மற்ற எபிசோடுகள்
Published:Updated:

நீரதிகாரம் - 41 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

நீரதிகாரம்
பிரீமியம் ஸ்டோரி
News
நீரதிகாரம்

பிரிட்டிஷ் சர்க்கார், இங்கிலாந்தின் கம்பீரத்திற்கு நிகராகத் தாங்கள் ஆளும் தேசங்களிலும் கட்டடங்களைக் கட்டுவதில் கடந்த நூறு ஆண்டுகளாக முனைப்பாக இருக்கிறார்கள்

“உங்களுடைய எல்லைகளை அறியாமல் நடந்துகொள்கிறீர்கள் மிஸ்டர் பென்னி.”

மதுரை கலெக்டர் டர்னர் முகம் சிவந்து ஒவ்வொரு சொல்லையும் மிகுந்த பிரயத்தனத்திற்குப் பிறகு உச்சரித்தார்.

“சரியாகச் சொன்னீர்கள் மிஸ்டர் டர்னர். காடு என்பதே எல்லையில்லாததுதான். காட்டுக்குள் எல்லை பிரிப்பது மட்டுமல்ல, எல்லையை அறிந்துகொள்வதே நம்முடைய கடும் முயற்சிகளுக்குப் பிறகுதான் சாத்தியப்படும்.” உங்கள் கோபத்தின் வெம்மையை ஒருபோதும் நான் ஏற்க மாட்டேன் என்ற அலட்சியம் பென்னியின் சொற்களில் பிரதிபலித்தது.

“இதுவரை மூன்று முறை விளக்கங்கள் அனுப்பிவிட்டேன். ஹிஸ் எக்ஸலென்ஸி மெட்ராஸ் கவர்னருக்கும், ஹிஸ் எக்ஸலென்ஸி இந்திய வைஸ்ராய்க்கும், மேன்மைக்குரிய செக்ரட்டரி ஆப் ஸ்டேட்ஸுக்கும் என்னுடைய பதிலில் நிறைவு வராமல், ‘சம்பவம் நடைபெற்றதற்கு யார்தான் காரணம், உண்மையான பின்னணி என்ன’ என்று கேட்டு மீண்டும் கடிதம் அனுப்பியிருக்கிறார்கள்.”

“அதுதானே நடக்கும்? மதுரா கன்ட்ரியில் என்ன நடந்தாலும் நீங்கள்தானே விளக்கம் கொடுக்க வேண்டும்?”

“மிஸ்டர் பென்னி..?”

“யெஸ் மிஸ்டர் டர்னர்?”

“உங்களின் பொறுப்பற்ற நடவடிக்கையால் மூன்று குழந்தைகள் இறந்திருக்கின்றன. விளக்கம் மட்டும் நான் சொல்ல வேண்டுமா?”

“குழந்தைகளின் இறப்பு எனக்குத் தனிப்பட்ட விதத்தில் மன உளைச்சலும் துயரமும் தந்த சம்பவம். ஆனால் குழந்தைகள் இறப்பிற்கு நானெப்படி காரணமாவேன்?”

“காட்டில் புதையல் கிடக்கிறது என்ற செய்தியை உங்களின் ஆள்கள்தானே பரப்பிவிட்டார்கள்?”

“இங்கிலாந்து தேசத்தின் பேரரசியின் கீழ் சேவை செய்யும் நாமெல்லாமே அவருடைய பணியாளர்கள்தான். எனக்கென்று தனியாகச் சேவகம் செய்யும் ஆள்கள் யாருமில்லையே மிஸ்டர் டர்னர்?”

“திருவிதாங்கூர் சமஸ்தானத்தில்தான் அணை கட்டப் போகிறீர்கள். ஆனால் மதுரா டிஸ்ட்ரிக்டில் உங்கள் குழுவினர் ஒவ்வொரு ஊர்க் கண்மாயிலும் வாய்க்காலிலும் தண்ணீர்போல் பாய்ந்துவிட்டார்கள். கரையைச் சரிசெய்யுங்கள், வரப்புகளைச் சீரமையுங்கள், கால்வாயில் மணல் அள்ளுங்கள் என்று ஒவ்வொரு ஊரிலும் அதிகாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். மதுரா கன்ட்ரியின் கலெக்டரான என்னுடைய கவனத்திற்கும் கொண்டு வராமல், என்னுடைய உத்தரவும் இல்லாமல் நடைபெறுவது எப்படிச் சரியாகும்? நீங்கள் உங்கள் விருப்பத்திற்குச் செய்வதைச் சர்க்காரும் அமைதியாக அனுமதிக்கிறது. விபத்தாக ஏதேனும் சம்பவங்கள் நடந்துவிட்டால் மட்டும் உடனே கலெக்டர் விளக்கம் தர வேண்டும். காரணகர்த்தாவாகிய நீங்கள் நிம்மதியாக இருந்துகொள்ளலாம்.”

