மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 40 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

உத்தமபுரம் ஜமீன் பதினொரு சுழியுள்ள காளையைத்தான் தன் வண்டிக்கு வாங்குவார். ‘லெச்சத்துல ஒன்னுதான் ராஜ பொறப்பாப் பொறக்கும்

நீரதிகாரம் - 40 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

சகடைகள் உருளும் நறநற ஒலியினைப் பென்னியின் காதுகள் உணர்ந்தாலும், மூளை பொருட்படுத்தவில்லை. மெக்கன்சி கூப்பிட்டுச் சொல்லிய பிறகும் வந்திருந்த ஏஜெண்டுகளை வரவேற்கும் முகமாக ஒன்றும் சொல்லவில்லை.

வெள்ளைக்காரர்கள் எல்லாரையும் அதிகாரிகளாகப் பார்க்கும் மனநிலை, கடந்த இருபதாண்டுகளாக உள்ளூர் மக்களிடம் குறைந்திருந்தது. தத்தம் ஊரில் இருப்பதைப் போலவே வெள்ளைக்காரர்களிடமும் எஜமான், எஜமானுக்குக் கீழ் சின்ன எஜமான், அடுத்து வேலைக்காரர்கள் இருக்கிறார்கள், எல்லா வெள்ளைக்காரர்களும் எஜமான் அல்ல என்ற புரிதலை உள்ளூர் மக்கள் வளர்த்துக்கொண்டிருந்தார்கள். ஜமீன்களுக்குள்ளும் அந்தப் புரிதல் வேரோடி இருந்ததில், பென்னி குக் சாதாரண இன்ஜினீயர்தான், அவர் மதுரை கலெக்டர் போலவோ, மெட்ராஸ் கவர்னர் போலவோ பெரிய எஜமான் அல்ல என்ற துணிவில் பென்னியின் முன்னால் அலட்சியமாக வந்திறங்கினார்கள் ஏஜெண்டுகள்.

திண்டுக்கல்லின் 24 பாளையங்களின் அங்கமான கூடலூர், கம்பம் - உத்தமபுரம், கோம்பை, தேவாரம், போடி ஜமீன்களின் ஏஜெண்டுகள் ஒன்றுகூடி வந்திறங்கியதைப் பார்த்த மக்கள் மிரண்டனர். உள்ளிருக்கிறவர் பற்றிய அச்சத்தைவிட, அவர்கள் வண்டி வந்து நிற்கும் தோரணையே பெரிதாக அச்சமூட்டும். மக்கள் கூட்டத்தை நெருங்குகிறோம் என்றவுடன் வண்டியோட்டிகள் காளைகளைச் சவுக்கினால் சுண்டி விடுவார்கள். வண்டி வந்து நின்று ஒரு நாழிகை நேரமாகும் தூசி எழுந்து அடங்க. செவலையோ காரிச்சட்டையோ பூட்டிய வில் வண்டி வருகிறது என்றாலே சுற்றுப்பட்டு கிராமங்களில் மக்கள் வழிவிட்டு, கைகூப்பி வணங்கி நிற்பார்கள்.

உத்தமபுரம் ஜமீன் வண்டிக்கு ஜபர்தஸ்து அதிகம். உத்தமபுரம் ஜமீன் தன் வில் வண்டிக்குக் கம்பம் சுற்றுவட்டாரத்தின் காளைகளைப் பூட்ட மாட்டார். வருடத்திற்கு இரண்டு ஜோடி பூரணை மாடுகளைத் திருவண்ணாமலைச் சந்தையிலிருந்து வாங்கி வருவார். வளைந்து, உயர்ந்து நிற்கும் இரண்டு கொம்புகளும் கம்பீரத்தின் உச்சம்.

உத்தமபுரம் ஜமீன் பதினொரு சுழியுள்ள காளையைத்தான் தன் வண்டிக்கு வாங்குவார். ‘லெச்சத்துல ஒன்னுதான் ராஜ பொறப்பாப் பொறக்கும். அப்படியாப்பட்ட ராஜ பொறப்புதான் என்னோட வில் வண்டிக்குப் பொருத்தம்’ என்று எல்லாரிடமும் பெருமை பேசுவார்.

ஜமீன்களின் விருந்து நேர சம்பாஷணையில் பிரிட்டிஷ் சர்க்காருக்குச் செலுத்த வேண்டிய அவரவர் பேஷ்கஷ் பாக்கியைப் பற்றிக் கவலைப்பட்டுப் பேசுவதைவிட, வில் வண்டியின் பெருமையைப் பேசுவதில்தான் முஸ்தீபாக இருப்பார்கள். ஜமீன்கள் உள்ளே காளைகளின் பெருமையைப் பேசும்போது வெளியில் காத்திருக்கும் வண்டியோட்டிகள் தங்கள் காளைகளின் பெருமைகளைப் பேசித் தீர்ப்பார்கள்.

