மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 39 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

மலைமேல் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுபவர்கள் பிரிட்டிஷ் சர்க்காரிடம் முன்பணம் கட்டி ரசீது வாங்கியிருக்க வேண்டும். எத்தனை மாடுகள் மலை மேல் மேய்ச்சலுக்குப் போகிறது?

நீரதிகாரம் - 39 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

குமுளி மலைப்பாதையில் இருந்து குதிரையில் கீழிறங்கிக்கொண்டிருந்தார் ராயல் இன்ஜினீயர் பென்னி குக். அவருடன் பெரியாறு அணைத் திட்டத்தின் எக்ஸிகியூட்டிவ் இன்ஜினீயர் மெக்கன்சியும் அவருடைய குதிரையில் பின்தொடர்ந்தார். குறுகலான பாதையில் குதிரைகள் ஒன்றையொன்று பின்தொடர்ந்தும், பாதை விரியும்போது அருகருகிலும் நடந்தன. பென்னி முழங்கால்வரை நீண்ட கம் பூட்ஸ் அணிந்திருந்தார். வெள்ளை முழுக்கைச் சட்டையும், கறுப்பு நிறக் கால்சராயும் தலையில் பழுப்பு நிறத் தக்கைத் தொப்பியும் சூரிய வெளிச்சத்தின் வெம்மையைக் குறைக்கும் கண்ணாடியுமாக பென்னி, மலையின் பசுமையும் பழுப்புமான பின்னணியில் பளிச்சென்று தெரிந்தார். மெக்கன்சியும் ஏறக்குறைய பென்னியை ஒத்த உடையலங்காரம். பென்னியைவிட ஓரங்குலம் குறைந்த உருவம். மெக்கன்சியின் இளமை, பென்னியின் தோற்றத்திற்குச் சவால் விட்டது. இறங்கு பாதையென்றாலும், ஏற்றங்கள் நிரம்பியதுதான் மேல்மலை. சின்னச் சின்னக் குன்றுகளில் ஏறி இறங்கினால் இரண்டு, மூன்று பர்லாங் தூரத்திலேயே வேறொரு குன்று வந்துவிடும்.

காலை நேரத்தின் இனிமையை ரசித்தபடி இருவரும் பயணித்தார்கள். தாங்கள் பேசுவதைவிட, மலையின் சின்னஞ்சிறு அசைவுகளைப் புரிந்துகொள்வதில் இருவருக்குமே ஆர்வம் இருந்ததில் பயணம் மௌனமாகத் தொடர்ந்தது.

இரண்டாயிரத்து எண்ணூறு அடி உயரத்தில் இருந்த தேக்கடியில் இருந்துகொள்வதுதான் இப்போதைக்கு வசதியென்று பென்னி முடிவு செய்திருந்தார். ‘மலையடிவாரத்தில் இருந்து நேரடியாக அணை கட்டுமிடத்திற்குப் பொருள்களைக் கொண்டுசெல்ல முடியாது. ஏறக்குறைய மூவாயிரம் அடி உயரம் அணை கட்டுமிடம். பொருள்களைக் கொண்டுசெல்ல ஜல்லிப் பாதையொன்று போட வேண்டும். ஏற்ற இறக்கங்கள் கொண்ட குன்றுகளிலும் பள்ளத்தாக்கிலும் சுமையேற்றிச் செல்ல நூற்றுக்கணக்கான மாட்டு வண்டிகள் தேவை. சுண்ணாம்பு, சுர்க்கி பொதிகளை ஏற்றிச் செல்ல கழுதைகள் வேண்டும். மூணாறு பக்கமுள்ள முதுவான்களிடம் கழுதைகள் இருப்பதாகச் சொல்கிறார்கள். கூலி பேசி நிர்ணயிக்க வேண்டும். மாட்டு வண்டியிலும் கழுதை மேலும் ஏற்றி எவ்வளவு பொருள்களைக் கொண்டுசெல்ல முடியும் என்பது ஐயமாக இருக்கிறது. இயந்திரங்களாலான பாதையோ, தேக்கடி வழியாகச் செல்லும் முள்ளிய பஞ்சன் நதியில் படகுப் பாதையோ உருவாக்கினால் மட்டுமே குறைந்த செலவில் அதிக சுமையுள்ள பொருள்களை மேலே கொண்டுசெல்ல முடியும். வேலைகள் ஒவ்வொன்றாக நினைவுக்கு வர, நினைவுகளை வரிசைப்படுத்தினார் பென்னி குக்.