நீரதிகாரம் - 41 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

‘மதுரா கலெக்டருக்கு எப்படிப் புரியவைப்பது?’ சில கணங்கள் பென்னி மௌனமாக இருந்தார். மதுரா கலெக்ட்ரேட்டின் கம்பீர கட்டடத்திற்கு வெளியில் தெரிந்த மருத மரத்தின்மேல் பார்வையைச் செலுத்தினார்.

சற்றுமுன் வானம் பெய்து நிறுத்தியிருந்த மழையை இப்போது மரங்கள் பெய்துகொண்டிருந்தன. கருமேகங்கள் மழை கொடுக்கும் என்ற உண்மையை ஒவ்வொரு முறையும் மாற்றியெழுத முயலுபவை மரங்களின் பசுமைத் திரளான இலைகள். பசுமை திரண்டு நிற்கும் இலைகளின் நுனிகளில் வழிந்து, மழைக்குப் பிறகான மழை பொழிந்து கொண்டிருந்தது. இலைகூட மழைநீரைத் தேக்கி வைத்து, அனுப்புகிறதோ? வியந்தார். இறைவன் அவரின் அவசரப் பணிகளில் அள்ளித் தெளித்துச் சென்ற மழையைவிட, குழந்தையும் கையாளக்கூடியதாக இருக்கும் மென்மழையைப் பார்ப்பது இதமாக இருந்தது. குழந்தை என்ற சொல் பென்னியை மேல்மலைக்கு இழுத்தது. மூன்று குழந்தைகள் இறந்தது அநியாயம். பெற்றவர்களின் பொறுப்பற்றதனம். இல்லை, இல்லை, வறுமையும் பசியும் அவர்களை குழந்தைகளின் உயிர்களைப் பற்றிக் கவலைகொள்ள முடியாத வெற்றிடத்தில் தள்ளிவிட்டிருக்கிறது.

பிரிட்டிஷ் சர்க்கார், இங்கிலாந்தின் கம்பீரத்திற்கு நிகராகத் தாங்கள் ஆளும் தேசங்களிலும் கட்டடங்களைக் கட்டுவதில் கடந்த நூறு ஆண்டுகளாக முனைப்பாக இருக்கிறார்கள். பரந்த தேசம். குறைவான படிப்பறிவு கொண்ட அடர்த்தியான மக்கள் தொகை, சுதேசி ஆட்சியாளர்கள், நூற்றுக்கணக்கான ஜமீன்தார்கள், சமஸ்தானங்கள் போன்ற பாகுபாடுகளால் சர்க்கார் தான் எண்ணியதை உடனடியாகச் செய்ய முடியாமல் இடையூறுகள் மிகுந்துள்ளன. மெட்ராஸ் பிரசிடென்சியைப் பொறுத்தவரை, கட்டடக் கலையில் பாரம்பரியம் கொண்ட பகுதி. கல்லாலான கட்டடங்களால் நிரம்பியிருந்த பிரசிடென்சியை மரத்தாலான கட்டடங்களால் அழகு பார்ப்பது பிரிட்டிஷ் சர்க்கார்தான். கல்லாலான கட்டடங்கள் தரும் இறுக்கமான அழகியலைக் கடந்து, மரத்தாலான கட்டடங்கள் மென்மையான உணர்வைத் தருவதில் மேம்பட்டவை. மதுரா கலெக்ட்ரேட் எப்போதுமே மனத்துக்கு உவப்பான இடமென்ற நினைவை, மழை நின்ற பிறகான இலையின் மழை இப்போது பென்னிக்குச் சொல்லிக் கொண்டிருந்தது.

“...... ஏற்கெனவே கள்ளர்களோடு ஆங்காங்கு மோதல் இருக்கிறது. கலெக்டரின் உத்தரவு இல்லாமல் எப்படிக் காட்டுக்குள் போக முடியும் என்று கேட்கிறார்கள். பத்து வருஷமாக பாரஸ்ட் அதிகாரி கூட வந்தால்தான் கலெக்டரே காட்டுக்குள் போக முடிகிறது என்பதை வசதியாக மறந்துவிடுகிறது சர்க்கார். காட்டுக்குத் தனி கலெக்டர் நியமித்தாலும் நியமித்துவிடும் சர்க்காரின் போக்கைப் பார்த்தால்...”

“மிஸ்டர் டர்னர்...” கலெக்டர் பேசியதில் இருந்து துண்டித்துக்கொண்டு தன் உலகில் இருந்து மீண்ட பென்னி, கலெக்டரின் உரையாடலுடன் இணைய முடியாமல் தடுமாறினார்.