“குழுதானில தவிடு மிதந்துச்சின்னா, என்னோட ராஜா வாயையே வைக்காது. புண்ணாக்கையும் பருத்திக்கொட்டையையும் நல்லா ஊற வச்சு அரைச்சு, புளிச்ச தண்ணியும் கழுநித் தண்ணியும் கலந்து, தவிட கண்ணுல படாம நல்லாக் கலக்கி வச்சா, ராஜா சும்மா ஜம்முனு உறிஞ்சும். சின்னப் புள்ளைக்குப் பக்குவம் பண்ணுற மாதிரி பண்ணணும். கொஞ்சங் கூடக் குறைய இருந்தாலும், குழுதானில வாயை வக்கிறதுக்கு முன்னாடியே மோப்பம் புடிச்சிடும். தலையைப் போட்டு அமுக்குனாலும் திமிறிக்கிட்டு நம்மள முட்டித்தள்ளப் பாக்கும். இல்ல, ஒரு சொழட்டு சொழட்டி விட்டுட்டுப் போய்க்கிட்டே இருக்கும்.”

மாட்டுத் தரகர்கள் ஜமீன் வீட்டு வாசலில் அமர்க்கையாக உட்கார்ந்திருப்பார்கள். சுற்று வட்டார மாட்டுச்சந்தைகளில் பார்த்த மாடுகளின் அழகை வர்ணிக்க வெற்றிலையைச் சுருட்டி வாயில் அதக்கி, கொஞ்சங் கொஞ்சமாகச் சவைத்து, வாயிலிருக்கும் எச்சில் எதிராள் மேல் தெறித்துவிடாமல் மோவாயை அண்ணாந்து வைத்தபடி பேசுவதில் சுகம் காண்பார்கள்.

அபூர்வமான ராஜ சுழி இருந்த ஜோடி காளையைப் பார்த்து, கோம்பை ஜமீனுக்கு வாங்கிக் கொடுத்திருந்தான் வெளியூர் தரகன் ஒருத்தன். சேலத்தில் இருந்து மூன்று நாள் நடக்க வைத்து ஓட்டிக்கொண்டு வந்து காளைகளை அப்போதுதான் பங்களாவுக்கு முன்னால் கட்டிப் போட்டிருந்தான் தரகனின் வேலைக்காரன். புதிய இடத்தின் அச்சத்துடன் ஒவ்வொரு வைக்கோல் பிரியாய் எடுத்து பெயருக்குக் கடித்தபடி அமைதியின்மையை வாலின் சுழற்றலில் காட்டி நின்றிருந்த காளைகளை, அங்கு வந்த உள்ளூர் தரகன் பார்த்தான். பார்த்தவன், பார்த்த மாத்திரத்திலேயே போட்ட கூச்சலில் ஜமீன் பங்களாவுக்குள் இருந்தவர்கள் வெளியில் ஓடி வந்தார்கள்.

“என்னடா மூதேவி, அபசகுனமா கூச்சல் போடுற?” என்று தரகனை அடிக்க ஜமீன் ஓடினார்.

“எந்த அரைவேக்காட்டுத் தரகன் இந்தக் காளையை வாங்கிக் குடுத்தான் ஜமீன்தாரே?”

“ஏன், நடுமுதுகில லட்சணமா ராஜ சுழி இருக்கே? லெட்சத்துல ஒரு பொறப்புன்னு பாளையம் ஜமீன் பீத்திக்குவாரே, அந்த லெட்சத்துல ஒரு பொறப்புதான்.”

“அவென் கண்ண பொடனியில வச்சிருந்தானா? நாலு பல்லு இருக்கு. பாத்துட்டன். நல்ல பிராயம்தான். வாலையும் தூக்கிப் பாத்துட்டன். அங்கயும் சுழி இல்ல. நெத்தியில பூரான் இல்ல. அதெல்லாம் ஒரு கொறை இல்ல. இந்தா பாருங்க, ராஜ சுழி பக்கத்துலயே சின்னஞ்சிறுசா ஒரு சுழி இருக்கு பாருங்க, அது வம்சத்தையே பூண்டோட அழிச்சிடும்.”

“என்னடே சொல்ற?” ஜமீன் கோபத்தில் எகிறினார்.

“தேசத்துக்கு ஒருத்தர் இருந்தாத்தான் அவர் ராஜா. ராஜ சுழியும் ஒன்னுதான் இருக்கணும். பக்கத்துல எதுனா தொத்திக்கிட்டு வந்துச்சின்னா அது கோடாரிக் காம்பு. வம்சத்தையே அழிச்சிடும்.”

“அந்தத் தரகனை இழுத்துக்கிட்டு வாடா... மொளகாயை நல்லாக் காந்த அரைங்கடா” என்று சொல்லி, உக்கிரத்துடன் எழுந்தவர், காளையின் கயிற்றை அவிழ்த்துவிட்டார்.

“வித்தவென் கிட்டயே ஓடிடுங்க, இல்ல உங்களையும் பொலி போட்டுருவேன்” எனச் சொல்லி மாடுகளைப் பத்திவிட்டார்.