நீரதிகாரம் - 39 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

மேய்ச்சலுக்கு வந்திருந்த மாடுகள் அப்போதுதான் மலையேறியிருந்தன. கன்றுகள் கால்களுக்கிடையிலேயே சிக்கிக்கொண்டு ஓடின. சிக்கும் கன்றுக்கு வழிவிட்டு ஒதுங்கி ஒதுங்கி நடந்த தாய்ப் பசுவை முன்னேற விடாமல் மீண்டும் மறித்தது கன்று. கன்றின் நெற்றியில் நாவினால் நீவிவிட்ட பசு, கொஞ்ச நேரம் கன்றுக்காகத் தழைந்து நின்றது. வாலினைச் சுழற்றி முன்னே பார்த்த பசு, மற்ற மாடுகள் மலை ஏறிவிட்டதையறிந்து முன்னேறப் பார்த்தது. மீண்டும் ஓடிவந்த கன்று, தாயின் மடியை முட்டியது. சட்டென்று திரும்பிய பசு, கன்றை முட்டுவதுபோல் பொய்க் கோபம் காட்டி, அதைத் தூர விரட்டிவிட்டு மேலே ஓடியது. தாயைப் பின்தொடர்ந்து கன்றும் ஓடியது.

மலைமேல் மாடுகளை மேய்ச்சலுக்கு விடுபவர்கள் பிரிட்டிஷ் சர்க்காரிடம் முன்பணம் கட்டி ரசீது வாங்கியிருக்க வேண்டும். எத்தனை மாடுகள் மலை மேல் மேய்ச்சலுக்குப் போகிறது? மேய்ப்பவர்கள் யார்? வருடா வருடம் மேய்ச்சல் உரிமையைப் புதுப்பித்திருக்கிறார்களா என்பதையெல்லாம் மேல்மலையின் ஓவர்சீயர் கண்காணிப்பார். என்றாவது ஒருநாள் நேரில் அவர் கண்ணில் பட்டுவிட்டால் போதும், சந்தேகம் தோய்ந்த கேள்விகளால் துளைத்துவிடுவார். ஒரு கேள்விக்கும் பதில் சொல்லாமல் அமைதியாக நின்றால் மாட்டுக்காரர்கள் தப்பித்தார்கள். இளந்தாரிகள் ஏதேனும் பதில் சொன்னால் தொலைந்தார்கள். வனத்தில் காணாமல்போயிருக்கிற மரங்களுக்கெல்லாம் ஓவர்சியர் அவர்களிடம் கணக்கு கேட்க ஆரம்பித்துவிடுவார்.

மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டு, வெற்றுடம்பில் மேல்மலையின் குளிர்காற்று தழுவப் பாறையொன்றில் படுத்திருந்த மொக்கை மாயத்தேவன், குதிரையின் குளம்பொலி கேட்டுத் திரும்பிப் பார்த்தார். இரண்டு குதிரைகளில் இரண்டு வெள்ளைக்காரத் துரைகள் வருவதைப் பார்த்து அலறிப் புடைத்து எழுந்து நின்றார்.

பென்னியும் மெக்கன்சியும் அவரருகில் வந்தார்கள். முதுகு வளைந்து, வணங்கி நின்றவரைப் பார்த்து, பென்னி குதிரையின் கடிவாளத்தை இழுத்தார். குதிரை கொஞ்சம் ஓடி நின்றது.

“வைரவனாறு போகணும். கூட வர்றீங்களா?” என்றார் பென்னி. மெட்ராஸ் பிரசிடென்சிக்கு வந்த புதிதிலேயே, பென்னி தமிழ் கற்றுக் கொண்டார். ஆறு மாதங்கள் முறையாகத் தமிழ் படித்தார். பென்னியால் எளிமையான தமிழ் பேச முடியும்.

“மாடுகளப் பத்தி விட்டுட்டனே, எல்லாம் மலைமேல போயிடுச்சே துரை..?” என்றார் தயக்கமான குரலில்.

“இடத்தைக் காட்டிட்டு நீங்க வந்துடுங்க...” என்று பென்னி சொன்னதும், மகிழ்ச்சியாக எழுந்தார்.

எழுந்திருக்கும்போது இடுப்புத் துண்டில் சுருட்டி வைத்திருந்த சுருட்டு கீழே விழுந்தது. பாதி புகைக்கப்பட்டு, நெருப்பு அவித்து வைக்கப்பட்டிருந்த சுருட்டு. சுருட்டைப் பார்த்தவுடன் மெக்கன்சியின் முகம் மலர்ந்தது.

“பென்னி, மை பேவரிட்...” என்றவர், வேறு சுருட்டு இருக்கிறதா என்று கேட்கச் சொன்னார். மெக்கன்சிக்குத் தமிழைப் புரிந்துகொள்ளும் அளவு, பேசுவதற்கு வராது. மெட்ராஸ் பிரசிடென்சி முழுக்க பயணிக்கும்போது ஒவ்வொரு பகுதியிலும் பேசும் மக்களின் உதட்டசைவைக் கவனிப்பார். ஒரு சொல்லுக்கு எத்தனைவிதமான உதட்டுச் சுழிப்புகள்? புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுவார் மெக்கன்சி. திருநெல்வேலிக்காரர்கள் ஒலியளவை நீட்டிப்பதில் மிகக் குழம்பும். கோயம்புத்தூர்க்காரர்களின் உச்சரிப்பு நீட்டி முழக்கி இருந்தாலும், என்ன சொல்கிறார்கள் என்று உதட்டசைவில் புரிந்துகொள்ள முடியாது. மெட்ராஸ் பிரசிடென்சியின் தென்கோடிப் பகுதிகளில் தமிழ் உச்சரிப்பு முற்றிலும் வேறு. மதுரா தொடங்கி, மேற்கு நோக்கிச் செல்லச் செல்லத் தெலுங்கின் கலப்பு அதிகமிருந்தது. மதுராவிலேயே 14 சதவிகிதம் தெலுங்கு பேசும் மக்களிருப்பதை இரண்டாண்டுக்கு முன் எடுத்த கணக்கெடுப்பில் அறிந்திருந்தார் மெக்கன்சி.