“எனக்கு வேறு வழியில்லை. நான் எனக்கு மேல் உள்ள அத்தனை பேருக்கும் பதில் சொல்ல வேண்டும். நீங்கள் பெரியாறு அணைத் திட்டத்தின் சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயர். உங்கள் கட்டுப்பாட்டில்தான் எல்லாமே நடந்திருக்க வேண்டும். ஊருக்கு நான்கு கொத்தனார்களைக் கிளப்பிவிட்டு, அவரவர்கள் அக்கிரமங்கள் செய்து சர்க்காருக்கு அவப்பெயர் வாங்கிக் கொடுத்தால் நான் எப்படிப் பொறுப்பேற்க முடியும்? தயவுசெய்து நீங்கள் இதற்கு ஒரு விளக்கக் கடிதம் எழுதிக் கொடுங்கள். உங்கள் விளக்கத்துடன் நானொரு கடிதம் வைத்து, மெட்ராஸ் கவர்னருக்கு அனுப்பி வைக்கிறேன்.”

“நான் என்னவென்று விளக்கம் சொல்வது? உங்களுக்கு எப்படிச் செய்தி வந்ததோ... அப்படித்தான் எனக்கும்..!”

“நிறுத்துங்கள் மிஸ்டர் பென்னி. என்னுடைய அலுவலகத்தில் இருந்து உங்களுக்கு முறையான கடிதம் வரும். விளக்கம் தந்தாக வேண்டும். மதுரா டிஸ்ட்ரிக்ட் கலெக்டரின் உத்தரவு. இத்துடன் நம் விவாதத்தை நிறுத்திக்கொண்டு, மற்ற இன்ஜினீயர்களைக் கூட்டத்திற்குக் கூப்பிடலாமா?”

மதுரா கலெக்டர் இவ்வளவு கடுமை காட்டும் அளவு தான் நடந்துகொள்ளவில்லையே என்று பென்னி திகைத்தார்.

“மிஸ்டர் டர்னர், மதுராவுக்குத் தண்ணீர் கொண்டுவரத்தான் நான் முப்பதாண்டுகளாக முயன்றுகொண்டிருக்கிறேன். பெரியாறு அணைத் திட்டத்தில் பலரின் விடாமுயற்சியை நீங்கள் அறிந்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை” - பென்னியின் குரலில் திகைப்பு குறையாமல் ஆதங்கமும் சேர்ந்திருந்தது.

“இப்போது நான்தான் மதுரையின் கலெக்டர். கூடலூரில், உத்தமபாளையத்தில் மக்களிடம் கூட்டம் போட்டுப் பேசியிருக்கிறீர்கள். என்னிடம் கேட்காமல் எப்படி நீங்கள் கூட்டம் போட்டீர்கள்?”

“தாசில்தார் வந்திருந்தாரே?”

“என் உத்தரவில் அவர் வரவில்லை. அவரையும் ஒரு வார காலத்திற்குத் தற்காலிகப் பதவி நீக்கம் செய்யப் பரிந்துரைத்துள்ளேன்.”

“ஜீசஸ்..! விரைவில் உங்களுக்கு லண்டனில் இருந்து கடிதம் வரும். நீங்கள் பெரியாறு கட்டுமானத்தில் தலையிடக் கூடாது, தலையிடவும் முடியாது. இங்கிலாந்து அரசியின் நேரடியான அனுமதியில்தான் பிரிட்டிஷ் இந்தியா முழுவதும் பாசனத் திட்டங்கள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு கலெக்டரிடமும் தாசில்தாரிடமும் நாங்கள் காத்துக் கிடந்தால் திட்டங்கள் நிறைவேற ஐம்பது வருஷமாகும். என்ன நடக்க இருக்கிறது என்பதை நீங்கள் அறிந்துகொள்ள விரும்பினால், உங்களையும் சேர்த்துக் கூட்டம் நடத்துகிறேன். இல்லை யென்றால் என்னுடைய இன்ஜினீயர்களுடன் பக்கத்து அறையில் கூட்டம் நடக்கும். எங்களுக்குத் தேநீர் கொண்டு வந்து தரும் பியூன்தான் உள்ளே என்ன நடக்கிறது என்ற தகவலை உங்களுக்கு அரைகுறையாகச் சொல்ல வேண்டியிருக்கும். சம்மதம் எனில் நான் இப்போதே வெளியேறுகிறேன்.” பென்னிக்கு வந்த வேகம் பார்த்து அவருக்கே வியப்பாக இருந்தது. திரும்பும் திசையெங்கும் ஆளுக்கொரு இரும்புச் சங்கிலியுடன் வந்து பெரியாறு அணைத் திட்டத்தைப் பின்னுக்கு இழுப்பதைப்போல் பயம் வந்தது பென்னிக்கு.

டர்னர் தன்னருகில் இருந்த வெண்கல மணியின் கயிற்றை இழுத்தார். ஓடோடி வந்த உதவியாளனிடம் வெளியில் காத்திருக்கும் இன்ஜினீயர்களை உள்ளே வரச் சொல்லி உத்தரவிட்டார். பென்னி முகத்தின் இறுக்கம் குறையாமல் இருந்தது.