தரகனை இழுத்து வந்து, கைகால்களைக் கட்டி மரத்தோடு சேர்த்துப் பிடித்து, அரைத்த மிளகாயை மலப்புழையிலும் கண்ணிலும் அப்பினார்கள். காந்தல் தாங்காமல் கூப்பாடு போட்டு, கத்தி, அழுது, ஓய்ந்துபோன தரகனின் குரல் நடுச்சாமம் வரை தூங்குபவர்களின் அமைதியைக் கீறி இதயத்தைத் துளைத்தது.

ஜமீனுக்கு மாடு பிடித்துக் கொடுக்கும் தரகனுக்கு, கரணம் தப்பினால் மரணம்தான் நிலை.

நீரதிகாரம் - 40 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

கம்பம், கூடலூர் ஜமீன்கள் எழுபது எண்பதாண்டுகளுக்கு முன்புவரை திருவிதாங்கூரின் ஆளுகைக்குள் இருந்ததால், பிரிட்டிஷ் சர்க்காரிடம் தங்களின் பயமின்மையை அவ்வப்போது காட்டுவார்கள். திப்பு சுல்தானை எதிர்க்க, திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு உறுதுணையாக இருந்ததால் திருவிதாங்கூர் சமஸ்தானமும் கூடலூர், கம்பம் ஜமீன்களுக்கு அதிக சலுகை கொடுப்பதோடு செல்லப் பிள்ளைகளைப்போல் வைத்துக்கொள்ளும்.

பிரிட்டிஷ் சர்க்காருக்கு வரி செலுத்தி, அவர்களின் மேலாண்மையை ஏற்றுக்கொண்டது தான் திருவிதாங்கூர் என்றாலும், கூடலூர், கம்பம் ஜமீன்கள் பிரிட்டிஷ் சர்க்காருக்கு மேலானவர்களாகத் தங்களை நினைத்துக்கொள்வார்கள்.

ஜமீன்கள் நேரடியாக எந்த வழக்குகளுக்கும் பொதுவில் வந்துவிட மாட்டார்கள். பிரிட்டிஷ் சர்க்காரிடம் பேசுவதற்காக, ஜமீன்களுக்கான ஏஜெண்டுகளை வைத்திருந்தார்கள். ஜமீன்தார்கள் இல்லாத நேரத்தில் ஏஜெண்டுகள்தான் நிழல் ஜமீன்தார்கள்.

பென்னியை சாதாரணமான இன்ஜினீயர் என்றெண்ணி, தடபுடலாக வந்திறங்கினார்கள்.

மேல்மலையென்னும் இயற்கையின் பெரும் சக்தியைக் கையாளப்போகும் தனக்கு, இவர்களெல்லாம் எம்மாத்திரம் என்ற இளக்காரப் பார்வையை அவர்களின்மேல் வீசிவிட்டு, பஞ்சாயத்தில் கூடியிருந்த மக்களைப் பார்த்துப் பேச்சைத் தொடர்ந்தார் பென்னி.

நிராசையுடன் எழுந்து நடந்த சந்தனத் தேவனை, முங்கிலித் தேவன், கையிலிருந்த வேல்கம்பால் தொட்டுத் திருப்பி, ‘ஒழுங்கா ஒக்காந்திடு’ என்று மிரட்டினார். முங்கிலித் தேவனின் வேல்கம்பின் கூர்மை அறிந்த சந்தனத் தேவன் சத்தமின்றித் திரும்ப வந்து உட்கார்ந்தான்.

“அதோ தெரியிற மலை உங்க மலை. தூங்கி எழுந்தா மலைதான் உங்க கண்ணில் படும். மலையில் இருக்கிற மேய்ச்சல் காடு உங்க காடுதான். மேல்மலையும் காடுகளும் எங்களைவிட உங்களுக்குத்தான் நல்லாத் தெரியும். நீரணை கட்டி முடிக்கிற வரைக்கும் நீங்க எல்லாரும் எங்களுக்குத் துணை நிற்கணும்.”

ஜமீன் ஏஜெண்டுகளைப் பொருட்படுத்தாததோடு, பென்னியின் குரலில் இருந்த கனிவும் உறுதியும் கூட்டத்தை நெகிழச் செய்திருந்தது.

“எப்படி அணை கட்டுவது என்று எங்களுக்குத் தெரியும். ஆனா ஏன் அணை கட்டணும் என்ற உண்மையான காரணம் உங்க எல்லாருக்கும் தெரியும். ஐந்தாறு வருஷம் வரைக்கும் பஞ்சத்திலும் வறட்சியிலும் வீட்டுக்கு ஒருத்தர், இரண்டு பேர், சில குடும்பங்களில் குடும்பத்தில் இருந்த எல்லாருமே செத்துப்போயிருக்காங்க. தண்ணீர் இல்லாம மக்கள் சாகக் கூடாது. இதுதான் பிரிட்டிஷ் பேரரசியின் ஒரே நோக்கம். இந்தியா முழுக்க எல்லாப் பிரசிடென்சியிலும் நீர் வளத்தை அதிகப்படுத்தற வேலைதான் நடக்குது. உங்களுக்கே என்னைத் தெரிஞ்சிருக்குமே, நான் எத்தனையோ முறை வந்திருக்கேனே?”