“உங்க பேரென்ன?” பென்னி கேட்டார்.

“மொக்கை மாயன் தொரைங்களே...”

“சுருட்டு ஏது? எங்க வாங்குனீங்க?”

“சுருட்டு வாங்கிற அளவுக்கு ஐவேசு (செல்வாக்கு) இல்ல தொரை... உங்கள மாதிரிதான் ஒரு தொரைமாரு மாடு பழக்கணும்னு (பெருக்க வைக்கணும்) சொல்லி ஓடப்பட்டி மந்தைக்கு வந்தாங்க. அன்னிக்கு நான் ஒரு கவுண்டன்கிட்ட ஜோடி மாடு பிடிக்க ஓடப்பட்டிக்குப் போயிருந்தேன். கூட்டம் முடிஞ்சு எல்லாம் கலஞ்சிபோன பெறவு, மந்தையில கெடந்துச்சி இந்தச் சுருட்டு. மண்ணு மூடியிருந்ததுல பயலுவ எவனும் பாக்கலை. இல்லைனா எடுத்து ஊதித் தள்ளியிருப்பானுங்க. நான் பொன்னா மணியா வச்சிருக்கேன் துரை. பாருங்க, ஒரே இழுப்புதான், இழுத்துட்டு அமத்தி வச்சிடுவேன். மேக்காட்டுக்கு வந்தாத்தான் வெளிய எடுக்கிறது. ஊர்லன்னா என் சங்கைப் புடிச்சிப் போட்டுட்டுக்கூட சுருட்டைக் களவாண்டு போறதுக்கு ஆளுக இருக்கு.”

பென்னி, மாயனிடமிருந்த சுருட்டை வாங்கி, மெக்கன்சியிடம் நீட்டினார். மெக்கன்சி கண்கள் செருக, சுருட்டை முகர்ந்து பார்த்தார். தனது சொத்தே பறிபோனதுபோல் துக்கம் பெருக நின்றார் மாயன்.

“சுருட்டுக்கு இந்த ஊர்ல அவ்வளவு டிமாண்டா?”

“துண்டு பீடிக்கே ஆளாப் பறக்கிற ஊர்ல சுருட்டு ராஜ போதையாச்சே தொரை...” சொல்லிக்கொண்டே மறக்காமல் சுருட்டுத் துண்டை பென்னியிடமிருந்து வாங்கி மடியில் கட்டிக்கொண்டார் மொக்கை மாயன்.

நீரதிகாரம் - 39 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“நடந்துடுவீங்களா? குதிரை மேல ஏறிக்கிறீங்களா?”

“அட, நீங்க வேற சாமி... குதிர என்ன குதிர... காட்டையே அளக்கிற காலாச்சே. நாலெட்டு வச்சா போதும்... வாங்க.”

“நல்லவேளை, இந்தப் பெரியவர் குதிரன்னு சொல்றாரு. மதுரக்காரங்ககிட்ட பேசினா குருதன்னு தான் சொல்வாங்க. ஏன் மதுரைன்னு அவங்க ஊர் பேரையே ஒழுங்கா சொல்ல மாட்டாங்க. மருதைன்னு சொல்வாங்க” என்று சொல்லிச் சிரித்தார் பென்னி.

“மருதைன்னுதான் ஆதியில பேர் சாமி. மருத மரம் நெறைய இருந்துச்சாம். அதான் பேர். தாய் தகப்பன் பேரைத் தப்பாச் சொல்ற பிள்ளை எந்த ஊர்ல இருக்கும் சாமி? மருத எங்க தாய் மீனாட்சி ஆளுற மண்ணாச்சே. மருத அரசியாச்சே அவ. வைய ஆத்துக்கு அந்தப் பக்கம் அவ அண்ணன் அழகமலையான், இந்தப் பக்கம் தங்கச்சி மீனாட்சி.” மதுரை இருக்கும் கிழக்குத் திசை நோக்கிக் கும்பிட்டார் மொக்கை மாயன்.

பென்னியும் மெக்கன்சியும் குதிரையில் செல்ல, மொக்கை மாயன் மலையின் குறுக்குப் பாதையில் கால்கள் பதிவதே தெரியாமல் விரைந்து நடந்தார். மலைச் சரிவில் நடந்துகொண்டிருந்தவர், நின்று இருவரையும் பார்த்தார்.