தன் முன்னால் இருந்த கண்ணாடிக் குவளையில் இருந்த நீரைப் பருகி, தொண்டையைச் சமன்செய்து கொண்டு, நாற்காலியின் நுனிக்கு நகர்ந்து, எதிரில் இருந்த நீள்வட்ட மேசையில் முழங்கையை ஊன்றியபடி பேச ஆரம்பித்தார் மதுரை மாவட்டத்தின் கலெக்டர் டர்னர். அவர் மதுரையின் கலெக்டராக நியமிக்கப்பட்டுப் பத்து மாதங்களாகின்றன.

மதுரையின் கலெக்டராக இருந்தவர்களில் பலர் மதுரையின் அரசியல், கலாசாரப் பின்புலத்தின் ஈர்ப்பில் மதுரையோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொண்டுள்ளார்கள். முதன்முதலில் 1790ஆம் வருஷம் மதுரைக்கென்று ஒரு கலெக்டர் நியமிக்கப்பட்டாலும், 1801ஆம் வருஷத்துக்குப் பிறகுதான் மதுரை, மதுரா கன்ட்ரியானது. 1801ஆம் வருஷத்தில் சிவகங்கை அரசர் வேங்கை பெரிய உடையணத் தேவரின் மந்திரிப் பிரதானிகளாக இருந்த பெரிய மருது, சின்ன மருது முன்னெடுத்த காளையார்கோயில் போரில் வெற்றி பெற்ற பிரிட்டிஷ் சர்க்கார், போராட்டக்காரர்களைத் தூக்கிலிட்டு, எஞ்சியவர்களை நாடு கடத்தி, தென்தமிழகத்தின் போராட்டக்காரர்களை ஒடுக்கி, மதுரையிலும் காலூன்றியது.

மதுரையின் முதல் கலெக்டராக இருந்த பாரீஷ்தான் மேல்மலையின் அடர்ந்த காட்டுக்குள் சென்று, பேரியாற்றுத் தண்ணீரை மதுரைக்குக் கொண்டு வர முயன்றவர். மதுரையின் கலெக்டராகப் பதினாறு வருஷங்கள் இருந்த ரௌஸ் பீட்டர், தன்னை ‘ரௌஸ் பாண்டி’ என்றே அழைத்துக்கொண்டார். பிளாக்பர்ன் மதுரையின் வீதியெங்கும் நுழைந்து மக்களின் தேவைகளை அறிந்து உதவினார். யுகங்களின் ஆதி வரலாற்றில் இருந்து நீண்டிருக்கும் மதுரை மண்ணின் வீதிகளில் துகள்களாக எஞ்சிக் கிடப்பவை, அம்மண்ணின் வரலாற்றில் எஞ்சிய மனிதர்களின் கதைகள்தான். சின்னஞ்சிறு துகளை அணுகி, அதன் துவாரங்கள் பேசும் மொழியறிந்து நம் இதயம் திறந்து கேட்டால், தன்மேல் உள்ள வீரச் சரித்திரத்தையும் உறைந்து நிற்கிற கண்ணீர்த்துளிகளையும் நீங்காமல் நிற்கிற ரத்தக்கறையையும் புதைந்திருக்கிற ஏதோ ஒரு அதிகாலையின் குளிர்ப் பனித்துளியையும் நம் புலன்கள் உணரும். மண்ணின் மாமனிதர்களோடு, மண்ணின் மாண்பை உயர்த்திய அந்நிய ஆட்சியாளர்களையும் மதுரை மண் மறந்ததில்லை.

அதில் மதுரா கன்ட்ரி என்று அழைத்த பிரிட்டிஷ் சர்க்காரின் மதுரை மாவட்டத்தை நேசமிகு சேவையால் நிறைத்த கலெக்டர்களும் வேற்றுமைகளைக் கடந்து மேலெழக் கல்வியையும் உயிர்க்காக்கும் மருத்துவத்தையும் கொடுத்த ஏசுசபைப் பாதிரிகளும் நிறைந்து இருக்கின்றனர். டர்னர் எங்கிருக்கப் போகிறார் என்பதைத் தீர்மானிக்க, காலமும் பென்னியின் அருகில் ஓர் இருக்கையை நிரப்பி, வேடிக்கை பார்த்தபடி உட்கார்ந்திருந்தது.

