையின் சிறகடிப்பில் மனம் களிப்பில் மூழ்க ஹானிங்டன் எழுந்து நின்று இரு கைகளைப் பறவையின் சிறகாய் விரித்தார். குருவாயி அவரின் கோட்டை அணிவித்தாள்.
“வாரும் மிஸ்டர் அய்யங்கார்...”
படிக்கட்டில் இருந்து இறங்கும் முன்பாகவே ஹானிங்டனின் குரல் உற்சாகமாக ஒலித்தது.
“யுவர் எக்ஸலென்ஸிக்குப் பணிவான வணக்கம்” குனிந்து வணங்கினார் ராமய்யங்கார்.
“ஹிஸ் எக்ஸலென்ஸி மகாராஜா லீஸ் அக்ரிமென்ட் பார்த்துவிட்டாரா? என்ன சொன்னார்? பார்க்கும் மனநிலையில் இருக்கிறாரா? இல்லை தம்புராட்டி கார்த்தியாயினியுடன் ஊடலில் இருக்கிறாரா?” கேட்டுக்கொண்டே புலித்தோல் போர்த்தப்பட்ட தன் ஆசனத்தில் அமர்ந்தார்.
“யுவர் எக்ஸலென்ஸி விளையாட்டாகப் பேசுகிறீர்கள். நல்ல மனநிலையில் இருக்கிறீர்கள் என்பதில் சந்தோஷம்.”
“ஆமாம் மிஸ்டர் அய்யங்கார். யோசித்துப் பாருங்கள். எத்தனை திவான், எத்தனை ரெசிடென்ட், எத்தனை மகாராஜாக்களிடம் இந்தக் கோப்பு சென்று திரும்பியிருக்கும்? நம் இருவருக்கும்தானே இதில் கையெழுத்திட கடவுள் திருவுள்ளம் காட்டியிருக்கிறார்? மூலம் மகாராஜாவின் நல்லாட்சியில்தானே இந்த நற்செயல் இடம் பெற்றது. நாம் எல்லோருமே போற்றப்பட வேண்டியவர்கள்.”

“உண்மைதான் யுவர் எக்ஸலென்ஸி. காலம் உண்மையைச் சொல்லும்.”
“கட்டாயம் சொல்லும் அய்யங்கார். அதிலென்ன உங்களுக்குச் சந்தேகம்.”
திவான் ராமய்யங்கார், ஒப்பந்தப் பத்திரத்தினைச் சுற்றியிருந்த வெல்வெட் துணியைப் பிரித்தெடுத்தார். மெட்ராஸ் பிரசிடென்சியிடம் இருந்து திருவிதாங்கூர் சமஸ்தானம் எழுதிக் கேட்டு வாங்கும் உயர்தரத் தாளில் கடுக்காயை அரைத்துத் தயாரித்த அடர் பழுப்பு நிற மையில் அழகான கையெழுத்தில் ஒப்பந்தம் எழுதப்பட்டிருந்தது.
ஹானிங்டன் மீண்டும் ஒருமுறை ஒப்பந்தத்தினைப் படித்தார். படித்து முடித்தவுடன் ஒப்பந்தத்தின் ஷரத்துகளைப் பெரிய எழுத்தில், கனத்த தாளில் எழுதித் தன் அறையில் தன்னுடைய கண் பார்வையில் படும்படி வைக்கச் சொன்னார். அணை கட்டும்வரை இரண்டு தேசங்களும் விதிகளை மதித்து நடக்க வேண்டும் என்பதை நினைவுகூர்வதற்கு உதவும் என்றெண்ணினார் ஹானிங்டன்.
“மிஸ்டர் அய்யங்கார், ஒப்பந்தத்தினைப் பிரதி எடுத்துவிட்டீர்களா?”
“யெஸ் யுவர் எக்ஸலென்ஸி. எல்லாம் தயார்தான்.”