“சாமி, நீங்க யாருன்னே விவரம் கேட்கலையே? வெள்ளைக்கார தொரைங்கன்ன உடனே எனக்கு நடுங்கிப்போச்சு. சுருட்டுப் பத்திப் பேச்சு வந்ததுல எல்லா பயமும் போயிடுச்சு.”

“சுருட்டு எங்க வாங்கலாம்னு சொன்னீங்கன்னா நாங்க யாருன்னு சொல்லுவோம்” என்றார் மெக்கன்சி.

மெக்கன்சி சொன்னதை பென்னி தமிழில் சொன்னவுடன், “பொகையில இங்க எங்க தொரை இருக்கு? எல்லாமே மருதையிலதான். ஆனா அங்க இருந்து அப்படியே சீராப்பள்ளிக்குப் போயிடுமாம். அங்க இருந்து பொகையில கப்பல்லகூட போகுதாமே? வெள்ளைக்கார துரைங்க துறையூர் சுருட்டு வேணும்னு கேட்டு வாங்கிப் புகைக்கிறாங்களாம்” என்றார் மொக்கை மாயன்.

“உள்ளூர்ல இல்லாம இருக்காது... உண்மையைச் சொல்லு மாயன்.”

“கவுண்டமார் வீட்ல யார்னா வச்சிருப்பாங்க. கேட்டுப் பாக்கிறேன். ஆமா, நீங்க யாருன்னு சொல்லுங்க சாமிகளா..?”

“இவர்தான் எங்க பெரிய துரை...” பென்னியைக் காட்டிச் சிரித்தார் மெக்கன்சி.

“என்னது, பெரிய தொரையா?”

“ஆமாம், பெரியாறு ஆத்துத் தண்ணீரை உங்க ஊருக்குக் கொண்டு வரப்போறவர்.”

மெக்கன்சி சொல்லி முடிக்கும் முன்பாக, “அட என் சாமி...” என்று நின்ற இடத்திலேயே கீழ் வீழ்ந்து பாதாதிகேசம் தரையில் பதிய பென்னியை வணங்கினார் மொக்கை மாயன்.

“இதென்ன மாயன்... எழுந்திருங்க...” பென்னி பதறினார்.

இரு கைகளையும் கும்பிட்டபடியே எழுந்து நின்ற மொக்கை மாயன், “சாமி, அந்தக் கம்மாக்கர கருப்பன்தான் உங்களை அனுப்பியிருக்கான். கருப்பனுக்குத் தெரியும், ஜனங்களுக்கு அனுகூலமான காரியம் எது, அதுக்கு யாரை அனுப்பி வைக்கணும்னு. அசகாய ஜோலி பாக்கணும்னு கருப்பன் உங்களை அனுப்பியிருக்கான் சாமி. என்ன செய்யணும்னு சொல்லுங்க. என் பையன் பேயத் தேவன் இருக்கான். அவன்கூட ஊர் இளந்தாரி பசங்க எல்லாரும் இருக்காங்க. அவன்தான் ஊர்ப் பஞ்சாயத்து. எல்லாரும் அவனுக்குக் கட்டுப்பட்டவங்க. சாமிக்கு வேண்டியதைச் செஞ்சு தந்துடுறோம். பெரிய ஜோலி சாமி. ஆட்டும் (ஆகட்டும்) சாமி. காரியம் சுபமா ஆட்டும்.” மொக்கை மாயனின் குரல் நெகிழ்ந்தது.

“வைரவனாறு கால்வாயும் அணைக்கட்டும் பார்க்கணும் மாயன்.”

“ஆட்டும் சாமி. ஊர்ல மூணு பச்ச குருத்துங்க காட்டுக்குள்ள அவிஞ்சிபோச்சி. பொதையல் தேடிப் போனதுங்க. சாமி குத்தமாப் போச்சோ என்னமோ? எல்லாப் பயலுவளும் வெம்பிக் கெடக்குதுங்க. அதான் கொஞ்சம் ரோசனை.”

“நானும் கேள்விப்பட்டேன் மாயன். குழந்தைங்களை எதுக்குக் காட்டுக்குள்ள கூட்டிக்கிட்டுப் போனாங்க?” பென்னி.

“கூறு இருந்தா ஏன் இந்தப் பொசகெட்ட கும்பலு வக்கத்துக் கெடக்கப்போது? எல்லாம் ஊரப் புடிச்ச கிரணம் தொர...” மொக்கை மாயனுக்குள் அமுங்கியிருந்த துக்கம் பொங்கியது.

“யானை குழந்தைகளை அடிக்கிறவரை யாரும் பார்க்கலையா?”