“அஞ்சாறு வருஷத்துக்கு முன்ன துரையை மலை மேல பார்த்து பயந்து ஓடியாந்துட்டோம் சாமி. இப்பத்தான் ஞாவகத்துக்கு வருது” மாயன் சொன்னார்.

“யானை உங்களைப் பார்த்து பயந்து ஓடுதுன்னு சொல்றீங்க. என்னைப் பார்த்து நீங்க ஓடினீங்கன்னு சொன்னா என்ன அர்த்தம்?”

கூட்டத்தில் சிரிப்புச்சத்தம் அமுங்கலாக எழுந்தது.

“மலைமேல நீங்கதான் வேலைக்கு வரணும். உங்களுக்குத் தெரிஞ்சவங்க எல்லாரையும் வேலைக்கு வரச் சொல்லுங்க. இங்க வேலை செஞ்சா என்னா கூலி கிடைக்குமோ அதுமாதிரி மலைமேல் வேலை செஞ்சா இரண்டு பங்கு கூலி கிடைக்கும்.”

“கூட்டிக்கிட்டுப் போய் வேலை வாங்கிட்டுக் கூலி கொடுக்காமத் துரத்திவிட்டா என்ன செய்யிறது துரை?”

உரத்த குரலில் சந்தனத் தேவன் கேட்டதும், கோபத்தில் முகம் சிவந்தது பென்னிக்கு.

“சந்தனத் தேவா... வாயை விட்றாதப்பு. பெரிய துரைமாருக கிட்ட பேசுறோம்னு ஞாவத்துல வச்சுக்கோ” முங்கிலித் தேவன் சந்தனத் தேவனை எச்சரித்தார்.

“யார் அந்தப் பையன்?” பென்னியின் குரல் கோபத்தை மறைத்துக்கொண்டது.

“சந்தனத் தேவன் துரை... போலீஸா இருக்கான்.” தாசில்தார் பவ்வியமாகச் சொன்னார்.

“ஓ, கவர்ன்மென்ட் சர்வீஸ்ல இருந்துகிட்டு இப்படியொரு கேள்வியா? அவனை சஸ்பெண்ட் பண்ணச் சொல்லுங்க.” மெக்கன்ஸி எழுந்து நின்று கூச்சலிட்டார்.

“கூல் டியர் மெக். விவரம் தெரியலை. நாம் சொல்லுவோம்” பென்னி சமாதானப்படுத்தினார்.

“மேல்மலைக்கு வேலைக்குக் கூப்பிட இன்னும் நாளாகும். ஒரு வருஷம்கூட ஆகலாம். மதுரா கலெக்டருக்கு ஏற்கெனவே தேவையான உத்தரவுகளை, சீப் இன்ஜினீயர் அனுப்பியிருப்பார். வைரவனாறு கால்வாயில் இருந்து பேரணை வரைக்கும் மொத்தம் பதினைந்து நீரணைகள் இருக்கு. நாங்க அணைக்கட்டுன்னு சொல்றோம். நீங்க நீரணைன்னு சொல்றீங்க. நீங்க சொல்றதுதான் நல்லா இருக்கு. பொதுவாகவே உள்ளூர் மக்களோட வார்த்தைகளை அப்படியே எங்க அதிகாரிகள் எடுத்துக்குவாங்க. ஏன்னா அதில் நிறைய அர்த்தம் இருக்கு. அதனால் நான் நீரணைன்னே சொல்றேன். கூடலூர்ல இருந்து பேரணை வரை இருக்கிற நீரணை எல்லாமே பிரிட்டிஷ் சர்க்கார் வருவதற்கு முன்னால் இருந்த அரசர்கள் உருவாக்கிய நீரணைகள்தான். ஆனா ஏறக்குறைய எல்லா நீரணைகளுமே பழுதடைஞ்சிருக்கு. சின்னச் சின்ன மராமத்து செய்தால் நீரணைகளை முழுசாப் பயன்படுத்தலாம். இந்தப் பதினைந்து நீரணைகள்ல இருக்கிற பதினேழு கால்வாய்களோட நிலைமைதான் ரொம்ப மோசமா இருக்கு. உங்களுக்கே தெரியும், ஒவ்வொரு கோடையிலும் கால்வாயில் படிந்து நிக்கிற மணலை அள்ளாம, பாதிக் கால்வாய் மூடிக்கிடக்கு. வெள்ளத்தில் வர்ற தண்ணீயில பாதிகூட தேங்க முடியாது. இந்தப் பதினேழு கால்வாய்கள் வழியாகத்தான் சுருளியாறு, வைரவனாறு தண்ணி முழுக்க முழுக்க விவசாயத்துக்குப் போகுது. உத்தமுத்து நீரணையில இருந்தும், கோட்டூர் நீரணையில் இருந்தும் இரண்டு கால்வாய்கள் போகுது. மற்ற எல்லா நீரணைக்கும் ஒவ்வொரு கால்வாய்தான். உத்தமுத்து நீரணை கட்டி குறைந்தது ஆயிரம் வருஷம் ஆயிருக்கும். இன்னும் உறுதியா இருக்கு பாருங்க. உடனடியா ஒவ்வொரு ஊரில் இருக்கிற நீரணைகளையும், நீரணைகளில் இருந்து ஒவ்வொரு ஊருக்கு ஆற்றுத் தண்ணீர் கொண்டு போகிற கால்வாய்களையும் வாய்க்கால்களையும் சரி செய்தால் மட்டுமே நம்மால் பெரியாற்றுத் தண்ணீரைக் கொண்டுவர முடியும். ஏற்கெனவே இந்த வாய்க்கால்களில் ஓடுகிற தண்ணீர் வருஷம் முழுக்க ஓடுறதில்லை. மழை பெய்தால் வெள்ளம் ஓடும். வருஷத்தில் ஆறேழு மாதம் வறட்சிதான். ஒரு போகம்தான் பயிர் வைக்கிறீங்கன்னும் தெரியும்.”