“நல்லது. பெரியாறு அணைத் திட்டத்தின் வரைபடத்துடன் லீஸ் அக்ரிமென்டையும் செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு அனுப்பி வைக்க வேண்டும். உடன் ஏற்பாடு செய்யுங்கள். லீஸ் அக்ரிமென்ட்டுக்கான ஸ்டாம்ப் செலவு 407 சொச்சத்தை பிரிட்டிஷ் ரூபாயில் தரச் சொல்லி சீப் செக்ரட்டரிக்குக் கடிதம் எழுதியுள்ளேன்.”
“மிக்க நன்றி யுவர் எக்ஸலென்ஸி. நான் விடைபெறலாமா?”
“மகிழ்ச்சியோடு. இரவு விருந்து ஏற்பாடு செய்யலாமா? மகாராஜா கொட்டாரத்தில் இருக்கிறாரா?”
“மகாராஜா மீண்டும் அஞ்சுதெங்கு சென்றிருக்கிறார் யுவர் எக்ஸலென்ஸி. இன்று காலைதான் புறப்பட்டுச் சென்றார்.”
“அவர் வரும் நாளில் ஏற்பாடு செய்யுங்கள். பிரசிடென்சியின் இன்ஜினீயர்கள் எல்லோரையும் அழைப்போம். மகாராஜாவிற்கும் அறிமுகம் செய்வோம்.”
“உத்தரவு யுவர் எக்ஸலென்ஸி.”
குழந்தைகளை யானை அடித்துவிட்டது என்றறிந்தபோது பென்னிக்கு உடல் விதிர்விதிர்த்தது. தன் மூன்று குழந்தைகளின் முகம் ஒரு கணம் மின்னல் வேகத்தில் கடந்து சென்றது.
“காட்டில் புதையல் இருக்குன்னு யார் சொன்னதாம்?” பென்னியின் கோபம் தெறிக்கும் முகம் பார்த்து உதவியாளன் ஒதுங்கி நின்றான்.
“என்ன நடந்ததுன்னு மறைக்காமச் சொல்லு” கூச்சலிட்டார் பென்னி.
“மேல்மலைக்குப் பாதை போடப் போறாங்க. இருக்கிற மரம் செடி கொடிங்களை வெட்டிப் போட்டாத்தான் பாதை போட முடியும்னு கூடலூர்ல ஒரு கொத்தனார் சொன்னாராம் துரை. முள்ளு பொதருங்களை வெட்டிப் போடுங்கடான்னு தலையால நின்னு கூப்பிட்டாலும் ஒரு பய அருவாளையும் ஈட்டியையும் கையில தூக்க மாட்டான். சிறுமலை ஏலக்காய் எஸ்டேட், கண்ணன் தேவன் டீ எஸ்டேட் இதுக்கெல்லாம் ஆள் பிடிச்சுக் கொடுக்கிற கங்காணி ஒருத்தன் காதுல இந்தச் சேதி விழுந்திருக்கு. அவன் கொத்தனார்கிட்ட போய், ஒரு கல் நடைதூரத்துக்குப் பொதருங்கள வெட்டிக் கொடுத்தா எவ்ளோ தருவீங்கன்னு பேசியிருக்கான். நீ ஆளுகள வேலைக்குக் கூட்டியாந்து விடு. நான் வேலைக்குத் தக்கன கூலி கொடுக்கிறேன்னு கொத்தனார் சொல்லியிருக்கான். எஸ்டேட்டுக்கு ஜனங்களைக் கூட்டிப்போய் விட்டு, காக்கூலி அரைக்கூலியைக் குடுத்துட்டு மீதிய வாயில போட்டுக்கிறவன் கங்காணி. பல பேரைக் கொன்னும் போட்டிருக்கான். எமகாதகன். ரொம்பச் சுதாரிப்பு ஆளு. நீ தூரத்தை அளந்துக்கோ. ஒரு