“டியர் இன்ஜினீயர்ஸ், இங்கிலாந்துப் பேரரசியின் கீழ்ப்படிதலுள்ள பணியாளனின் அன்பான வணக்கம். பெரியாறு அணைத் திட்டத்திற்கு, செக்ரட்டரி ஆப் ஸ்டேட்ஸ் அவர்களுடைய ஒப்புதல் கிடைத்திருக்கிறது. அணை கட்டுவதற்குத் தேவையான இடத்தை 999 ஆண்டுக்காலக் குத்தகையில் திருவிதாங்கூர் சமஸ்தானம் கையெழுத்திட்டுக் கொடுத்திருக்கிறது. நீங்கள் மேல்மலையில் அணை கட்டும் வேலையைத் தொடங்க இன்னும் ஓராண்டு ஆகும் என்பது என் கணிப்பு. அடுத்த நிதிக் கணக்கீட்டில்தான் அணை கட்டுவதற்கான பணம் ஒதுக்கீடு செய்யப்படலாம். வரும் ஓராண்டுக் காலத்திற்குள் நீங்கள் செய்ய நினைத்திருக்கும் வேலைகள் என்னென்ன என்பதை நான் அறிந்துகொள்ள நினைக்கிறேன். அதற்குமுன் உங்கள் எல்லோரையும் நான் அறிமுகம் செய்துகொள்ளலாமா? மிஸ்டர் பென்னி, மிஸ்டர் டெய்லர் குறித்து மட்டும் நான் அறிவேன்.”

“நிச்சயமாக மிஸ்டர் டர்னர். நீல் கேம்ப்பெல். சூப்பிரண்டெண்டிங் இன்ஜினீயர்.”

“மெக்கன்சி, எக்ஸிகியூட்டிவ் இன்ஜினீயர்.”

“ஆலன், எக்ஸிகியூட்டிவ் இன்னீனியர்.”

“லோகன், அசிஸ்டென்ட் இன்ஜினீயர்.”

அறிமுகப்படலம் முடியும் நேரத்தில் கலெக்டரின் உதவி யாளன் அனைவர் முன்னாலும் தேநீர்க் கோப்பைகளை வைத்தான்.

“நல்லது... மிஸ்டர் பென்னி, உங்களுடைய திட்டம் என்ன வென்று முதலில் சொல்லுங்கள். நாம் ஒவ்வொன்றாக விவாதிப்போம்.”

பென்னி தன்னுடைய மேல்கோட்டை சரிசெய்து கொண்டு, இருக்கையின் பின்னால் நன்றாகச் சாய்ந்து உட்கார்ந்தார். இந்தக் கூட்டம் அவசியம் என்றாலும், கலெக்டரின் தோரணையும் தங்களை நடத்தும்விதமும் பென்னிக்கு நிறைவைத் தராததால் பென்னி, கூட்டத்தில் முழு ஈடுபாட்டைக் காண்பிக்க விரும்பவில்லை.

நீரதிகாரம் - 41 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“மிஸ்டர் டர்னர், முதலில் பெரியாறு அணைத் திட்டத்திற் காகத் தேக்கடியில் தங்குமிடம் ஒன்று தயாராகிக் கொண்டி ருக்கிறது. அங்கிருந்து குமுளி வழியாக மேல்மலைக்கு ஒற்றையடிப் பாதை ஒன்று உருவாக்க வேண்டும்.”

“ஒற்றையடிப் பாதைக் காகத்தான் செலவில்லாமல் புதையல் கதையைப் பரப்பி விட்டார்களா உங்களின் கங்காணிகள்...” டர்னரின் குரலில் எகத்தாளம் கூடியிருந்தது.

“மிஸ்டர் டர்னர், உங்களுடன் நான் நடத்தும் முதலும் கடைசியுமான கூட்டம் இதுதான்...”

“மிஸ்டர் பென்னி, கூட்டம் நான் நடத்துகிறேன். இது என்னுடைய பங்களா...”

“சர்க்கார் பங்களா இது..!”

“இன்று, இப்போது இந்த கலெக்ட்ரேட் என்னுடையது. இந்த மதுரா டிஸ்ட்ரிக்ட் என்னுடையது. நானே முழுக்க முழுக்க அதன் பூரண உரிமையாளன். பிரிட்டிஷ் சர்க்கார் என்னை மாற்றலாம். மாற்றும்வரை நான்தானே கலெக்டர்? என் கேள்விகளுக்கு நீங்கள் விளக்கம் கொடுத்துதான் ஆகவேண்டும்.”

“மிஸ்டர் டர்னர், நாம் எல்லோருமே பிரிட்டிஷ் சர்க்காரின் கீழ்ப்படிந்த பணியாளர்கள். உங்களுக்கும் எங்களுக்கும் தனிப்பட்ட எந்த உறவும் கசப்பும் இல்லையே? முதலில் இருந்தே நீங்கள் எங்களுடைய கடிதங்களுக்குக்கூட முறையான தகவல் அனுப்பியதில்லை’’ என்றார் மெக்கன்சி.

“மெக், நாம் இப்போது கூட்டத்தில் கவனம் செலுத்துவோம். நானே தொடர்கிறேன்” என்று மெக்கன்சியின் பேச்சில் குறுக்கிட்ட பென்னி, தொடர்ந்தார்.