பென்னி பேசப் பேச மக்கள் வாய்பிளந்து கேட்டார்கள்.

“துரையிடம் ஒரு சந்தேகம் கேட்கலாமா?” தாசில்தார் பயந்த குரலில் கேட்டார்.

“கேளுங்க, மிஸ்டர் தாசில்தார்.”

“ஏற்கெனவே இருக்க இந்தக் கால்வாய்ங்க வழியாத்தான் பேரியாத்துத் தண்ணி போகப்போகுதா?”

“யெஸ், முதலில் நான் பெரியாற்றுத் தண்ணீரை, வைரவனாறில் இருந்து நாற்பது, ஐம்பது மைல் நீளத்துக்குத் தனிக் கால்வாய் வழியாக நேரடியாகப் பேரணைக்குக் கொண்டுபோய், அங்கு ரெகுலேட்டர் வைத்து, அங்கிருந்து தனிக் கால்வாய் மூலம் மேலூர்க்குக் கொண்டு செல்லத்தான் யோசித்தேன். நாற்பது, ஐம்பது மைல் தூரம், பிரிட்டிஷ் சர்க்கார் புதிதாக நிலங்களை எடுத்து, கால்வாய் வெட்ட வேண்டும். மேல்மலையில் அணை கட்டுவதே பெரிய சவால். அந்தச் சவாலைச் சமாளிப்பதில்தான் என் முழுக் கவனமும் இருக்கிறது. கூடலூரில் இருந்து மேலூர் வரை கால்வாய்கள் வெட்டுவதற்குப் பல வருஷம் ஆகும். செலவும் பல மடங்கு கூடும். இந்தத் தேசத்தை ஆட்சி செய்த அரசர்கள் நீர்நிலைகளை நன்றாக உருவாக்கியிருக்கிறார்கள். பராமரிப்பில்லாமல் அங்கங்கு உடைந்திருக்கிறது. மணல் மூடியிருக்கிறது. கால்வாய்களில் மணல் சேர்ந்து வெள்ளக்காலங்களில் நீர் நிற்காமல் வெளியில் ஓடுகிறது. சின்னச் சின்னக் கால்வாய்களையும் தூர் வாரி, உடைந்த பகுதிகளைச் சரி செய்ய வேண்டும். மராமத்து வேலை செய்தாலே போதுமென்று முடிவெடுத்துவிட்டேன். அவரவர் நிலத்துக்கு வரும் வாய்க்கால்களைத் தூர் வாரி, முடிந்தவரை உங்களுடைய நிலங்களைச் சரிசெய்து கொடுங்கள். வேலை சுலபமாக முடியும். இரண்டு எக்ஸ்கியூட்டிவ் இன்ஜினீயர்கள் இந்த வேலைக்குப் பொறுப்பாக இருப்பார்கள்.”

“பேரியாத்துத் தண்ணி என் குண்டுக்கு வருமா சாமி?”

“சுருளியாற்றுத் தண்ணீ இல்லாதபோது பெரியாற்றுத் தண்ணீ கொடுப்போம்.”.”

பென்னி உறுதியாகச் சொன்னவுடன், அமராவதி ஜமீனின் ஏஜெண்ட் எழுந்து நின்றார்.

“இதைத்தான் எங்க ஜமீன் சொல்லச் சொன்னார். இவங்க பேரியாத்துத் தண்ணியையும் முழுசாக் குடுக்க மாட்டாங்களாம். நம்ம சுருளியாத்துத் தண்ணி போற காவாய் வழியாத்தான் பேரியாத்துத் தண்ணியைக் கொண்டு போவாங்களாம். எங்க ஜமீனுக்கு ஐந்நூறு குழி நெலம் இருக்கு. எல்லாமே சுருளியாத்து ஆயக்கட்டு. எங்க ஜமீன் வழியா பேரியாத்துத் தண்ணியைக் கொண்டுபோக விட மாட்டோம்.”

அமராவதி ஜமீனின் ஏஜெண்ட் நரசிம்மன் மேல்ஸ்தாயியில் பேசி முடித்தவுடன், கூட்டத்தில் அமைதி எழுந்தது.