கல் நடைதூரத்துக்குப் பத்து ரூபாய் குடுத்திடு. எத்தனை பேர் வேலை செஞ்சா உனக்கென்னன்னு கேட்டிருக்கான். கொத்தனாருக்கு வேலை நடந்தா நல்லதுதானேன்னு மனசுல பட்டுச்சு. கங்காணி முழுப் பூசணிக்காயைச் சோத்துல வச்சு முழுங்குவான்னா, இவன் வெள்ளரிக்காயை வச்சு முழுங்கிறவன். கொத்தனார் சரின்னு ஒத்துக்கிட்டான். சர்க்கார் பத்துப் பணம்தான் தருது. அதனால ஒன்பது ரூபாய்க்கு ஆளப் பிடிச்சு வேலை செய். ஒரு ரூபாயை (16 அணா) நம்ம ரெண்டு பேரும் ஆளுக்குப் பப்பாதி (பாதிப் பாதி), எட்டணா எடுத்துக்கிடலாம்னு சொன்னானாம். கங்காணிக்குக் கொண்டாட்டம் தாங்கலை. நடைத்துணைக்கு வர்றியான்னு கேட்டவனைப் பல்லக்குலயே தூக்கிக்கினு போறன்னு சொன்னா எப்படியிருக்கும்? அப்படி ஆடியிருக்கான். எட்டணா கமிஷன் துட்ட காலணா, காலணாவா மாத்தியிருக்கான். மாத்தி, மேல்மலைக்கு மேய்ச்சலுக்கு மாடுகளப் பத்திக்கிட்டு வரும் ஆளுக கண்ணுல படுற மாதிரி, அங்கங்க விசிறி விட்டு லேசா மண்ணைத் தள்ளி விட்டிருக்கான். மொத்தமே எட்டணாதான் போட்டிருக்கான். தந்திரமா என்ன பண்ணியிருக்கான்னா, மாடுக மேய்ச்சலுக்கு எந்தெந்தக் காட்டுக்கும் புல் மேட்டுக்கும் போவுமோ அங்கல்லாம் போட்டிருக்கான். ஒரே ஒருநாள் ஜனங்க கண்ணுல காலணா துட்டுங்களைக் காட்டிட்டு, தெனம் பொழுது சாய மந்தையில உக்காந்து, மேல்மலையில புதையல் கெடக்குதாம். மாடு மேய்க்கப் போற ஜனங்கல்லாம் துட்டா கை நெறைய அள்ளிக்கிட்டு வர்றாங்களாம்னு ஐஞ்சாறு நாளா தெனம் சொல்லியிருக்கான். நம்ம ஜனங்களுக்குத்தான் சோளக் கட்டை இனாமாக் கெடைக்குதுன்னாக்கூட போதும், பொண்டு பிள்ளைகளோடு கெளம்பிடுங்க. அப்படித்தான் கங்காணி பேச்சை நம்பி, கையில அருவா, ஈட்டி, கத்தி மம்முட்டின்னு எடுத்துக்கிட்டு காடு மேடு அலைஞ்சிருக்குங்க. கூடப் போன பிள்ளைகளுக்குத்தான் சேதாரமாம்.”

உதவியாளன் நீட்டி முழக்கிச் சொல்லிய விஷயத்தை, இரண்டே வரிகளில் சொல்லியிருக்கலாமே என்று நினைத்தார் பென்னி. இந்தத் தேசத்து ஆள்களுக்குச் சாப்பாட்டில் தனி ருசி தேவைப்படுவது போல், பேச்சுக்கென்று தனி ருசி வைத்திருக்கிறார்கள். பேசிப் பேசித்தான் பாதி ஆயுள் கழிகிறது இவர்களுக்கு. நீண்ட ஆலாபனைதான் ஒவ்வொரு செய்தி சொல்லும்போதும். பென்னி எதற்குக் கவலைப்படுவது என்று கவலைகொண்டார்.