“ஆன மனுஷங்கள அடிக்கணும்னா வரும் தொர? அஞ்சாறு பேரு கூட்டமா நின்னாலே ஆனைக ஒதுங்கிப் போயிடும். ஆன மனுஷ ஜாதிய அடிச்சிக் கொல்லணும்னு நெனச்சிதுன்னா காட்டுக்குள்ள போற ஒரு உயிரு மிஞ்சுமா தொர? ஆன சாமி அம்சம் துரை. சாமி விஸ்வரூபம் எடுத்து நின்னா எம்மாம் பெருசு இருக்குமோ அப்படி நிக்கும். ஆன அடிக்க வேணா, அதோட தும்பிக்கையால லேசா தட்டிட்டுப் போனாப் போதும், இளந்தாரிகளே நெஞ்செலும்பு நொறுங்கிச் செத்துப்போவானுங்க. அப்படித்தான் ஒருத்தன் தெனாவட்டா குட்டியோட போய்க்கிட்டு இருந்த ஆனகிட்ட வெளையாடியிருக்கான். ஆனயே பெரும் பலவான். நம்ம பத்தம்பது ஆள் நின்னாலும் ஆன பலத்துகிட்ட ஒண்ணும் செய்ய முடியாது. குட்டி போட்ட ஆனைக்குப் பத்துநூறு ஆள் பலம் சேந்துக்கும். குட்டிய காப்பாத்தணுமே? இவென் மண்டைப் புழு உறுத்திப்போய் குட்டிகிட்ட வெளையாடியிருக்கான். போற போக்குல நொட்டாங்காலால அவன இடறிவிட்டுட்டுப் போயிடுச்சி. தடுமாறிக் கீழ உக்காந்தவன் உக்காந்தமேனிக்கு உசுரு விட்டுட்டான். உடம்புக்கு என்னா ஊறு நடந்துச்சின்னு புரியல... தொர.”

“உங்களுக்குக் காடு பத்தி நல்லாத் தெரியுமா மாயன்?” பென்னி கேட்டார்.

“மேக்காடு தெரியாம இந்த மலைக்குக் கீழ கெடக்க முடியுமா சாமி? விடிஞ்சா முழிக்கிறதும் பொழுது பட்டா கண்ண மூடுறதும் மலையைப் பாத்துத்தானே? ஆனா மேக்காடு பூராவும் தெரியும்னு சொல்லிடவும் காணாது. கடல நான் என் ஜென்மத்துல பாத்தது கெடையாது. பஞ்சம் பொழைக்கப் போயிட்டுப் போன வருசம் சிலோன்ல இருந்து திரும்பி வந்த எம் பங்காளி சொன்னான், மாசக்கணக்கானாலும் ஒரு கடலைக் கடக்க முடியாதாமே? அந்தக் கடலை எழுப்பி ஒக்கார வச்சா எப்படியோ அப்படித்தான் இந்த மேக்காடு. எத்தினி மாசம்னாலும் உள்ள கெடக்கலாம்.”

“யானைக கோவம் வந்தா இப்படித்தான் மனுஷங்களை அடிச்சிப் போட்டுடுமா மாயன்?” மெக்கன்சியின் குரலில் அச்சம் தெரிந்தது.

“அட என்னா சாமி நீங்க... ஆன மனுஷ ஜாதியை அடிக்காதுன்னு சொல்றேனே... ஒரண்ட இழுத்தா விடாது. ராஜ பொறப்பு சாமி அது. காட்டுக்குள்ள ஆன நடந்து போறதையும் வாறதையும் பாக்கணுமே... அவ்ளோ பெரிய மலைக்காட்டை ஆனைதான் கம்பீரமா நெறக்க வைக்குது. ஆன இல்லைனா காடு வவுத்தால போனது மாதிரி சூம்பிக் கெடக்கும். ஆன லெட்சுமிகடாட்சம் சாமி. ரொம்பச் சாது. சின்னக் கங்கு கண்ணுல பட்டாப்போதும், அந்தப் பக்கமே வராது. பச்சைப் புள்ள.”

“பென்னி, யானையைப் பச்சைப் புள்ளைன்னு சொல்ற இந்த வயதான ஆள் ரொம்ப ஆபத்தானவர். கிளம்பலாம்.”

“நோ மெக்கன்சி. இவங்க அனுபவத்தில் இருந்து பேசுறாங்க.”

“மாயன், இந்தக் காட்டுல அணை கட்டும்போது யானையோட தொந்தரவுதான் அதிகமா இருக்கும்னு சொல்றாங்களே?”

“ஆன வழியில நாம போனாலும் அமைதியாப் போனா அதுவும் அமைதியாப் போயிடும் சாமி. ரெண்டு ஆனைக கிட்ட நாம ஜாக்கிரதையா இருக்கணும். தாயைப் பிரிஞ்சி, இன்னொரு ஆனையோட சேர்ற அவாவோட ஆன அங்க இங்கன்னு ஓடும். ஆனைக்கு அது மதக் காலம். மதக் காலத்துல இணைய தேடுற வேகத்துல ரொம்ப மூர்க்கமா இருக்கும். மூர்க்கமாயிடுச்சின்னா ஒரு ஆளை கிட்ட சேக்காது. பத்து நாள், இருபது நாளைக்குக்கூட ஊ ஆன்னு பிளிறல குடுக்கும். எக்குத் தப்பான அந்த நேரத்துல கிட்ட நெருங்குனா, இடறிவிட்டுட்டுப் போயிக்கிட்டே இருக்கும் சாமி. துரைகளுக்கு எல்லாந் தெரியும். ஒண்ணே ஒண்ணு கேட்கிறேன் சாமி. எந்த ஜீவராசியாவது மனுஷ ராசியைக் கொல்லப்போறேன், குத்தப்போறேன்னு தானா வருமா தொர? இவன் கொழுத்துப்போய் எதுனா செஞ்சா அது பதிலுக்குச் செய்யும்.”