“எங்க ஜமீனுக்கும் ஐந்நூறு, அறுநூறு குழி இருக்கு. எங்க ஜமீன் பங்களாவுல இருந்து வெளியில கால வச்சம்னா, மேல்மலையைப் போய் முட்டுற வரைக்கும் யாரோட நெலத்துலயும் கால ஊண்ட வேண்டியதில்லை. எங்க வயக்காட்டு வழியாத்தான் சுருளியாத்துக் காவாய் போகுது. பேரியாத்துத் தண்ணியக் கொண்டுபோறேன்னு சொல்லிட்டு, சுருளியாத்துத் தண்ணியக் கொண்டுபோவ மாட்டீங்கன்னு என்ன நிச்சயம்? காவாத் தண்ணியில பேரியாத்துத் தண்ணி, சுருளியாத்துத் தண்ணின்னு எழுதியா வச்சிருக்கும்?” போடி ஜமீனின் ஏஜெண்ட் எழுந்து பேசினார்.

மெக்கன்சிக்குக் கோபம் வந்தது. ‘`எவ்வளவோ பாடுபட்டு, இப்போதான் திட்டம் ஆரம்பிக்கப் போறோம். இந்த ஜனங்களுக்குத்தானே இதில் நன்மையே. இது புரியாம எதுக்கு இப்படி எதிர்ப்பைச் சொல்றாங்க?”

“எதிர்ப்புச் சொல்றது மக்கள் இல்லை மெக். ஜமீன்கள். ஏக்கரா கணக்கில் நிலம் வச்சிருக்கிற ஜமீன்கள்.பெரியாற்றுத் தண்ணீர் வேண்டுமென்றால் ஒரு ஏக்கருக்கு நான்கு ரூபாய் பணம் கட்ட வேண்டுமென்பதை எப்படியாவது மோப்பம் பிடித்திருப்பார்கள். இப்போது இருக்கிற கால்வாயில் வருஷத்துக்கு ஒருமுறை தூர் வாரிவிட்டால் போதும், லஸ்கர்களை வைத்து, கணக்கில் வந்ததும் வராததுமாகப் பாதித் தண்ணீரைத் தங்களுடைய நிலங்களுக்கு எடுத்துக்கொள்வார்கள். நம் கட்டுப்பாட்டுக்குள் வந்தபிறகு அப்படிச் செய்ய முடியாதில்லையா? அதுதான் இவர்களின் பிரச்சினை.” மெதுவான குரலில் பென்னி, மெக்கன்சிக்கு விளக்கினார்.

“சரி, இவர்களை எப்படிச் சமாளிக்கப் போகிறாய்?”

“இவர்களைச் சமாளிக்க வேண்டியதில்லை. கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். ஒரு பிரச்னை முடிந்தால் இன்னொரு பிரச்னையைப் புதிதாக இழுத்து வருவார்கள். அரை ஏக்கர், ஒரு ஏக்கர் நிலத்தை வைத்துக்கொண்டு, மழையை நம்பி ஏர் உழுதுவிட்டு உட்கார்ந்திருக்கிற ரயத்துகளுக்குத்தான் (விவசாயிகள்) புரிய வைக்க வேண்டும். அதை என்னால் செய்ய முடியும்.”

“ரயத்துகளை நம்பியா பெரியாறு நீரணைத் திட்டத்தில் ஏழு சதவிகிதம் லாபம் வந்துவிடும் என இந்தியச் செயலாளர் கணக்குப் போட்டுவைத்து உட்கார்ந்து கொண்டிருக்கிறார்?”

“இங்கிலாந்துப் பேரரசி போடும் ஒவ்வொரு கையெழுத்துக்கும் பின்னால் லாபம் ஒன்றே நோக்கம் என்பதை அறியாமல் பிரிட்டிஷ் சர்க்காரின் பணியாளனாய் எப்படி இருக்கிறாய் மெக்? மேலூரில் மழையை நம்பி ஆயிரக்கணக்கில் இருக்கிற கண்மாய்கள்தான் நம் சர்க்காரின் இலக்கு. ஆறே இல்லாத பூமி. மழை பெய்தால் நிரம்பும் கண்மாய்கள். வருஷத்தில் மூன்று மாதத்திற்குத் தண்ணீர் இருந்தாலே பெரிய விஷயம். ஒரு போகம்தான் விளையும். அதுவும் சோளம்தான். நல்ல மழை பெய்தால் அந்த வருஷம் நெல் போடுவார்கள். ஆயிரக்கணக்கான கண்மாய்களைக் குறிவைத்துதான் பெரியாற்றுத் திட்டம் கொண்டு வந்திருக்காங்க.”

“அதுதானே பார்த்தேன். வர்த்தகனின் ரத்தத்திற்குள் சேவை என்ற சொல்லே இருக்காதே?”

“உன்னையும் என்னையும் சம்பளம் கொடுத்து வேலை வாங்குவதே பெரிய சேவைன்னு நினைப்பாங்க.” மெலிதாகச் சிரித்துக்கொண்ட இருவரும் கூட்டம் தங்களைப் பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்து, சட்டென்று இயல்புக்குத் திரும்பினர்.