வேலை தொடங்கும் முன்னே குழந்தைகளுக்கு நடந்துள்ள துயரச் சம்பவம் பென்னியை பாதித்தது. மரத்தினுடைய நிழல் கீழே விழ முடியாத அடர்ந்த காட்டில், மனிதர்களே உள்நுழைய அஞ்சும் காட்டில் புதையல் கிடைக்குமென்று எப்படி மக்கள் நினைக்கிறார்கள்? அதுவும் குழந்தைகளையும் அழைத்துச் செல்வதற்கு எப்படித் துணிவு வந்தது? பென்னிக்குக் கோபம் கொப்பளித்தது.
“மிஸ்டர் பென்னி, சிந்தனையற்ற முட்டாள்கள் இவர்கள். வேறு யாரும் இப்படியொரு காரியம் செய்ய மாட்டார்கள். தயவுசெய்து இந்த ஊரில் இருந்து ஆள்களை வேலைக்குக் கூப்பிட்டுவிட வேண்டாம். நம் காரியம் கெட்டுப்போகும்” டெய்லருக்கும் கோபம் வந்தது.
“நாம் சென்று பார்க்கலாமா, வேண்டாமா? சர்க்காருக்குக் கடிதம் எழுத வேண்டுமா?” லோகன் கவலையாய்க் கேட்டார்.
“நமக்கு நேரடியாகத் தொடர்பற்ற சம்பவம். நாம் யாரையும் புதர்களை வெட்டி வழியுண்டாக்கச் சொல்லவில்லை” மெக்கன்ஸி.
மேன்மை பொருந்திய திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் மகாராஜாவுக்கும், மேன்மை பொருந்திய இந்திய சர்க்காரின் செயலர் அவர்களுக்கும் இடையில் 1886ஆம் ஆண்டு, அக்டோபர் மாதம் 29ஆம் நாள், மலையாள ஆண்டு 1062, துலாம், 14ஆம் நாள் செய்து கொள்ளப்பட்ட பெரியாறு அணை குத்தகை ஒப்பந்தத்தின் ஷரத்துகள்.


“பாதிக்கப்பட்டது குழந்தைகள் என்றறியும் போது மனம் பதறுகிறது” பென்னி சொன்னவுடன் அவ்விடத்தில் தவிர்க்கவியலாத மௌனம் வந்து அமர்ந்தது.
பென்னிதான் முதலில் மௌனத்தைக் கலைத்தார்.
“நாம் சென்று பார்ப்போம். ஏஜென்டுகள் சொல்வதைக் கேட்டு ஏமாறாமல் இருக்கச் சொல்லுவோம்.”
“கொஞ்சம் இடைவெளிவிட்டுச் செல்வோம் மிஸ்டர் பென்னி. நடந்தது என்னவென்று முதலில் அறிந்துகொள்வோம்.”
“யெஸ் மிஸ்டர் லோகன். நேரம் எடுத்துக் கொள்வோம்.”
உதவியாளன் வெளியேற, கூட்டம் தொடர்ந்தது.
“விரும்பத்தகாத நிகழ்வு. நமக்குத் தொடர் பில்லாதவர்கள் நம் பணிகளுக்கு இடையூறு செய்வதுடன் சர்க்காருக்கு அவப்பெயரையும் பெற்றுத்தர முடியும். இன்றைக்கு நடந்துள்ள இந்தச் சம்பவமே உதாரணம். நாம் கவனமாக ஒவ்வொரு இடத்திலும் வேலைகளை நகர்த்த வேண்டியிருக்கிறது. நமக்குள் வேலை சார்ந்து கருத்து வேறுபாடு இருக்கலாம். அதைப் பேசி சரி செய்துகொள்ளலாம். எதிர்த்தரப்பின் கருத்து ஏற்புடையதாக இருக்கும்பட்சத்தில் ஏற்றுக் கொள்வதில் தயக்கம் காட்டக்கூடாது. நான் எப்போதுமே இதில் முன்னுதாரணமாக இருப்பேன். அதில் உங்களுக்குச் சந்தேகம் வேண்டாம். ஏறக்குறைய போர்க்களம்தான். நாம் அனைவரும் ஒரே மனத்துடன் இருந்தால் மட்டுமே இங்கு களமாட முடியும்.”