நீரதிகாரம் - 39 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“சரிதான் மாயன்” என்று சொன்ன பென்னிக்குக் கொஞ்சம் நிம்மதியாக இருந்தாலும், யானைகளைப் பற்றிய யோசனை அச்சத்தைத் தந்தது.

“குழந்தைகள் எப்படி யானைகிட்டே சிக்கினாங்க மாயன்?”

“ராத்திரி முச்சூடும் இருட்டுல புழங்குற பசங்கதானே இவனுங்க? போதைப் புல்லைக் கொளுத்திவிட்டுட்டு வெளிச்சத்தைப் பாத்ததும் இவனுங்களுக்கு எப்டி இருந்ததோ? ஆனைக்கு மதக் காலம் வந்தா ஓடுற மாதிரி இவனுக ஓடியாடி காட்டுக்குள்ள என்ன பண்ணானுங்களோ? ஆன தீயைப் பாத்து பயந்து ஓடும்போது குழந்தைக கால்ல சிக்கியிருக்கும். பச்சைப் புள்ளைங்க ஆயுள நெத்தியில எழுதுறதில்லயே பிரம்ம மகாராசன்? மண்ட முத்தினாத்தானே ஆயுளயே எழுதுவான்? ஆன பேர்ல பழியப் போட்டுட்டு அனுப்புன மாதிரியே கூப்பிட்டுக்கிட்டான்.”

“பென்னி... சுருட்டை மறந்துடாதே. வெயில் ஏறிடுச்சு. போகலாம்.”

“மாயன், வைரவனாறு கால்வாய்க்குக் கூட்டிக்கிட்டுப் போங்க.”

“போலாம் சாமி, வாங்க...” என்று சொல்லிய மொக்கை மாயத் தேவன் மலைச் சரிவுகளில் ஓடை நீரைப்போல் நளினமாகப் பாய்ந்திறங்கினார்.

“நாங்க பாத்துட்டு வர்றதுக்குள்ள ஊர் பெரிய மனுஷங்களைப் பஞ்சாயத்து நடக்கிற இடத்தில் உக்காரச் சொல்லுங்க. பெரியகுளம் தாலுக்கா ஆபீசில் இருந்து தாசில்தார் வந்துடுவார்” என்ற பென்னி, மொக்க மாயனைத் தொடர்ந்தார்.

கூடலூரும் கம்பமும் திருவிதாங்கூரின் எல்லையை ஒட்டியிருப்பதில், இரு தேசங்களின் பலவீனங்களும் ஒன்றுதிரண்ட பகுதியானது. திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பேரெழில் தோற்றம் கம்பத்திற்கு. மதுரையின் வறட்சியும் பஞ்சமும். மயக்கும் அழகு கொண்ட பேரெழில் பெண்ணொருத்தி பசித்திருந்தால் எப்படி இருப்பாள் என்ற கற்பனைக்கு உரு கொடுத்தால், கம்பம் அவள் ரூபம் கொண்டு நிற்கும். சுற்றிலும் மலை. மலைக்கு மேற்கில் பெருகும் வெள்ளம். பெருகும் வெள்ளத்தின் ஈரத்தினைக் கம்பம் மக்கள் சுவாசிப்பார்கள். கால்கள் வெப்பத்தில் காந்த, நாசியோ மழையில் குளிர்ந்த மண்மணம் உணரும். மேல்மலையில் மழையென்றால், கம்பம் பள்ளத்தாக்கின் மலைத் தொடரில் ஆங்காங்கே வெள்ளியென அருவி கீழிறங்கும். மழை நின்றவுடன் அருவியின் தடம் மட்டும் மலையின் வெண்தழும்பாய் உறைந்திருக்கும்.

வைரவனாறு அணைக்கட்டில் நின்றார்கள் பென்னியும் மெக்கன்சியும். அணையில் நீர் திறந்து விட்டிருந்தார்கள். தடையிலிருந்து வெளியேறும் நீரின் சத்தம் காதடைத்தது. பெரியாற்றின் பிரவாகத்தையும் அதன் சத்தத்தையும் ஒப்பிடும்போது, வைரவனாறு பிறந்த குட்டி யானையை ஒத்தது. நூறு களிறுகள் ஒத்த பெரியாற்றின் சத்தம் காதில் ஒலிக்கும் பிரமையில் தலையை உதறிக்கொண்டார் பென்னி. கண்முன்னால் விரிந்து கிடந்த நீரைப் பார்த்தார். நீரைப்போல் நன்மை பயப்பதும், நீரைப்போல் அழிவை உண்டாக்குவதுமான சக்தி பூமியில் வேறொன்றுமில்லை. அணை கட்டும் இன்ஜினீயர்களுக்கு நீர்தான் வேதப் புத்தகம். வாழ்நாள் முழுக்க தினம் தினம் படிக்கப் படிக்கப் புதிதாய்த் தெரியும் தெய்வத்தின் வசனங்கள். பென்னி மார்பிலும் நெற்றியிலும் சிலுவையிட்டுக் கொண்டார்.