ஜமீன்களின் கோபத்தைக் கேலி பேசிச் சிரிக்கும் வெள்ளைக்காரத் துரைமார்களைச் சுக்காங்கல்பட்டி மக்கள் வியப்பு மேலிடப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

“துரைக ஏதோ பேசிச் சிரிச்சிக்கிறீங்க. நாங்க சொல்றத சொல்லிட்டோம். ஒரு மம்முட்டி போடக் கூடாது எங்க நெலத்துல போற வாய்க்காவுல, சொல்லிப்புட்டோம். எக்குத்தப்பா ஏதும் நடந்துட்டா முன்னாடியே சொல்லலையேன்னு கொறை பட்டுக்கக் கூடாது.”

“தயவுசெய்து நீங்க எல்லாரும் கிளம்பலாம். நீரணை, கால்வாய் எல்லாமே சர்க்கார்கிட்ட இருக்கு. உங்க ஊர் கால்வாய்களுக்கெல்லாம் முதலாளி மதுரா கலெக்டர்தான். அவர் உத்தரவு போட்டுட்ட பிறகு ஒன்னும் பேச முடியாது.”

“பழனிசெட்டிப்பட்டி, குச்சனூர்க் கால்வாயெல்லாம் சர்க்காருக்குச் சொந்தமில்லையே?”

“அந்த இரண்டு கால்வாய் சம்பந்தமா மதுரா கலெக்டர் பேசிக்குவார். அந்தக் கவலை உங்களுக்கு வேணாம்.”

“துரை, எங்கள மெச்சிக்காமப் பேசுறீங்க. வேலைக்கு எங்க ஜமீனோட ஆளுக வந்தாத்தானே நடக்கும்?” நரசிம்மன்.

பென்னி சிரித்தார்.

“என்ன துரை மறுபடியும் சிரிக்கிறீங்க?” நரசிம்மன் கோபத்தின் அடங்கிய தொனியில் கேட்டார்.

“உங்களுக்கு பிரிட்டிஷ் சர்க்கார்னா என்னன்னு அர்த்தம் தெரியலை. ஜமீன்னா, ஜமீன்ல இருக்க எல்லாரும் உங்களுக்குக் கட்டுப்பட்டவங்கன்னு நினைச்சிக்கிட்டு இருக்கிற அறியாமையை ரசிக்கிறேன். சர்க்கார் ஒரு உத்தரவு போட்டா உங்க ஜமீனுக்கெல்லாம் ஜமீன்ற அந்தஸ்தே இருக்காது. வில் வண்டியும் பங்களாவும் பெரிய மீசையும் வேட்டையாடிய புலித்தோலும் மட்டும் இருக்கட்டும்னு விட்டு வச்சிருக்கு சர்க்கார். அதோட நிறுத்திக்கங்க. உங்க ஜமீன் ஆள்கள் மட்டுமல்ல, சர்க்கார் நினைச்சா எந்தத் தேசத்தில் இருந்தும் மக்களைக் கொண்டு வரும். சர்க்காருக்கு நூற்றுக்கணக்கான கைகள். ஆயிரக்கணக்கான கால்கள். லட்சக்கணக்கான மூளைகள். முழுமையா ஒரு சர்க்கார் என்பதை உங்களால் கற்பனை செய்தே பார்க்க முடியாது. சர்க்கார் உத்தரவு என்றால் சர்க்கார் உத்தரவுதான். அந்த வார்த்தைக்குள் எல்லாமே அடங்கும். கட்டுப்படும்.”

“பென்னி, நேரத்தை வீணாக்காதே. மக்கள்கிட்ட சொல்ல வேண்டியதை மட்டும் சொல்லிட்டுக் கூட்டத்தை முடி” மெக்கன்சி அவசரப்படுத்தினார்.

நீரதிகாரம் - 40 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“ஆமாம், மெக்கன்சி சொல்வதுதான் சரி. பிரிட்டிஷ் சர்க்கார் ஜமீன்களை நம்பிப் பெரியாறு அணை வேலையைத் தொடங்கவில்லை. மக்களை நம்பித்தான் தொடங்குகிறது. கடந்த இருபது வருடங்களில் எத்தனை பஞ்சத்தைப் பார்த்துட்டீங்க? தண்ணி இல்லாமல் நிலங்கள் அடியோடு காய்ந்து கிடக்கிறதுன்னு நாற்பது, ஐம்பது வயதுள்ளவங்களுக்கு நல்லாத் தெரியும். வருஷத்தில் பத்து மாதங்களுக்கு உங்களுக்குத் தண்ணீர் தரப்போகிற வரப்பிரசாதம் பெரியாறுதான். அதைப் புரிஞ்சிக்கிட்டு நீங்க ஒத்துழைப்பு தரணும். அவங்கவங்க நிலங்களின் வழியாகப் போகிற கால்வாய்களைத் தூர் வாருங்க. ஊரில் கரை உடைந்து போயிருக்கிற கண்மாய்களைச் சரி செய்யுங்க. மதுரா கலெக்டர் ஒரு பக்கம் எந்தெந்தக் கண்மாய்களை, கால்வாய்களைச் சரிசெய்ய வேண்டுமென்று திட்டம் போட்டிருக்கிறார். நீங்க உங்களுடைய நிலத்தையொட்டிய வாய்க்கால்களையும் கால்வாய்களையும் மராமத்துப் பணி செய்து வைங்க. இந்தக் கூட்டத்தில் இளம் வயதுப் பிள்ளைகள் நிறைய பேர் இருக்கீங்க. உங்களுடைய உதவிதான் எங்களுக்கு அதிகம் தேவை.”