“யெஸ் மிஸ்டர் பென்னி. நாங்கள் எல்லோரும் உங்கள் கரங்களை வலிமைப்படுத்துவோம். கவலை கொள்ளாதீர்கள்” ஒத்த குரலில் இன்ஜினீயர்கள் சொன்னார்கள்.
பென்னியின் முகம் மலர்ந்தது.
“நாம் இப்போது அணை கட்டத் தேர்வு செய்திருக்கிற இடம் நான்காவது தேர்வு. நான் ஏன் இந்த இடத்தைத் தேர்வு செய்திருக்கேன் என்றால், 155 அடிக்கு அணையினுடைய உயரத்தை உயர்த்தும்போது, அதற்கு ஏற்ற தண்ணீர் தேங்க வேண்டும். இப்போது தேர்வு செய்திருக்கிற இடத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கவும், சுரங்கம் வழியாகத் தண்ணீர் வெளியேறவும் வாய்ப்புகள் அதிகம். இந்த இடத்தைத் தேர்வு செய்வதிலும், அணை கட்டும் முறையிலும் இர்ரிகேஷன் ஜெனரலுடன் நடந்து கொண்டிருக்கும் விவாதங்களையும் நீங்கள் அறிந்திருப்பீர்கள்.”

“யெஸ் மிஸ்டர் பென்னி. அவருக்குக் குறை சொல்ல வேண்டும். திட்டத்தை இன்னும் பல பத்தாண்டுகளுக்குத் தள்ளிப் போட வேண்டும்.”
“நான் அப்படி நினைக்கவில்லை மிஸ்டர் டெய்லர். அவருடைய அனுபவத்தில் இருந்து அவர் சில கருத்துகளை முன்வைக்கிறார். நம் பார்வையில் நாம் சில தொழில்நுட்பங்களை முன்வைக்கிறோம். கட்டுமானப் பணியைப் பொறுத்தவரை ஒருத்தருடைய கருத்தை மற்றொருவர் ஏற்பது கடினம். கணிதத்தில் விடை கண்டுபிடிக்க ஆளாளுக்கு ஒரு வழிமுறையைக் கையாளுகிறோம். குறிப்பாக நமக்குப் பயன்படும் முக்கோணவியல் தேற்றங்கள். நாம் ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு வழிமுறையில்தானே அதற்கான விடையைச் சென்றடைகிறோம்? அப்படித்தான் அணை கட்டும் முறையும். அவர் சொல்லுவதையும் பரிசீலனை செய்வோம். நதியின் இருப்பிடமும் ஓட்டமும் அங்கிருக்கிற பாறையின் உறுதியும்தான் அணையை எப்படிக் கட்ட வேண்டுமென்று தீர்மானிக்கும். அதன் போக்கில் விடுவோம். சரி, விஷயத்திற்கு வருகிறேன். ஐந்து இடங்களில் பிரதானமான வேலை நடக்க வேண்டும்...” பென்னி பேசிக் கொண்டிருக்கும் போதே உதவியாளன் உள்ளே வந்தான்.
‘என்ன?’ என்று பார்வையிலேயே கேட்டார்.
“எஜமான், ஏழெட்டு ஜமீன்தாருங்களோட ஏஜென்ட்க வந்திருக்காங்க. உங்களைப் பாக்கணுமாம்.”
“கூட்டம் நடக்குதுன்னு சொல்லலையா?”
“சொன்னேன் சாமி. பெரியாத்துத் தண்ணி அவங்க கால்வாய் வழியா போகக்கூடாதுன்னு மனு கொடுக்க வந்திருக்காங்களாம். ரொம்ப அவசரம்னு சொன்னாங்க.”
“இடியட்ஸ்” லோகன் கத்தினார்.
பென்னி கையருகில் இருந்த குவளை நீரை எடுத்துப் பருகினார்.
- பாயும்...