கூடலூரின் அழகியபெருமாள் கோயிலை ஒட்டிய அரச மரத்தடி. நூறு பேர் உட்கார்ந்தாலும் நிரம்பாத மேடை. அரச மரத்தின் இலைகள் மெல்ல அசைந்தன. ஆனாலும் வெம்மை தெரிந்தது காற்றில்.

பென்னியும் மெக்கன்சியும் அரச மரத்தடி நோக்கி வருகையில் தாசில்தார், டெபுடி தாசில்தார், வைரவனாற்றின் கால்வாய் மணியம், நீர்க்கட்டி, நீர்ப்பாய்ச்சி உள்ளிட்டவர்களோடு உள்ளூர் மக்களும் தயாராய்க் காத்திருந்தனர். அதிகாரிகள் வந்த வண்டி மாடுகளும் கோச் வண்டியின் குதிரைகளும் மர நிழலில் கட்டப்பட்டிருந்தன. ஓடி வந்த களைப்பை அசை போட்டு ஆற்றிக்கொண்டிருந்தன காளைகள். குத்தங்காலிட்டு உட்கார்ந்திருந்த வண்டியோட்டிகள் பென்னியும் மெக்கன்சியும் வருவதைப் பார்த்துப் பதறி எழுந்து நின்றனர்.

மேடையில் உட்கார்ந்திருந்த தாசில்தார் பொன்னம்பல நாயுடு எழுந்து நின்று வணங்கினார். அவருக்கு அருகில் டெபுடி தாசில்தார் கணேசன் பிள்ளை, கிராம முன்சீப் ரங்கநாதன் முதலியார், கணக்குப் பிள்ளை, ஊர் மடையன், நீர்க்கட்டி உள்ளிட்ட கிராம சேவகர்கள் நின்று வணங்கினர்.

பென்னியும் மெக்கன்சியும் குதிரையில் இருந்து இறங்கினர். மெக்கன்சி குதிரையின் சேணத்தில் கால் வைக்காமல், உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்து குதித்து இறங்கியதைக் கண் இமைக்காமல் பார்த்தனர் கிராமத்து மக்கள். பென்னி தலையில் இருந்த தொப்பியைக் கழற்றினார். வியர்வையைக் கைக்குட்டையினால் துடைத்துவிட்டு, பதில் வணக்கம் சொல்லியபடி, மரத்தடிக்குச் சென்று அமர்ந்தார். மொக்கை மாயன் ஓரமாகக் கை குவித்தபடி நின்றுகொண்டிருந்தார். பேயத் தேவன், சந்தனத் தேவன் உள்ளிட்ட இளந்தாரிகள் ஒன்றுதிரண்டு நின்று வெள்ளைக்காரர்கள் இருவரையும் பார்த்தபடி நின்றனர்.

உள்ளூர் மக்களுக்கு வெள்ளைக்கார அதிகாரிகளைப் பார்த்தாலே பயம் எழும். அவர்கள் ஊருக்குள் வந்தாலே நல்லது நடக்காது என்ற அச்சம். மேலூர், ஆனையூர் கள்ளர்கள் பிரிட்டிஷ்காரர்களுக்குப் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதில், கள்ளர்களை ஒடுக்குவதற்குப் பல தந்திரங்களைச் செய்துகொண்டிருந்தது பிரிட்டிஷ் சர்க்கார். போலீசில் இருக்கும் உள்ளூர் ஆள்களையும் சந்தேகத்தோடுதான் பார்ப்பார்கள் கள்ளர்கள். போலீசோ, வெள்ளைக்கார அதிகாரிகளோ ஊருக்குள் வந்தாலே, அருகில் வரத் தயங்குவார்கள். என்ன குற்றம் சுமத்தி யாரை ஜெயிலில் பிடித்துப் போடுவார்களோ என்ற அச்சம் அதிகரித்திருந்த காலம்.

மொக்கை மாயத் தேவன் ஊருக்குள் வந்து, பெரியாறு அணை கட்டப்போகிற துரைகள் கூட்டம் போட வந்திருக்கிறார்கள் என்று சொல்லியும் சட்டென்று யாரும் கோயில் பஞ்சாயத்து மேடைக்கு வரவில்லை. பெரியகுளம் தாசில்தார் வருவதாக ஊர் நீர்க்கட்டியும் மடையனும் தெருத் தெருவாக வந்து சொன்ன பிறகுதான் மக்கள் பஞ்சாயத்து மேடைக்கு வந்தார்கள்.