“மிஸ்டர் டர்னர், அணை கட்டுமிடம் வரைக்கும் முதலில் ஒரு ஒற்றையடிப் பாதை அமைக்க வேண்டும். அமைத்த பிறகு மலைமேல் சென்று ஆற்றின் இரண்டு கரைகளையும் ஆய்வு செய்யும் வேலை இருக்கிறது. கூலிகளுக்கான குடியிருப்புகள் எங்கு அமைக்கலாம், நம்முடைய இன்ஜினீயர்களுக்கு எந்த வரிசையில் குடியிருப்புகள் அமைப்பது, குடியிருப்புகள் தற்காலிகக் குடியிருப்பாக அமைக்கத்தான் நினைத்திருக்கிறோம். தற்காலிகக் குடியிருப்புகளுக்குத் தேவையான மரம், கல், புல் எங்கிருந்து எடுப்பது, இயந்திரங்களை வைக்கும் பணியிடம் அமைப்பது... இப்படி மலைமேல் முதலில் ஆள்கள் தங்கி, அடிப்படை வேலைகளைச் செய்வதற்கான வசதிகளைச் செய்ய வேண்டும். தேக்கடியில் இருந்துதான் மலைக்கு எல்லாப் பொருள்களையும் ஏற்றிச் செல்ல வேண்டும். ஒரு நாளுக்குச் சராசரியாக இருநூறு, முந்நூறு மாட்டு வண்டிகள் தேவைப்படும். மாட்டு வண்டிகளில் ஏற்ற முடியாத சுமைகளை ஏற்றிச்செல்லக் கழுதைகள் தேவைப்படும். இதற்கிடையில் முள்ளிய பஞ்சன் நதி வழியாகச் சின்னச் சின்ன இரும்புப் படகுகளில் எடையுள்ள இரும்பாலான இயந்திரங்களை ஏற்றிச் செல்லும் வழியை யோசிக்க வேண்டும். வருஷம் முழுவதும் தண்ணீர் இல்லாத நதி அது. முழுமையாக நம்ப முடியாது. அணை கட்டும் இடத்தைச் சுற்றியுள்ள பெரியாற்றின் படுகையில் இருந்தே போதுமான மணல் எடுத்துக்கொள்ளலாம். சுற்றியுள்ள மலைகளில் இருந்து கல்லும் உடைத்துவிடலாம். சுண்ணாம்பு, சுர்க்கி, மலைமேல் இருப்பவர்களுக்குத் தேவைப்படும் உணவுப்பொருள்கள் எல்லாம் கீழிருந்துதான் எடுத்துச் செல்ல வேண்டும். நாமே எல்லாப் பொறுப்புகளையும் ஏற்றுச் செய்ய முடியாது. பெரியாறு அணைத் திட்டத்தின் பணிகளுக்கான பொறுப்பைப் பிரிக்க, இரண்டு டிவிஷன் உருவாக்கலாம் என்று யோசனை. தேக்கடியில் ஒரு டிவிஷன், மதுரையில் ஒரு டிவிஷன். இதுவரை நான் விவரித்த வேலைகளைத் தேக்கடி டிவிஷன் பார்க்கும். பெரியாற்றுத் தண்ணீர் சுரங்கம் வழியாகக் கீழே வந்தவுடன், கூடலூரில் இருந்து மேலூர் புளிப்பட்டி வரை கொண்டு செல்வதற்கான பணியை மதுரா டிவிஷன் பார்க்கலாம் என்பது என் அபிப்பிராயம்.”

“மதுரா டிவிஷன் பற்றி நான்தானே முடிவு செய்ய வேண்டும்?” டர்னரின் குரலில் யாரும் விரும்பாத எரிச்சல் தொனி தெரிந்தது.

“நீங்களே செய்யலாம்... ஆட்சேபனை இல்லை. வைரவனாறு தொடங்கி வைகை வரையுள்ள ஆற்றுக்கால் பாசனத்தின் நிலை எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் மிஸ்டர் டர்னர்..?”

“வைரவனாறு ரொம்பச் சின்ன ஆறு. சுருளியையும் வைகையையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்வோம்.”

“சரி...”

“சுருளியாறும் வைகையும் ஒன்றாகச் சேர்ந்துதான் ராமநாதபுரம் ஜமீன்தாரி வரை செல்கிறது.”

“மிஸ்டர் பென்னி... நீங்களே தொடருங்கள்” என்றார் அசிஸ் டென்ட் இன்ஜினீயர் லோகன்.

“நீங்கள் முன்பே சொல்லி யிருந்தால் பி.டபுள்யூ ஆள்களை வரச் சொல்லியிருப்பேன்” டர்னர் சமாளிக்க நினைத்தார்.