பென்னி பேசி முடித்தவுடன் மொக்கைமாயத் தேவன் எழுந்தார். நழுவிய கோவணத்தை இழுத்துக் கட்டிக்கொண்டு, கூன் விழுந்த முதுகைக் கொஞ்சம் நிமிர்த்தி, பென்னியைப் பார்த்துப் பேசத் தொடங்கினார்.

“தொரைமாருகளா, இந்தப் பேரியாத்துத் தண்ணி வருது வருதுன்னு இந்த ஊர்ல எத்தினியோ வம்சமா சொல்லிக்கிட்டு வர்றாங்க. கைப்பிள்ளையைத் தூக்கிட்டு நான் வந்த வருசமும் அதான் சொன்னாங்க. பேரியாத்துத் தண்ணி வந்துடும். ரெண்டு போகம் நெல்லு போட்டு நல்ல சோறு சாப்பிடுவோம்னு. இன்னும் சோளத்தை விட்டா எங்களுக்குக் கதியில்ல. இப்போதான் கம்மாக்கர கருப்பசாமி அனுப்பி வச்ச மாதிரி வந்து சேர்ந்திருக்கீங்க. ஒங்களுக்கு என்னா ஒதவி தேவையோ, உங்களுக்கு ரெண்டு காலும் கையும் மொளைச்சது மாதிரி என் மவன் உங்ககூட இருப்பான்” என்று சொல்லிவிட்டு,

“ஏய் அப்பூ, பேயத் தேவா... எங்க இருக்க? முன்னுக்க வா” என்று கூப்பிட்டார்.

திடீரென்று தன் தந்தை கூப்பிட்டவுடன் திகைத்த பேயத்தேவன், விருட்டென எழுந்து முன்னால் வந்தான்.

“துரைகளா, இவன்தான் இந்த ஊர்ப் பஞ்சாயத்து. சுக்காங்கல்பட்டியில இருக்க அம்பூட்டுச் சனமும் இவன் சொல்லுக்குக் கட்டுப்படும். கொஞ்ச வயசுப் பயலா இருக்கானேன்னு பாக்காதீங்க. ரொம்பத் துடிப்பான ஆளு. நான்கூட தப்பாச் சொல்லிட்டேன். உங்களுக்கு ரெண்டு காலு கை மொளைச்சது மாதிரின்னு. ஊர்ல இருக்க முந்நூறு சனக்கூட்டத்தோட காலும் கையும் உங்களுக்குத்தான் துரைகளா. நீங்க உத்தரவு போடுங்க. இந்தப் பயல் அம்பாப் பாய்வான்...” என்று சொல்லி, பேயத் தேவனின் கைகளைப் பிடித்துத் தரதரவென்று இழுத்துக்கொண்டு, பெருமாள் கோயிலின் முகப்புக்குச் சென்றார். கருவறை பூட்டியிருந்தது. மனத்தில் அழகிய சுந்தர பெருமாளை வரித்துக்கொண்டு, உருகி நின்றார்.

“தொரமார்களுக்கு எம் புள்ள ஒத்தாசையா இருக்கணும். எம் புள்ளைக்கு நீ ஒத்தாசையா இருக்கணும் பெருமாளே” என்று வேண்டிக்கொண்டு, கீழே குனிந்து மண்ணெடுத்துப் பேயத் தேவனின் நெற்றியில் இட்டார்.

நீரதிகாரம் - 40 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“காஞ்சு கெடக்கிற இந்த பூமி குளிரணும். பூமித் தாயும் நம்ம பெத்த ஆத்தாதான். பெத்த ஆத்தா வயிறு குளுந்தாத்தான் நாம நல்லா இருக்க முடியும். பயிர் பச்சைக தலை எடுக்கும். கன்னு காலிக பொழைச்சுக் கெடக்கும். உன் உசுரு இருக்க மட்டும் என்ன வந்தாலும் இந்தத் தொரைகளுக்கு நீ ஒத்தாசையா இருக்கணும்” என்று அருள் இறங்கின பூசாரியின் குரலில் பேசினார்.

நேராக பென்னியின் அருகில் வந்தவர், பென்னியின் கையில் பேயத் தேவனின் கையைப் பிடித்துக் கொடுத்தார். பென்னி திகைத்து நின்றார்.

“கெழவனுக்குப் புத்தி கெட்டுப்போச்சு. எப்படி அவன் மகன் நாளைக்கு மம்மட்டியத் தூக்கிக் கொத்துறான்னு பாக்கத்தானே போறோம்?” கருவிக்கொண்டே கிளம்பினர் ஏஜெண்டுகள்.

காளைகளின் குளம்படிகள் கிளப்பிய தூசி மண்டலம் மேலெழும்புவதுபோல் கிளம்பி, மெல்ல அடங்கியது.

- பாயும்