“வணக்கம். என்னுடைய பெயர் பென்னி குக். நான் மெட்ராஸ் பிரசிடென்சியில் ராயல் இன்ஜினீயர். ராயல் இன்ஜினீயர்னா பிரிட்டிஷ் ராணுவத்தில் இருக்கிறவங்க, இன்ஜினீயராவும் இருப்பாங்க. அவங்களுக்குத்தான் அந்தப் பேர். இவர் மெக்கன்சி. எக்ஸிகியூட்டிவ் இன்ஜினீயர். மேல்மலையில் பெரியாறு நதியில் அணை கட்ட திருவிதாங்கூர் சமஸ்தானத்துடன் ஒப்பந்தம் கையெழுத்தாயிடுச்சி. லண்டனில் இருக்கிற செக்ரட்டரி பணம் ஒதுக்கணும். இன்னும் ஆறேழு மாதத்தில் பணம் வந்துடும். பணம் வர்றதுக்கு முன்னாடி செய்ய வேண்டிய வேலைங்க நிறைய இருக்கு. மேற்கு நோக்கிப் போற பெரியாற்றுத் தண்ணியில, கொஞ்சம் தண்ணிய நதிக்குக் குறுக்க அணை கட்டித் தடுத்து, ஒரு சுரங்கம் வெட்டி, கிழக்குப் பக்கமாத் திருப்பிவிடப் போறோம். கிழக்குப் பக்கமா திருப்புற தண்ணி, மதுரா டிஸ்ட்ரிக்ட்டுக்குப் போகப்போகுது. மேலூர் வரைக்கும் பெரியாறு தண்ணி போகப்போகுது. மலையில் இருந்து இறங்கப்போற பெரியாற்றுத் தண்ணி, ஒரு தேசத்தை விட்டு, இன்னொரு தேசத்துக்கு வரப் போற தண்ணி, முதல்ல வரப்போற இடம் எது தெரியுமா?”

பென்னி பேசுவதில் பாதி புரிந்தும், பாதி புரியாமலும் கவனித்துக்கொண்டிருந்த மக்களுக்கு பதில் சொல்லத் தெரியவில்லை. உடனிருந்த தாசில்தாரும் மற்றவர்களும் தங்களைக் கேட்டுவிடப்போகிறாரோ என்று பயந்து, மரியாதை காட்டத் தலைகுனிந்திருக்கும் பாவனையில் இன்னும் தலைகுனிந்து கொண்டனர்.

“வைரவனாற்றிலும் சுருளியாற்றிலும் பெரியாறு சேர்ந்து முதல்ல உங்க ஊருக்குத்தான் ஓடி வரப்போது.”

பென்னி நிறுத்தியவுடன், கூடியிருந்தவர்கள் முகத்தில் யோசனை. நல்லதா, பெருமைக்குரியதா என்று அவர்கள் முடிவுக்கு வரும்முன், தாசில்தார் அசட்டுச் சிரிப்பு சிரித்தபடி எழுந்து நின்று வணங்கினார். நற்செய்திதான் என்று ஜனங்கள் புரிந்துகொண்டனர்.

குதிரைகளின் கனைப்புச் சத்தமும், வண்டிச் சகடைகள் உருளும் ஒலியும் அருகில் கேட்க கூட்டத்தின் கவனம் திரும்பியது.

பேச்சைத் தொடர நினைத்த பென்னியிடம் மெக்கன்சி, “நேற்று நம்மைச் சந்திக்க வந்து காத்திருந்தார்களே ஜமீன்தார்களின் ஏஜெண்டுகள், அவர்கள்தான் பென்னி. சந்திக்க முடியாது என்று நீ விடாப்பிடியாக அனுப்பி வைத்ததால் இன்று பெரும் கூட்டத்தைத் திரட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள்” என்றார்.

ஒவ்வொரு கோச் வண்டி முன்னாலும் நான்கைந்து குடியானவர்கள் ஓடிவந்து நிற்க, கோச் வண்டிகளும் சாரட்டும் குதிரை வண்டிகளுமாக ஐம்பது பேருக்கு மேல் கூட்டம் நடக்கும் இடத்தை நோக்கி வந்தார்கள்.

முரட்டுத்தனமாகச் சத்தமெழுப்பி வந்து நின்ற வண்டிகளைப் பார்த்த ஜனங்கள் மிரண்டு ஒதுங்கினர்.“அணையாவது... மண்ணாவது... எல்லா முட்டுக்கட்டையும் சாரட்டு கட்டிக்கிட்டு வந்து இறங்குது. போய்ப் பொழைப்ப பாருங்க...” சொல்லிக்கொண்டே சந்தனத் தேவன் கூட்டத்திலிருந்து வெளியேறினான்.

பென்னியின் பார்வையில் இருந்த வெறுமையைத் தணிக்க மேல்மலையின் சிறு முகிலொன்று நீர்த் திவலைகளை விசிறியடித்தது.

- பாயும்...