“பரவாயில்லை மிஸ்டர் டர்னர். உங்கள் காதுகளை மட்டும் கொஞ்ச நேரம் எங்களுக்குக் கொடுங்கள்” என்று சொல்லிய பென்னி, தொடர்ந்தார்.

“பிரெண்ட்ஸ், உங்க எல்லாருக்கும் தெரிந்ததுதான். வைரவனாற்றில் இரண்டு அணைகள், சுருளியில் பதின்மூன்று அணைகள் இருக்கின்றன. நல்ல மழை பெய்யும் வருஷங்களில் சுருளியில் மூன்று நான்கு மாதத்திற்கு வெள்ளம் இருக்கும். பேரணை வரை இருக்கின்ற மொத்தம் பதினைந்து அணைகளில் பெருகுகிற ஆற்று நீர், மழை நீரை நம்பித்தான் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள பதினான்காயிரம் ஏக்கர் நிலங்கள் விவசாயம் செய்யப்படுகின்றன. கால்வாய்களில் இருந்து கண்மாய்கள், கண்மாய்களில் இருந்து வாய்க்கால்கள், வாய்க்கால்களில் இருந்து சின்னச் சின்ன வரப்புகள் வழியாக காலங்காலமாக ரயத்துகள் தங்கள் நிலங்களுக்குத் தேவையான நீரை எடுத்துக்கொண்டிருக்கிறார்கள். மதுராவை ஆண்ட அரசர்கள் நீரைத் தேக்கி வைத்து, வருஷம் முழுக்க விவசாயம் செய்ய நீர்நிலைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு வருஷமும் கோடைக்காலம் முழுக்க மக்கள் குடிமராமத்து வேலையை அவர்களே செய்திருக்கிறார்கள். சர்க்கார் போய்க் குடிகளிடம் கால்வாயைத் தூர் வாருங்கள், கண்மாயின் கரையை வலுப்படுத்துங்கள் என்று சொன்னதில்லை. கிராமத்தில் இருக்கிற ஒவ்வொரு ரயத்தும் அறுவடை முடிந்து, அடுத்த விதைப்பிற்குக் காத்திருக்கிற நேரத்தில் நிலத்தினை உழுது போடுவார். கண்மாயில் இருந்து தன்னுடைய நிலத்திற்கு வரும் வாய்க்கால்களைத் தூர் வாரி வைப்பார். இதுதான் அவர்களுக்குப் பிரதானமான வேலையே. அணையின் மதகைத் திறந்தால் நீர் எந்தெந்த வழியில் செல்ல வேண்டுமோ, அங்கெல்லாம் சின்னத் தடங்கல் இல்லாமல் ஓடிச் செல்லும். அதுதான் நீரொழுங்கு. சித்திரை மாதம் 5ஆம் நாள் என் நிலத்துக்குத் தண்ணீர் வந்துவிடும் என்று கிராமத்துச் சம்சாரி சொன்னால், 5ஆம் நாள் விடியற்காலையில் தண்ணீர் வந்து நிற்கும். இன்று நிலை என்ன?” நீரோடையின் சீரான ஒழுக்கில் பேசிக்கொண்டே வந்த பென்னி, சட்டென கேள்வியோடு நிறுத்தினார்.

நீரதிகாரம் - 41 - பெரியாறு அணை உருவான வரலாற்றுத் தொடர்...

“இன்று தண்ணீர் வருகிறதா இல்லையா? யார் கேட்பது?’’

“கால்வாய்களில் வெள்ளம் மேலாகத்தானே ஓடுகிறது? தேங்குவதில்லை. எல்லாம் மணல் மண்டிக் கிடக்கிறது. நான் சொல்வதைச் சர்க்காருக்கு எதிராக என்று புரிந்துகொள்ளக் கூடாது. பிரிட்டிஷ் சர்க்கார் கண்மாய்களையும் வாய்க்கால்களையும் எப்போது தன் கையில் எடுத்துக்கொண்டதோ அன்றிலிருந்தே மக்களிடம் இருந்த பொறுப்புணர்ச்சி விலகிவிட்டது.”

“புரியவில்லை மிஸ்டர் பென்னி...”

“லோகன், உங்களுக்குத் தெரியும்தானே?

பி.டபுள்யூ எப்போது கண்மாய்களைக் கட்டுப்பாட்டுக்கு எடுத்ததோ, அப்போதில் இருந்து கால்வாய்களில் மணல் சேர்ந்துவிட்டது. மழை பெய்து வரும் வெள்ளத்தில் முப்பது சதவிகிதம் தண்ணீர் மேல்நீராகவே ஓடி வீணாகப் போகிறது. குடிமராமத்து அருமையான நடைமுறை. சர்க்கார் மராமத்தாக மாறியவுடன் தங்களுக்குத்தான் பாதிப்பு என்று தெரிந்தும் மக்கள் விலகிவிட்டனர். விலக்கப்பட்டனர் என்றும் சொல்லலாம். சர்க்காருக்கு அதிகாரம் இருக்கிறது. பொறுப்பு மக்களிடம் இருந்தால்தான் எந்தக் காரியமும் நன்றாக நடக்கும்.”

“உங்கள் ஆலோசனைகளைக் கல்கத்தாவிற்கு எழுதியனுப் பலாமே மிஸ்டர் பென்னி? ராயல் இன்ஜினீயர், அரசியல் ஆலோசகராக மாறிய விந்தையை வைஸ்ராயும் தெரிந்துகொள்வார் அல்லவா?”

பென்னி கலெக்டரின் கேலியைப் புறக்கணித்தார்.

“குடிமராமத்திற்கு மக்களை மீண்டும் தயார் செய்ய வேண்டும். நமக்கு ஒதுக்கியுள்ள தொகையில் அணைக்கட்டுகளையும் கால்வாய்களையும்தான் சரிசெய்ய முடியும். அவரவர் நிலத்திற்கு வரும் வாய்க்கால்களையும் சின்னச் சின்ன ஓடைகளையும் குளம், குட்டைகளையும் சரிசெய்யச் சொல்லி மக்களிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். ஆற்று நீரையும் மழை நீரையும் நிலங்களுக்குப் பயன் படுத்திக்கொள்வது அவர்களது பாரம்பரிய உரிமை. உரிமைகளை மறந்துபோன மக்களுக்கு நாம் நினைவூட்ட வேண்டும்.”

“உங்களுக்கு இங்குள்ள பாரபட்சங்களைப் பற்றித் தெரியாது மிஸ்டர் பென்னி. அணை கட்டுவது வேறு. ஆட்சியாளனாக இருப்பது வேறு. மதுரையின் ஆட்சியாளன் நான். எனக்குத்தான் இங்குள்ள நிலைமை தெரியும்.”

“நீங்களே சொல்லுங்கள், என்ன செய்யலாம்?”

“நீங்கள் கூட்டம் நடத்திய அன்றே பார்த்திருப்பீர்களே? ஜமீன்களின் ஏஜென்டுகள் வந்திருப்பார்களே? ஜமீன்களையும் மிராசுதாரர்களையும் மிஞ்சி நாம் ஒன்றையும் செய்ய முடியாது.”

“பிரிட்டிஷ் சர்க்காரின் கலெக்டரின் வார்த்தையா இது?”

“அதிலென்ன சந்தேகம். பாதி ஜமீன்தார்கள் கஞ்சா, அபின் போதையில் இருப்பவர்கள். பலருக்குப் படிப்பறிவு கிடையாது. ஜமீன் பங்களாவிலேயே குயுக்தி நிரம்பிய ஒருவன் மொத்த அதிகாரத்தையும் கையில் எடுத்திருப்பான். அவன்தான் ஜமீன் என்ன செய்ய வேண்டும் என்று தீர்மானிப்பான். ஜமீனின் பட்டா நிலங்கள் முந்நூறு, நானூறு ஏக்கர் என்றால் உள்ளூர் மணியத்தை மிரட்டி இனாம் நிலம் ஐம்பது, நூறு ஏக்கரைத் தங்கள் கணக்கில் சேர்த்துக்கொள்வார்கள். பசலி கணக்கில் வருஷா வருஷம் வரி பாக்கி நிற்குதே, என்ன காரணம்? வெளிப்படையான சட்டதிட்டங்களுக்கு வழிவிட மாட்டார்கள்.”

“ஜமீன்களைச் சமாளிப்பது எளிதான காரியம். எனக்கு அவர்களைப் பற்றி அக்கறையில்லை. பேரணையில் இருந்து வருஷத்தில் ஒரு மாதம்கூட தண்ணீர் பார்க்க முடியாத 1557 கண்மாய்கள் இருக்கிறதே, அவற்றுக்குக் கொண்டு சென்று பெரியாற்றுத் தண்ணீரைச் சேர்க்க வேண்டும்... அதை நம்பியுள்ள மக்கள் நமக்குத் துணை நிற்பார்கள்.”

டர்னர் வெண்கல மணியின் கயிற்றை இழுத்தார்.

“மேலூர் தாலுகாவில் இருந்து நேற்று வந்த பெட்டிஷனை எடுத்து வா” என்று, உள்ளே வந்த உதவியாளனுக்கு உத்தரவிட்டார்.

உதவியாளன் கொண்டு வந்து கொடுத்த விண்ணப்ப மனுவை பென்னியிடம் கொடுத்தார் டர்னர்.

மனுவைப் பிரித்துப் படித்தார் பென்னி.

சாளரத்தின் வழியாக வந்த குளிர்காற்றையும் கடந்து, பென்னிக்கு உடல் வியர்த்தது.

- பாயும்